புள்ளாயேனமுமாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

புள்ளாயேனமுமாய்

திருநறையூர் -- 9

திருநறையூர் நம்பியின்பால் தமக்குள்ள ஆழ்ந்த பற்றினை ஈண்டுப் பரக்கக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார்.

கலி விருத்தம்

நம்பி!நான் உன்னையே நினைப்பேன்

1558. புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து,என்னை யுள்ளங்கொண்ட

கள்வா!என்றலும்என் கண்கள்நீர் சோர்தருமால்,

உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,

நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ! 1

நம்பி!நான் உன்னையே நாடுவேன்

1559. ஓடா ஆளரியி னுருவாய் மருவி,என்றன்

மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,

பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,

நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ! 2

நம்பி!எனக்கு நீயே அம்மையும் அப்பனும்

1560. எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,

அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,

நம்னான வொண்சுடரே!நறையூர்நின்ற நம்பீ,உன்

மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. 3

உலகுண்டவன் உறையும் இடம் என் மனம்

1561. சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்

உறைவாய்,என் நெஞ்சினுள் உறைவாய், உறைந்தது தான்

அறியா திருந்தறியே னடியேன்,அணி வண்டுகிண்டும்

நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ! 4

நம்பியே!என் வனத்தை விடுத்து அகலமுடியாது

1562. நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,

ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,

பூண்டேன்,என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போக லொட்டேன்

நாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ! 5

நம்பீ!நீ அருள் செய்து கொண்டே இருப்பாய்

1563. எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை

வந்தார்,என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,

அந்தோ!என் னாருயிரே!அரசே!அருளெனக்கு

நந்தாமல் தந்தவெந்தாய்!நறையூர் நின்ற நம்பீயோ! 6

நம்பீ!நீ பிறர் மனத்தில் புக நான் விடமாட்டேன்

1564. மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,

என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,

வன்நெஞ்சம் புக்கிருக்க லொட்டேன் வளைத்துவைத்தேன்,

நன்னெஞ்ச அன்னம்மன்னும்நறையூர்நின்ற நம்பீயோ! 7

நம்பீ!நீ என் மனத்தில்தான் இருக்கவேண்டும்

1565. எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது,தங்கள்,

பைபோது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,

இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தயைப் போக லொட்டேன்

நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ! 8

நம்பீ!எனக்குத்தான் இப்போது கிடைத்தது

1566. ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,

யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த

தேனே, தீங்கரும்பின் தெளிவே!என் சிந்தைதன்னால்,

நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ! 9

நெடுங்காலம் தேவராக வாழ்வர்

1567. நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை,

கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,

சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்

நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுங்காலம் வாழ்வாரே. 10

அடிவரவு:புள் ஓடா எம்மான் சிறியாய் நீண்டாய் எந்தாதை மன் எப்போதும்

ஊனேர் நன்னீர் -- சினவில்.










 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கறவா மடநாகு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சினவில்
Next