உய்யவுலகு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதற் பத்து

உய்யவுலகு

கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைந்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை!'அழகனே!இன்ப ஊற்றாக அமையும் அமுதே!எனக்காக ஒரே ஒரு முறை

தலையசைத்து விளையாடிக் காட்டு' என்று வேண்டுகிறாள் அவள்.

செங்கீரைப் பருவம்
(தலையை நிமிர்த்தி முகத்தையசைத்து ஆடுதல்)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரம்பரனே ஆயர்கள் போரேறு

64. உய்ய வுலகுபடைத் துண்ட மணிவயிறா!

ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்,

பைய வுயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

பங்கய c ணயனத் தஞ்சன மேனியனே,

செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச்

செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக,

ஐயவெ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே. 1

கோளரியே ஆயர் போரேறு

65. கோ ளரி யின்னுவருங் கொண்டவு ணனுடலம்

குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்!

மீளவ வன்மகனை மெய்யம்மை கொளக்கருதி,

மேலை யமரர்பதி மிக்குவெ குண்டுவர,

காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்

கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!

ஆளவெ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறெ ஆடக ஆடுகவே. 2

திரிவிக்கிரமனே ஆயர் போரேறு

66. நம்முடை நாயகனே!நான்மறை யின்பொருளே!

நாவியுள் நற்கமல நான்முக னுக்கு,ஒருகால்

தம்மனை யானவனே!தரணி தலமுழுதும்

தாரகை யின்னுலகுந் தடவி யதன்புறமும்,

விம்மவ ளர்ந்தவனே!வேழமு மேழ்விடையும்

விரவிய வேலைதனுள் வென்றுவ ருமவனே,

அம்மவெ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே. 3

நரகனை அழித்தவனே ஆயர் போரேறு

67. வானவர் தாம்மகிழ வன்சக டம்முருள

வஞ்ச முலைப்பேயின் நஞ்சம துண்டவனே,

கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக்

கன்றது சொண்டெறியும் கருநிற வென்கன்றே,

தேனுக னும்முரனும் திண்டிரல் வெந்நரகன்

என்பவர் தாம்மடியச் செருவதி ரச்செல்லும்,

ஆனை!எ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 4

மருதம் முறித்தவனே ஆயர் போரேறு

68. மத்தள வுந்தயிரும் வார்குழல் நன்மடவார்

வைத்தன நெய்களவால் வாரிவி ழுங்கி,ஒருங்

கொத்தவி ணைமருத முன்னிய வந்தவரை

ஊருக ரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!

முத்தினி ளமுறுவல் முற்றவ ருவதன்முன்

முன்னமு கத்தணியார் மொய்குழல் களலைய,

அத்த!எ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 5

காளியனுச்சியில் நடம்பயின்றவனே ஆயர் போரேறு

69. காயம லர்நிறவா!கருமுகில் போலுருவா!

கானக மாமடுவில் காளிய னுச்சியிலே,

தூயந டம்பயிலும் சுந்தர வென்சிறுவா!

துங்கம தக்கரியின் கொம்புப றித்தவனே,

ஆயம றிந்துபொரு வானெதிர் வந்தமல்லை

அந்தர மின் றியழித் தாடிய தாளிணையாய்!

ஆய!எ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 6

நப்பின்னை நாதனே ஆயர் போரேறு

70. துப்புடை யாயர்கள்தம் சொல்வழு வாதொரு கால்

தூயக ருங்குழல்நல் தோகைம யிலனைய,

நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய

நல்லதி றலுடைய நாதனு மானவனே,

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்

தனியரு தேர்கடவித் தாயடு கூட்டிய, என்

அப்ப!எ னக்கொருகா லாடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 7

ஏழுலகுடையவனே ஆயர் போரேறு

71. உன்னையு மொக்கலையிற் கொண்டுத மில்மருவி

உன்னொடு தங்கள்கருத் தாயின செய்துவரும்,

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்றவெ னக்கருளி,

மன்னுகு றுங்குடியாய்! வெள்ளறை யாய்!மதில் சூழ்

சோலைம லைக்ரசே!கண்ணபு ரத்தமுதே,

என்னவ லம்களைவாய்!ஆடுக செங்கீரை,

ஏழுல கும்முடையாய்!ஆடுக ஆடுகவே. 8

மறை ஏலும் பொருளே ஆயர் போரேறு

72. பாலொடு நெய்தயிரொண் சாந்தொடு சன்பக மும்

பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர,

கோலந றும்பவளச் செந்துவர் வாயினிடைக்

கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக

நீலநி றத்தழகா ரைம்படை யின்நடுவே

நின்கனி வாயமுத னிற்றுமு றிந்துவிழ,

ஏலும றைப்பொருளே ஆடுக செங்கீரை,

ஏழுல கும்முடையாய்!ஆடுக ஆடுகவே. 9

இடைக் குலத்தரசே ஆயர் போரேறு

73. செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில்

சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும், அரையில்

தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்

பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்,

மங்கல வைம்படையும் தோள்வளை யும்குழையும்

மகரமும் வாளிகளும் சுட்டியு மொத்திலக,

எங்கள் குடிக்கரசே!ஆடுக செங்கீரை,

ஏழுல கும்முடையாய்!ஆடுக ஆடுகவே. 10

புகழும் இன்பமும் அடைவர்

74. 'அன்னமும் மீனுருவு மாளரி யும்குறளும்

ஆமையு மானவனே!ஆயர்கள் நாயகனே!

என் அவ லம்களைவாய்!ஆடுக செங்கீரை,

ஏழுல கும்முடையாய்!ஆடுக ஆடுக'என்று

அன்னந டைமடவா ளசோதை யுகந்தபரிசு

ஆனபு கழ்ப்புதுவைப் பட்டனு ரைத்ததமிழ்,

இன்னிசை மாகளிப் பத்தும்வல் லார்உலகில்

எண்டிசை யும்புகழ்மிக் கின்பம தெய்துவரே. 11

(இந்த 11 பாசுரங்களை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவர்க்கு மாபெரும் புகழ் உண்டாகும்.)

அடிவரவு:உய்ய கோளரியின் நம்முடை வானவர் மத்தள காய துப்பு உன்னை பாலொடு செங்கமலம் அன்னம் - மாணிக்கம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தன்முகத்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மாணிக்கக்கிண்கிணி
Next