தழைகளும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூன்றாம் பத்து

தழைகளும்

கண்ணன் தாய் சொல் தட்டாதவன். தாய் வேண்டிக் கொண்டபடியே ஏழு நாட்கள் பிரியாமல் அவளோடு தங்கி இருந்தான். மீண்டும் கன்று மேய்க்கக் காடு சென்று திரும்பி வருகிறான். பல இசைகளும் மேளங்களும் முழங்க நண்பர்களோடு ஆரவாரமாக வருகிறான். அவன் வருவதைக் கண்ட ஆயர் பெண்கள் கண்ணன்மீது காமுற்றுக் கூறிய வார்த்தைகளை ஆழ்வாரும் கூறி அநுபவிக்கிறார்.

காலிப்பின் வரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மங்கையர் ஊண் மறந்தனர்

254. தழைகளும் தொங்கலும் ததும்பி யெங்கும்

தண்ணுமை யெக்கம்மத் தளிதாழ் dL,

குழல்களும் கீதமு மாகி யெங்கும்

கோவிந்தன் வருகின்ற கூட்டங் கண்டு,

மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி

மங்கைமார் சாலக வாசல் பற்றி,

நுழைவனர் நிற்பன ராகி எங்கும்

உள்ளம் விட்டூண் மறந்தொழிந் தனரே. 1

ஆயர்குழாம் நடுவே வரும் பிள்ளை

255. வல்லிநுண் ணிதழன்ன ஆடை கொண்டு

வசையறத் திருவரை விரித்து டுத்து,

பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப்

பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே,

முல்லை நன்னறு மலர்வேங் கைமலர்

அணிந்து பல்லா யார்குழாம் நடுவே,

எல்லியம் போதா கப்பிள் ளைவரும்

எதிர்நின் றங்கின வளையிழ வேன்மினே. 2

ஆநிரை மேய்த்து வாடிய பிள்ளை

256. சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்

மேலா டையும்தோழன் மார்கொண் டோட,

ஒருகையா லொருவன்றன் தோளை யூன்றி

ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்,

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்

மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்,

அருகேநின் றாளென்பெண் நோக்கிக் கண்டாள்

அதுகண் டிவ்வூரொன் றுபுணர்க் கின்றதே. 3

குழலூதிக் கன்றுகள் மேய்க்கும் கோவலன்

257. குன்றெ டுத்தா நிரைகாத் தபிரான்

கோவல னாய்க்குழ லூதி யூதி,

கன்றுகள் மேய்த்துத்தன் தோழ ரோடு

கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு,

என்று மிவனையப் பாரை நங்காய்!

கண்டறி யேன்ஏடி வந்து காணாய்,

ஒன்றும் நில்லா வளைகழன் றுதுகில்

ஏந்திள முலையு மென்வச மல்லவே. 4

திருமாலிருஞ்சோலை மாயன் ஆயன்

258. சுற்றி நின்றா யர்தழை களிடச்

சுருள்பங்கி நேத்திரத் தால ணிந்து,

பற்றி நின்றா யர்கடைத் தலையே

பாடவு மாடக்கண் டேன்அன் றிப்பின்

மற்றொரு வர்க்கென்னைப் பேச லொட்டேன்

மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால்,

கொற்றவ னுக்கிவ ளாமென் றெண்ணிக்

கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே. 5

அந்தமொன்றில்லாத ஆயப்பிள்ளை

259. சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல்

திருத்திய கோறம் பும்திருக் குழலும்,

அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ்

வருமாய ரோடுடன் வளைகோல் வீச,

அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை

அறிந்தறிந் திவ்வீதி போது மாகில்,

பந்துகொண் டானென்று வளைத்து வைத்துப்

பவளவாய் முறுவலும் காண்போம் தோழி! 6

ஆயரோடு ஆலித்துவரும் ஆயப்பிள்ளை

260. சாலப்பன் னிரைப்பின் னேதழைக் காவின்

கீழ்த்தன் திருமேனி நின்றொளி திகழ,

நீல நன்னறுங் குஞ்சி நேத்திரத்

தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே,

கோலச் செந்தா மரைக்கண் மிளிரக்

குழலூதி யிசைபா டிக்குனிந்து ஆயரோடு

ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை

அழகு கண்டென் மகளயர்க் கின்றதே. 7

இந்திரன்போல் வரும் ஆயப்பிள்ளை

261. சிந்துரப் பொடிகொண்டு சென்னி யப்பித்

திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்,

அந்தர மின்றித் தன்னெறி பங்கியை

அழகிய நேத்திரத் தால ணிந்து,

இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை

எதிர்நின்றங் கினவளை யிழவே லென்ன,

சந்தியில் நின்று கண்டீர் நங்கை

தன்துகி லொடுசரி வளைகழல் கின்றதே. 8

குழலூதும் அலங்காரப் பிள்ளை

262. வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து

மல்லிகை வனமாலை மௌவல் மாலை,

சிலிங்காரத் தால்குழல் தாழ விட்டுத்

தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி,

அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை

அழகுகண் டென்மக ளாசைப் பட்டு,

விலங்கிநில் லாதெதிர் நின்று கண்டீர்

வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே. 9

பரமான வைகுந்தம் நண்ணுவர்

263. விண்ணின் மீதம ரர்கள்விரும் பித்தொழ

மிறைத்தாயர் பாடியில் iF யூடே,

கண்ணன் காலிப்பின் னேயெழுந் தருளக்

கண்டிளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்,

வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு

சித்தன் சொன்ன மாலை பத்தும்,

பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார்

பரமான வைகுந் தம்நண் ணுவரே! 10

அடிவரவு:தழைகளும் வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி

வலம் விண்ணின்மீது - அட்டு.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சீலைக்குதம்பை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அட்டுக்குவி
Next