அலம்பா வெருட்டா

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

அலம்பா வெருட்டா

தென்னாட்டைச் சிறக்க வைப்பவை இரண்டு மலைகள்!எம்பெருமான் உவந்து எழுந்தருளி இருக்கும் மலைகள் இரண்டு மலைகள்!அவை திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை. திருமாலிருஞ்சோலைமலையில் சிலம்பாறு என்று ஓராறு ஓடுகிறது. அங்கே தேவமாதர்கள் வந்து நீராடுவார்கள். திருமாலிருஞ்சோலை இயற்கை எழிலைக் கொண்டது:யானைகள் நிரம்பியது. மலயத்துவச பாண்டியன் (தென்னன்) கொண்டாடி மகிழும் மலை திருமாலிருஞ்சோலையே என்கிறது இத்திருமொழி. திருமாலிருஞ்சோலையை அழகர்கோயில் என்பர்.

திருமாலிருஞ்சோலை மலைச் சிறப்பு

கலிநிலைத்துறை

சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலை

338. அலம்பா வெருட்டாக் கொன்று

திரியு மரக்கரை,

குலம்பாழ் படுத்துக் குலவிளக்

காய்நின்ற கோன்மலை,

சிலம்பார்க்க வந்து தெய்வ

மகளிர்க ளாடும்சீர்,

சிலம்பாறு பாயும் தென்திரு

மாலிருஞ்சோலையே. 1

பல்லாண்டு ஒலி கேட்கும் திருமாலிருஞ்சோலை

339. வல்லாளன் தோளும் வாளரக்கன்

முடியும், தங்கை

பொல்லாத மூக்கும் போக்குவித்

தான்பொருந் தும்மலை,

எல்லா விடத்திலு மெங்கும்

பரந்துபல் லாண்டொலி,

செல்லா நிற்கும் சீர்த்தென்

திருமாலிருஞ் சோலையே. 2

செல்வன் வாழுமிடம் நிருமாலிருஞ்சோலை

340. தக்கார்மிக் கார்களைச் சஞ்சலஞ்

செய்யும் சலவரை,

தெக்கா நெறியே போக்குவிக்கும்

செல்வன் பொன்மலை,

எக்கால மும்சென்று சேவித்

திருக்கும் அடியரை,

அக்கா னெறியை மாற்றும்

தண்மாலிருஞ் சோலையே. 3

கற்பகத்தேனாறு பாயும் திருமதாலிருஞ்சோலை

341. ஆனாயர் கூடி அமைத்த

விழவை, அமரர்தம்

கோனார்க் கொழியக் கோவர்த்

தனத்துச்செய் தான்மலை,

லானாட்டி னின்றும் மாமலர்க்

கற்பகத் தொத்திழி,

தேனாறு பாயும் தென்திரு

மாலிருஞ் சோலையே. 4

கம்சனது யானையைக் கொன்றவன் மலை

342. ஒருவா ரணம்பணி கொண்டவன்

பொய்கையில், கஞ்சன்றன்

ஒருவா ரணமுயி ருண்டவன்

சென்றுறை யும்மலை,

கருவா ரணம்தன் பிடிதுறந்

தோட, கடல்வண்ணன்

திருவாணை கூறத் திரியும்தண்

மாலிருஞ் சோலையே. 5

சாந்தணிதோள் சதுரன் இருக்குமிடம் திருமாலிருஞ்சோலை

343. ஏவிற்றுச் செய்வா னேன்றெதிர்ந்து

வந்த மல்லரை,

சாவத் தகர்த்த சாந்தணி

தோள்சது ரன்மலை,

ஆவத் தனமென் றமரர்

களும்நன் முனிவரும்,

சேவித் திருக்கும் தென்திரு

மாலிருஞ் சோலையே. 6

பாண்டியன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை

344. மன்னர் மறுக மைத்துனன்

மார்க்கொரு தேரின்மேல்,

முன்னங்கு நின்று மோழை

யெழுவித்த வன்மலை,

கொன்னவில் கூர்வேல் கோனெடு

மாறன்தென் கூடற்கோன்,

தென்னன்கொண் டாடும் தென்திரு

மாலிருஞ் சோலையே. 7

வண்டுகளும் ஸஹஸ்ரநாமம் சொல்லும் மலை

345. குறுகாத மன்னரைக் கூடு

கலக்கி,வெங் கானிடைச்

சிறுகால் நெறியே போக்குவிக்

கும்செல்வன் பொன்மலை,

அறுகால் வரிவண் டுகளா

யிரநாமஞ் சொல்லி,

சிறுகாலைப் பாடும் தென்திரு

மாலிருஞ் சோலையே. 8

திருமாலிருஞ்சோலை மலையின் இயற்கையழகு

346. சிந்தப் புடைத்துச் செங்குருதி

கொண்டு, பூதங்கள்

அந்திப் பலிகொடுத் தாவத்

தனஞ்செய் யப்பன்மலை,

இந்திர கோபங்க ளெம்பெரு

மான்கனி வாயப்பான்,

சிந்தும் புறவில் தென்திரு

மாலிருஞ் சோலையே. 9

பிடியும் களிறும் திளைக்கும் திருமாலிருஞ்சோலை

347. எட்டுத் திசையு மெண்ணிறந்

தபெருந் தேவிமார்,

விட்டு விளங்க வீற்றி

ருந்த விமலன்கலை,

பட்டிப் பிடிகள் பகடுரிஞ்சிச்

சென்று, மாலைவாய்த்

தெட்டித் திளைக்கும் தென்திரு

மாலிருஞ் சோலையே. 10

கண்ணன் கழலிணை காண்பர்

348. மருதப் பொழிலணி மாலிருஞ்

சோலை மலைதன்னை,

கருதி யுறைகின்ற கார்க்கடல்

வண்ணனம் மான் தன்னை,

விரதம்கொண் டேத்தும் வில்லிபுத்

தூர்விட்டு சித்தன்சொல்,

கருதி யுரைப்பவர் கண்ணன்

கழலிணை காண்பர்களே. 11

அடிவரவு:அலம்பா வல்லாளன் தக்கார் ஆனாயர் ஒரு ஏவிற்று மன்னர் குறுகாத

சிந்த எட்டு மருத - உருப்பிணி.


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கதிராயிரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  உருப்பிணி நங்கை
Next