அங்கணெடுமதிள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

அங்கணெடுமதிள்

வால்மீகி முனிவர் இராமாயணத்தில் இராம சரித்திரத்தைப் பரக்கக் கூறி அனுபவித்தார். இவ்வாழ்வார் இராமாயணத்தை ஈண்டு சுருக்கிக் கூறி அனுபவிக்கிறார்.

தில்லைநகர்த் திருச்சித்திர கூடமால்
தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சித்திரகூடத்தே எம்பெருமானை எப்போது காண்பேனோ!

741. அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்

அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி

வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி

விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,

செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை

என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே!

இராமனே திருச்சித்திர கூடத்தான்

742. வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் WP

வருகுருதி பொழிதரவன் கணையன் றேவி

மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து

வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்,

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

அந்தணர்க ளருமூவா யிரவ ரேத்த

அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே. 2

சீதைக்காகச் சிலையிறுத்தவன் சித்திரகூடத்தான்

743. செவ்வரிதற் கருநெடுங்கண் சீதைக் காகிச்

சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி

வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு

வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை,

தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை

இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. 3

சித்திரக்கூடத்தானைக் கண்டோர்க்கு நிகரில்லை

744. தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்

தொன்னகரந் துறந்துதுறைக் கங்கை தன்னை,

பத்தியுடைக் குகன்கடந்த வனம்போய்ப் புக்குப்

பரதனுக்குப் பாதுகமு மரசு மீந்து,

சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற

இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே. 4

இப்பூவுலகம் பாக்கியம் பெற்றது!

745. வலிவணங்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று

வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி

கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்

கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி,

சிலைவணங்கி மான்மரிய வெய்தான் றன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்

திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே. 5

சித்திரகூடத்தானைத் துதிப்பவரை யான் துதிப்பேன்

746. தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்

தளர்வெய்திச் சடாயுவை குந்தத் தேற்றி

வனமருவு கவியரசன் காதல் கொண்டு

வாலியைக்கொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்,

சின மடங்க மாருதியால் சுடுவித் தானைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை

ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே. 6

சித்திரகூடத்தான் அடிசூடும் அரசே அரசு

747. குரைகடலை யடலம்பால் மறுக வெய்து

குலைகட்டி மறுகரையை யதனா லேறி,

எரிநடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்

இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து,

திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்

அரசாக வெண்ணேன்மற் றரசு தானே. 7

இராம சரித்திரமே இன்னமுது

748. அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி

அரசெய்தி அகத்தியன்வாய்த் தன்முன் கொன்றான்-

றன்பெருந்தொல் கதைகேட்டு மிதிலைச் செல்வி

உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்,

செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

எம்பெருமான் றன்சரிதை செவியால் கண்ணால்

பருகுவோ மின்னமுதை மதியோ மன்றே. 8

இனித் துயரம் அடையோம்

749. செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று

செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த,

நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன்றன்னைத்

தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட,

திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

உறைவானை, மறவாத வுள்ளந் தன்னை

உடையோம்மற் றுறுதுயர மடையோ மன்றே. 9

சித்திரக்கூடத்தானை நாள்தோறும் துதித்து வணங்குங்கள்

750. அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி

அடலவரவப் பகையேறி யசுரர் தம்மை

வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும்தோன்ற

விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி,

சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,

என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்

இறைஞ்சுமினோ வெப்பொழுதும் தெண்டீர்நீரே. 10

நாராயணன் திருவடியைச் சேர்வர்

751. தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை,

எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்-

றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா,

கொல்லியலும் பைட்ததானைக் கொற்ற வொள்வாள்

கோழியர்கோன் குடைக்குலசே கரன்சொற்செய்த

நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. 11

அடிவரவு:அங்கண் வந்து செவ்வரி தொத்து வலி தனம் குரை அம்பொன் செறி அன்று தில்லை -- பூநிலாய.

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்










 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வன்தாளினிணை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருச்சந்த விருத்தத் தனியன்கள்
Next