பெரியாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

பெரியாழ்வார்

பாண்டிய நாடு முத்தும் முத்தமிழும் பெற்றதனால் பொலிவுற்று விளங்கும் நாடாக உளது. அப்பாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்து, வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

ஒரு நாள் வில்லியும் கண்டனும் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றனர். கண்டன் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவியபொழுது, அம்பிற்குத் தப்பிய புலி கண்டனைக் கொல்லவும், பின்னால் வந்த வில்லி இக்காட்சியைக் கண்டு வருந்தினான். அவ்வளவில் திருமகள்நாதனின் அருளால் வில்லியின் தம்பி கண்டன் உயிர் பெற்றெழுந்ததோடு, வில்லி பெருஞ்செல்வமும் பெற்றான். அதனால் அவன் அந்த இடத்தில் திருமாலுக்கு உயர்ந்த ஒரு கோயிலை எழுப்பினான்;அக்கோயிலைச் சூழப் பல அழகிய தெருக்களை அமைப்பித்து, அக்கோயிலைச் சூழப் பல அழகிய தெருக்களை அமைப்பித்து, அத்தெருக்களில் எழிலார் மாடங்களை உடைய வீடுகளையும் கட்டுவித்தான்;பின்பு புத்தூரில் உள்ளாரை அவ்வூரில் குடியேறச் செய்து, குடியேறியவர்களது ஊராகிய புத்தூர் என்பதோடு தன் பெயராகிய வில்லி என்பதையும் சேர்த்து, 'வில்லிபுத்தூர்'என்று அத்திருப்பதிக்குப் பெயரிட்டுக் கோயிலின்கண் சிறப்பாகப் பூசை செய்தற்குரிய வழிகளையும் செய்து முடித்தான். அப்பதியைச் சூழ்ந்த இடத்திற்கு 'மல்லிநாடு'என்ற பெயரைத் தனது தாயின் நிளைவாக வில்லி பெயரிட, அப்பெயரே அந்நாட்டிற்கு வழங்கப்பெறுவதாயிற்று.

வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர் என்னும் முன்குடுமிச் சோழிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தி வந்தகாலத்தே, திருமகள்நாதனின் அருளால் அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே பிற்காலத்தில் போற்றிப் புகழப்படும் பெரியார்வார் ஆவார்.

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் (A. H. 9- ஆம் நூற்றாண்டில்) குரோதன ஆண்டு ஆனித் திங்கள், வளர்பிறையில் பொருந்திய ஏகாதசி திதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ கருடாமிசராய் அவதரித்தருளினார்.

பெற்றோர் இவருக்கு விட்டுசித்தன் என்ற பெயரை வைத்துத் தக்க வயதில் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். பின்னர், இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த பொருட்குவியலினின்றும் ஒரு பெரும்பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி வருவாராயினார்.

அப்பொழுது பாண்டிய நாட்டில் வல்லபதேவன் என்னும் அரசன் செங்கோலோச்சி வந்தான். அவன் பாண்டியர்தம் குலத்திற்கு ஓர் எழில் மிக்க விளக்குப் போன்றவன், பல கலைகளைத் தேர்ந்தவன். அவன் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினான். எனினும், அவன் அறக்கள வேள்வியிலும் மாட்சிமை அடைய வழி யாது எனச் சிந்தித்து, உண்மைப் பொருளை உணர்தலே அதற்கு வழி என முடிவு செய்தான். அவ்வமயம் வேதவேதாந்தங்களைக் கற்க செல்வநம்பி என்னும் புரோகிதர் அரசனிடம் வர, அவரை நோக்கி அரசன், 'அந்தமில் இன்பத்தை எவ்வாறு பெறலாம்?'எனக் கேட்டான். அதற்கு மறைவராகிய செல்வநம்பி, 'வேதமுடிவாகிய பரம்பொருள் இன்னது என்பதை வித்துவான்கள்மூலம் நிச்சயித்து, அவ்வழியாலே பெறலாம்'என்று அறிவிக்க, அரசனும், 'அங்ஙனமே ஆகுக'என்றான். பின்னர் அரசன் தனது அரியணைக்கு முன்புறத்தில் ஒரு தோரணக் கம்பத்தை நட்டு, கீழிச்சீரையிலே பெரும் பொற்குவியலை இட்டு, அப்பொற்கிழியை அக்கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டு, 'தாம் கூறும் உண்மைப் பொருளால் இப்பொற்கிழி தானே அறுந்துவிழும்படி எவர் செய்கின்றாரோ அவருக்கு இப்பொற்கிழி உரியதாம்'என்று எல்லா இடங்களுக்கும் பறையறைந்தும், தூதர்கள் மூலமும் அறிவித்தான். பலர் வந்து சொல்மாரி பொழிந்தும் பொற்கிழி அறுபடவில்லை.

திருமகள்நாதன், விட்டுசித்தர் கனவில் தோன்றி, பாண்டியன் அவைக்குச் சென்று பொற்கிழி தானே அறும் வண்ணம் உண்மைப் பொருளை உணர்த்தும்படி அறிவிக்க, அங்ஙனமே விட்டுசித்தரும் இறைவன் பணியை மேற்கொண்டு, மறுநாள் காலை பாண்டியனது நகர் சேர்ந்தார். பாண்டிய வேந்தனாகிய வல்லபதேவரும், செல்வநம்பியும் சென்று விட்டுசித்தரை வரவேற்றனர். விட்டுசித்தரைக் கண்ட அரசன் வணங்கி, 'அருளிற் சிறப்புடையீர்!தங்கள் வருகையால் என் மனம் மகிழ்ச்சியுற்றது'என்று கூறினான். அரசனது அவையில், அரசன் விட்டுசித்தருக்குச் சிறந்ததோர் இருக்கை ஈந்து அமரச் செய்தான்.

அப்பொழுது அங்கிருந்த புலவர்கள் விட்டுசித்தரை அவமதிக்கும் முறையில் பார்த்து, "கற்றார் அவையில் சென்று ஒன்றினைக் கூறுதலால் உண்டாகும் இழிவை எண்ணாது வந்தமை, 'குருட்டுக்கண் இருட்டைக் கண்டு அஞ்சுமோ?'என்ற பழமொழிக்கு ஒப்பாக உள்ளது"என்று தங்களுக்குள் விட்டுசித்தரைக் குறித்து உரையாடிக்கொண்டனர். புலவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில், அரசன் குறிப்பின்படி செல்வநம்பி, விட்டுசித்தரை நோக்கி, 'தங்கள் வேதமுடிவாயுள்ள உண்மைப் பொருளைஎங்களுக்கு உணர்த்தல் வேண்டும்"என உரைத்தார்.

வைகுந்தவாசனாகிய திருமாலின் திருவருள் பெற்றதன் காரணமாக அவையின் இடையில் வந்து வணக்கம் கூறிய விட்டுசித்தர், வேதமுடிவாயுள்ள உண்மைப் பொருளை தம் சொற்கள் கொண்டு விளக்கவுரை ஆற்றினார். விட்டுசித்தரால் ஆற்றப்பட்ட அவ்விளக்கவுரை, கேட்டார்ப் பிணிக்குத் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொற்களால் அமைந்த ஆய்வுரையாகவும், அவரால் கூறப்பட்ட சொற்கள் யாவும், பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுந் தன்மையில்லாமல் விழுமிய பொருள் பொதிந்ததாகவும், உண்மைப் பொருளை உணர்தற்கு ஏற்றதாகவும் இருந்தது. உடனே பொற்கிழி கட்டியிருந்த கம்பம் பொற்கிழி இவர் அருகு வரும்படி வளையலாயிற்து. விட்டுசித்தரும் பொற்கிழியை அறுத்துக்கொண்டார். வேந்தனும், செல்வநம்பியும், ஏனையோரும் விட்டுசித்தரை வணங்கிப் போற்றினர்.

பின்னர் அரசன் கட்டனையினால் ஏவலர் அந்நகர மாடங்கள்தோறும் கொடிகளை ஏற்றி, தோரணக் கம்பங்கள் நாட்டி, மலர் மாலைகள் கட்டித் தொங்கவிட்டனர். வல்லபதேவனாகிய பாண்டிய மன்னன் விட்டுசித்தருக்கு 'பட்டர்பிரான்'என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான். விட்டுசித்தர் உலாவிவரும் வீதிகள் யாவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. 'வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்'என்னும வாழ்த்தொலிகள் முழங்க, விட்டுசித்தர் வீதிகள்தோறும் உலாவந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.

அங்ஙனம் உலாவருதல் நிகழ்ந்தகாலத்து, பரமபதத்தின் தலைவனாக விளங்கும் உலக ரட்சகரான திருமாலனவர் அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழக் கருடன் மீது இவர்ந்து வந்து, விட்டுசித்தருக்கும் அரசருக்கும் காட்சியளித்தார்.

முதலும் ஈறும் இல்லாத முதற்பொருள் ஆகியவரும், அமரர்கள் அதிபதியும், உயர்வுற உயர்நலம் உடையவரும், பரமபதத்தில் சித்தரும் முத்தரும் சேவிக்க விளங்கும் பரம்பொருள் ஆனவரும் பீதாம்பரதாரியுமாகிய பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விட்டுசித்தர் என்னும் நாமம் கொண்ட பட்டர்பிரான், அன்பின் மிகுதியினால், இறைவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்துவாராயினார்.

மன்னர் அரசனிடமும் செல்வநம்பியிடமும் விடைபெற்றுக்கொண்டு, வில்லிபுத்தூரை அடைந்த விட்டுசித்தர் கிழியறுத்துக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு வடபெருங்கோயிலைப் புதுப்பித்து அதனை அங்குள்ள திருமாலுக்கே ஆக்கினார். பின்பு கண்ணனது திருஅவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்தப் பாசுரங்கள் நூனூற்று அறுபத்தொன்று ஆகும். திருப்பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு ஆகும். ஆக விட்டுசித்தரால் பாடப்பட்ட பாசரங்களின் எண்ணிக்கை நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள் 'பெரியாழ்வார் திருமொழி'என்று வழங்கப்பட்டு, நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் முதற்கண் அமைக்கப்பட்டுள்ளன.

விட்டுசித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால்,

'பெரியாழ்வார்'என்று இவரை வைணவப்பெரியார்கள் கூறலாயினர்.

பெற்றோரால் விட்டுசித்தர் என்று வழங்கப்பட்ட இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீ வில்லிபுத்தூர்கோன்,
4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன்.

பெரியாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்:1. திருவரங்கம், 2. திருவெள்ளாறை,
3. திருப்பேர்நகர், 4. கும்பகோணம், 5. திருக்கண்ணபுரம், 6. திருச்சித்திரக்கூடம்,
7. திருமாலிஞ்சோலைமலை, 8. திருக்கோட்டியூர், 9. ஸ்ரீவில்லிபுத்தூர்,
10. திருக்குறுங்குடி, 11. திருவேங்கடம், 12. திருவயோத்தி, 13. சாளக்கிராமம்,
14. வதரியாச்சிரமம், 15. திருக்கங்கைக் கரைக்கண்டம், 16. துவாரகை, 17. வடமதுரை,
18. திருவாய்பாடி, 19. திருப்பாற்கடல், 20. பரமபதம் முதலியனவாகும்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is குலசேகராழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஸ்ரீ ஆண்டாள்
Next