முமுக்ஷுத்வம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

“முமுக்ஷு” என்பதற்கு அர்த்தம் “மோக்ஷ காங்க்ஷி” என்பார்கள். “மோக்ஷ காங்க்ஷி” என்பதற்கு அர்த்தம் “மோக்ஷத்தை விருப்புபவன்.”

அந்த விருப்பம் பூர்த்தியாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்றுவிட்டவன் ‘முக்தன்’. முமுக்ஷுவாக இருந்துதான் அப்புறம் முக்தனாக முடியும்.

எல்லோருக்குந்தான் இந்த ஸம்ஸாரக் கஷ்டம் நீங்கிப் பரமானந்தமான மோக்ஷத்தை அடைவதில் விருப்பம் இருக்கும். இப்படி அல்ப ஸ்வல்பமாக இருக்கும் விருப்பம் மட்டும் ‘காங்க்ஷா’ ஆகிவிடாது. தீவிர விருப்பம், தாபம், அதோடுகூட விரும்புவதை அடையத் தன்னாலான யத்தனம் முழுவதும் செய்யத் தயாராக இருப்பது, எல்லாம் சேர்ந்தால்தான் ‘காங்க்ஷா’. அப்படி மோக்ஷம் அடைவதில் ஆழ்ந்த நாட்டமுள்ளவனே முமுக்ஷு. அவனுடைய தன்மை என்னவோ, அவன் எப்படி இருக்க வேண்டுமோ, பண்ண வேண்டுமோ, அதெல்லாம் சேர்ந்தே ‘முமுக்ஷுத்வம்’ முமுக்ஷா, முமுக்ஷுதை என்றும் சொல்வார்கள்.

ஸம்ஸார பந்த நிர்முக்தி: கதம் ஸ்யாந் மே தயாநிதே |
இதி யா ஸுத்ருடா புத்திர் – வக்தவ்யா ஸா முமுக்ஷுதா||

– இப்படி ஆசார்யாள் “அபரோக்ஷாநுபூதி”யில் முமுக்ஷுதை பற்றிச் சொல்லியிருக்கிறார்.1

ஈச்வரனிடமோ, ஈச்வரனின் ப்ரதிநிதியாக நம்முடைய கண்ணுக்கு முன்னே தெரிகிற குருவிடமோ, ஒருத்தன் கதறுகிற ரீதியில் வார்த்தைகளைப் போட்டிருக்கிறார். “தயாநிதே!” என்று அவன் ஈச்வரனை, குருவைக் கூப்பிட்டு, “ஸம்ஸார பந்தத்திலிருந்து எனக்கு எப்போது விமோசனம் கிடைக்கும்?” என்று தவித்துக் கொண்டு கேட்கிறான். விமோசனம் பெறவேண்டுமென்பதில் த்ருடமான புத்தியோடுகூடக் கேட்கிறான். பணம் காசு போதாததாலோ, தேஹாரோக்யம் இல்லாததாலோ, சாவு, விரோதம் போன்றவை ஏற்பட்டதாலோ துக்கம் அல்லது வெறுப்பு வந்து, ஸம்ஸாரத்திலிருந்து விடுபட நினைப்பதை “ஸுத்ருடா புத்தி:”, [அதாவது] த்ருடமான புத்தி பூர்வமாக ஏற்பட்ட முமுக்ஷுதையாகச் சொல்ல முடியாது. இந்த கஷ்டங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதையும், அதிலிருந்து விடுபடுவதையும் முக்யமாக நினைக்காமல், லோக ரீதியில் ஸுக ஜீவன்மாகவே இருந்தாலுங்கூட, ‘இதுவும் மாயைதான். இந்த மாயா பந்தத்திலிருந்து விடுபட்டு ஸத்யமான ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற உறுதியான அறிவோடு ஸம்ஸார நிவ்ருத்தியை விரும்பும் அறிவுதான் “ஸுத்ருடா புத்தி”. மனஸின் உணர்ச்சியால் வாழ்க்கைக் கஷ்டங்களைப் பார்த்துக் கசந்து போய், ஆகவே விடுபட நினைக்காமல், அறிவினால் ஆலோசித்து மாயை என்பதற்காகவே ஸம்ஸாரத்தை – அது எத்தனை ஸெளக்யமாகத் தோன்றினாலும் – விட்டு விடுபட வேண்டும் என்று தீர்மானமாக, ஒரே தாபமாக இருப்பதுதான் முமுக்ஷுத்வம். இந்தத் தாபமான முமுக்ஷுதாவைப் பெண்பாலாகவே சொல்லியிருக்கிறது – “யா வக்தவ்யா ஸா முமுக்ஷுதா”.

“ஸம்ஸார பந்தத்திலிருந்து எப்போது விமோசனம் கிடைக்குமென்று தயாநிதியான ஆசார்யனிடம் ப்ரார்த்திக்கும் தவிப்பில் த்ருடப்பட்ட அறிவாக எவள் கூறப்படுகிறாளோ அவளே முமுக்ஷுதை என்று ச்லோகத்திற்கு அர்த்தம்.

‘விவேக சூடாமணி’யில் [முமுக்ஷுத்வத்திற்கு லக்ஷணம்] சொல்லும்போது, ” ஸ்வ-ஸ்வரூப அவபோதேந மோக்தும் இச்சா முமுக்ஷுதா” என்கிறார்2. வெறுமே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டால் போதாது; ஸம்ஸார பந்தம் போய் உயிர் ஏதோ ஜடம் மாதிரி ஆனால் போதாது. “ஸ்வஸ்ரூப அவபோதம்” வேண்டும்; அதாவது தன்னுடைய உண்மை நிலையான ஆத்மாவை அநுபவிக்கும் ஞான விழிப்பு ஏற்பட வேண்டும். அதுதான் முக்யம். அதற்காகவே தவித்து ஏங்க வேண்டும். மாயை போக வேண்டும் என்பதைவிட ஸத்யம் அநுபவத்திற்கு வரவேண்டும் என்பதையே முக்யமாக நினைக்கிற தவிப்பு தான் முமுக்ஷுத்வம். இது போனால்தான் அது வரும் என்பதற்காகத்தான் மாயா பந்த மோசனத்திற்காகப் பிரார்த்திப்பது.


1 ச்லோ. 9

2 ச்லோ. 27 (அ) 28

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பரமாத்மாவின் ஆறும் ஜீவாத்மாவின் ஆறும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முடிவான நிலையை விடுதலை என்று மட்டும் சொல்வதேன் ?
Next