ஆனைமுகரும் அகத்தியரும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

விக்நேச்வரரோடு ரொம்பவும் ஸம்பந்தப்பட்டவர் அகஸ்திய மஹர்ஷி. இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அகஸ்தியர் அங்குஷ்ட மாத்ரர் (கட்டை விரல் அளவேயானவர்), குறுமுனி என்று சொல்கிறது. பிள்ளையாரையும் “வாமன ரூப” என்று சொல்லியிருக்கிறது.

வாமந-ரூப மஹேச்வர – புத்ர
விக்ந – விநாயக பாத நமஸ்தே || *

‘வாமன ரூப’ என்றால் குள்ள உருவம் – வாமனாவதாரம் மாதிரி. “வக்ரதுண்ட, மஹாகாய” என்று ஒரு பக்கம் மஹா பெரிய சரீரமுடையவர் என்றும் சொல்லி இன்னொரு பக்கம் வாமன ரூபர் என்றும் வர்ணித்திருக்கிறது. பெரிசு சிறிசு எல்லாம் அவர்தான். அணுவும் அவர்தான். அகிலாண்டமும் அவர்தான் என்று தாத்பர்யம். ‘அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்’ என்று ஒளவை (அகவலில்) சொல்லியிருக்கிறாள்.

ஹம்பியில் பெரிசு பெரிசாக இரண்டு விக்நேச்வர மூர்த்திகள். ஒன்று பத்தடி உயரம், இன்னொன்று இருபதடி உயரம் இருக்கும். இப்படி மஹாகாயராக இருப்பவர்களுடைய பேர்களோ நேர்மாறாக வாமன ரூபத்தைக் காட்டுவதாக இருக்கின்றன! பத்தடிப் பிள்ளையாருக்கு ‘சசிவுகல்லு’ என்று பேர்; அப்படியென்றால் கடுகத்தனை அளவேயானவரென்று அர்த்தம்! இருபதடிப் பிள்ளையாருக்கு ‘கடலைக்கல்லு’ என்று பேர்; கடலைப் பருப்பு அளவானவர் என்று அர்த்தம்! ‘இவருக்கு இத்தனை பெரிய விக்ரஹங்கள் இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். வாஸ்தவத்தில் விச்வரூபியாக உள்ள அவருக்கு life – size விக்ரஹம் பண்ணி எவராலும் ஆகாது. முடிந்த அளவுக்கு இங்கே பண்ணி வைத்திருக்கிறோம். அது அவருடைய நிஜமான ரூபத்தோடு ஒப்பிட்டால் கடுகத்தனை, கடலையத்தனையாகத்தான் தெரியும்’ என்று அடக்கத்தோடு இப்படிப் பேர் வைத்திருக்கிறார்கள்.

அகஸ்தியருக்கும் விக்நேச்வரருக்கும் ஸம்பந்தம் சொன்னேன். அகஸ்தியர் கமண்டலுவுக்குள் அடைத்து வைத்திருந்த காவேரியைக் காக்கா ரூபத்தில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஒடப் பண்ணினவர் விக்நேச்வரர்தான். அந்த ஸமயத்தில் அகஸ்தியருக்கு காக்காயிடம் கனகோபம் வந்தாலும் அப்புறம் அது விக்நேச்வரர் என்று தெரிந்ததும் ஒரே பக்தியாகிவிட்டார். அவர்தான் ‘காக்கா பிடித்தவர்’ போலிருக்கிறது – காக்காயை மனஸுக்கு ரொம்பவும் பிடித்தவர்! அப்புறம் ஒரேடியாகப் பிள்ளையார் பக்தியில் ஈடுபட்டுவிட்டார்.

வாதாபி விஷயத்துக்கு வருகிறேன். அதிலே அகஸ்தியர் முக்கியமான கதாபாத்திரம். வாதாபி இல்வலன் என்று அண்ணன்-தம்பியாக இரண்டு அஸுரர்கள்…. அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கக்கூடிய கதைதான். நேரடியாகத் தாக்கிக் கொல்கிற அஸுரர்களை விடவும் ஒருபடி மட்டமாக நயவஞ்சனையால் ரிஷிகளைக் கொன்று தின்னுவது இவர்களது வழக்கம். பொதுவாகவே நரமாம்ஸமென்றால் அஸுரர்களுக்கு ரொம்ப இஷ்டம். அதிலும் வேத மந்த்ரத்தில் ஊறிப்போய் பரம மதுரமாகிவிட்ட ரிஷி சரீரமென்றால் ஹல்வா மாதிரி! அந்த ஹல்வா கிடைப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒரு நயவஞ்சனை செய்வார்கள். இரண்டு பேரில் மூத்தவனான இல்வலன் ஒரு ப்ராம்மண ரூபம் எடுத்துக்கொண்டு யாராவது ரிஷியிடம் போய் ரொம்பவும் நமஸ்காரம் பண்ணித் தன் வீட்டில் அவர் போஜனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பான். ரிஷியும் ஒப்புக் கொண்டு போவார். அவன் என்ன பண்ணியிருப்பானென்றால் வாதாபியையே மாம்ஸமென்று தெரிந்து கொள்ள முடியாத விதத்தில் கறியாகச் சமைத்துப் பரிமாறுவான். ரிஷிகள் அவசியமான ஸமயத்தில்தான் ஞான த்ருஷ்டியை ப்ரயோகிப்பார்கள். மற்ற ஸமயங்களில் ஸாதாரண ஜனங்கள் மாதிரிதான் இருப்பார்கள். அஸுர சூழ்ச்சி தெரியாமல் அவர்கள் வாதாபிக் கறியைச் சாப்பிட்டு விடுவார்கள். போஜனம் முடிந்தபின் இல்வலன் அவர்களுக்கு தாம்பூலாதிகள் கொடுத்து சிரம பரிஹாரம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, தம்பியை “வாடா!” என்று கூப்பிடுவான். உடனே ரிஷி வயிற்றில் போஜ்ய பதார்த்த ரூபத்தில் இருக்கும் வாதாபி ஆடு ரூபம் எடுத்துக்கொண்டு கொம்பால் அவர் வயிற்றை கிழித்துக் கொன்றபடி வெளியே வருவான். அப்புறம் இரண்டு பேரும் அந்த சரீரத்தை ஸந்தோஷமாக தின்று தீர்ப்பார்கள்.

அகஸ்த்யருக்கும் இதே மாதிரி போஜன உபசாரம் பண்ணிவிட்டு, “வாதாபி, வாடா வெளியிலே!” என்று இல்வலன் கூப்பிட்டான். அவர் விக்நேச்வர ஸ்மரணையிலேயே இருந்து கொண்டிருப்பவரல்லவா? அதனாலே அஸுரனுடைய கபடம் அவருக்குப் புரியும்படியாக விக்நேச்வரர் அநுக்ரஹம் செய்துவிட்டார். இதற்கு மாற்று பண்ணுவதற்கான உபாயமும் ஸ்புரிக்கும்படி அநுக்ரஹித்து விட்டார். உடனே அகஸ்த்யர் தொப்பையைத் தடவிக்கொண்டு, “வாதாபி! ஜீர்ணோ பவ!” என்றார். அஸுரன் வெளியிலே வரமுடியாமல் அவர் வயிற்றுக்குள்ளேயே வைச்வாநர அக்னியாயுள்ள பரமாத்மாவில் ஜீர்ணமாகி விட்டான்.

அதைப் பார்த்து இல்வலன் பயந்துபோய் அகஸ்த்யரிடம் ச்ரணாகதி பண்ணி, பொன்னும் பொருளும் காணிக்கை கொடுத்தான் என்று ஒரு கதை. இன்னொரு கதைப்படி, தம்பியை ஜீர்ணித்துக் கொண்டுவிட்டாரே என்ற கோபத்தில் அவன் அவர் மேல் பாய்ந்தான்; அவர் ஒரு தர்ப்பையை அபிமந்திரித்து அவன் மேலே போட்டார். அது அஸ்திரமாகி அவனை வதைத்துவிட்டது.

தான் வாதாபியை ஜீர்ணித்து அதன் வழியாக லோகத்துக்கு நல்லது செய்யும்படியாக அநுக்ரஹித்த பிள்ளையாருக்கு அகஸ்தியர் பூஜைகள் பண்ணினார். அப்போது விக்நேச்வரர் இருந்த அவஸரத்துக்கு [திருக்கோலத்திற்கு] “வாதாபி கணபதி” என்றே பேர் வந்துவிட்டது.

திருவாரூரில் அநேக கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே வாதாபி கணபதியும் இருக்கிறார். தீக்ஷிதருடைய “வாதாபி கணபதி(ம் பஜே)” கீர்த்தனை இவர் பேரிலே தான். பல பேர் தப்பாகத் திருச்செங்காட்டாங்குடிப் பிள்ளையார் பேரில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனத்திலேயே “மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்” என்று வருகிறது. ப்ருத்வீ ஸ்தலமான திருவாரூர்தான் மூலாதார க்ஷேத்ரம். அகஸ்த்யர் க்ஷேத்ராடனம் பண்ணிக் கொண்டு திருவாரூர் வந்தபோது மூலாதார க்ஷேத்ரமான அங்கே வாதாபி கணபதியை பிரத்ஷ்டை பண்ணி விட்டார். அந்த ஸமாசாரம் இருக்கட்டும்.


* இச் சுலோகத்தின் முதலிரு அடிகள்:

மூஷிக -வாஹந மோதக-ஹஸ்த
சாமர-கர்ண விளம்பித-ஸூத்ர

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பரஞ்ஜோதி (சிறுத்தொண்டர்) ; வாதாபி கணபதி
Next