அழகு ரஸனையே அதற்குப் பலனும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சிவானந்த வெள்ளம் பரமேச்வரனின் சரித்திரத்திலிருந்து உண்டாயிற்று; பாப அழுக்கைப் போக்கிற்று, தாபமான ஸம்ஸாரத்தைச் சமனம் செய்தது, சித்த மடுவில் வந்து நிறைந்தது என்றெல்லாம் [‘சிவானந்தலஹரி’யில்] சொன்ன மாதிரி ‘ஸெளந்தர்ய லஹரி’யைப் பற்றி இந்தப் பதப்பிரயோகம் செய்துள்ள [44-ம்] ச்லோகத்தில் ஒன்றுமே சொல்லவில்லை. அம்பாளுடைய முகத்தின் ஸெளந்தர்ய வெள்ளத்துக்கு ஒரு வாய்க்கால் மாதிரி அவளுடைய வகிடு ஓடுகிறது என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார்1. அழகைக் காவிய ரஸத்தோடு வர்ணனை செய்வதற்கு அதிகமாக விளக்கம் ஒன்றும் சொல்லிப் பிரகடனப்படுத்த வேண்டாம்; தத்வம், allegory (உருவகம்) ஒன்றும் சொல்லாமல், அழகைத் தெரிந்துகொண்டு ரஸிக்கத் தெரிந்தவர்கள் அந்த அழகுக்காகவே ரஸித்துக் கொண்டிருந்தால் போதும் என்கிற மாதிரி விட்டிருக்கிறார்.

அம்பாளுடைய ஸெளந்தர்ய வெள்ளமும் நம் பாப, தாபங்களைப் போக்குவதுதான்; நம் ஹ்ருதய ஏரியில் நிரம்பி நிறைவதுதான். ஆனால் இதையெல்லாங்கூட அதற்குப் பலனாகச் சொல்லி, அதனால் அந்த அழகுக்கு ஏற்றம் கொடுக்க வேண்டியதில்லை; அது அத்தனை அழககாக இருப்பதே அதற்குப் பெரிய ஏற்றம்! கங்கையில் முழுகினவுடன் தத்க்ஷணமே பாபம் போய்விடுகிறது, தாபம் போய்விடுகிறது. ஆனால் உடனே எழுந்து வரத் தோன்றுகிறதோ? அப்புறமும் ரொம்ப நாழி அந்த வெள்ளத்தில் முழுகி முழுகி நீச்சலடித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்றுதானே தோன்றுகிறது? பாப ஹரணம், தாப சமனம் என்ற பலன்களுக்காக இல்லாமல், கங்கா லஹரியில் ஸ்நானம் செய்கிற ஆனந்தத்துக்காகவே, அந்தப் பலனுக்காகவே, ஆனால் பலன் கிலன் என்ற எண்ணங்கூட இல்லாமல் நீராடிக் கொண்டிருப்பதுபோல்தான் அம்பாளுடைய ஸெந்தர்யப் பிரவாஹத்திலும் அதற்காகவே முழுகி ஆனந்தப்படவேண்டும் என்று காட்டுகிறார்.

ஈச்வர சரித்திரத்திலிருந்து சிவானந்தலஹரி வந்ததாகச் சொன்னார். இங்கே ”வதன ஸெளந்தர்யலஹரி” என்று அம்பாளின் முகத்திலிருந்து லாவண்ய வெள்ளம் பெருகுவதாகச் சொன்னாலும், முகம் மட்டுமின்றி கேசாதிபாதம் அம்பாள் அழகுப் பிரவாஹமாகத்தான் இருக்கிறாள். இன்னொரு ச்லோகத்தில் [ச்லோ. 12] ”த்வதீயம் ஸெளந்தர்யம்” என்று அம்பாளின் முழு ரூபத்தையும் அழகுமயமாகச் சொல்லியிருக்கிறது. ஈச்வரனின் லீலைகளான, காரியங்களான சிவசரித்திரத்திலிருந்து ஆனந்த லஹரி பெருகியதுபோல, அம்பாளின் ஸ்வரூபத்திலிருந்து ஸெளந்தர்ய லஹரி பெருக்கெடுக்கிறது. ஈச்வரன் சரித்ரங்களை நடத்திக் காட்டினதுபோல் அவள் எதுவும் செய்ய வேண்டியிருக்க வேண்டியிருக்கவில்லை; வெறுமே அவள் இருக்கும் போதே அவளுடைய ரூபத்திலிருந்து அழகு வெள்ளம் பிரவஹிக்கிறது.

ஈச்வரனுடைய அநேக லீலைகளை ‘சிவானந்த லஹரி’யில் சொல்லியிருப்பது போல இங்கே அம்பாளின் பண்டாஸுர வதம் முதலான ஒரு சரித்ரத்தையும் சொல்லாமல், அவளுடைய ஸ்வரூபத்தை மட்டும் சித்ரமாகத் வடித்துக் கொடுத்து இதுவே பேரானந்தம் என்று பண்ணிவிட்டார்! இதிலேயுள்ள ஸ்வரூப வர்ணனை மாதிரி அதில் ஈச்வரனை அங்க அங்கமாக வர்ணிக்கவில்லை! ஒவ்வொன்றில் ஒவ்வொரு ‘டெக்னிக்’கைக் கையாண்டிருக்கிறார்!

அவயவங்களை வரிசையாக வர்ணிப்பதில் புருஷ தெய்வங்களுக்கு ஒரு க்ரமம்; ஸ்த்ரீ தெய்வங்களுக்கு வேறே க்ரமம். புருஷ தெய்வங்களைப் பாதத்திலிருந்து ஆரம்பித்து மேல் வரிசையில் கணுக்கால், முழங்கால் என்று சிகை வரை வர்ணிக்கணும். ‘பாதாதி கேசாந்தம்’, ‘ஆபாத மஸ்தகம்’, ‘நக சிகா பர்யந்தம்’ என்றெல்லாம் சொல்வது இந்த க்ரமத்தைத் தான். ஸ்த்ரீ தேவதையானால் இதை மாற்றிக் கேசபாரத்தில் ஆரம்பித்து நெற்றி, கண் என்று கீழ் வரிசையில் பாதம் வரை கொண்டு வந்து முடிக்கவேண்டும். இதற்குக் ‘கேசாதி பாதாந்தம்’ என்று பேர். லலிதா ஸஹஸ்ரநாம ஆரம்ப பாகத்தில் இப்படியே வர்ணனை வருகிறது. ஸெளந்தர்ய லஹரியிலும் இதே ‘ஆர்டர்’ தான் பார்க்கிறோம்.

சிவானந்த லஹரியில் ரூப வர்ணனை என்று பண்ணவில்லை. ஆனால் ஆசார்யாளே ஈச்வரனைப் பற்றித் தனியாக ஒரு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரமும் பண்ணியிருக்கிறார். அதோடு அவர் திருப்தியடைந்து விடவில்லை. அவன்தான் ‘மாதிருக்கும் பாதிய’னாச்சே, அதனால் அவனைப் பற்றிக் கேசாதிபாதாந்த வர்ணனையாக இன்னொரு ஸ்தோத்ரம் பண்ணுவதும் ந்யாயந்தான் என்று அப்படியும் ஒன்று பண்ணியிருக்கிறார்.

‘ஸெளந்தர்ய லஹரி’யில் அம்பாள் அவனுடைய அர்த்த சரீரம் மட்டுமில்லை; முழு சரீரமுந்தான் என்பதாக ”சரீரம் த்வம் சம்போ:” [ச்லோ 34] என்று சொல்லியிருக்கிறார். நிஷ்கரியமான, அரூபமான சிவம்தான் சக்தி மஹிமையால் சிவனானது என்று பார்க்கும்போது அவனுடைய சரித்ரம், சரீரம் இரண்டும் அவளால்தான்! அவனைப்பற்றிய லஹரியில் சரித்ர ஸெளந்தர்யத்தையும் அவளைப் பற்றிய லஹரியில் சரீர ஸெளந்தர்யத்தையும் விவரித்தே ஆனந்த ரஸம் பெருகும்படி இரண்டு தினுஸில் பண்ணியிருக்கிறார்.

அம்பாளின் ஸெளந்தர்யத்தை, வெறும் அழகை நமக்குள்ளே வாங்கிக்கொண்டே நாம் ஆனந்தத்தில் ரொம்பி விடுகிறோம். சரித்ரம், கார்யம் என்கிறபோது அவற்றை நாம் விமரிசிக்கிற மாதிரி இங்கே எதுவும் பண்ண வேண்டியதில்லை. தரிசனம் பண்ணினாலே போதும். பரம ஸுந்தரமான ஒன்றை அப்படியே பார்த்துக்கொண்டே நிற்கிறோம். அதிலேயே நிறைவாக நிறைந்துவிடுகிறோம்! துளிக்கூட சிரம ஸாதனை இல்லாமல், மனஸுக்குப் பேரானந்தமாக, தர்சன மாத்திரத்தில் பூர்ணமாகி விடுகிறோம்!

ரொம்ப ஸுலபமாக தெய்வத்தைப் பிடிப்பதற்கு ஸ்வரூப த்யானம், நாமோச்சாரணம் என்ற இரண்டை வைத்திருக்கிறது. நாம-ரூபம் என்று இந்த இரண்டைத்தான் சொல்லியிருக்கிறது. நாமாவைச் சொல்லிக்கொண்டே இருப்பதில் சிரம ஸாதனை எதுவுமில்லை. வாயால் பண்ணுவது அது. மனக்கண்ணாலோ, புறக்கண்ணாலோ ஒரு பரம மங்களமான மூர்த்தியை தரிசனம் பண்ணுவது கஷ்டமில்லாத இன்னொரு வழி. மஹான்கள் ஜீவனோடு இருக்கிற திவ்ய ரூபங்களைப் புறக்கண்ணுக்கு முன்னாடி காண்பார்கள். நம்மால் சிலா ரூபங்களை, விக்ரஹங்களைத் தான் புறக்கண்ணால் தரிசிக்க முடிகிறது. ஜீவசக்தியோடு ஸஞ்சாரம் முதலானதுகளைப் பண்ணும் மூர்த்தியை நாம் மனக்கண்ணில்தான் காணமுடிகிறது. விக்ரஹமும் பிராணப் பிரதிஷ்டை ஆகியிருப்பதால் ஸாக்ஷாத் ஜீவ ஸ்வரூபம்தான்; வைஷ்ணவர்கள் ‘அர்ச்சாவதாரம்’ என்றே சிறப்பித்துச் சொல்வார்கள். அதனால் கோவிலுக்குப் போய் மூர்த்தி தரிசனம் பண்ணி அந்த அழகிலே சொக்கி, கஷ்டமில்லாமல் பகவத் ஸ்மரணை பெறுகிறோம்.

நாம மாஹாத்மியம் என்று எத்தனையோ சொல்லியிருந்தாலும் அதுகூட ஸாமான்யமாக நாம் இருக்கப்பட்ட நிலையில் ஒரு ரூபத்தோடு சேர்த்துச் சொன்னால்தான் மனஸை இன்புறுத்தி இழுத்துப் பிடித்து நிறுத்துகிறது. ‘ராம ராம’ என்று சொன்னால் ‘ஆடோமாடிக்’காக, மரகதப் பச்சையாக, கோதண்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திர மூர்த்தியை மனஸ் நினைக்கிறது. அந்த ரூபத்தோடு சேர்க்காமல் நாமாவை மட்டும் சொன்னால் வறட்டு வறட்டு என்றுதான் ஸாதாரண ஜனங்களுக்குத் தோன்றும்.

நாம ஜபம் முறையாகப் பண்ணுகிற போதும் த்யான ச்லோகம் சொல்லி ரூபத்தை நன்றாக மனஸுக்குள் நிறுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறது.

ரூபத்தைப் பார்ப்பது என்பதைவிட நாமாவைச் சொல்கிறது என்கிறதில் நம் பிரயாஸை ஜாஸ்தியாகத் தோன்றுகிறது; ஸுந்தரமான ஒரு ஸ்வரூபத்தை நினைத்துப் பார்ப்பதே எல்லாவற்றையும்விட ஸுலபமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

இதனால்தான் இந்த லஹரியின் உற்பத்தி ஸ்தானம், போகிற வழி, ஸங்கம ஸ்தானம் என்றெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை! உசந்த ரஸாளு மாம்பழம் என்றால் அதை சாப்பிடுவதேதான் ஆனந்தம். அது எங்கே பழுத்தது, எப்படிப் பழுத்தது, வயிற்றுக்குள் போய் என்ன பண்ணுகிறது என்பதையெல்லாம் பற்றியா நினைக்கிறோம்?

தேவாம்ருதத்தில் ஊறப்போட்ட ரஸாளு மாம்பழமாக நமக்கு ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்தோத்ரம் கிடைத்திருக்கிறது2. அம்பாளுடைய ஸ்வரூபத்தை வர்ணிக்கிற இந்த ஸ்துதியே அம்பிகையின் ஸ்வரூபமாக இருக்கிறது! ஸ்தோத்திரிக்கப்படும் விஷயம், ஸ்தோத்திர கர்த்தா, ஸ்தோத்திரம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது! அதிலே ஊறி ஊறிப் பாராயணம் செய்தால், பாராயணம் செய்பவர்களும் அதுவே ஆகி, அம்பாளாகி, எல்லாமாகிற தானான தனி நிலை என்கிற மோக்ஷத்தில் சேர்ந்து விடலாம்.


144-வது ச்லோகம் குறித்த விளக்கமான உரையைப் பின்னர் காண்போம்.

2‘தேவாம்ருதத்தில் ஊறப்போட்ட ரஸாளு’ என்பதற்குச் சிறிது தள்ளி விளக்கம் தரப்பட்டுள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is 'ஆனந்த லஹரி'பற்றி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அழகு என்றால் என்ன?
Next