சிவத்துக்கும் ஜீவசக்தி; ஆண்-பெண் பெயர்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆனால், வேடிக்கையாக, இப்படி சிவநாமாவில் ஆரம்பித்திருந்தாலும், அந்த நாமாவிலேயேகூட சக்தி மஹிமையைத்தான் அம்பாள் பக்தர்கள் காட்டுவார்கள்! என்ன சொல்வார்களென்றால் : ‘சிவனும் சக்தியும் சேர்ந்திருக்கிறது போல இங்கே முதலில் வரும் சிவ நாமாவோடு அடுத்ததாக ‘சக்த்யா’ என்று வருவதில் சக்தி நாமா சேர்ந்திருப்பது மாத்திரமில்லை. ‘சிவ’ என்கிறதிலேயே ‘சி’ என்ற முதல் அக்ஷரத்தில் சக்தி சேர்ந்திருக்கிறாள். அப்படிச் சேர்ந்திருப்பதால்தான் அந்த சிவ நாமாவுக்கு ஜீவனே ஏற்பட்டிருக்கிறது’ என்பார்கள்.

எப்படியென்றால்… உங்களுக்குத் தெரியாத விஷயம் சொல்கிறேன்: ‘சிவ என்கிறதில் முதல் அக்ஷரமான ‘சி’யில் ‘இ’காரம் இருக்கிறதல்லவா? ‘ச்’ என்ற மெய்யெழுத்தோடு இந்த உயிரெழுத்தான ‘இ’ சேர்ந்துதானே ‘சி’ ஆகியிருக்கிறது? இந்த ‘இ’, ‘ஈ’ என்பதே அம்பாள் பேர்தான் மெய்யெழுத்துக்கள் சிவ அக்ஷரங்கள், உயிரெழுத்துக்கள் சக்தி அக்ஷரங்கள் என்று பொதுவிதி. அது மட்டுமில்லாமல் உயிரெழுத்துக்களிலும் ‘இ-ஈ’க்கள் அம்பாள் ஸ்வரூபமே. காரியமில்லாத பிரம்மத்திற்குப் பிரணவம் பேர் என்கிறது போல, காரியமில்லாத பிராம்மமான சிவனோடு காரியப் பிரம்மமான சக்தியும் சேர்ந்துள்ளதான சிவ-சக்திக்கு ஒரு பிரணவம் உண்டு. அதிலே சக்திக்கான அக்ஷரம் ‘ஈ’தான் ச்ருதி [வேத]ப் பிரமாணமே இருக்கிறது, ‘ஈ’காரம் அம்பாள் என்பதற்கு. ஹ்ருதய பத்மத்தில் லக்ஷ்மி ஸ்வரூபமாக உள்ள அம்பாளுக்கு [வேதத்திலுள்ள] ஸ்ரீசுக்தத்தில் பத்மினி என்று பெயர் சொல்லி, ” ‘ஈ’காரமாக இருக்கும் அவளிடம் சரணாகதி செய்கிறேன்” என்று ப்ரபத்தி பண்ணியிருக்கிறது. ‘ஸ்ரீ’ என்பதும் ஈகாரமாகத்தானே இருக்கிறது?

புருஷப் பெயர்களில் ‘அ’காரத்தில் முடிவதே ஜாஸ்தி இருக்கின்றன – சங்கர, நாராயண, ராம, க்ருஷ்ண, ஸுப்ரஹ்மண்ய, கணேச என்ற மாதிரி. ஸம்ஸ்கிருதத்தில் விஸர்கம் சேர்த்து சங்கரஹ, நாராயணஹ என்றெல்லாம் சொல்வார்கள். தமிழில் சங்கரன், நாராயணன் என்கிறோம். ஹிந்திக்காரர்கள் சங்கர், நாராயண் என்கிறார்கள். வர வரத் தமிழ்தேசத்திலும் அப்படிச் சொல்வதே ஃபாஷனாகிக் கொண்டு வருகிறது.

பெண்பால் பெயர்கள் ‘இ’யில் முடிவதே ஜாஸ்தி: சங்கரி, நாராயணி, லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி. புருஷ தெய்வங்களின் சக்தியை, பத்னியைச் சொல்லவேண்டுமானால், ‘அ’-வில் முடியும் பேரை ‘இ’ ஆக்கிவிடுவதைப் பார்க்கிறோம்: சங்கர-சங்கரி, ஈச்வர-ஈச்வரி, நாராயண-நாராயணி, நரஸிம்ஹ-நாரஸிம்ஹி… நாராயணி, வைஷ்ணவி என்ற இரண்டு பெயர்களில் மட்டும் ஒரு விசேஷம். அவை நாராயண பத்னியை, விஷ்ணு பத்னியைவிடக் குறிப்பாக அவருக்கு ஸஹோதரியாயுள்ள அம்பாளைத்தான் குறிப்பிடுகின்றன. அம்பாளுக்கும் விஷ்ணுவுக்குமுள்ள நெருக்கம் அப்படி! அதனால்தான் ரொம்பவும் வேடிக்கையாக சங்கர-சங்கரி மாதிரி ஹர-ஹரி என்னும்போது அந்த ஹரி, அம்பாள் பேராக இல்லாமல் விஷ்ணு பேராகவே இருக்கிறது! தேவ-தேவி, ஸஹோதர-ஸஹோதரி, புத்ர-புத்ரி என்றிப்படி ஆண்பால் ‘அ’காராந்தம் [அகார முடிவு] பெண்பாலில் ‘இ’காராந்தமாயிருக்கிறது. வெள்ளைக்காரர் பெயர்களிலும் பொம்மனாட்டிகளுக்கு மேரி, லூஸி, அன்னி, ஜூலி என்று ‘இ’காரப் பெயர்கள் நிறைய இருக்கின்றன. நம் தேசத்திலேயே ‘அ’காராந்தப் புருஷப் பெயர்களை ஒரு பாஷையில் சங்கரன், நாராயணன் என்று [முடிவில்] ‘ன்’ போட்டும், இன்னொன்றில் ஷங்கர், நாராயண் என்று ஒடித்தும், இன்னொன்றில் சங்கருடு, நாராயணுடு என்று இன்னொரு விதமாக முடித்தும் சொன்னாலும் இகாராந்த ஸ்த்ரீ லிங்க [பெண்பால்] பெயர் முடிவுகளை மட்டும் மாற்றாமல் எல்லா பாஷைகளிலும் காமாக்ஷி, மீநாக்ஷி இத்யாதியாகவே தான் சொல்கிறோம்.

சங்கர-சங்கரி, ஈச்வர-ஈச்வரி மாதிரி ‘ருத்ர’ என்றால் ‘ருத்ரி’ என்று சொல்லாமல் ருத்ராணி என்று சொல்லணும். இப்படியே சிவ-சிவாநி, சர்வ-சர்வாணி, பவ-பவாநி, இந்த்ர-இந்த்ராணி, ப்ரஹ்ம-ப்ரஹ்மாணி என்று அநேகம். இங்கேயும் ஸ்த்ரீ நாமங்கள் ‘இ’யில்தான் முடிகின்றன.

‘சிவ’வுக்கு ‘சிவாநி’ மட்டுந்தான் பெண்பால் என்றில்லை;’ சிவா’ என்றாலும் சிவ பத்னிதான். சிவன்-ஸ்வாமி, சிவா-அம்பாள். இப்படியே ராம-ராமா, க்ருஷ்ண-க்ருஷ்ணா. அதாவது அகாராந்தப் புருஷப் பெயர் ஸ்த்ரீ பெயராகும்போது ஒன்று, ‘இ’ ஆகிறது; இல்லாவிட்டால் ‘ஆ’ ஆகிறது. ‘ராம’ ஆகாரமாக ‘ராமா’ என்று ஆனாலும் ‘அபிராம’ என்பது இகாரமாக அபிராமி என்று ஆகியிருக்கிறது.

‘இ-ஈ’க்களைப் போலவே ‘ஆ’வில் முடிவதாகவும் நிறையப் பெண்பால் பெயர்கள் இருக்கின்றன – உமா, ரமா, துர்கா, பாலா, லலிதா, சாரதா.

‘அமரம்’ (அமரகோசம்) என்ற ஸம்ஸ்கிருத நிகண்டுவிலே அடுக்கிக் கொண்டே போயிருக்கிற அம்பாள் நாமாக்களைப் பார்த்தால் ஒன்று அது ‘ஈ’யில் முடியணும், இல்லாவிட்டால் ‘ஆ’வில் முடியணும் என்று தெளிவாகத் தெரிகிறது.

உமா, காத்யாயநீ, கௌரீ, காளீ, ஹைமவதீ, (ஈ)ச்வரீ

சிவா, பவாநீ, ருத்ராணீ, சர்வாணீ, ஸர்வமங்களா

அபர்ணா, பார்வதீ, துர்கா, ம்ருடாநீ, சண்டிகா, (அ)ம்பிகா

ஆர்யா, தாக்ஷாயணீ, சைவ கிரிஜா, மேநகாத்மஜா

கர்மமோடீ, து சாமுண்டா, சர்மமுண்டா, து சர்சிகா

‘சைவ’, ‘து’ என்பதெல்லாம் பேரில்லை. ‘மேலும்’ என்று அர்த்தம்.

லக்ஷ்மியின் பெயர்களை [அமரத்தில்] பார்த்தாலும் இப்படியே இருக்கும்.

லக்ஷ்மீ : பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரிப்ரியா

இந்திரா லோகமாதா மா க்ஷீரோத-தநயா ரமா

பார்கவீ லோகஜநநீ க்ஷீரஸாசுரகந்யகா

ஸரஸ்வதி பேர்களும் ஆ அல்லது ஈ அந்தமாகவே இருக்கிறது:

ப்ராஹ்மீ து பாரதீ பாஷா கீர் வாக் வாணீ ஸரஸ்வதீ

‘வாக்’ என்பதற்கு மூலம் ‘வாச்’. அதுவும் ‘கீர்’ என்பதும் மட்டும் மெய்யெழுத்தில் முடிகிறது. ஆனால் இது ரொம்ப அபூர்வம். பொதுவாகக் காணப்படுவது ஸ்த்ரீ நாமாக்கள் ஆகாராந்தமாகவோ ஈகாரந்தமாகவோ இருப்பதைத்தான்.

தமிழிலும் பெண்பாலைக் குறிக்க ‘இ’தான் போடுகிறோம். அரசன்-அரசி, அண்ணன்-அண்ணி, இறைவன்-இறைவி இப்படி ஆனால் ‘ஆ’காரந்தமாகத் தமிழில் பொம்மனாட்டிப் பேர்கள் முடிவதில்லை. ஸ்மஸ்கிருதத்தில் ‘ஆ’வில் முடிவதைக்கூடத் தமிழில் ‘ஐ’ ஆக்கியிருக்கிறோம்: ஸீதா-ஸீதை, லலிதா-லலிதை என்று. ஸம்ஸ்கிருதத்தில் ‘ஐ’ என்று பேர் முடியவே முடியாது. ஐகாரத்தில் சப்தமே [வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பெயர்ச் சொற்களைக் கூறும் அமைப்பு] கிடையாது. ஆனாலும் மந்த்ர சாஸ்திரத்தில் அம்பாளை வாக்தேவியாகச் சொல்லும்போது இது வருகிறது.

‘ஆ’காரம் ஸ்த்ரீ நாமங்களுக்கு மட்டுமே ஆனது. [சிரித்து] எக்ஸ்க்ளூஸிவ்! ‘ஆ’வில் முடியும் புருஷப் பேரே கிடையாது.

அந்நிய தேசங்களிலும் டயானா, ஜூலியானா, ஃபாதிமா, கதிஜா என்று ஸ்த்ரீகளின் பெயர்கள் ‘ஆ’வில் முடிவதாக நிறைய இருக்கின்றன. வெள்ளைக்கார ஸ்த்ரீ-புருஷப் பெயர்கள் பல தினுஸாக முடிகின்றன.

ஆனால் அங்கேயும் ஒரு புருஷப் பெயரை ஸ்த்ரீ பெயராக்கும்போது ‘ஆ’காரமாக்கியே முடிக்கிறார்கள் – அலெக்ஸாண்டர்: புருஷப் பெயர்; அதையே பொம்மனாட்டிப் பேராக்கும் போது அலெக்ஸான்ட்ரா; விக்டர்-விக்டோரியா. நம்மில் அடியோடு ‘ஆ’காரந்தமாகப் புருஷப் பேரே இல்லையென்றால் அங்கேயும் அபூர்வமாகவே ஜோஷுவா, ஜெரிமியா மாதிரி ஒன்று, இரண்டு தவிர ‘ஆ’வில் முடியும் புருஷப் பெயரில்லை.

‘இ’காராந்தமாக ஸ்த்ரீ பெயர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் ஹரி, கணபதி, ராமமூர்த்தி என்றிப்படி பல புருஷப் பெயர்களும் முடிகின்றன. ஆனால் ‘ஆ’காரந்தமாக பெண் பெயர்கள் மாத்திரமே இருக்கின்றன. புல்லிங்கத்தில் [ஆண்பாலில்] ஆகாரந்தமான பேரே கிடையாது என்று சப்த புஸ்தகத்தைப் பார்த்தால் தெரியும். புருஷ சப்தங்களில் ‘அ’காரந்த ‘ராம’ சப்தத்துக்கு அடுத்தாற் போல ‘இ’காரந்த ‘ஹரி’ சப்தம்தான் போட்டிருக்கும். ‘ஆ’வில் முடிவதாக எதுவுமே கிடையாது. ஸ்த்ரீ சப்தங்களிலோ ‘அ’காரந்தமே இருக்காது. எடுத்தவுடனேயே ‘ரமா’ என்று ‘ஆ’வில் முடிவதுதான். அப்புறம் ‘இ’யில் முடியும் ‘மதி’ சப்தம்; அதற்கப்புறம் ‘ஈ’யில் முடியும். கௌரீ சப்தம்.

நாம் தமிழில் லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி என்று ‘இ’யாகக் குறிலில் எழுதும் எல்லாமே [ஸம்ஸ்கிருத] மூலத்தில் லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, பார்வதீ என்று [நெடிலான] ‘ஈ’யில்தான் முடிவது. இ-ஈ வித்யாஸம் பார்க்காமல் நான் சேர்த்தே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ‘ஈ’யில் முடியும் மிகப் பெரும்பாலான பெயர்ச் சொற்கள் பெண்பாலாகவே இருக்கின்றன: ‘இ’காரந்தத்தைவிடவும் குறைவாகவே ஆண்பாலில் ‘ஈ’காராந்தம் இருக்கிறது – ஸேநாநீ (ஸேநாதிபதி), க்ராமணீ (கிராமணியார் என்கிற கிராமத் தலைவர்), ஸுதீ (நல்லறிவுள்ளவர்) முதலான ஒரு சில.

”ப்ரஹ்மா, தாதா, கேசிஹா, தர்பஹா, த்வஷ்டா, ஆத்மா1 என்றெல்லாம் ‘ஆ’காராந்தமாக விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேர்கள் வருகிறதே! இவரானால் ஆகாராந்த புல்லிங்க சப்தமே இல்லை என்கிறாரே!” என்று நினைக்கலாம். இங்கே ‘ஆ’வில் முடிவதாகச் சொன்ன எல்லாப் பெயர்களுக்கும் மூல ரூபம் அப்படி முடியாமல் வேறே விதமாகவே முடியும். ‘ப்ரஹ்மா’வின் மூல ரூபம் ‘ப்ரஹ்மன்’; ‘ஆத்மா’வின் மூல ரூபம் ‘ஆத்மன்’; இப்படியே ‘கேசிஹா’, ‘தர்பஹா’ என்பதும் ‘கேசிஹன்’, ‘தர்பஹன்’தான். ‘தாதா’, ‘த்வஷ்டா’ என்பவை மூலத்தில் ‘தாத்ரு’, ‘த்வஷ்ட்ரு’ என்றே முடியும். அதாவது ஆகாரத்தில் அந்தப் பெயர்கள் முடியவில்லை.

‘பிதா’ என்று ஆண்பாலான தகப்பனாரைச் சொல்கிறோம். இதுவும் ‘பித்ரு’ என்ற மூலத்திலிருந்து வந்ததே. மாத்ரு-மாதா; பித்ரு-பிதா, சர்மா, வர்மா, குப்தா என்று சொல்லும் [முறையே பிராமண, க்ஷத்ரிய, வைசிய] ஜாதிப் பெயர்களும் மூலத்தில் ‘ஆ’வில் முடியாமல் சர்மன், வர்மன் என்றும் ‘குப்த’ என்று [குறிலான] அகாராந்தமாக முடிவதாகவுமே இருக்கின்றன. ‘ஸகா’ – தோழன் – என்ற புருஷ சப்தத்தைக்கூட ‘ஆ’காராந்தமாகச் சொல்லாமல், ரொம்பவும் வேடிக்கையாக ‘ஸகி’ என்றே மூல ரூபம் காட்டி ‘இ’காரந்தமாகவே ‘டிக்ளைன்’ செய்திருக்கும் [வேற்றுமை உருபுகளைச் சேர்த்துக் கொடுத்திருக்கும்].

[முன்னேயே] சொன்னாற்போல் ‘அ’காரத்தில் முடியும் ஸ்த்ரீலிங்கப் பெயரும் இல்லை. ‘ஆ’காரத்தில் முடியும் புல்லிங்கப் பெயரும் இல்லை. இ-ஈ இரண்டிலும் முடிவதாக ஸ்த்ரீலிங்கப் பெயர்களே அதிகம் இருக்கின்றன.

புருஷர்கள்தான் ஸ்த்ரீகளைவிட நெட்டையாக இருப்பவர்கள். ஆனாலும் ஆனா ஆவன்னாவை எடுத்துக் கொண்டாலோ குட்டை [குறில்] அகாராந்தமே புருஷர்களுக்கு, நெட்டை [நெடில்] ஆகாராந்தம் ஸ்த்ரீகளுக்கு என்று இருக்கிறது. இங்கே ஸ்த்ரீகளைத்தான் புருஷர்களை விட [சிரித்து] ‘உயர்த்தி’ச் சொல்லியிருக்கிறது!

குட்டை நெட்டை இ-ஈ இரண்டுமே ஸ்த்ரீ பெயர் முடிவுகளில் அதிகம் இருக்கின்றன.

‘சக்தி’ என்பதே ‘இ’யில் முடிவதுதான்! ‘தேவீ’, ‘ஈச்வரீ’ என்பவை ‘ஈ’யில் முடிகின்றன. ‘அம்பா’வும் ‘அம்பிகா’வும் ‘ஆ’வில் முடிகின்றன.

‘ஆ’ முடிவுதான் ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ என்றாலும், இகார ஈகாரங்களையே சக்தி ஸ்வரூபமாகச் சொல்வதுதான் வழக்கம். அதன் ரஹஸ்யம் மந்த்ரவித்துக்களுக்குத் தெரியும். இந்த விஷயம் ரஹஸ்யமாகப் போஷித்து அதிகாரிகளுக்கே [உபாஸிக்கத் தகுதி பெற்றவர்களுக்கே] சொல்ல வேண்டியது. சுருக்கமாக: அத்தனைக்கும் ஜீவ சைதன்யத்தை [உயிரியக்கத்தையும் அறிவொளியையும்] தருவது ‘ஈ’காரந்தான்.

‘சிவ’ என்கிறபோது முதல் எழுத்தான ‘சி’யிலேயே அம்பாள் ‘இ’காரமாகப் பிரிவற ஒட்டிக்கொண்டு உயிர் தருகிறாளென்று சொல்ல வந்தேன்.

‘சிவ’த்தில் இந்த ‘இ’ போய்விட்டால் என்ன ஆகும்? புருஷப் பெயராச்சே என்று இகாரத்தை அகாரமாக்கினால் என்ன ஆகும்? பரம மங்களமான சிவ நாமாவே பரம அமங்களத்தைக் குறிப்பதாகிவிடும்! ‘சி’யிலிருந்து ‘இ’யை மைனஸ் பண்ணினால் அது ‘ச’ என்றுதானே ஆகும்? அப்போது ‘சிவம்’? ‘சவம்’ என்றல்லவா ஆகிவிடும்? ‘இ’ என்ற உயிரெழுத்துதான் ஈச்வரனுக்கே ஜீவனை, உயிரைத் தருகிறது. இது போனால் உயிர் போன சவம்தான்!

இதைச் சொல்லும்போதே இன்னொன்று கண்டு பிடித்திருக்கிறேன்!’ ஈச்வரன்’ என்றாலும் முதலில் ‘ஈ’தான் உட்கார்ந்திருக்கிறது! வேதாந்தத்தில் ஈச்வர சப்தந்தான் ஸகுண ப்ரஹ்மத்தை – அதாவது கார்ய ஸம்பந்தமுள்ள ப்ரஹ்மத்தை – குறிப்பது. கார்யமெல்லாம் சக்தி பீஜமான ‘ஈ’யில்தான் ஆரம்பிக்கிறது.

பீஜம் என்றால் விதை. ஒரு சின்ன விதைக்குள் எப்படி மரமே மறைந்திருக்கிறதோ, அப்படி மஹா மந்த்ர சக்தியை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டுள்ள திவ்ய அக்ஷரங்களையே ‘பீஜம்’, ‘பீஜாக்ஷரம்’ என்பது.

சக்தி சேராவிட்டால் சிவம் சவம் என்பதை நம் தமிழ் வழக்கில் ஒலிகளுக்கு அழகாகப் பெயர் கொடுத்திருக்கும் முறையில் பார்க்கிறோம். சிவ-சக்தி ப்ரணவத்தில் ‘ஈ’ வருகிறது; இதுதான் அம்பாளுக்கான அக்ஷரம் என்றேன். ‘ஈ’ என்பது தமிழ் வழக்கில் உயிர் எழுத்து. இதோடுகூட சிவ-சக்தி ப்ரணவத்தில் ஈச்வரனின் சப்தரூபமான மெய்யெழுத்து சேர்ந்திருக்கிறது. மெய் என்று உடம்புக்குப் பேர். ஆக, சிவ-சக்தி ப்ரணவத்தில் ஸ்வாமி உடம்பு எழுத்தாகவும் அம்பாளே உயிர் எழுத்தாகவும் இருக்கிறார்கள். உயிர் இல்லாத உடம்பு என்ன? ‘சிவம்’ மைனஸ் ‘இ’ என்னவென்று பார்த்தோமே, அதுதானே?

சக்தி இல்லாவிட்டால் சிவம் சவம் என்றால் என்ன அர்த்தம்? [சிரித்து] யசமானியம்மாள் இல்லாமல் ஐயாவுக்குச் செயலே இல்லை என்று அர்த்தம்! பேச்சு வழக்கைக்கூடச் சொன்னேனே, ”உனக்குப் இதைப் பண்ண சக்தி இருந்தா பண்ணு! இல்லாட்டா சிவனேன்னு கிட” என்கிறோம்! செயல் புரியும் திறமை இருந்தால் ‘சக்தி’; ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் ‘சிவனே’ என்று! இதிலிருந்து அவளின்றி அவனுக்குச் செயலில்லை என்று ஆகிறதல்லவா? யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது? ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?

தன் சக்தியை பிரம்மம் அறிந்ததால்தான் அதைக் கொண்டு ஸ்ருஷ்டியை உண்டாக்க முடிந்தது. சக்தி இருப்பதாக அது அறியும்படி செய்ததும் அதனுடைய சக்தி தானே? இதைத்தான் ஸ்தோத்திரத் தொடக்கத்தில், ”சிவனும்கூட சக்தியான உன்னோடு கூடியிருந்தால்தான் பிரபஞ்ச வியாபாரம் நடத்தத் திறமையுள்ளவராகிறார். இல்லாவிட்டால் அவரால் துளி அசையக்கூடஸாமர்த்தியமில்லாமல் கிடப்பார்” என்று சொல்லி, இது ஸர்வ நிச்சயம் என்று உறுதிப்படுத்த, ”ந கலு” – “அப்படித்தானே?” என்கிறார்.

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

ந சேத் ஏவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி

‘ஸ்பந்திதும்’ – அசைவதற்கு; ‘அபி’ – கூட; ‘குசல: கலு’ – ஸாமர்த்தியமில்லாமல் திராணியில்லாமல்தானே இருப்பார்?

சக்தியில்லாவிட்டால் சிவம் சவமாகத்தானே கிடக்க வேண்டும்?


1 ‘அமேயாத்மா’, ‘அப்ரமேயாத்மா’ முதலிய நாமங்கள் ‘ஆத்மா’ என்று முடிவதைக் கருத்தில் கொண்டு கூறியிருக்கக்கூடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிவ எனத் தொடங்கும் சக்தித் துதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  இரு மார்க்கத்திற்கும் ஆசாரியர்
Next