பஞ்ச க்ருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஹரி-ஹர-விரிஞ்சன் என்று த்ரிமூர்த்திகளைச் சொல்கிறார். இவர்கள் அம்பாளை வழிபடுவதாகச் சொல்கிறார். இதற்கு முன்னாடி, ‘சிவனும் உன்னோடு கூடினால்தான் அசையக்கூட முடிகிறது – அதாவது, பிரபஞ்ச நிர்வாஹத்தைப் பண்ண முடிகிறது’ என்றார். அப்படியானால் மும் மூர்த்திகளில் சொன்ன ‘ஹரன்’ வேறு, முதலில் சொன்ன ‘சிவன்’ வேறு என்றாகிறது; இல்லையா?

எல்லாம் ஒன்று என்பது இருக்கட்டும். அந்த அத்வைதம் இங்கே எடுபடாது என்றுதானே ஸ்தோத்திரமே ஏற்பட்டிருக்கிறது? இந்த நிலையில் – உள்ளே எல்லாம் ஒன்றாயிருந்தாலும், வெளியில் வேறாகக் காண்கிற நிலையில் – ஹரன் வேறு, சிவன் வேறுதான்.

‘ஹரன்’ என்றால் போக்குகிறவன், நீக்குகிறவன், இல்லாமல் பண்ணுகிறவன் என்று அர்த்தம். அபஹரணம், ஸம்ஹரணம் என்பதில் வரும் ‘ஹர’ இதுதான். இதுவே ‘ஹாரம்’ என்றும் வரும் – அபஹாரம், ஸம்ஹாரம். ஸ்ருஷ்டிக்கும் ப்ரம்மா, ரக்ஷிக்கும் விஷ்ணு, ஸம்ஹாரம் செய்யும் ருத்ரன் என்ற மூன்றில் ஸம்ஹார ருத்ரனைத்தான் ஹரன் என்கிறார்.

ஒரே பரமாத்மாதான் முத்தொழிலுக்காக இப்படி மும்மூர்த்தியாயிற்று. அவர்களுக்கு அந்தத் தொழில்களைப் பண்ணுவதற்கான சக்தி பரமாத்மாவின் மூலமான சக்தியிலிருந்துதான் வந்திருக்கிறது. அந்த மூல சக்தியே அம்பாள். பரமாத்மா என்கிற பரப்ரம்மத்தின் சக்தி அவள். மும்மூர்த்தி மாத்திரமின்றி ஈ, எறும்பிலிருந்து அத்தனை ஜீவராசிகளின் சக்தியும் அவளிடமிருந்து வந்ததுதான்; ஸகல ஜகத்திலுள்ள ஜட வஸ்துக்களின் சக்தியுந்தான்!

பரப்ரம்மத்தின் சக்தி என்றால் அதுவும் பரப்ரம்மமேதான். எது ஒன்றும் அதுவாக இருக்கக் காரணம் அதன் சக்திதானே? ஒரு வஸ்துவின் சக்திபோய்விட்டதென்றால் அந்த வஸ்துவின் பயனே போய்தானே விடுகிறது? பத்து ஹார்ஸ் பவர் மோட்டார் என்றால் அந்த ஹார்ஸ் பவர்தானே அந்த மோட்டாரை மோட்டாராக்கியிருக்கிறது? அந்தப் பவர் போய்விட்டால்? அதுவே போன மாதிரிதானே? அப்புறம் மோட்டார் என்று பேர் வைத்துச் செய்த கார்யம் எதுவாவது அது செய்ய முடியுமா? அதன் உள்ளேயே கையைவிட்டு விளையாடினால்கூட ‘ஷாக்’ அடிக்காது. ஒரு ஆஸாமி அந்த ஆஸாமியாயிருப்பதே அவனுடைய சக்தியினால்தான். ஆனபடியால் பரப்ரம்ம சக்தி என்பது பரப்ரம்மமேதான். ஆனாலும், யாரானாலும் தன் சக்தியைக் காட்டாமல் சும்மாயிருக்கவும் செய்யலாமல்லவா? அப்படி வெளி வ்யாபாரத்தில் ஈடுபடாமல் சாந்தமாக, தன்னில் தானாக பரப்ரம்மம் இருப்பதையே ‘சிவம்’ என்பது.

அப்படிப்பட்ட சிவ நிலையிலிருந்துதான் வெளியிலேயே ஓடிக்கொண்டிருக்கும் மனஸ், வெளி வ்யாபாரங்களிலேயே விழுந்துகொண்டிருக்கிற இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஜீவ நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். நம்முடைய நிஜத்தன்மையை நாம் அடைந்து, மாயா கார்யமும் ஸம்ஸார பந்தமும் போய் மோக்ஷத்தில் எப்போது சேர்வோம் என்றால் அந்த சாந்த சிவத்திலேயே மறுபடி இரண்டறக் கலக்கிறபோதுதான். நமக்கு மிகவும் உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுப்பதான மோக்ஷம் இப்படி சாந்தமாயிருப்பதால், அப்போது நாம் இரண்டறக் கலந்திருக்கும் ப்ரம்மமும் சாந்தமாக, செயலில்லாமல், சக்தியைக் காட்டாமல் இருப்பதாகவே ஏற்படுகிறது. அதனால்தான் ப்ரம்மம், பரப்ரம்மம் என்றாலே செயலடங்கியுள்ள ஒன்றாகச் சொல்கிறோம். ஒரு செயலுமில்லாமல் ஒருத்தர் சித்தப்ரமை பிடித்து உட்கார்ந்திருந்தால் ”ப்ரம்மமாயிருக்கு” என்கிறோம்!

இப்படிப் பார்த்துக்கொண்டு போகிறபோது சிவன் பரப்ரம்மம், அம்பாள் பரப்ரம்ம சக்தி என்று பாகுபடுத்திச் சொல்ல இடமேற்படுகிறது – இது இல்லாமல் அது இல்லை என்றாலும், இரண்டையும் வேறு வேறு மாதிரிப் பிரித்துக் காட்ட இடமேற்படுகிறது.

இப்போது ப்ரம்ம சக்தியினால் நடக்கும் கார்யங்களில் முத்தொழிலோடுகூட இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது. சாந்த சிவ ஸ்வரூபமாகவே இருந்த நமக்கு அந்த ஸ்வரூப ஞானத்தை மறைத்து அதனிடத்தில் அஞ்ஞான ஜீவ பாவத்தைத் தோன்றப் பண்ணி ஸம்ஸார மாயையில் பிடித்துத் தள்ளியிருக்கிற ஒரு தொழிலையும் ப்ரம்ம சக்தி செய்விக்கிறாள் என்று தெரிகிறது. இந்த மாயையிலிருந்து தப்பித்துப் பல மஹான்கள் தங்களுடைய நிஜ ஸ்வரூபமான சிவ ஸ்வரூப ஞானம் பெற்று சாந்த ஸமாதியான மோக்ஷநிலையை அடைந்திருக்கிறார்களென்பதிலிருந்து இப்படிப்பட்ட மோக்ஷ அநுக்ரஹத்தைச் செய்வதான தொழிலையும் பராசக்தி – ப்ரம்மசக்தி – செய்வதாக ஏற்படுகிறது. ஆக, ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரத்தோடு இன்னும் இரண்டு தொழில் சேர்கிறது: ஒன்று – நமக்கு நம்முடைய நிஜமான ஆத்ம ஸ்வரூபம் தெரியாமல் மாயா சக்தியால் மறைப்பது. இன்னொன்று – மாயையிலே மாட்டிக்கொண்டிருக்கிற நம்மை அதிலிருந்து விடுவித்து, ‘சிவமாக்கி எனையாண்ட்’ என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடின மாதிரி1 பரமாத்ம ஸ்வரூபத்தில் சேர்த்து மோக்ஷத்தை அநுக்ரஹிப்பது. இந்த இரண்டு தொழிலுக்கும் முறையே ‘திரோதானம்’ என்றும் ‘அநுக்ரஹம்’ என்றும் பேர். திரோதானம் என்பதைத் திரோபாவம் என்றும் சொல்வதுண்டு. ‘திரஸ்’ என்கிற தாதுவுக்கு ‘ரஹஸ்யப்படுத்துவது’, ‘மறைப்பது’ என்றும் அர்த்தம். ‘திரஸ்கரிணி’ என்று ஒரு வித்தை கேள்விப்பட்டிருக்கலாம் – ஒரு வஸ்துவை மறைந்துபோகும்படிப் பண்ணும் வித்தை. ‘திரஸ்’ஸிலிருந்துதான் ‘திரை’ வந்திருக்கிறது. ஒரு வஸ்துவை நமக்குத் தெரியாதபடி திரை விழுந்து மறைத்தவிடுகிற தோல்லியோ? மாயைத் திரையைப் போட்டு நம் ஆத்மஸ்வரூபத்தை மறைத்து ஸம்ஸாரத்தில் ஆட்படுத்துகிற பராசக்தியின் தொழில் திரோதானம். திரையை அறுத்து மோக்ஷம் கொடுக்கும் தொழில் அநுக்ரஹம். பராசக்தி ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களுக்கு அதிகாரியாக ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரர்களை வைத்திருப்பது மாதிரி திரோதானத்திற்கு வைத்துள்ள அதிகாரிக்குப் பேர்தான் ஈச்வரன். மஹேச்வரன் என்றும் சொல்வதுண்டு. முதலில் சொன்ன முத்தொழிலும் மாயைக்கு உட்பட்டதுதான். அந்த மாயா லோக நிர்வாஹம் முழுக்க ஈச்வரனின் அதிகாரத்தில் இருக்கிறது. மாயையை நிவ்ருத்தி பண்ணி மோக்ஷத்தைக் கொடுக்கும் அநுக்ரஹத் தொழிலைப் பண்ணும் அதிகாரியின் பேர் ஸதாசிவன்2.

ஐந்தொழில் – பஞ்சக்ருத்யம் – என்று இவற்றைச் சொல்வது. சைவ ஸித்தாந்தம் முதலான சிவ மதங்களிலும் இது உண்டு. ஆக்கல், அளித்தல் (காப்பு அளித்தல்) , அழித்தல், மறைத்தல், அருளல் என்று தமிழில் சொல்வார்கள். சைவர்கள் இப்படி பஞ்ச க்ருத்யம் புரிவது பரமசிவன் என்று சொல்வார்கள். நடராஜாவின் நாட்டியத்தையே ‘பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்’ என்று விளக்குவார்கள். சாக்தத்தில் அம்பாளைத்தான் பஞ்ச க்ருத்யம் புரிபவளாகச் சொல்வார்கள். ”பஞ்ச க்ருத்ய பராயணா” என்று ஸஹஸ்ரநாமத்தில் பேர் வருகிறது.

எடுத்துக்கொண்ட விஷயம் சாக்தமான ஸ்தோத்ரம் என்பதால் மட்டுமில்லாமல், நடுநிலையாகப் பார்த்தாலுங்கூட பஞ்சக்ருத்யங்களையும் ஒவ்வோர் அதிகாரிகளைக் கொண்டு செய்கிற தலைமை ஸ்தான அதிகாரி அம்பாள் என்பதே அதிகப் பொருத்தம் என்று தெரியும். எப்படியென்றால், க்ருத்யம் – கார்யம் செய்வது – என்பது சக்தியைக் கொண்டு நடப்பதுதானே? சக்தியைக் காட்டினால்தானே கார்யம் நடக்கும்? சக்தி என்றாலே அம்பாள் தானே? சைவ சாஸ்திரங்களிலும் சக்தி ஸஹிதனாகவே தான் சிவனைச் சொல்லியிருக்கிறது – அதாவது சிவ பத்னிக்குத்தான் சக்தி என்று பேர் கொடுத்து, அவளோடு அவன் சேர்ந்திருப்பதாகவே சொல்லியிருக்கிறது.

அத்வைதத்திற்கும், நம்முடைய ‘ஸெளந்தர்ய லஹரி’யின் அபிப்ராயங்களுக்கும் ரொம்பக் கிட்ட வந்துவிடுகிற காஷ்மீர சைவத்தில் உச்சாணியான பரமாத்மாவை ‘சிவ-சக்தி’ என்றே சேர்த்துச் சொல்லியிருக்கிறது. ஆகையினால், வெறும் தத்வமாக, ஸமாதி மாதிரியான கார்யமில்லாத உள்ளநுபவமாக இல்லாமல் கார்யம், பஞ்ச ‘க்ருத்யம்’ என்று வரும்போது அதைப் பராசக்தியான அம்பாளின் அதிகாரத்தில் சொல்வதுதான் பொருத்தம்.

ஐந்து அதிகார தேவதைகளைக் கொண்டு அவள் பஞ்ச க்ருத்யம் பண்ணுகிறாள் என்றாள் அப்போது அவள் அந்த ஐந்துக்கும் மேலே, ஐவருக்கும் மேலே இருக்கிறாள் என்றாகிறது. பரப்ரஹ்மத்தின் பரிபூர்ண சக்தியிலிருந்து தானே இந்த ஐந்து சக்திகளும் வந்திருக்கின்றன? அப்போது அதுதானே எல்லாவற்றுக்கும் மேலானதாக இருக்க வேண்டும்?

அந்த மூலசக்திதான் நம் ஸத்தோத்ரத்தின் லக்ஷ்யமான ஸுந்தரி. அத்தனை தொழில்களுக்குமே அவள்தான் ஆதார சக்தி. க்ருத்ய மூர்த்திகள் ஐந்து பேருக்குமே அவள்தான் [சிரித்து] யசமானியம்மா! ஞானத்தை, மோக்ஷத்தை அநுக்ரஹிக்கும் ஸதாசிவனுக்குங்கூட அவள் மேலே! அவன் வெறும் ஞான ஸ்வரூபமாக இருக்கிறபோது – ‘just Being’ என்கிறார்களே, அப்படி, ‘இருக்கிறதுதான்’, ‘செய்கிறதில்லை’ என்று தன்னில் தானாக இருக்கும்போது அவனுக்கு மேலே, கீழே ஒன்றும் கிடையாது. ஆனால் அவனும் ஞானத்தை அநுக்ரஹிப்பது என்ற கார்யத்தைப் பண்ணும்போது அப்படி அவனைப் பண்ணுவிக்கிற சக்தி அவனுக்கும் மேலே இருக்கத்தானே செய்கிறது?

”மேலே” என்பதை ஸ்தூலமாகவே அந்த ஐந்து பேருக்கும் மேலே அவள் உட்கார்ந்து கொண்டிருப்பதாக ஸாகாரத்தில் [உருவத்தில்] காட்டி, அநுபவிகளுக்கும் மந்த்ர ஸித்தி பெற்றவர்களுக்கும் தர்சனம் கொடுத்திருக்கிறாள். எப்படியென்றால் அவள் ராஜராஜேச்வரியாகக் கொலு வீற்றிருக்கும் ஆஸனத்தின் நாலு கால்களாக ப்ரஹ்ம-விஷ்ணு-ருத்ர-மஹேச்வரர்கள் இருப்பார்கள். நாலு காலையும் சேர்த்து உட்கார்வதற்கான மேல் பலகை இருக்குமல்லவா? அந்தப் பலகையாக ஸதாசிவன் இருப்பார்.

இப்படி ப்ரஹ்மாதி பஞ்ச க்ருத்ய மூர்த்திகளை ஆஸனமாக்கிக் கொண்டிருக்கும் அம்பாளை, அதாவது பூர்ண ப்ரஹ்ம சக்தியைக் காமேச்வரி என்று சொல்வது. அந்த அவஸரத்தில் பரப்ரஹ்மத்தை அவளுடைய பதியான காமேச்வரன் என்று சொல்வது.

”அவள்தான் ஸகலமும் பண்ணுகிறவள் என்னும் போது அவளுக்கு எதற்குப் பதி என்று ஒருத்தனைச் சொல்லி, காமேச்வரன் என்று அவனுக்குப் பேர் கொடுத்து வைக்க வேண்டும்?”

அவள்தான் ஸகலமும் என்றாலும் அவளுக்குள்ள அநேக ரூப பேதங்களில் இப்படி ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும்போது மாதா என்ற பாவமே அவளுக்கு முக்யமானது. நாம் எல்லோரும் அவளை ஒரு குழந்தை அம்மாவிடம் அன்போடு போய் ஒட்டிக்கொள்கிறது போல அன்பு பண்ண வேண்டும் என்பதாலேயே மஹாசக்தியான அவள் சக்தியைவிட ஸெளந்தர்யமும் லளிதமும் பொங்கித் ததும்பும்படியாக இப்படி ரூபம் கொண்டது. அதனால்தான் ஸஹஸ்ரநாமத்தில் ஆரம்பப் பேரே ”ஸ்ரீமாதா” என்று இருப்பது. நம்மை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, ஜன்மாக்களுக்கு நடு நடுவே ஸம்ஹாரம் என்ற பெயரிலே ‘ரெஸ்ட்’ கொடுத்து, மாயா மறைப்பு விளையாட்டுகளும் காட்டி, முடிவிலே மோக்ஷாநுக்ரஹத்தில் தன்னோடு ஒன்றுபடுத்திக் கொள்ளும் தாயாக இருப்பவள் அவள். தாயார் என்று ‘பார்ட்’ [வேஷம்] போட்டுக் கொண்டால் தகப்பனாரைக் காட்டியே ஆக வேண்டும். தகப்பனாரில்லாத தாயாரென்றால் … இரண்டு தினுஸாகவும் ‘அந்த மாதிரி’ ஜகன் மாதாவை நினைக்க விடலாமா? கன்னியான பாலா, கன்யாகுமாரி ஆகியவர்களின் ஸமாசாரம் வேறே. அஸுரசக்திகளை அடக்கவே ஏற்பட்ட துர்கை விஷயமும் வேறே. இவள் முக்யமாக ஸ்ரீமாதா. அப்போது பிதாவும் இருந்துதானே ஆகணும்? அதனால்தான் காமேச்வரனைப் பசியாகக் கொண்டது; அந்த ‘உப்புக்குச் சப்பாணி’ அகமுடையானுக்கு லோக தர்மத்தை அநுஸரித்து உசந்த ஸ்தானமும் கொடுத்தது. ”[லலிதா] த்ரிசதி”யில் அவள் காமேச்வரன் பத்னி என்பதற்கே பதினைந்து பேர்களை அடுக்கிக் கொண்டு போயிருக்கிறது.

ராஜராஜேச்வரி, லலிதா, த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களைக் கொண்டவளும் அவளேதான் என்றாலும் காமேச்வரி நாமாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. என்னவென்றால், சைவத்தில் சிவன் எப்படி சக்தி ஸஹிதனாகவே இருக்கிறானோ, அப்படியே சாக்தத்திலும் இந்த ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சக்தியானவள் சிவ ஸஹிதையாகவே பதியோடு இருக்கிறாள். பூர்ண ப்ரஹ்ம சக்திக்கு யார் பதியாக இருக்க முடியும்? அதைத் தவிர எதுவுமே இல்லாதபோது யார் பதி ஆகமுடியுமென்று ஆலோசித்துப் பார்த்தால் சக்தியைக் காட்டாமல், கார்யம் பண்ணாமல், சாந்தமாக இருந்து கொண்டிருக்கிற ப்ரஹ்மமான சிவன்தான் அந்த சக்திக்கு வேறே மாதிரி, இன்னொன்று மாதிரி தெரிவதால் அதுதான் பதியாயிருக்க முடியுமென்று தெரிகிறது. அதாவது சாந்த சிவனின் சக்தி ப்ரபாவம் அந்தப் பத்னி மூலம் பஞ்ச க்ருத்யங்களாக வெளிப்படுவதாக ஆகிறது.

இதிலிருந்து இன்னும் என்ன ஆகிறதென்றால், அந்த சிவனே நேராக சக்தி விலாஸத்தைக் காட்டும் கார்யத்தைப் பண்ணாவிட்டாலும், அப்படிப் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாக ஆகிறது. ”ஒன்றாக இருந்த ப்ரம்மம் பலவாக ஆக ஆசைப்பட்டது” என்றே உபநிஷத்துச் சொல்கிறது3. சாந்த ப்ரம்மம் அப்படியே இல்லாமல் கார்ய ப்ரம்மமாயிற்று என்றால், அப்போது அந்தக் கார்யத்துக்கெல்லாம் முந்தி, அது கார்ய ப்ரம்மமாகணும் என்று ஆசைப்பட்டிருக்கணும்தானே? ‘ஆசைப்பட்டது’ – ‘அகாமயத’ என்றே உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. எப்போதும் சித்சக்தியான ஞானசக்தியை உள்ளே வைத்துக் கொண்டுள்ள ப்ரஹ்மம் – சிவம் – சக்தியை வெளிப்படுத்தி ப்ரபஞ்ச லீலை பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதே அதனுடைய இச்சா சக்தி எனப்படுகிறது. அப்புறம் வாஸ்தவமாகவே பஞ்ச க்ருத்ய லீலை செய்தது க்ரியா சக்தி. அது இருக்கட்டும். இப்போது விஷயம், தன்னில் தானாயிருந்த ப்ரம்மம் வெளிமுகப்படும்போது முதலில் தோன்றியது அதன் இச்சை, ஆசை; ‘காமம்’ என்று உபநிஷத் சொல்வது. ‘காமம்’ என்பது இங்கே தப்பர்த்தம் தருவதில்லை. சுத்தமான இச்சைக்கே அப்படிப் பேர். பூர்ண ப்ரஹ்ம சக்தி ப்ரஹமத்திலிருந்து வேறே மாதிரி கொண்ட முதல் ஆவிர்பாவம் அந்தக் காமம். அதுவேதான் அவனுக்குப் பத்னி ஸ்தானம். அப்பா அம்மா சேர்ந்து ப்ரஜைகள் உண்டாகிறாற்போல சாந்த ப்ரஹ்மமான சிவன் இந்த இச்சா சக்தியோடு சேர்ந்தால்தான் ப்ரபஞ்ச லீலை, பஞ்ச க்ருத்யங்கள் எல்லாம் என்பதால் அவர்கள் பதியும் பத்னியும் ஆகிறார்கள். அவனுடைய இச்சையின், காமத்தின் ஸ்வரூபமானதால்தான் அவளுக்குக் காமேச்வரி என்று பெயர்.

அதுதான் முதல் பெயர். ப்ரஹ்மத்திடமிருந்து முதல் evolute [பரிணாம தத்வம்] காமம் என்றால் அதை வைத்து ஏற்பட்ட [காமேச்வரி என்ற] பேர்தானே ப்ரஹ்ம சக்தியின் முதல் நாமாவாக, ப்ரதான நாமாவாக இருக்க வேண்டும்? எவன் இப்படி ஆசைப்பட்டானோ அவன் காமேச்வரன். வெறும் ப்ரஹ்மமாக இருந்த அவன் ஆசைப்பட்டதோடு ஸரி. அந்த ஆசையைக் கார்யமாக்கி ப்ரபஞ்ச லீலையாகப் பஞ்ச க்ருத்யம் என்று வாஸ்தவமாகவே பண்ணிக் காட்டுவது முழுக்க முழுக்க சக்தியான அவள்தான். அதாவது, காமேச்வரிதான் விக்டோரியா, எஸிபெத் ராணிகள் மாதிரி, தானே பூர்ண ஆட்சியதிகாரத்துடன் இருப்பவள்; ஸமஸ்த ஜகத்துக்களையும் ஜீவர்களையும், தேவர்களையும் ஆள்கிறவள். ஆள்கிற ராஜாவுக்குப் பெண்டாட்டியாயிருப்பதால் மட்டும் ராணியில்லை; தானே நேராக ஆட்சிப் பொறுப்பு வஹிக்கிற ராணி! ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவாக ‘ஸ்ரீமாதா’ என்று அவளை அன்போடு அம்மாவாகக் கூப்பிட்டவுடனேயே அடுத்த இரண்டு நாமாக்கள் அவளுடைய ஆட்சியதிகாரத்தை – அவள் அகிலாண்ட, ப்ரம்மாண்ட சக்ரவர்த்தினியாக இருப்பதைத்தான் – ‘ஸ்ரீமஹாராஜ்ஞி’ என்றும், ‘ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி’ என்றும் சொல்லியிருக்கிறது.

அவள் ஸிம்ஹாஸனேச்வரியாக சிம்மாஸனத்தின் மேலிருப்பது ஒரு கோலம். அது எல்லா ராஜா-ராணிக்கும் உண்டானதுதான். அவளுக்கென்று ஸ்பெஷலாக இருப்பது பஞ்ச ப்ரஹ்மாஸனம் என்று சொன்னேன். அதற்கு மேலே காமேச்வரியாக அவள் உட்கார்ந்திருப்பதைச் சொன்னேன். அவள் தனியாயில்லாமல் பதியான காமேச்வரனோடு கூட இருக்கிறாளென்று சொன்னேன். பஞ்ச ப்ரஹ்மாஸனத்தின் மேலே அந்தக் காமேச்வரனின் மடியின் மேலேதான் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அதனால் அவனும் அவளுக்கு ஆஸனம்!

ப்ரஹ்மத்திலிருந்து முதலில் தோன்றியது ப்ரபஞ்ச லீலையில் வெளிப்பட வேண்டுமென்ற காமமே ஆதலால் காமேச்வர-காமேச்வரிகள் என்பதே ஆதி தம்பதியரின் ஆதிப் பேர்; முதலான முக்கியப் பேர்.

அவளை லலிதாம்பாள் என்றாலும் அவனை லலிதேச்வரன் என்பதில்லை. லலிதம் என்றால் பரம நளினம், ரொம்ப ம்ருது. பெண்பாலான அவள்தான் அப்படியிருக்க முடியுமே தவிர அவன் அப்படியிருக்க முடியாது. அதே மாதிரி அவளை ராஜராஜேச்வரி என்றாலும் அவனை ராஜராஜேச்வரன் என்பதில்லை. தஞ்சாவூரில் ராஜராஜேச்வரம் இருக்கிறதென்றால் அது கோவில் கட்டின ராஜா [ராஜராஜ சோழன்] பேரை வைத்து ஏற்பட்ட பெயர்; ஸ்வாமியை வைத்து அந்தக் கோவிலுக்கு ஏற்பட்ட பேர் ப்ருஹதீச்வரம் என்பதே. ராஜராஜேச்வரிக்கு ஜோடியாக ராஜராஜேச்வரன் என்று இல்லை. ஏனென்றால் இப்போது சொன்ன மாதிரி, அவள் தான் ஆட்சி அதிகாரம் பெற்ற அசல் மஹாராஜ்ஞி. [சிரித்து] விக்டோரியாவின் அகமுடையானான ஆல்பெர்ட் மாதிரி, இப்போது எலிஸபெத் அகமுடையான் ஃபிலிப் மாதிரிதான் இந்த மஹா ராஜ்ஞியம்மாளின் பதியும்! இந்த உபமானங்கூட அவ்வளவு ஸரியில்லை. ஏனென்றால் விக்டோரியா, அவளை விடவுங்கூட இப்போதிருக்கிற இங்க்லான்டின் ராணி ஆகியவர்கள் பார்லிமென்டுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ராஜராஜேச்வரி அப்படியில்லை – ‘ஸாவரின் பவர்’ என்கிற பூர்ண அதிகார ஸ்வதந்திரம் பெற்றவள்………….

‘ஸவரன்’ என்று பவுனைச் சொல்கிறோம். பவுன் என்பது ‘பவுனட்’ என்கிற இங்கிலீஷ் வார்த்தைதான். அது ஒரு எடைக்கும் பெயராயிருக்கிறது. ஆதியில் அந்த எடையுள்ள வெள்ளிக்கும் அதே பேர் உண்டாயிற்று. அப்புறம் எப்படியெப்படியோ மாறிப்போய் 72 குந்துமணி எடையுள்ள தங்க நாணயத்திற்கு அந்தப் பேர் வந்துவிட்டது. அதிலே ‘ஸாவரி’னான ராஜா தலை போட்டிருக்கும் அதனால் ஸாவரின் என்றும் அந்தக் காசுக்கே பேர் வந்து, தமிழில் ஸவரன் என்றாகிவிட்டது. ‘ஸவரன்’ என்பதும் ‘ஸ்வர்ணம்’ என்பதும் ஏறத்தாழ ஒரேபோல ஒலிக்கின்றன. ஸ்வர்ணத்துக்கு ஸவரன் என்று பேர் இருப்பதில் இப்படி இரட்டிப்புப் பொருத்தமிருக்கிறது!…..

அம்பாள்தான் ஆட்சியதிகாரமுள்ள ஸாவரின் ராணி. அதனால் ராஜராஜேச்வரி. ஸ்வாமிக்கு அந்த அதிகாரமில்லை. அதனால் அவரை ராஜராஜேச்வரன் என்று சொல்ல நியாயமில்லை. த்ரிபுரஸுந்தரி என்பது அவளுடைய இன்னொரு முக்யமான பேர். ‘ஸெளந்தர்ய லஹரி’ என்பதே அந்த த்ரிபுர’ஸுந்தரி’யை வைத்துத்தான் என்று சொன்னேன். இதற்கும் ஜோடிப் பெயராக ஸ்வாமிக்கு த்ரிபுரஸுந்தரன் என்று பேர் கிடையாது. நேர்மாறாக, பயமுறுத்துகிற மாதிரி, த்ரிபுராந்தகன் [த்ரிபுர அந்தகன்] என்றுதான் இருக்கிறது! ஏனென்றால், மூன்று லோகத்திலும் அவள்தான் ஈடற்ற அழகு. அவனுடைய அழகும் அவள் அழகுக்கு ஈடாகாததால் அவனுக்கு அப்படி பேரில்லை. த்ரிபுரஸுந்தரி என்றால் த்ரிலோகங்களிலும் அழகில் முதல் அவளே என்று அர்த்தம். அப்படி அவளை முதல் என்று சொன்னவிட்டு, அவன் எத்தனை அழகாயிருந்தாலும் அவனையும் முதல் என்று எப்படிச் சொல்ல முடியும் அவன் [அழகில்] உசந்த பக்ஷம் போனாலும் இரண்டாவதாகத்தானே இருக்க முடியும்? அதனால் அவனுக்கு த்ரிபுரஸுந்தரன் என்று பேர் கிடையாது.

ஆனால் இரண்டு பேர் [இருவர்] இருந்தால்தானே பரஸ்பரம் ஆசை (காமம்) கொள்ள முடியும்? அதனால் காமேச்வர-காமேச்வரி என்பதுதான் அழகான ஜோடிப் பேராக இருக்கிறது. பஞ்ச ப்ரஹ்மாஸனத்தின் மேலே பூர்ண ப்ரஹ்ம சக்தியானவள் ப்ரஹ்மத்தின் பஹிர்முகப்படும் [வெளிமுகமாகும்] காமத்தை ஹேதுவாகக் கொண்டு காமேச்வரி என்ற பெயரில் ஆவிர்பாவம் கொண்டு, காமேச்வரன் என்ற பதியான அந்த ப்ரஹ்ம சிவத்தோடு ஸ்ருஷ்டி லீலா நாடகம் அத்தனையும் பண்ணுகிறாள்.

பிரபஞ்சம் ஸ்ருஷ்டியாகி நடப்பதற்கே பஞ்ச க்ருத்யம் என்று தெரிகிறது. வெளியில் தன்னையே பல ரூபமாக விட வேண்டுமென்று அவளுக்கு ஆசை – காமம் – இருப்பதால் தான் இப்படி நடத்துகிறாள். இப்படிக் காமமுடையவளாயிருப்பதால் அவள் காமேச்வரி.

‘தன்னையே பலவாக்கித் தன்னிடமிருந்தே பிரித்து வைக்கணும்; மாயையினால் பிரித்து வைக்கணும் என்று இப்படியும் ஒரு காமமா? க்ரூரமான காமமாக அல்லவா இருக்கிறது?’ என்றால் – அப்படியில்லை. முடிவிலே, எத்தனை யுகாந்தரம், கல்பாந்தரமானாலும் அதற்கப்புறம் பிரித்து வைத்த எல்லாவற்றையும் தன்னிடம் ஏகமாக ஐக்யப்படுத்திக் கொள்ளத்தான் அவளுக்கு உத்தேசம். பிரித்து வைத்து அப்புறம் சேர்த்துக் கொள்வதில்தான் கூடுதலான ஆனந்தம் உண்டாகிறது! நம் கூடவே ஒருத்தர் இருந்து கொண்டிருந்தால் ப்ரியம் பொங்கிக் கொண்டு வருவதில்லை. அவரே பிரிந்து வெளியூர், வெளிதேசம் போய் விட்டு பஹு காலம் கழித்துத் திரும்பி வந்தால் ப்ரியம் பொங்கிக் கொண்டு வருகிறது. அம்பாள் தன்னையே நாமாக்கிப் பிரித்து மாயையிலே தள்ளியிருக்கிற காமமும் இந்த மாதிரி, அப்புறம் ஒன்று சேர்த்துக் கொள்வதிலுள்ள அதிப்ரேமையின் ஆனந்தத்தைக் காரணமாகக் கொண்டது தான். எந்தத் தாயாரும் குழந்தையிடம் ‘ஒளிஞ்சு-ப்ளே’ விளையாடவில்லையா?

ஸமுத்திரத்திலிருந்து ஆவியாகப் போகிற ஜலம் மேகமாகி எத்தனையோ நூறு மைல் தள்ளி நதியாக உற்ப்த்தியானாலும், அந்த நதி ஊரெல்லாம் சுற்றித் திரிந்தாலும் முடிவிலே தன்னை பிறப்பித்த தாயான ஸமுத்ரத்திலேயே ஸங்கமித்துத்தானே தீர்கிறது?……..

காமேச்வர ஸஹிதையான காமேச்வரி பஞ்ச ப்ரஹ்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள். ப்ரஹ்மமும் அதன் பூர்ண சக்தியும் – குறிப்பாக இச்சா ரூபத்திலிருக்கிற பூர்ண சக்தியும் – எல்லாவற்றுக்கும் மேலே. அந்த ஜோடியிலிருந்தே பஞ்ச க்ருத்யங்களும் ஏற்பட்டு ஸ்ருஷ்டி விசித்ரம், ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறதென்று தாத்பர்யம்.

இதையே ஸ்தூலத்தில் ரூபம் கொடுத்துக் காட்டும் போது பஞ்ச ப்ரம்மாஸனத்தின் மேலே காமேச்வரனுடைய இடது மடியிலே காமேச்வரி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவர்கள் கிழக்குப் பார்க்க உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதற்கேற்றபடி அந்த ஆஸனத்தைப் போட்டிருக்கும்போது ஆக்நேய திக்கில் (தென் கிழக்குத் திசையில்) உள்ள அதன் கால்தான் ப்ரஹ்மா; நிர்ருதியில் (தென் மேற்கில்) உள்ள கால் விஷ்ணு; வாயு (வடமேற்கு) திக்குக் கால் ருத்ரன்; ஈசான்யத்தில் (வடகிழக்கில்) உள்ள கால் பெயர் பொருத்தத்தோடு ஈச்வரனாகவே இருக்கும். நாலு கால்களையும் சேர்த்துப் போட்ட மேல் பலகை ஸதாசிவன். ப்ரம்ம சக்தியிலிருந்து, ப்ரம்ம சக்தியால், ப்ரம்ம சக்தியை ஐந்து தொழில் பிரித்துக் காட்டுகிற இந்த ஐந்து பேரையும் பஞ்ச ப்ரம்மம் என்றே சொல்லி இவர்களாலான ஆஸனத்தைப் பஞ்ச ப்ரம்மாஸனம் என்று சொல்லியிருக்கிறது.

‘ப்ரம்மம்’ என்று உச்சஸ்தானத்தில் பேர் சொன்னதற்கு நேர்மாறாக, தூக்கிவாரிப் போடுகிற மாதிரி, இந்த ஐந்து பேரை ‘ப்ரேதம்’ என்றும் சொல்வதுண்டு. ”பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா” என்று அம்பாளுக்குப் பேர் சொன்ன அதே ஸஹஸ்ரநாமம் ”பஞ்ச ப்ரேதாஸநாஸீநா”, ”பஞ்ச ப்ரேத மஞ்சாதிசாயினி” என்றும் பேர்கள் சொல்லியிருக்கிறது. என்ன தாத்பர்யமென்றால், இவள் அவர்களுக்கு அந்தப் பஞ்ச க்ருத்ய சக்திகளைக் கொடுக்காமலிருந்தால் அவர்கள் ப்ரேதத்துக்கு ஸமம்தான் என்பதே! ஹார்ஸ் பவர் போன மோட்டார், ஃப்யூஸான பல்பு மாதிரி!

காமேச்வரனுக்கும் அவள்தான் பிராண சக்தி. ”காமேச்வர ப்ராண நாடி” என்றும் நாமா இருக்கிறது. ஸஹஸ்ரநாமம், த்ரிசதி இரண்டிலும் அந்தப் பேர் வருகிறது. ஆனாலும் லோக தர்மத்தில் ஒரு ஸ்த்ரீயானவள் பதிக்கு மேல் ஸ்தானம் கொடுத்து அவனோடு சேர்ந்து இருப்பதே பெருமை என்றிருப்பதால் மஹாசக்தி வாய்ந்த பராசக்தியும் தனக்கு மேல் ஸ்தானத்தில் காமேச்வரனைப் பதியாகக் காட்டிக் கொண்டு விளங்குகிறாள்.


1 அச்சோப்பதிகம் 1

2 ஈச்வரன், அவன் புரியும் தொழிலான திரோதனம், சதாசிவன், அவன் புரியும் தொழிலான அனுக்ரஹம் ஆகியன பற்றி வேறு விளக்கங்கள் உண்டு. ஆயினும் ஸ்ரீசரணர்கள் “திரோதாநாநுக்ரஹௌ பந்த மோக்ஷௌ வா” (திரோதானம் என்பது சம்சார பந்தம், அதாவது அதை விளைவிக்கும் மாயையால் மறைப்பது; அநுக்ரஹம் என்பது பந்தத்தை நீக்கி மோக்ஷம் அருள்வது) என்று “லலிதா ஸஹஸ்ரநாம”த்தில் ‘அனுக்ரஹ ப்ரதா’ என்ற நாமத்தின் பாஷ்யத்தில் பாஸ்கர ராயர் கூறியிருப்பதையே அத்தொழில்களின் இலக்கணமாஹக் கொண்டு அந்த அடிப்படையிலேயே விளக்கம் தருவது வழக்கம்.

3 தைத்ரீயம் II. 6

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இரு மார்க்கத்திற்கும் ஆசாரியர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  'சிவ'னும் 'ஹர'னும்
Next