உவமிக்கவொண்ணாத உருவழகு; காண்பதற்கொண்ணாத காட்சி! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

யந்த்ர ரூபத்தைச் சொன்னவுடனே, “இது ஸெளந்தர்ய லஹரி-ன்னா? அம்பாளுடைய பரம ஸுந்தரமான அவயவ ரூபத்தைச் சொல்லிடணும்” என்று வேகம் வந்தாற்போல “த்வதீயம் ஸெளந்தர்யம்” என்றே அடுத்த ச்லோகத்தை [ச்லோ. 12] ஆரம்பித்திருக்கிறார்! “த்வதீயம் ஸெளந்தர்யம்” என்றால் ”உன்னுடையதான லாவண்யம்” என்று அர்த்தம். “யந்திர ரூபத்தில் இத்தனை கோணம், தளம், வட்டக்கோடு சதுரக்கோடு என்றெல்லாம் முழு detail கொடுத்துப் பாடினேனே, அப்படி உன்னுடையதான லாவண்ய ரூபத்தைப் பாடலாமென்றால் முடிகிற கார்யமாயில்லையே! இது வரைக்கும் எந்தக் கவியும் அதை உள்ளபடி வர்ணிக்க முடியவில்லையே!” [என்கிறார்.]

ப்ரம்மாதான் ஆதிகவி. “ஆதி கவயே” என்றே பாகவதத்தின் ஆரம்ப ச்லோகத்தில் அவரைச் சொல்லியிருக்கிறது. ஸரஸ்வதியே அவருடைய சக்திதான் என்றால் அவரைவிடப் பெரிய கவி எவர் இருக்க முடியும்? அவர் எல்லா தேவதைகள் மேலும் ஸ்தோத்ரங்கள் செய்திருப்பது புராணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. கஷ்ட காலத்தில் தேவர்கள் அவரிடந்தான் போய் அழுவார்கள். உடனே அவர் அவர்களை சிவனோ, விஷ்ணுவோ, அம்பாளோ யாரோ ஒரு ஸ்வாமியிடம் அழைத்துக் கொண்டுபோய் அவர்களுடைய கஷ்டத்தைச் சொல்லி, நிவ்ருத்தி பண்ணணும் என்று வேண்டிக் கொள்வார். அப்போது அந்த ஸ்வாமியை ஸ்தோத்ரம் பண்ணுவார். அவருக்கே கஷ்டம் வருகிறபோதும் அப்படித்தான்! அப்படி அம்பாளைப் பற்றியும் பண்ணியிருக்கிறார். [துர்கா] ஸப்தசதீயில்கூட மது-கைடபாஸுரர்கள் அவரை ஹிம்ஸிக்க வந்தபோது அம்பாள் மேல் ஸ்தோத்ரம் பாடியிருக்கிறார். ஆனாலும் அவருங்கூட அவளுடைய லாவண்யத்தை உள்ளபடி வர்ணிக்க முடியவில்லை.

த்வதீயம் ஸெளந்தர்யம் துஹிநகிரி-கந்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய: |

விரிஞ்சி ப்ரப்ருதய:” என்றால் ‘பிரம்மா முதலனோர்’. அவர்கள் உன்னுடைய ஸெளந்தர்யத்தை வர்ணிக்கப் பார்த்தார்கள். ‘துலயிதும்’ என்றால் ‘எடை போடுவதற்கு’ என்று அர்த்தம். ‘துலா’ என்றால் தராசு அல்லவா? எடை எப்படிப் போடுகிறோம்? ஒரு தட்டில் இருப்பதற்கு ஸமமாக இன்னொரு தட்டில் எடைக் கல்லைப் போட்டுக் கண்டு பிடிக்கிறோம். நேராக ஒரு வஸ்துவின் எடையை கணிக்க நமக்குத் தெரியவில்லை. அதனால் இன்ன எடை என்று தெரிகிற ஒரு எடைக் கல்லைப் போட்டு அதைக்கொண்டு இதன் எடையைத் தெரிந்து கொள்கிறோம். அப்படி ஸாக்ஷாத்தாக அம்பாளுடைய ஸெளந்தர்யத்தை வர்ணிக்க அந்த விரிஞ்சி ப்ரப்ருதிகளான கவிகளுக்குத் தெரியவில்லை. அதனால் தங்களுக்குத் தெரிந்த ஒரு எடைக் கல்லைத் தேடினார்கள். அது என்ன? உபமானம் என்பதுதான்! சந்திரன் மாதிரி முகம், தாமரை மாதிரி கண், வண்டுக்கூட்டம் மாதிரி கேசம் என்றெல்லாம் உபமானம் காட்டிவிட்டால் எடைக்கல் போட்டு எடை தெரிந்து கொள்ள முடிகிறது போல ‘இப்படிப்பட்ட லாவண்யம்’ என்று தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா? இப்படிப்பட்ட எடைக்கல், உபமானம் என்பதை அந்தக் கவிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்து, பல தினுஸாகக் கல்பித்துச் சொல்லிப் பார்த்தும் அம்பாளின் அழகை உள்ளபடிக் காட்ட முடியவில்லை. உவமையற்றதாக இருக்கிறது, அவளுடைய அழகு! “கதமபி கல்பந்தே” — மண்டையைக் குடைந்து கொண்டு அவர்கள் எப்படியெப்படியோ உவமை கல்பித்துத்தான் பார்க்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை! “ஆனாலும் முடியவில்லை” என்பதை ஆசார்யாள் உடைத்துச் சொல்லாமல், “கதமபி கல்பந்தே — எப்படியோ கல்பித்துப் பார்க்கிறார்கள்” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அதுதான் சொல்லாமல் சொல்கிற ‘த்வனி அழகு’. “ப்ரதோஷ தீபாராதனை நேரம் தப்பாமல் போய்ப் பார்க்கணும்னு ஓடினதென்னவோ வாஸ்தவந்தான்!” என்று சொல்லி, நிறுத்தி விட்டாலே போதும், “ஆனாலும் பார்க்க முடியவில்லை” என்று அர்த்தம் கொடுத்துவிடும்! விண்டு சொல்வதைவிடவும், இப்படிச் சொல்லாமல் சொல்கிற போதே மனஸில் நன்றாகப் பதியவும் செய்கிறது.

“யந்த்ர ரூபத்தைச் சொன்னோமே, ஸெளந்தர்ய ரூபத்தைச் சொல்லலாமென்று பார்த்தால் அது வர்ணனாதீதமாக இருக்கிறது. நேரே [வர்ணிக்க] முடியாவிட்டாலும் உபமான எடைக் கல்லைப் போட்டாவது ஒரு மாதிரி காட்டலாமென்று பார்த்தால் அந்த ப்ரயாஸையும் ப்ரம்மாதிகளே பண்ணி ஓய்ந்து போயாயிற்று” என்றிப்படிச் சொல்வதன் மூலமே அம்பாளுடைய அழகு எவ்வளவு உயர்வானது ஈடு இணை இல்லாதது என்று காட்டி விடுகிறார்.

வர்ணிப்பது இருக்கட்டும்; முதலில் அவளுடைய ஸ்வரூபத்தை அந்த கவி அல்லது பக்தர் — கவியாக இருக்கும் பக்தர் — தாமே நன்றாகப் பார்த்து அந்த முழு ஸெளந்தர்யத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்! அப்படி யாராவது பார்த்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை! முதலுக்கு எந்த கவியுமே அந்த ஸெளந்தர்ய ஸ்வரூபத்தைப் பார்த்ததில்லை என்னும்போது அதைப் பிறத்தியாருக்கு வர்ணித்துச் சொல்ல இடமேது?

ஏன் அம்பாளுடைய ஸ்வரூபத்தை எவரும் பார்த்ததில்லை? அடியோடு பார்த்ததில்லை என்று சொல்ல முடியாது. தர்சனம் என்று பல பக்த கவிகள் பண்ணித் தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஸம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்க விடாமல் ஏதோ கொஞ்சம் — க்ஷண காலம் — மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள். ஒரே பக்தியாக அவளிடமே மனஸை அர்ப்பணித்தவர்களுக்குங்கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் ஆஸ்யம் [திரு வாய்] என்றிப்படி ஏதாவது ஒரு அவயவந்தான் ஸதாவும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை.

தன்னுடைய முழு ரூப ஸெளந்தர்யத்தையும் அவள் காட்டுவது ஒருத்தரிடந்தான். அந்த ஒருத்தர் யாரென்றால் பதியான பரமேச்வரன்தான். அவரை தன்னோடு சேரும்படிப் பண்ணி லோக லீலையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அவள் இந்தப் பரம ஸுந்தரமான சரீரத்தை எடுத்துக்கொண்டு த்ரிபுர ஸுந்தரியானது. அந்த சரீரத்தை அவரொருத்தருக்கே பூராவாக அர்ப்பணம் பண்ணிய மஹா பதிவ்ரதையா யிருப்பவளவள். மற்றவர்களுக்கு ஏதோ கொஞ்சம் தரிசனம் கொடுப்பாளே தவிர பூராவாகத் தன் ஸெளந்தர்யத்தைக் காட்டமாட்டாள். கருணையை பக்தர்களுக்குப் பூர்ணமாகக் காட்டுவாள். ஆனால் ஸெளந்தர்யம் பூரா என்னும்போது அது ஸ்வாமிக்குத்தான் ஸொத்து என்று வைத்திருக்கிறாள்.

இப்படிச் சொன்னால் இங்கே பின் ஸெக்ஷ்னில் ஆசார்யாள் பார்த்து வர்ணிக்கிற ஸெளந்தர்ய லஹரிகூட அவளுடைய ஸெளந்தர்யர்த்தை ஸம்பூர்த்தியாகச் சொல்லவில்லை என்றுதான் ஆகுமோ, என்னவோ? அப்படியும் இருக்கலாம். ஒரு தாயார் தன்னுடைய குழந்தைக்கு அன்பை ஸம்பூர்த்தியாகக் காட்டுகிற மாதிரி அழகைக் காட்டுவாள் என்றில்லை. அவள் அலங்காரம் பண்ணிக் கொள்வது பதியை ஸந்தோஷப்படுத்தத்தானேயொழிய குழந்தையை அல்ல. அலங்காரம் [என்பது] அழகு’படுத்தி’க் கொள்வது. ‘படுத்தி’க்கொள்ள அவசியமில்லாமல் ஸ்வாபாவிகமாகவே அழகாக உருவெடுத்தவள் அம்பாள். ஆனபடியால் அதன் முழு நிலையை அவள் பதிக்கு மாத்திரமே காட்டுவது. இப்படியிருக்கும்போது மற்றவர்கள் எப்படி அவளை உள்ளபடி வர்ணித்துப் பாடமுடியும்? முதலுக்கு அவர்களுக்கே அவளுடைய பரிபூர்ண ரூப ஸம்பத்து தெரியாது. தெரிந்தமட்டில் பாடலாமென்றால் அதற்குங்கூட நேராக வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல், அப்பேர்ப்பட்ட அழகாயிருக்கிறது! நேராக வர்ணிக்க முடியாவிட்டாலும் உபமானமாவது காட்டலாமா என்று பார்த்தால் அதற்கு உவமை காட்டும்படியாகவும் லோகத்தில் எதுவுமேயில்லை.

பரமேச்வரன் ஒருத்தனுக்குத்தான் அம்பாள் தன்னுடைய பூர்ண ஸெளந்தர்யத்தைக் காட்டுவாள் என்பதை ரொம்பவும் கவி நயத்தோடு ஸூசனையாகவே சொல்லியிருக்கிறார். எப்படிச் சொல்லியிருக்கிறாரென்றால்:

யதாலோகௌத்ஸுக்யாத் அமரலலநா யாந்தி மநஸா
தபோபி: துஷ்ப்ராபாமபி கிரிச-ஸாயுஜ்ய-பதவீம் | |

“அமர லலநா” என்று வருவதற்கு ‘தேவ ஸ்திரீகள்’ என்று அர்த்தம். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான தேவ ஸ்த்ரீகளைத்தான் நாம் மஹா அழகிகளாகச் சொல்கிறோம். அவர்களும் அம்பாளின் அழகை அவள் காட்டுகிற சிறிய அளவில் பார்த்தே, “அவள் முன்னாடி நம்முடைய அழகு எம்மாத்திரம்?” என்று நினைக்கிறார்கள். “நாம் பார்ப்பதும் கொஞ்சந்தானே? அவளுடைய அழகின் பூர்ண ரூபம் எப்படியிருக்கும்?” என்று பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். ஒரு ஸங்கீத வித்வான் தன்னைவிட நன்றாக இன்னொருத்தன் பாடினால், ‘அதிலே என்ன விசேஷம் இருக்கிறது? அதைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று நினைப்பான். ஒவ்வொரு துறையிலுமே இப்படி. அந்த ரீதியில் ஸெளந்தர்யவதிகளான தேவ ஸ்த்ரீகள் த்ரிபுரஸுந்தரியின் பூர்ண ஸெளந்தர்யத்தைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அம்பாளுடைய முழு வடிவத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். “யத் ஆலோக ஒளத்ஸுக்யாத்” என்றால், ‘எந்த ஸெளந்தர்யத்தைக் காணும் ஆவலினால்’ என்று அர்த்தம். “த்வதீயம் ஸெளந்தர்யம்” என்று ச்லோக ஆரம்பத்தில் சொன்னதையே “யத்” (எந்த ஸெளந்தர்யமோ அது) என்று குறிபிட்டிருக்கிறார்.

அம்பாளுடைய ஸெளந்தர்யத்தைப் பூராவும் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்ட தேவ ஸ்த்ரீகள் என்ன செய்கிறார்கள்? “நாம் ஆசைப்பட்டு என்ன ப்ரயோஜனம்? தன்னுடைய சரீரம் ஈச்வரனுக்கே உடைமை என்று அவள் அர்ப்பணம் பண்ணியிருப்பதால் அவனொருத்தன்தான் அந்த ரூப ஸம்பநத்தைப் பூராவாகப் பார்க்க முடியும். ஆனபடியால் நாம் என்ன பண்ணவேண்டுமென்றால் அந்த ஈச்வரனோடு ஐக்யமாகிவிட வேண்டும்; சிவ ஸாயுஜ்யம் என்பதைப் பெற்று விடவேண்டும். அப்போது நாமும் அம்பாளின் லாவண்யத்தை உள்ளபடி பூர்த்தியாகப் பார்த்துவிடமுடியும்” என்று நினைக்கிறார்கள்.

சிவனிடம் பக்தியாலேயே பக்தர்களும், சிவமாக ஆகவேண்டும் என்ற ஞான தாஹத்தாலேயே ஞானிகளும் சிவ ஸாயுஜ்யம் வேண்டியிருக்கிறார்கள். அதற்காகப் படாதபாடு பட்டிருக்கிறார்கள். அங்கே சிவஸாயுஜ்யம் end in itself [அதுவே முடிவான குறிக்கோள்]. அப்பேர்ப்பட்ட அந்த உசந்த ஸ்திதியை இந்த தேவ ஸ்திரீகள் விரும்புவதோ, அதுவே end, லக்ஷ்யம் என்பதாலில்லை! அதை உபாயமாக means-ஆக, வைத்துக்கொண்டு அதன் மூலம் அம்பாள் அழகைப் பார்க்க வேண்டுமென்பதே இவர்களுடைய லக்ஷ்யம்! மஹா பெரிய சிவஸாயுஜ்யத்தையும் ஸாதனமாக்கிக் கொண்டு ஸாத்யமாக நிற்கிறது, அம்பாளின் ஸெளந்தர்ய தர்சனம்!

ஸரி, அந்த ரம்பையும் மேனகையும் அப்படி ஆசைப்பட்டு விட்டார்களென்பதால் சிவ ஸாயுஜ்யம் கிடைத்து விடுமா என்ன? லேசில் கிடைக்கக்கூடியதா அது? “தபோபி: துஷ்ப்ராபாமபி” என்றே அதைச் சொல்கிறார். “எத்தனை தபஸ் பண்ணினாலும் பெற முடியாதது” என்று அர்த்தம். தேவ ஸ்திரீகள் தபஸ் பண்ணுகிறவனைக் கலைத்து வசியப்படுத்தத்தான் போவார்கள்! தபஸ் பண்ணுவதற்கான இந்திரிய நிக்ரஹம் அவர்களுக்கு ஏது? அதனால் என்ன பண்ணுகிறார்களென்றால்….

மானஸிகமாக நம்மை எப்படி வேண்டுமானாலும் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாமல்லவா? மனக் கோட்டை என்னதான் கட்ட முடியாது? அப்படி அந்த ரம்பை, மேனகை முதலானவர்கள் தாங்களே பரமசிவன் என்று மானஸிகமாக நினைத்துப் பார்க்கிறார்களாம்! “யாந்தி மநஸா கிரிச ஸாயுஜ்ய பதவீம்” என்றால் ‘சிவ ஸாயுஜ்ய நிலையை மானஸிகமாக அடைகிறார்கள்’ என்று அர்த்தம்.

வாஸ்வத்தில் அது மனஸால் அடைய முடியாத நிலை! “யந் மநஸா ந மநுதே” — எதை மனத்தால் எண்ணிப் பார்க்க முடியாதோ அது. (கேனோபநிஷத் I. 5) ஆகையால் அவர்கள் மானஸிகமாக சிவ ஸாயுஜ்யம் அடைகிறார்கள் என்றால், ‘வாஸ்தவத்தில் அடையாமலே நிற்கிறார்கள்’ — அதாவது, அம்பாளுடைய ஸெளந்தர்யத்தை அவர்களும் ஸம்பூர்த்தியாக அறியமுடியவில்லை என்றே அர்த்தம்.

ப்ரம்மா முதலான கவிவாணர்கள் தங்களுக்கு அம்பாளின் ஸெளந்தர்யம் தெரிந்த அளவில் அதற்கு உவமை தேடி என்னென்னமோ கல்பனை பண்ணிப் பார்க்கிறார்கள் என்று முதல் பாதியில் சொன்னதற்கு ‘ஆனாலும் ஸரியான உவமை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்பதுதானே உட்பொருள்? அப்படியே இந்தப் பின் பாதியில், தபஸ் பண்ணியும் பெற முடியாத சிவஸாயுஜ்யத்தை ரம்பையும் மேனகையும் மனஸால் கல்பித்துப் பார்க்கிறார்கள் என்பதற்கும் ‘ஆனாலும் முடியவில்லை’ என்றுதான் அர்த்தம். கருணை உள்ளம் கொண்ட ஆசார்யாளுக்கு ‘விரிஞ்சி ப்ரப்ருதி’களும், ‘அமரலலனா’க்களும் தோற்றுப் போனார்கள் என்று வாய்விட்டுச் சொல்ல மனஸ் வரவில்லை போலிருக்கிறது!

அம்பாளுடைய ஸெளந்தர்யச் சிறப்பை ஒரே தூக்காகத் தூக்கி இப்படி ‘ஸெளந்தர்ய லஹரி’யின் ‘ஆனந்த லஹரி’ பாகத்தில் ச்லோகம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கால ஸ்வரூபமாக
Next