பல நிலைகளில் சிவ சக்திகள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

தாயும் தந்தையும் என்று அந்த அம்பாளையும் ஸ்வாமியையும் அடிமனஸில் இறுக்கிப் பிடித்து நினைக்க வேண்டியதே பொதுவான பாவம். அதற்குள்ளேயே ஆசார்யாள் அவர்களைப் பல நிலைகளில், பலவிதமான உறவுகளில் சொல்லியிருக்கிறவைகளை உப- பாவங்களாகக் கொண்டால் ரஸம் ஜாஸ்தியாகும். ‘ஸ்தாயி’ என்று அடிப்படையாக ஒரு நிரந்தர பாவம், ‘ஸஞ்சாரி’ என்று அதற்கு அழகு பண்ணவே அப்பப்போ வந்து போகிற பல பாவங்கள் என்று நாடகத்தில் வைத்திருக்கிறார்கள்; அந்த மாதிரி! இந்த ‘ஆனந்த லஹரி’ பாகத்தில் அந்த இரண்டு பேரையும் எப்படியெல்லாம் காட்டியிருக்கிறதென்று கொஞ்சம் பார்க்கலாம்.

அசையக்கூட முடியாத தகப்பனாரை அவளே அசையச் செய்வதுதான் அவள் மஹிமைக்கு சூடாமணி. அதுதான் முதல் ச்லோகம். லோகத்தின் பார்வையில் அவர் முக்யமாக ஸம்ஹாரகர்த்தாவாக இருக்கிறாரென்றால் அங்கேயும் அவள் மஹிமையையே ‘ஓஹோ’ என்று அடுத்த ச்லோகம் சொல்கிறது: அவளுடைய ஒரு பாதரேணுதான் அவருக்கு அந்த சக்தியைக் கொடுத்தது என்கிறது. இங்கே தெய்வமும் நாமும் எப்படி இருக்கிறோமோ அப்படி அம்பாளும் ஸ்வாமியும் இருக்கிறார்கள்  — ஸ்வாமிக்கே அம்பாள் தெய்வத்தின் ஸ்தானத்தில் இருக்கிறாள். முதல் ச்லோகத்திலேயே அவரை த்ரிமூர்த்திகளில் ஒருத்தராக ‘ஹரி-ஹர-விரிஞ்ச’ என்கிறபோது அவரால் அவள் பூஜிக்கப்படுகிறாள் — “ஆராத்யாம்” என்று அவளை அவருக்கும் தெய்வத்தின் ஸ்தானத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. கொஞ்சம் தள்ளி [ச்லோ-7] அவளே ஸ்வாமிக்கு “ஆஹோபுருஷிகா”, அதாவது அவர் தன்னை தானென்று தெரிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி என்று ஏறக்குறைய முதல் ச்லோக அபிப்ராயத்தை ஒட்டிச் சொல்லியிருக்கிறது. அவரை முழுக்க அம்பாள் தன்னொத்த ஜோடியாக்கிக் காமேச்வரன் என்று வைத்து அவன் மடியில் காமேச்வரியாகப் பத்னி என்று உட்கார்ந்திருப்பதை அடுத்த ச்லோகத்தில் “பரமசிவ பர்யங்க நிலயாம்” என்று சொல்லியிருக்கிறது. முத்தொழிலுக்கு மேலே இரண்டைக் கூட்டிய பஞ்ச க்ருத்யத்திற்கு மேலதிகாரிகளாக ஸாக்ஷாத் ஸகுண ப்ரம்மத்தின் இரட்டை வடிவான சக்ரவர்த்தினியாகவும் சக்ரவர்த்தியாகவும் இங்கே அவர்கள் இருக்கிறார்கள். அவள் மாத்திரமே ஸகுண ப்ரஹ்மமாயிருந்து நிர்குண ப்ரஹ்மமான அவனில் அப்படியே இழைந்து கொண்டிருக்கும் நிலையை அடுத்த ச்லோகம் [ச்லோ-9] “ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே” [ஸஹஸ்ரார பத்மத்தில் பதியுடன் கூட ரஹஸியத்தில் களிக்கிறாய்] என்கிறது. அப்புறம் ஒரு ச்லோகம் [ச்லோ-11] ஸ்ரீசக்ர ரூபத்திலும் அவர்கள் எப்படிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது — அதில் நாலு சக்ரம் அவருடையது, ஐந்து அவளுடையது என்று. அவள் பரம பதிவ்ரதையாகத் தன்னுடைய பூர்ண ஸ்வரூபத்தை அவரொருத்தருக்கே காட்டுகிறாள் என்று அடுத்த ச்லோகத்தில் சொல்கிறார். இங்கே பதிக்கு அடங்கின பத்னியாக அவள் இருக்கிறாள். ஆனால் அப்புறம் பத்துப் பன்னிரண்டு ச்லோகம் தள்ளி [23-வது ச்லோகத்தில்] அவளே ஒரே அடாவிடியாகக் கிளம்பி, அவருடைய பாதி சரீரத்தை அபஹரித்தது போதாதென்று இன்னொரு பாதியையும் அபஹரித்து விட்டதாக ஆசார்யாள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறார்.

அதற்கடுத்த ச்லோகத்தைப் பற்றிக் கொஞ்சம் detailed-ஆகச் சொல்லணும். இரண்டாம் ச்லோகத்தில் த்ரிமூர்த்திகள் தங்கள் தங்கள் தொழில் செய்வதைச் சொன்னாற்போலவே இங்கே ஆரம்பித்திருக்கிறார். “ஜகத் ஸூதே தாதா” — ‘ப்ரஹ்மா லோகத்தைப் பிறப்பிக்கிறார்’; “ஹரி: அவதி” — ‘விஷ்ணு பரிபாலிக்கிறார்’. “ருத்ர: க்ஷபயதே” — ‘ருத்ரன் அழிக்கிறார்’. ஆனால் அதோடு முடிக்காமல் பஞ்சக்ருத்ய மூர்த்திகளில் பாக்கியுள்ள இரண்டு பேரின் கார்யங்களையும் சொல்கிறார். அதில் ஒருவர் ஈச்வரன். “ஈசஸ்-திரயதி” என்று ச்லோகத்தில் வருகிறது. “ஈசன் மாயையால் மறைக்கிறான்” என்று அர்த்தம். ‘ஈசன்’ என்றாலும் ‘ஈச்வரன்’ என்றாலும் ஒன்றே. ஆட்சி செலுத்துகிற ‘லார்ட்’ என்று அர்த்தம். வாஸ்தவத்தில் இவன் பஞ்ச க்ருத்ய ஆபீஸர்களில் ஒருத்தன்தான். நிஜமான யஜமானியம்மா பராசக்திதான். அவள்தான் அந்த ஐந்து அதிகாரிகளையும் தன்னுடைய ராஜ்யத்தில் அப்பாயின்ட் பண்ணி வேலை வாங்குகிறவள்.

வேலை வாங்குவது என்றால் ஸர்குலர், மெமோ அனுப்பிக் கொண்டோ, வாய்ப் பேச்சால் உத்தரவு போட்டோ ஒன்றும் பண்ண மாட்டாள்! மஹா ராஜ்ஞி! அப்படியெல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டாள்! அவள் துளி ஏதாவது சைகை காட்டினால் போதும், அதுவே உத்தரவு என்று அந்த அதிகாரிகள் கிறுகிறுவென்று கார்யம் ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான், கொடி மாதிரி உள்ள தன் புருவத்தை ஒரு ஸெகண்ட் ஒரு மாதிரி அசைக்கிறாள் — “க்ஷண-சலிதயோ: ப்ரூ லதிகயோ:” என்று பளிச்சென்று வார்த்தை விழுந்திருக்கிறது. அதையே உத்தரவு என்று சிரஸால் வஹித்துத்தான் — “ஆஜ்ஞாம் ஆலம்ப்ய” : ‘அவளுடைய ஆஜ்ஞை என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டு’ — பஞ்ச க்ருத்ய மூர்த்திகள் ஸ்ருஷ்டி முதலான கார்யங்களைச் செய்வது.

இத்தனை கார்வார், ராஜாங்க தடபுடல் அவளுக்கு இங்கே இருந்தாலும், த்ரிமூர்த்திகள் அவளை தெய்வமாகப் பூஜிக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னதை விட இது ஒரு படி குறைச்சல்தான். அங்கே அவள் தெய்வம். அவர்கள் பக்தர்கள் என்று இருந்தார்கள். இங்கே அவள் எத்தனைதான் ராணித்தனம் காட்டி அவர்களும் ஸலாம் போட்டாலும் அவள் ராணியும் அவர்கள் கிங்கரர்களுந்தான்! ராஜா-ஸேவகர் என்பதைவிட தெய்வம்-பக்தர்தானே உசத்தி?

இப்படி ஸேவகராக இருக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் — திரோதானத் தொழில் செய்கிறவர்தான் — ‘ஈச்வரன்’ என்று பெத்தப் பெயர் வைத்துக் கொண்டு விட்டார். ‘லோகம் முழுவதையும், மற்ற த்ரிமூர்த்திகளையுங்கூட மாயையில் அப்படியே கட்டிப் போட்டிருக்கும் தொழில் நாம்தானே செய்கிறோம்? என்று அப்படிப் பெயர் வைத்துக் கொண்டுவிட்டார். “திரஸ்குர்வன் ஏதத்” என்று அந்த த்ரிமூர்த்திகளையும் அவர் மாயைக்கு ஆட்படுத்தியிருப்பதைச் சொல்லியிருக்கிறது. அது மட்டுமில்லை; தான் இப்படிச் செய்வது தெரியாமல் தன்னையும் தானே அவர் மாயா சக்தியால் மறைத்து, ஒளித்துக் கொண்டிருக்கிறார்! இதை “ஸ்வம் அபி வபு: ஈசஸ்-திரயதி” என்று சொல்லியிருக்கிறது.

இத்தனை சக்தி, ஸாமர்த்தியம் அவருக்கிருந்தாலும் அதெல்லாமும் அம்பாள் கொடுத்ததுதான். அவள்தான் நிஜத்தில் ஈச்வரி. இவர் ஈச்வரப் பெயர் வைத்துக் கொண்டது நியாயமில்லைதான்.

ஆனாலும் பெருந்தன்மையாக அம்பாள் “போய்ட்டு போகட்டும்! பேராவது அப்படி வெச்சுக்கட்டும்” என்று விட்டுவிட்டாள்.

இருந்தாலும்…. இன்னொருத்தர் பாக்கி இருக்கிறாரே! ஐந்து பேரில் நாலுதானே பார்த்தோம்? ஐந்தாவதாக அநுக்ரஹ க்ருத்யத்திற்கு ஒருவர் இருக்கிறாரே! “இவர் பண்ணியதைப் பார்த்து அவர் இதற்கும் ஒரு படி மேலே ஏதாவது பேர் வைத்துக் கொண்டுவிடப் போகிறார்! நமக்கும் மேலே அவர் என்று காட்டுவதாக வைத்துக் கொண்டுவிடப் போகிறார். நமக்கு மேல் எதுவுமில்லை. ஸமம் என்று வேண்டுமானால் ஒருத்தரைச் சொல்லலாமென்றால் அது சிவன்தான் — ஐந்தொழிலுக்கும் மேலே நமக்குப் பதியாகவுள்ள சிவன். அந்தப் பெயரை இவர் வைத்துக் கொண்டுவிடப் போகிறாரே!” என்று அம்பாள் நினைத்தாள்.

அதனால் அவரைக் கூப்பிட்டு, “ஒய்! உமக்கு ஒரு பேர் வெச்சுக்கும். ஆனா சிவன்-னு வெச்சுண்டுடாதீர்!” என்று சொல்லியனுப்பினாள்…..

பெருமாளிடம் ரொம்ப பக்தியாக ஒரு பண்ணையார் — வைஷ்ணவர் — இருந்தார். அவரிடம் வேலை பண்ணிக் கொண்டிருந்த பண்ணையாட்களில் ஒருவன் பறை ஜாதி.

“என்னப்பா பேரு?” என்று கேட்டார். “பெருமாளு” என்று அவன் சொன்னான்.

‘இவனுக்குப் போய் இப்படிப் பேர் இருக்கே! இவனையா பெருமாள் என்று கூப்பிடுவது? என்று அவருக்கு இருந்ததாம்.

“வேறே பேர் மாத்திக்கோ!” என்றார்.

“சுளுவிலே அப்படி பண்ண முடியாதுங்களே! நாட்டாமையிலே சொல்லி, பணம் கட்டி, அப்புறம் எங்க சாமிங்களுக்கு ஆடு, கோழி ‘பண்ணி’த்தானே பேர் மாத்திக்க முடியும்? ரொம்ப செலவாகுங்களே!” என்று அந்த ஆள் சொன்னான்.

“என்ன ஆனாலும் நான் தரேன்” என்று அவர் சொல்லி அவன் கேட்ட அத்தனை வராஹனும் கொடுத்தனுப்பினார். அவனைப் பெருமாள் என்று கூப்பிடாமலிருக்க வழி பிறந்தால் ஸரி என்று அவருக்கு!

பேர் மாற்றிக் கொண்டு அவன் திரும்பி வந்தான். “என்ன புதுப் பேர் வெச்சுண்டே?” என்று கேட்டார்.

“பெத்த பெருமாள்” என்றானாம் அவன்!

‘பெருமாள் போய் பெத்த பெருமாள்’ என்று வசனமே சொல்வது.

வைஷ்ணவர்கள் பரிபாஷையில் ‘பெருமா[ள்] கோவில்’ என்றால் காஞ்சிபுரம். வெறுமனே ‘கோவில்’ என்றால் ஸ்ரீரங்கம். ஆனால் ஸ்ரீரங்கநாதரை பெருமாளுக்கும் ‘பெரிய’ அடைமொழி சேர்ந்து ‘பெரிய பெருமாள்’ என்பார்கள். “பெரிய பெருமாள் அரங்கூர்” என்று திருப்புகழில்கூட வருகிறது1. ‘பெரிய பெருமாள்’ தான் ‘பெத்த பெருமாள்’. தமிழ் தேசம் பஹுகாலம் தெலுங்கு வார்த்தைகள் தமிழோடு கலந்துவிட்டன. அப்படி வந்ததுதான் “பெத்த”. “பெரிய” என்று அர்த்தம்.

அநுக்ரஹ க்ருத்யக்காரர் சிவன் என்று பெயர் வைத்துக் கொண்டுவிடப் போகிறாரே என்று அம்பாள் நினைத்து வேறே பெயர் வைத்துக் கொள்ளச் சொன்னதில் தான் இத்தனை கதையும் வந்தது.

அவர் என்ன பண்ணினார், என்ன பெயர் வைத்துக் கொண்டார் என்பதை ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்; “ஸதா-பூர்வ-சிவ:” என்று. அப்படியென்றால், ” ‘ஸதா’ என்ற அடைமொழியை முன்னாலே கொண்டுள்ள சிவன்” என்று அர்த்தம். அதாவது ‘ஸதாசிவன்’. அதுதான் அநுக்ரஹ க்ருத்யத்திற்கான மூர்த்தி வைத்துக் கொண்ட பெயர். ஆனால் ஆசார்யாள் ஏன் ‘ஸதாசிவன்’ என்று இப்படி plain-ஆக சொல்லாமல் ‘ஸதா என்று முன்னாலே அடைமொழி சேர்த்துக் கொண்ட சிவன்’ என்று நீட்டிச் சொல்கிறாரென்றால், குறும்பாகத்தான் அப்படிப் பண்ணியிருக்கிறார்! அம்பாளிடம் – அம்மா என்றால் அவளிடம் கொஞ்சம் விஷமம் பண்ணினால்தானே அழகு என்பதால் – குறும்பு பண்ணியிருக்கிறார்! அவள் சிவன் பேராக இருக்கப்படாது என்று நினைத்து அநுக்ரஹ க்ருத்யக்காரரிடம், “அப்படி வெச்சுக்காதீர்!” என்று சொல்லப்போக அவர், “வெறும் சிவனில்லை; ஸதாசிவன்; எப்போதுமே சிவன்; எப்போதுமே சிவன் என்பதால் அதை ஒரு காலத்திலும் மாற்றிக் கொள்ளும்படிச் சொல்ல முடியாது” என்கிற மாதிரி ‘ஸதாசிவன்’ என்று பேர் வைத்துக் கொண்டு வந்து அவளை ஏமாற்றிவிட்டார்! அவள் ஏமாந்த அந்தக் கதையைச் சொல்லி குறும்பு பண்ணனும்; subtle-ஆக, மறைமுகமாகச் சொல்லி படிக்கிறவர்களே “இதென்ன இப்படியிருக்கே!” என்று யோஜித்துக் காரணத்தைக் கண்டு பிடிக்கும்படிப் பண்ணினால் தான் அது இலக்கிய நயமாகும்; படிக்கிறவர் மனஸிலும் ஆழமாக ‘இம்ப்ரெஸ்’ ஆகும் என்றுதான், பஞ்ச க்ருத்ய மூர்த்திகளில் ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லிக் கொண்டு வரும்போது ‘ஸதாசிவன்’ என்று நேராகச் சொன்னால் படிக்கிறவர்கள் அதை விசேஷமாக கவனிக்க மாட்டார்களென்பதால் அப்படிச் சொல்லாமல், ‘ஸதா பூர்வ சிவன்’ என்று சொல்லி, அதை விசாரிக்கப் போயே அம்பாள் ஏமாந்த கதையை எல்லாரும் தப்பாமல் தெரிந்து கொள்ளட்டும் என்றே இப்படி ஆசார்யாள் போட்டிருக்கிறார்.

சொல்ல வந்த விஷயம், அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் எத்தனை விதமான ரிலேஷன் சொல்லியிருக்கிறதென்பது. த்ரிமூர்த்திகளில் ருத்ரனாகவும், ஈச்வரனாகவும், ஸதாசிவனாகவும் உள்ள ஸ்வாமிக்கு அம்பாள் யஜமானியாயிருந்து அவர் ஸேவகராக இருக்கிறதாக இங்கே [ச்லோ-24-ல்] ரிலேஷன்ஷிப் காட்டியிருக்கிறார். அடுத்த ச்லோகத்தில் முக்குணங்களுக்கு முத்தொழில்கள், மும்மூர்த்திகள் என்ற பொது அபிப்ராயத்தையே — ஆரம்ப ச்லோகங்களில் சொன்ன அபிப்ராயத்தையே — எடுத்துக் கொண்டு, “உன்னொருத்திக்குப் பண்ணும் பூஜையே அவர்களுக்கும் பண்ணியதாகிறது. எப்படியென்றால் உன் சரணத்தில் அவர்களுடைய சிரஸ் இருக்கிறது. தங்கள் தலைக்கு மேலே அவர்கள் கையைக் கூப்பிக் கொண்டு அந்தத் தலையை உன்னுடைய சரணத்திலே சாய்த்து நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கைகளான கூம்பின தாமரைகள் உன் சரணத்தில் அர்ச்சனை பண்ணிய புஷ்பங்களாக இருக்கின்றன. அந்த அர்ச்சனைப் புஷ்பங்களின் மேலேயும் மற்ற ஸகல பக்தர்களும் உன்னுடைய சரணத்தில் அர்ச்சனை செய்யும் புஷ்பங்கள் விழுந்துதானே ஆகணும்? இப்படி உன்னொருத்திக்குச் செய்யும் பாதபூஜையே த்ரிமூர்த்திகளின் சிரஸுக்கும் கரத்துக்கும் செய்த பூஜையுமாகிவிடுகிறது” என்கிறார். பூஜிக்கிறவர்களே பூஜிக்கப்படுபவர்களுமாகி விடுகிறார்கள்! இங்கேயும் த்ரிமூர்த்தியில் ஒருவரான — சிவாம்சமான — ருத்ரன் அம்பாளுக்கு பக்தராகவும் அவள் அவருக்கு தெய்வமாகவுமிருக்கிறாள்.

அதோடு அவளுடைய குழந்தையாகவும் அவர் இருப்பதாகச் சொல்லலாம். எப்படியென்றால் —

“த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண ஜநிதாநாம் தவ சிவே” என்று ஆசார்யாள் சொல்கிறார். ‘சிவா’ என்ற பெயரை அர்த்த புஷ்டியோடு போட்டிருக்கிறார். “சிவம் சதுர்த்தம்” என்று மாண்டூக்யம் சொல்கிறது. த்ரிகுணங்களுக்கு மேலேயுள்ள துரீயம் என்ற ப்ரஹ்ம நிலைதான் சதுர்த்தம். சிவமாக உள்ளபோது அது கார்யமில்லாத ப்ரஹ்மம். சிவாவாக உள்ளபோது கார்ய ப்ரஹ்மம். சிவம் த்ரிகுணங்களில் பட்டுக் கொள்ளாது. அதன் சித்சத்தி இச்சையாகக் கிளம்பி காமேச்வரியாகித்தான் த்ரிகுணங்களைப் பிறப்பித்து முத்தொழில்களென்ற க்ரியைக்காக த்ரிமூர்த்திகளை அந்த த்ரிகுணங்களிலிருந்து பிறப்பித்தது. “தவ த்ரிகுண ஜநிதாநாம்” – “உன்னுடைய த்ரிகுணங்களில் ஜனித்தவர்களே த்ரிமூர்த்திகள்” – என்கிறார். அப்படியென்றால் அவளுக்கு ஜனித்தவர்கள்தான். த்ரிமூர்த்திகளுக்கும் அவள் ஜனனி. ஸ்வாமிக்கு அம்பாளை மாதாவாகவும் தத்வ ரீதியில் சொல்வதுண்டு. ருத்ரனான தமோகுண மூர்த்தியாக அவர் இருக்கும்போது, தத்வம் அவ்வளவு புரியாதவர்கள்கூடப் புரிந்து கொள்ளும் படியாக — “ஒரு மூலசக்தியிலிருந்துதானே முக்குணங்கள் பிறந்து, அவற்றுக்கு பெர்ஸானிஃபிகேஷனாக மும்மூர்த்திகள்? அப்போது அந்த சக்தி அம்மாதானே?” என்று புரிந்து கொள்ளும்படியாக — இருக்கிறாள்.

[சிரித்து] பாட்டி என்றுகூடச் சொல்லலாம்! ஸ்வாமிக்கும் அவள் அம்மா என்பது பல பேர் சொன்னது. யாரும் சொல்லாதது நான் ‘நாவ’லாகச் சொல்வது, பாட்டி என்று! முதலில் த்ரிகுணங்கள் துரீய பராசக்தியின் குழந்தைகளாகப் பிறந்தன; அந்த த்ரிகுணங்களின் குழந்தைகளாக, “த்ரிகுண ஜநிதாநாம்” என்று ஆசார்யாள் சொல்கிறபடிப் பிறந்தவர்கள் த்ரிமூர்த்திகள் என்றால் அவளுக்குப் பேரக் குழந்தைகள்தானே? இப்படி ஒரு ரிலேஷன் ருத்ர சிவனுக்கு அம்பாளுடன்!

அடுத்த ச்லோகத்தில் [26] மற்ற எல்லா தேவர்களும் முடிந்துபோகிற மஹா ஸம்ஹார காலத்திலும் அம்பாளோடு ரமித்துக் கொண்டிருப்பவராக ஸ்வாமியைச் சொல்லியிருக்கிறது. அங்கே பஞ்சமூர்த்திகளுக்குங்கூட முடிவுதான். ஸம்ஹார ருத்ரனும் முடிந்து போகிற மஹா ஸம்ஹாரம் அது. அதைப் பண்ணுவது டைரக்டாகப் பராசக்தியே. போதும் விளையாட்டு என்று த்வைத ப்ரபஞ்சத்திற்கு அவள் அப்படியே கடை கட்டிவிடுகிற காலம் அது. அப்போது திரோதான-அநுக்ரஹங்கள் பண்ணவும் ஏது இடம்? அதனால் சிவ ஸாம்யர்களாகவே நினைக்கப்படுகிறவர்களில் மூன்று பேர் [ருத்ரனும், மஹேச்வரனும் ஸதாசிவனும்] அப்போது முடிந்து போக வேண்டியதுதான். ‘அம்பாளுடைய பஞ்ச ப்ரஹ்மாஸனத்தைப் பஞ்ச ப்ரேதாஸனம் என்றும் சொல்வதுண்டு; இவள்தான் அந்த ஐந்து மூர்த்திகளுக்கும் வேலையும் அதற்கான சக்தியும் கொடுப்பது; இவள் அப்படிக் கொடுக்காவிட்டால் அவர்கள் வெறும் ப்ரேதத்துக்கு ஸமானந்தான் என்பதாலேயே அப்படி பேர்’ என்று சொன்னேன்2. ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ? அந்த [வேலை கொடுக்காத] ஸ்டேஜ்தான் மஹா ஸம்ஹார காலம். அப்போதும் அந்த மஹா ஸம்ஹாரத்தைப் பண்ணிப் பார்க்க வேண்டும் என்பதாகப் பண்ணுவது என்ற க்ரியையும், பார்க்க வேண்டும் என்ற இச்சையும் பராசக்திக்கு இருப்பதால் அவள் காமேச்வரியாக இருக்கிறாள். அந்த நித்ய ஸுமங்கலிக்கு எப்போதும் பதி இருந்தேயாக வேண்டுமாதலால் காமேச்வரனும் இருக்கிறான். “சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்” என்று ரொம்ப முந்தி ஒரு ச்லோகத்தில் [ச்லோ-8] சொன்னதில் பஞ்ச ப்ரேத, அல்லது பஞ்ச ப்ரஹ்ம, ஆசனத்தில் அம்பாளை மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டிருக்கும் அந்தப் ‘பரம சிவன்’ இந்த காமேச்வரன்தான். அவர்களை ஆனந்தமாகச் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிற தம்பதியாக இங்கே [ச்லோ-26-ல்] காட்டுகிறார். ஸம்ஹாரத்திலே என்ன ஆனந்தம் என்றால், வெளியிலே அது கோரமாகத் தெரிந்தாலும், வாஸ்தவத்திலே அவர்கள் தங்கள் குழந்தைகளான ஸகல ஜீவ கோடிகளையும் கர்ம பாதையிலிருந்து விடுவித்துத் தங்களுக்குள்ளே இழுத்து வைத்துக் கொள்கிற கார்யந்தானே? அந்த ஆனந்தம்தான்!

ஒன்று தோன்றுகிறது: இங்கே “மஹா ஸம்ஹாரே (அ)ஸ்மிந் விஹரதி ஸதி த்வத்-பதி-ரஸெள” : “மஹா ஸம்ஹார காலத்தில் உன் பதி விஹரணம் பண்ணுகிறார்” என்று போட்டிருக்கிறார். ‘விஹ்ரணம்’ என்றால் விளையாடி ஸந்தோஷப்படுவது, கூடிக் களிப்பது என்ற அர்த்தத்தில் இத்தனை நாழி சொன்னேன். அது மட்டுமில்லாமல் அந்த வார்த்தைக்கே ‘ஸம்ஹாரம்’ என்றும் அர்த்தமுண்டு. ஹரணம், ஆபஹரணம், ஸம்ஹரணம், விஹரணம். அபஹாரம், ஸம்ஹாரம், விஹாரம் என்ற எல்லா வார்த்தைக்களையுமே பொதுவாக நாம் ஸம்ஹாரம் என்று சொல்கிற வார்த்தைக்குப் பதிலாகப் போடலாம். அப்படி இங்கே காமேச்வரன் மட்டுமே, காமேச்வரியைச் சேர்த்துக் கொள்ளாமல் அவன் மட்டுமே, மஹாஸம்ஹாரம் செய்கிறான் என்பதைத்தான் ‘த்வத் பதி: விஹரதி’ என்று சொல்லியிருக்கிறார் என்றுகூட ஒரு அர்த்தம் பண்ணலாமோ என்று தோன்றுகிறது. அம்பாளோடுகூடச் சேர்ந்து அவன் ஸம்ஹார விளையாட்டுச் செய்கிறானென்றோ, அல்லது ஸம்ஹாரத்தின் ப்ரஸ்தாபமில்லாமல் அவன் பாட்டுக்குப் பத்னியோடு ரமித்து விளையாடுகிறானென்றோ காட்ட ச்லோகத்தில் வார்த்தையில்லை. “அந்த மஹாஸம்ஹாரத்தின்போது இந்த உன் பதி விஹரணம் பண்ணுகிறான்” என்று மட்டும்தான் வாக்கியம் இருக்கிறது: “மஹா ஸம்ஹாரே (அ)ஸ்மிந்த விஹரதி ஸதி த்வத் பதி-ரஸெள.” அதனால் அவனேதான் அந்த ஸம்ஹாரத்தைப் பண்ணுகிறான் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள நன்றாக இடம் கொடுக்கிறது.

இப்படி எதற்கு அர்த்தம் பண்ணுகிறேன் என்றால், [சிரித்து] அம்பாளுக்குப் பரிந்துகொண்டுதான்! அவளுக்கு நல்ல பேர் வாங்கி வைப்பதற்குதான்! ‘வெளிப் பார்வைக்கு கோர க்ருத்யமாகத் தெரியும் மஹா ஸம்ஹாரத்தை அவள் பண்ணவில்லை. திட்டம் அவளுடையதுதானென்றாலும், எக்ஸிக்யூஷன் — அதுதானே க்ரூரமாகத் தெரிகிறது? அது — அந்தத் தாயாருடையதில்லை. ஸ்ருஷ்டியில் இதுவரை அந்த ராணிக்கு உப்புக்குச் சப்பாணி ராஜாவாகவே இருந்திருக்கும் காமேச்வரன் இப்போது ஸ்ருஷ்டியை முடிக்கும்போது மட்டும் நன்றாக அதிகாரம் பெற்று அவன்தான் அதைப் பண்ணுவது’ என்று காட்டி அவளுக்கு நல்ல பேர் வாங்கி வைப்பதற்குத்தான் இப்படி அர்த்தம் பண்ணினேன்! எனக்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஸப்போர்ட்டே இருக்கிறது! அதனால் யாரும் ‘இவர் என்ன, இஷ்டப்படி அர்த்தம் பண்ணுவது? என்று கேட்க முடியாது. ஸஹஸ்ரநாமத்தில் என்ன இருக்கிறது? “மஹேச்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணி” என்று இருக்கிறது. ‘மஹா கல்ப மஹா தாண்டவம்’ என்பதை அத்தனை கல்ப காலங்களும் முடியும் ப்ரளயத்தின்போது மஹேச்வரன் ஆடுகிற பெரிய ஆட்டம் என்றும் அர்த்தம் பண்ணலாம்; அல்லது, மஹேச்வரனால் மஹத்தான் முறையில் கல்பனை பண்ணப்பட்ட மஹா பெரிய ப்ரளயக் கூத்து என்றும் அர்த்தம் பண்ணலாம். ‘கல்பனை’, ‘கற்பனை’ என்றால் நாம் நினைக்கிறபடி வெறும் இட்டுக்கட்டல், இமாஜினேஷன் என்று அர்த்தமில்லை. நன்றாகத் திட்டம் போட்டுக் கார்யமாகப் பண்ணுவதும் கல்பனைதான். அப்படி மஹேச்வரனேதான் மஹாப்ரளயத்தைப் பண்ணுகிறானென்று அர்த்தம் சொல்லலாம். இங்கே ‘மஹேச்வரன்’ என்றால் திரோதான மூர்த்தி என்று அர்த்தமில்லை. இந்த ஸந்தர்பத்தில் அந்த அர்த்தம் கொஞ்சங்கூட பொருந்தாது. ‘மஹிமை வாய்ந்த ஆளும் ப்ரபுவாக இருப்பவன்’ என்பதே இங்கே ‘மஹேச்வர’னுக்கு அர்த்தம். இப்படி அவன், அவன் மாத்ரமே மஹாப்ரளயத்தில் விஹரணம் பண்ண, அம்பாள் வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு மட்டும் ஸாக்ஷியாயிருக்கிறாள் என்பதுதான் ‘மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிணி’க்கு அர்த்தம்

ஆக இது ஒரு புது, ரொம்ப விநோதமான, பொதுவாக சொல்வதற்கு நேர்மாறான ரிலேஷன் — அம்பாளுக்கும் ஈச்வரனுக்கும் [இடையில்]! பொதுவாகச் சொல்வதென்ன? அவள்தான் கார்யம் பண்ணுபவள், சிவன் ஸாக்ஷிமாத்ரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்ம ஸ்வரூபம் என்பதுதான். இங்கேயோ அவன்தான் கார்ய சக்தியாக மஹா ஸம்ஹாரம் செய்ய அவள் ஸாக்ஷியாயிருக்கிறாள்!

முத்தொழிலில் வருவதான ருத்ரன் செய்யும் ஸம்ஹாரத்திற்கு மேலே அந்த ருத்ரனும் ஸம்ஹாரம் செய்யப்படும் மஹா ஸம்ஹார ஸமாசாரம் இப்படி இருக்கிறதென்றால் ஐந்தொழில் (பஞ்ச க்ருத்யம்) என்று ஒன்று பார்த்தோமே, அது விஷயமாகவும் இதேபோல ஸ்வாமிதான் கார்ய சக்தி, அம்பாள் ஸாக்ஷி மாத்ரமே என்று சிதம்பரத்தில் — சைவ க்ஷேத்ரங்களிலேயே முதலாவதாக உள்ள மஹாக்ஷேத்ரத்தில் — பண்ணியிருக்கிறது! பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம் என்பதாக ஐந்து தொழில்களையுமே நடராஜாதான் அங்கே பண்ணுகிறார். ராஜா என்றால் அதிகாரமுள்ள அஸல் ஸாவரின் ராஜாவாகவே அவர் அங்கே ஒரே கூத்து அடித்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்க, பராசக்தி தன்னுடைய சக்தியையெல்லாம் அடக்கிக் கொண்டு பரமசாந்தையாக, இருக்கிற இடமே தெரியாமல் இருப்பாள். “ஐயா, ஐயா” என்று அங்கே யஜமானருக்குத்தான் விசேஷமெல்லாம். எதிர்வெட்டாக “அம்மா, அம்மா” என்று அவளுக்கே முதலில் பூஜை, நைவேத்யம், அவர் back-ground-ல் என்று மதுரையில் இருக்கிறது. ஒரு க்ருஹத்தில் புருஷன் வைத்தது சட்டமா அல்லது பெண்டாட்டிதான் நாட்டாண்மையா என்று கேட்பதற்கு ‘சிதம்பரமா, மதுரையா?’ என்றே கேட்பதுண்டு!…..

ஸெளந்தர்ய லஹரியில் அம்பாள் – ஸ்வாமிகளின் பலவித ரிலேஷன் சொல்லிக் கொண்டிருந்தேன். அதிலே பொது அபிப்ராயத்திற்கு வித்யாஸமாக ஸ்வாமியே மஹா ஸம்ஹார க்ருத்யம் செய்ய, அவள் பார்த்துக் கொண்டு, அவர் actor, அவள் spectator என்றும் ஒரு ரிலேஷன் த்வனிக்கிற மாதிரி இந்த ச்லோகத்தில் வார்த்தை விழுந்திருக்கிறது: “மஹா ஸம்ஹாரேஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸெள.”

இன்னோரிடத்தில் அம்பாளை ‘விஹரஸி’ என்கிறார். (ச்லோ. 9. மூலவாக்யம் ‘விஹரஸே’ என்பது.) அங்கே ‘விளையாடுகிறாய்’; ‘பதியோடுகூடிக் களிக்கிறாய்’ என்றே ஸ்பஷ்டமாக அர்த்தம் கொடுக்கும் படியாக “பத்யா ஸஹ விஹரஸே” என்கிறார்:

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

ஒரு யோகி மூலாதாரத்திலிருந்து சக்ரம் சக்ரமாக குண்டலிநீ சக்தியை எழுப்பிக் கொண்டு சிரஸ் உச்சியை அடைகிறபோது அந்த சக்தியாக இருக்கிற அம்பாள் பூர்ணமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பதியோடு சேர்ந்து விளையாடுகிறாள்; [அதாவது] சிவ-சக்திகள் ஐக்யமாகின்றன என்ற விஷயத்தை அங்கே தெரிவித்திருக்கிறார். அதுதான் இன்வல்யூஷனில் கடைசி ஸ்டேஜ். அதோடு ஜீவாத்ம-பரமாத்ம ஐக்யம் உண்டாகி மோக்ஷப்ராப்தி ஏற்பட்டு விடுகிறது. ஸம்ஹாரம் மாதிரி வெளிப்பார்வைக்குக்கூட க்ரூரமாகத் தெரியாமல், இப்படி ஒரே ஆனந்தமாக அம்ருத ப்ரவாஹத்தை [ஒரு ஜீவனுக்குள்] கொட்டிக் கொண்டு, அப்புறம் அம்ருதம் [என்பது] ப்ரவாஹமில்லை, அநுபவம் என்பதாக அவனையே அம்ருதமாக [அமரமாக] ஆக்குகிறபோதுதான் ப்ரேம மயமான அந்தத் தாயார் விஹாரம் பண்ணுவதாகச் சொல்லியிருக்கிறார்; ஸம்ஹாரத்தின் போது ஸ்வாமியைச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.

அவர்களுடைய ரிலேஷன்களில் குரு-சிஷ்ய ரிலேஷனும் உண்டு. ஸ்வாமி குருவாகவும் அம்பாள் சிஷ்யையாகவும் இருப்பார்கள். ஆகமங்களென்றும் தந்த்ரங்களென்றும் ஸம்ஹிதைகளென்றும் சொல்லப்படும் வழிபாட்டு முறைகளெல்லாமே3 ஸ்வாமி உபதேசித்து அம்பாள் கேட்டுக் கொண்டதாகத்தான் இருக்கின்றன. ஞானாம்பிகையேயான அவள் வித்யையின் மஹிமை லோகத்திற்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், ஒரு பெண்ணுக்குப் பதியேதான் குரு ஸ்தானமும் என்பதை பிரகாசப் படுத்துவதற்காகவும் இப்படி சிஷ்ய பாவத்தில் இருந்துகொண்டு ஸாக்ஷாத் பதியிடமிருந்தே உபதேசம் பெற்றுக் கொள்கிறாள். அந்த ரிலேஷனும் ஸெளந்தர்ய லஹரியில் [ச்லோ.31] சொல்லியிருக்கிறது. அறுபத்துநாலு தந்த்ரம் என்று ஒரு கணக்கு உண்டு. அந்த அறுபத்து நாலையும் ஸ்வாமி உபதேசித்து அம்பாள் கேட்டுக் கொண்ட விஷயம் இதில் வருகிறது. நேரே அந்த விஷயத்தை அதற்காகவே சொல்லவில்லை. எதையுமே ஒரு நூதனமான கோணத்தில் சொல்வதுதான் ஸெளந்தர்ய லஹரியின் சிறப்பு. அப்படி, இங்கே, “ஸ்வாமி ஒவ்வொரு விஷயத்தில் ஸித்தி தரவல்ல ஒவ்வொரு தந்த்ரமாகவுள்ள அறுபத்து நாலை உபதேசித்துவிட்டு அதோடு பேசாமல் இருந்து விட்டார். அப்போது நீ பார்த்தாய்! ‘இதென்னடா, இப்படி ஏதோ ஒவ்வொரு பலனைத் தரும் மற்ற தேவதோபாஸனைகளான அறுபத்து நாலை மட்டும் நம் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, தர்மார்த்த காம மோட்சங்களாகிய எல்லாப் பலன்களையும் தரவல்லதான நம்முடைய ஸ்ரீவித்யோபாஸனையில் வருகிற ஸமயாசார தந்த்ரத்தை மட்டும் உபதேசிக்காமல் வாயை மூடிக்கொண்டு விட்டாரே! தர்ம, அர்த்த, காம பலன்களும் அதற்கு உண்டுதானென்றாலும், முக்யமாக பாஹ்ய [புற] பூஜையையெல்லாம் ஆந்தரமாக்கி [அக வழிபாடாக்கி] அப்படியே அந்தஃகரணத்தையும் ஆத்மாவிலே ஒடுக்கிவிடும் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்திற்கு வழியாயிருப்பது இந்த தந்த்ரமேயல்லவா? இதைக் குழந்தைகளுக்குக் காட்டாமல் பூட்டி வைத்துக் கொண்டு தனக்கும் வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டாரே! இதென்ன அந்யாயம்?’ என்று பார்த்தாய்! ‘என் குழந்தைகளுக்கு என் தந்த்ரத்தைச் சொல்லிக் கொடும்! கொடுக்காவிட்டால் விடமாட்டேன்’ அவரை நிர்பந்தப் படுத்தினாய்!” [என்று அந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.]

‘நிர்பந்தம்’ என்ற வார்த்தையையே ஆசார்யாள் போட்டிருக்கிறார: ‘புநஸ்-த்வந்-நிர்பந்தாத்“…..

ப்ரஹ்மமாக அடித்து வைத்திருந்த ஸ்வாமியை இவள்தான் லீலையில் இழுத்துவிட்டது! ஆனாலும் அப்புறம் அதிலே அவர் அதியாகவே போய்விட்டார். எவரைப்போல அசலமாக ஒருத்தர் உட்கார்ந்ததில்லையோ அவர் ப்ரபஞ்சமெல்லாம் கிடுகிடுக்கும்படி ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்துவிட்டார்! அது பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம். அப்புறம், ஸம்ஹார தாண்டவம் வேறு — அதுவும் அந்த மஹா பராசக்தியை வெறும் ஸாக்ஷியாக்கிவிட்டு அவரே ஆடு ஆடு என்று ஆடிக்கொண்டு! அஜபா நடனம், குக்குட நடனம் என்றெல்லாம் வேறு ஏழு தினுஸு ஆட்டங்கள்! இதில் சேராமல் நவதாண்டவம் என்ற ஒன்பது தினுஸாக அமர்க்களம்! மற்ற லீலைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. பிக்ஷாடனம், த்ரிபுர தஹனம், ஜலந்தர வதம் என்றெல்லாம் அறுபத்து நாலு லீலைக்கு அறுபத்து நாலு மூர்த்தங்கள் கொடுக்கும்படியாக அப்படிப் பண்ணியிருக்கிறார்! மதுரை ஒரு ஊரிலேயே அதுபாட்டுக்கு ஒரு அறுபத்துநாலு திருவிளையாடல் பண்ணியிருக்கிறார்! தாமே இப்படிப் பண்ணுபவர் ஜனங்களையும் லீலையைவிட்டு, த்வைதத்தை விட்டு, ஞானத்திற்கு அத்வைத மோக்ஷத்திற்குப் போக விடாமல் வேறே என்னென்னவோ பலன் தருகிற அறுபத்து நாலு தந்த்ரங்களை மட்டும் உபதேசித்து விட்டு நிறுத்திக் கொண்டு விட்டார்.

அப்போதுதான் பரம கருணையோடு அந்த அம்மா, “நீர் நன்றாகக் கூத்தடியும் ஸ்வாமின்! உள்ளே ஆடாமல் அசங்காமலே வெளியிலே அத்தனை கூத்தும் அடிக்க உம்மாலாகும். என் குழந்தைகளுக்கு ஆகுமா? அதனால் அவர்களையும் ஆடப் பண்ணி ஒரு ஸ்டேஜ்வரை வேடிக்கை பார்த்தாலும், அந்த ஆட்டமெல்லாமும் கர்ம நாசத்திற்கும், சித்த சுத்திக்குமே ஸஹாயம் பண்ணும் படியாக ஆக்கி, அப்படியே ஞானத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் ஆடாமல் அசையாமல் செய்வதான என்னுடைய உபாஸனா மார்க்கத்தை அவிழ்த்துவிடும். [குரலை உயர்த்தி] விடுகிறீரா, இல்லியா? விடாவிட்டால் உம்மை நான் விடமாட்டேன்” என்று அம்பாள் போட்டு நிர்பந்தப்படுத்தினாள். இப்பேர்ப்பட்ட உசந்த ‘அம்பாள் தந்த்ர’த்தை இந்த பித்துக்குளி லோகத்துக்குத் தருவதாவது என்றுதான் அவர் அதை இறுக்கி பூட்டி வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் விடாப்பிடியாக நச்சரித்ததன் மேலே அவர் அந்த தந்த்ரத்தையும் உபதேசித்து லோகத்திற்குக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இவளுடைய வழிபாட்டுமுறைதான் அது. ஆனாலும் இவளே அதை ப்ரகடனம் பண்ணாமல் பதியும் குருவுமான ஸ்வாமிதான் பண்ணனும் என்று இருந்ததில் பதிவ்ரதா லக்ஷணத்தையும் சிஷ்ய லக்ஷணத்தையும் காட்டியிருக்கிறாள். அதே ஸமயத்தில் குழந்தைகளான நமக்கெல்லாம் அந்த பரம மோக்ஷோபாயம் கிட்டாமலிருக்கலாமா என்பதில் ஒரு பதிவ்ரதையோ சிஷ்யையோ அடங்கிக் கிடக்கிற மாதிரியில்லாமல் அவரைப் போட்டு நிர்பந்தப்படுத்தி அதை வெளியிடப் பண்ணியிருக்கிறாள். இங்கே பதி பக்தி, குரு பக்தி எல்லாவற்றுக்கும் மேலே மாத்ரு வாத்ஸல்யந்தான் தன்னுடைய லக்ஷணம் என்கிறது போல் காட்டியிருக்கிறாள்.

அந்த ஸமய தந்த்ரத்தின் பல விசேஷங்களில் ஒன்று என்னவென்றால் அதுதான் வேத வழிக்கு ரொம்ப அநுஸரணையாக இருப்பது. எல்லா தந்த்ரங்களுமே வைதிகமாக ‘அடாப்ட்’ பண்ணிக் கொள்ளக் கூடியவை தான். வைதிகம் – தாந்த்ரிகம் என்று இரண்டு தனித்தனி மார்க்கம் என்கிற மாதிரி பிரிப்பது ஸரியில்லைதான். ஆனாலும் முழுக்கவும் வைதிகம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அநேக வழக்குகள் பல தந்த்ரங்களில் இடம் பெற்று விடத்தான் செய்திருக்கின்றன. இப்படி இருப்பவற்றை வைதிகத்திலிருந்து பிரித்துத்தான் இரண்டாகச் சொல்வது. நம் ஆசார்யாள்தான் சுத்த வைதிக பூஜா மார்க்கத்தை மறுபடி ஜீவ சக்தியோடு ஸ்தாபித்தார். இந்த வைதிக பூஜையிலும் தந்த்ரங்களிலுள்ள மந்த்ரங்கள் வரத்தான் வரும். வேடிக்கை என்னவென்றால், அந்த மந்த்ரங்களுக்கும் வைதிக basis இருக்கவே செய்யும். சிவ பஞ்சாக்ஷிரி மாதிரிச் சிலது வேதத்திலேயே ஸ்பஷ்டமாக வருகிறதென்றால், அப்படித் தெரியாதவற்றைக் கூட ஸம்ஜ்ஞையாக [ஸமிக்ஞையாக] வேதம் சொல்லித்தான் இருக்கிறது. இப்படி ஸ்ரீவித்யோபாஸனை விஷயமாக ஆசார்யாள் வைதிக ஆராதனையை ஸ்தாபிக்க நினைதத்த போது ஸமயாசாரத்தைத்தான் எடுத்துக் கொண்டு பண்ணியிருக்கிறார்

அதை ஆசார்யாள் அம்பாளுடையதேயான தந்த்ரம் என்பதாக “தே தந்த்ரம்” என்கிறார். “உன் தந்த்ரத்தை ஸ்வாமி வெளிப்படுத்தித்தானாகணும் என்று வலுக்கட்டாயப்பபடுத்தி ஸாதித்துக் கொண்டாய்!” என்கிறார். விசேஷம் என்னவென்றால், அம்பாள் தந்த்ரங்கள் பலதில் அவளுக்கே எல்லா முக்யமும் கொடுத்து ஸ்வாமியை இரண்டாம் பக்ஷம், மூன்றாம் பக்ஷம், அதம பக்ஷம் என்றுங்கூட வைத்திருக்கும்; இந்த ‘அம்பாளுடையதே’ எனப்படும் ஸமயாசாரத்தில்தான் அப்படிப் பண்ணாமல் இரண்டு பேருக்கும் ஸமப் பிராதான்யம் தந்திருக்கிறது! தன்னையே ஒரே உசத்தியாக அவருக்கு மேலே சொல்லியிருக்கும் தந்த்ரங்களை அம்பாள் ‘தன்னுடையதே’ என்று அங்கீகரிக்காமல், பதியைத் தனக்கு ஸமமாகச் சொல்வதைத்தான் அப்படிக் கருதுகிறாள் என்பதிலும் அவளுடைய பாதிவ்ரத்ய விசேஷம் தெரிகிறது.

அவர் இவளுக்கும் உயரே இவளே அடங்கிக் கிடக்கும் யஜமானனான பதி, ஸம ப்ராதானமுள்ள பதி, உப்புக்குச் சப்பாணி அகமுடையான், குரு, இவள் வைத்த அதிகாரி, தாஸன், பக்தன், பிள்ளை (பேரன் வரைகூட இழுத்துவிட்டு விட்டேன்!); இவள் அர்த்தாங்கனா, அவருடைய பூர்ண சரீரத்தையுமே எடுத்துக் கொண்டவள், அவர் உயிருக்கே ரக்ஷை, அவரையே ஆட்டிப் படைக்கிற ஜீவசக்தி என்றிப்படி சிவனையும், சிவ ஸாம்யமுள்ள மூர்த்திகளையும் அம்பிகையோடு ஸம்பந்தப்படுத்தி இந்த ஆனந்த லஹரி ஸெக்ஷனில் பலவிதமாகச் சொல்லியிருக்கிறது.

இதெல்லாமிருந்தாலும் ஸ்ரீவித்யா தந்த்ர விசேஷங்கள் தான் அந்த ஸெக்ஷனுக்கு முக்யம். அந்தத் தந்த்ரத்தில் வரும் இரண்டு மந்த்ரங்களையும் அதில் சொல்லியிருக்கிறது. அந்த இரண்டு ச்லோகங்களும் [32, 33] தான் இந்த பாகத்திற்கு உயிர் நிலை என்று அபிப்ராயமுண்டு. பின்பாதியில் அவயவ ஸ்வரூப வர்ணனை என்றால் இது அதே அம்பாளை அக்ஷர ஸ்வரூபத்தில் பிடித்துக் கொடுப்பது. தேவதைகளுக்கு சரீர ரூபம், சப்த ரூபம் என்று இரண்டு இருப்பதில் பின் பாகம் சரீர ரூபம், இது சப்த ரூபம். அது கண்ணால் பார்க்கும் த்ருச்ய ரூபம். இது காதால் கேட்கும் ச்ராவ்ய ரூபமாகவும் வாக்கால் சொல்லும் வாச்ய ரூபமாகவும் இருப்பது. இந்த ரூபத்திலிருந்துதான் அந்த ரூபமே உண்டாயிற்று; இதை ஜபிப்பதாலேயே அது ப்ரத்யக்ஷமாகிறது என்று [சப்த ரூபத்திற்கு] உத்கர்ஷம் சொல்வதுண்டு.

இதனாலும் அதைத்தான் பிடிக்கிறது என்றால் அப்போது இது உபாயந்தான், அதுவே லக்ஷ்யம் என்று அதற்கும் உத்கர்ஷம் சொல்லலாம்தானே? இதிலிருந்தே அது உண்டாகிறதென்னும்போது அதுதான் பலன், பழம் என்று உத்கர்ஷம் சொல்லலாம்தானே? மற்ற ஸமயங்களில் என்ன சொல்வேனோ? ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று எடுத்துக் கொள்ளும்போது அம்பாளுடைய அழகான அவயவ சரீர ரூபத்துக்குத்தான் full mark!

தத்வமெல்லாம் சொல்லிப் பூர்வ பாகத்தை முடிக்கும் போது ஜனக-ஜனனி என்று தந்தை-தாயில்தான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ‘ஜனகன்’, அப்புறம் ‘ஜனனி’. அந்தத் தாயாரிடம் அத்தனை தந்த்ரமும் தத்வமும் பூர்த்தியாகிவிடுகின்றன. குழந்தைக்குத் தாயாரென்றால் அவளுடைய ஆகாரம்தான் [வடிவம்தான்]! ‘முகம் பார்க்கிறது’ என்று ஒரு குழந்தை முதலில் தெரிந்து கொள்வது தாயாரின் ரூபத்தைத்தான். பச்சை, சிவப்பு, கலர் கலராகப் பார்த்து ஸந்தோஷப்படுவதற்கு மேலே ஒரு குழந்தை சந்தோஷப்படுவது தாயாரின் ரூபத்தைப் பார்த்துத்தான். அதனால் ஜனக-ஜனனி என்று அந்த ஜகத்ஜனனியை முடிவாகச் சொன்னதோடு தத்வ சாஸ்திரத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தாயாரின் ரூபத்தை கேசாதிபாதம் வர்ணிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

இங்கேதான் “ஸெளந்தர்ய லஹரி” என்றே சொல்லப்படும் பாகம் அம்பாளுடைய லாவண்ய வெள்ளத்தை அலை அலையாக வர்ணிக்கும் பாகம் ஆரம்பிக்கிறது.


1“கருவினுருவாகி வந்து” எனத் தொடங்கும் பாடல்.
2பஞ்ச க்ருத்யமும் காமேஸ்வரி-காமேச்வரர்களும்” என்ற பிரிவின் கடைசிப் பகுதியில்.
3பொதுவாக வழிப்பாட்டுமுறைகளில் சிவன்னுக்கானதை ஆகமம் என்றும், அம்பிகைக்கானதைத் தந்த்ரம் என்றும், விஷ்ணுவுக்கானதை சம்ஹிதை என்றும் குறிப்பிடக் காண்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஜனக - ஜனனி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சந்திர-ஸ¨ர்ய மௌளீச்வரி
Next