பிள்ளையாரும் சந்திரனும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

விக்நேச்வரருக்குச் சந்திரனோடு ரொம்ப ஸம்பந்தமுண்டு. தானே அழகு என்ற கர்வத்தில் அவன் அவரைப் பரிஹாஸம் பண்ணினான். அவர், “இனிமேல் உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். பார்த்தால் வீண் பழிக்கு ஆளாவார்கள்” என்று சபித்துவிட்டார். அப்புறம் ஜனங்களெல்லாம் சந்திரனை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்கள். “இவனைத் தப்பிப்போய் பார்த்து விட்டால் நாம் ஊர் அபவாதத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறதே! இவன் யார் கண்ணிலும் படாமல் தொலைந்து போவதுதானே?” என்று வைதார்கள். அவமானப்பட்டுக்கொண்டு அவனும் ஸமுத்ரத்துக்குள்ளே போய் ஒளிந்து கொண்டு விட்டான். சந்திரன் ஸமுத்ரத்திற்கு மேலே இருந்தால் அமாவாஸ்யை, பௌர்ணமிகளில் ஸமுத்ரம் பொங்கி, லோகத்திற்கு அநுகூலமாகக் காற்று மழை உண்டாகும். இப்போது அதற்கு ஹானி வந்தது. சந்திரிகையில்தான் மூலிகைகள் வளருமாதலால், அதெல்லாமும் நசித்து, நோய் நொடிகள் நிறைய உண்டாயிற்று. ஆகையால் தேவர்களும், ரிஷிகளும் சந்திரனிடம், “நீயும் இப்படி ஒளிந்து வாழ வேண்டாம். லோகமும் நீ இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம். விக்நேச்வரரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள். கருணாமூர்த்தியான அவர் உனக்கு சாப விமோசனம் தருவார். ஜனங்களும் க்ஷேமம் அடைவார்கள்” என்று எடுத்துச் சொன்னார்கள். பட்ட கஷ்டத்தில் சந்திரனுக்கும் புத்தி வந்து அப்படியே பண்ணினான். கருணாமூர்த்தியான பிள்ளையாரும் அவனை மன்னித்து, ஆனாலும் யாருக்கும் தங்களைப் பற்றிய கர்வமும் பிறரைப் பற்றிய பரிஹாஸமான எண்ணமும் இருக்கப்படாது என்று தெரியவைப்பதற்காகத் தம்முடைய ஆவிர்பாவ தினமான சதுர்த்தி திதி ஒன்றில் மட்டும் சந்திரனைப் பார்க்கப் படாது என்றும், மற்ற தினங்களில் பார்க்கலாம் என்றும் சாப விமோசனம் கொடுத்தார். கருணை உள்ளம் உள்ளவராதலால் அதை மேலும் ‘ரிலாக்ஸ்’ பண்ணி, சதுர்த்தியன்று பார்த்தவர்களும்கூட [அப்படிப் பார்த்து முதலில் வீண் பழிக்கு ஆளாகி, அப்புறம் தம்முடைய அநுக்ரஹத்தால் பழி நீங்கிய கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்த] ஸ்யமந்தக மணி உபாக்யானத்தை பாராயணம் செய்தால் தோஷ நிவ்ருத்தி உண்டாகும் என்று அநுக்ரஹித்தார். இதெல்லாவற்றையும் விடத் தம்முடைய கருணை பொங்கிக் கொண்டு தெரியும்படி, தம்மை அவமதித்த சந்திரனுக்கும் தமக்கான ஸங்கடஹர சதுர்த்தி பூஜையின் முடிவில் பூஜை பண்ண வேண்டும் என்று வைத்தார். அந்தக் கருணையின் top-ல் தான் சந்திரனையும் தம்முடைய top-ல், சிரஸில் தூக்கி வைத்துக் கொண்டு ‘பா(Phaa)லசந்திரன்’ ஆனார்.*

Baa -வை அழுத்தி நாலாவது Bhaa ஆக்கி Bhaalachandran என்றும் சொல்லலாம். Bhaalam என்றால் நெற்றிக்கு மேலேயுள்ள இடம்; முன்னந்தலை. அந்த இடத்தில் சந்திரனை தரித்திருப்பவர் ஸ்வாமி.

விக்நேச்வரரின் கருணையையும் க்ஷமையையும் [பொருத்தருளும் குணத்தையும்] காட்டும் பேர் பாலசந்திரன். தப்புப் பண்ணினவன், காலால் உதைத்துத் தள்ள வேண்டியவன், மன்னிப்பு கேட்டதும் அப்படியே மனஸ் இரங்கி அவனைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்ட பெரிய கருணையைக் காட்டுவது பாலசந்த்ர நாமா.


* விநாயகர் – சந்திரன் குறித்த இவ்விஷயங்கள் யாவும் : தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதியில், ‘கண்ணன் பூஜித்த கணநாதன்‘ என்ற பேருரையில் விரிவாகக் காணலாம். அவ்விடத்தில், Phaalam என்பது நடுவே வகிர்ந்த கேசத்தின் ஒரு பக்கம் எனப் பொருள் கூறியுள்ளார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பாலசந்த்ரர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கஜானனர் : யானையின் சிறப்புக்கள்
Next