தெய்வத்தொடர்புள்ள விலங்கினம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

மடத்தில் இரண்டு மிருகங்களின் பேரில் நித்யம் பூஜை நடக்கிறது. கோபூஜை, கஜபூஜை என்ற இரண்டு. இவற்றில் கோவை ம்ருகத்தோடு சேர்க்காமல் மாதா என்றே வைத்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் மிருக வர்க்கம் என்றே இருப்பதில் கஜபூஜை என்றுதான் நடக்கிறது. வேறே எந்த மிருகத்துக்கும் இந்த பூஜை விசேஷமில்லை. நாளைத் தொடங்கும்போது நடப்பது கோபூஜை. கோபூஜையில் ‘கோ’வுக்கு பூஜை நடக்கிறது. நாள்- அதாவது day-time , பகல்-முடிகிற ஸாயரக்ஷையில் நடப்பது கஜபூஜை. கஜபூஜையில் கஜத்தை மரியாதைப் பண்ணிப் பழங்கள் கொடுப்பதோடு அதைக் கொண்டு ஆசார்யாளுக்கு [ஆசார்ய பாதுகைகளுக்கு] சாமரம் போட்டுப் பூஜை பண்ண வைக்கிறோம்; தினப்படி வரவு- செலவுக் கணக்குகள் அப்போது அவர் முன்னே ஒப்பிக்கிறோம். அதை முடித்து நாம் நமஸ்காரம் பண்ணும்போது யானையும் தும்பிக்கையைத் தூக்கி அவருக்கு ஸலாம் போட்டுவிட்டு ஜயகோஷமாகப் பிளிருகிறது. இந்த பூஜைக்கே ‘தீவட்டி ஸலாம்’ என்றுதான் பேர் சொல்வது.

கோபூஜையில் கோவுக்குப் பூஜை என்பதோடு ஸரி. கஜ பூஜையில் அதற்கும் பூஜை, அதுவும் பூஜை பண்ணுகிறது.

எல்லாப் பெரிய கோவில்களிலும் ஆனை வைத்திருக்கிறார்கள். மலையாளத்தில், திருச்சூர் மாதிரி இடங்களில், ஆனைகள்தான் ஸ்வாமியைவிடக்கூட உத்ஸவங்களில் பிரதானமாக இருப்பது.

அவ்வளவு தெய்விகம் பொருந்திய, தெய்வ ஸம்பந்தமுள்ள மிருகம் அது. “ஆதிமூலமே!” என்று கூப்பிட்டு பகவானையே வைகுண்டத்திலிருந்து இறங்கிவரப் பண்ணியிருக்கிறதல்லவா?

மிருகங்களுக்குள் உருவத்தில் ரொம்பவும் பெரியது என்பதோடு யானைக்கே இப்படி ஏகப்பட்ட சிறப்புக்கள் இருப்பதால்தான், எல்லா ஜீவ வர்க்கங்களும் சேர்ந்ததாக விக்நேச்வரர் என்ற ரூபம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரமாத்மா தீர்மானித்தபோது மிருக வர்க்கத்தில் யானையைத் தேர்ந்தெடுத்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கஜானனர் : யானையின் சிறப்புக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அனைத்து உயிரனங்களும் இணைந்தவர்
Next