முகமும் வாயும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘கஜானன’ என்பதில் ஆனனம் என்றால் முகம். “வக்த்ராஸ்யம் வதநம் துண்டம் ஆநநம் லபனம் முகம்” என்று முகத்துக்கு ‘அமர’த்தில் பல synonym சொல்லியிருக்கிறது. வக்த்ரம், ஆஸ்யம், வதனம், துண்டம், ஆனனம், லபனம், முகம் என்கிற ஒவ்வொன்றும் முகத்தையே குறிக்கும்.

இதைச் சொல்லும்போது, ‘ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக வார்த்தை கிடையாது; முகத்துக்கு உள்ள பெயர்களையேதான் வாய்க்கும் சொல்வது’ என்ற அபிப்ராயம் அவ்வளவு ஸரியில்லை என்று தோன்றுகிறது. ‘வாக்’ ‘வசனம்’ என்றெல்லாம் பேச்சைச் சொல்கிறோம். இதனடியாக ‘வக்தா’ என்று பேசுகிறவனுக்கும், ‘வக்தவ்யம்’ என்று பேச்சுக்கும் வார்த்தைகள் உள்ளன. ஆனபடியால் ‘வக்த்ரம்’ என்பதும் பேச்சுக் கருவியாயிருக்கும் வாயைத் தான் குறிப்பிடும். ‘வதனம்’ என்ற வார்த்தையும் பேசுகிற அவயவமான வாயைக் குறிப்பதே – ‘வத’ என்றால் ‘பேசு’. லபனம் என்பதும் தாதுப்படி வாயைக் குறிப்பதுதான். ‘லப்’ என்றால் பேசுவது. ஆலாபம், ஸல்லாபம், ஆலாபனை முதலான வார்த்தைகளுக்கு அதுதான் ‘ரூட்’. ஆகையால் முகத்தின் பெயர்களேதான் வாய்க்கும் வந்தன என்பது முழு உண்மையில்லை. வாயின் பெயர்களான வக்த்ரம், வதனம் முதலியவையும் முகத்தின் பெயராயிருக்கின்றன. ‘Man is the only talking animal’ என்பதால் வசனேந்திரியமாக இருக்கப்பட்ட வாய்க்குத் தனி ஏற்றம் உண்டு. அந்த வாய் இருப்பது ஸர்வாங்கங்களிலும் ச்ரேஷ்டமான முகம். பார்க்கிற கண், கேட்கிற காது, மோந்து பார்க்கிற மூக்கு, ஸ்பர்ச ஸுகத்துக்கு விசேஷமாக இருக்கப்பட்ட கன்னம் ஆகிய அவயங்களும் அந்த முகத்திலேதான் உள்ளனவென்றாலும், மநுஷ்ய ஜாதியின் பிரத்யேக விசேஷணம் பேச்சு இந்திரியந்தான் என்பதால்தான் வாய், முகம் இரண்டுக்கும் ஒரே வார்த்தைகளை வைத்திருக்கிறது. அதோடு வாய்க்குத்தான் இரண்டு கார்யங்கள். கண், காது முதலியவற்றோடு பஞ்ச ஞானேந்திரியங்களில் ஒன்றாக இருந்துகொண்டு சாப்பாட்டு ருசியை வாய் அறிகிறது. அப்போது வெளியில் உள்ள ‘சுவை’ என்பதை அது அறிகிறது – வெளியிலுள்ள ரூபங்களை கண் அறிவது போலவும் வெளியிலுள்ள சப்தத்தைக் காது அறிவது போலவும்; வெளி வாஸனை, வழ வழ சொர சொரக்களை மூக்கும் சர்மமும் அறிவது போலவும். அறியும் கருவி என்பதால் ஞானேந்திரியம். அதுவே கார்யம் செய்வதான கை, கால் முதலான பஞ்ச கர்மேந்திரியங்களில் ஒன்றாக, வெளி விஷயத்தை அறிவது என்றில்லாமல், தானே ‘இன்டிபென்டென்’டாகச் செயலாற்றிப் பேச்சு என்பதைப் பேசவும் செய்கிறது. இன்னொன்றும் ருசி அறிவது மட்டுமில்லாமல் ஆஹாராதிகளைக் கடித்து, மென்று சாப்பிடுகிற கார்யத்தையும் வாய்தான் செய்கிறது. இத்தனை முக்யம் வாய்க்கு! ‘முக்யம்’ என்றாலே ‘முகத்தின் தன்மை’ என்றுதான் அர்த்தம்! அதனால்தான் முகத்துக்கும் வாய்க்கும் வித்யாஸமில்லாமல் ஒரே பெயர்களைச் சொல்வது.

கஜ ஆனனர் – யானை முகம் படைத்தவர் விக்நேச்வரர்.

எண் சாண் உடம்புக்கு சிரஸே ப்ரதானம். ஒரு மனிதன் அழகு, அல்லது குரூபி என்பது முகத்தை வைத்துத்தான். பிள்ளையாரின் அப்படிப்பட்ட முகம் – அவருடைய சாந்தமான கண், விசிறிக் காது, தும்பிக்கை மூக்கு முதலியவற்றைக் கொண்ட முகம் – யானையினுடையதாக இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆதி முதலின் வரிவடிவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வக்ரதுண்டர்
Next