Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

முருகன் ஜனனத்தில் மூத்தவர் பங்கு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஜனனத்தை எடுத்துக்கொண்டால், ‘குமார ஸம்பவம்’ என்பதாக முருகன் ஜனனம் எடுத்ததற்கு அலாதிப் பெருமை இருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் ராம லக்ஷ்மணர்களுக்கு விச்வாமித்ரர் அந்தக் கதையைச் சொல்லி முடிக்கும்போது “குமார ஸம்பவம்” என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார் ஆதி கவியின் அந்த வாக்கை எடுத்துக் கொண்டுதான் மஹாகவி காளிதாஸரும் “குமார ஸம்பவம்” என்றே தலைப்புக் கொடுத்து மஹாகாவ்யம் எழுதினார்.

அந்த ‘ஸம்பவ’த்திலே, அதாவது ஜனனத்திலே அப்படி என்ன விசேஷம்?

மற்றவர்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்ற அப்புறம் பதவிக்கு வருவார்கள். ஆனால் மஹா பெரிய பதவி – தேவர்களுடைய ஸேனைகளுக்கெல்லாம் அதிபதியாக இருக்கும் பதவி – இந்தக் குமாரர் ஸம்பவிக்க வேண்டுமென்று இவருக்காகவே காத்துக் கொண்டிருந்தது! ஜன்மிக்கிறபோதே தேவர்களின் ஸேநாதிபதியாகவே பிறந்தவர் இந்தக் குமாரர், குமாரஸ்வாமி. அஸுரர்களிடம் அடி உதை பட்டுச் சொல்லமுடியாத கஷ்டத்திலிருந்த தேவர்கள் இவர் ஸம்பவித்தால்தான் தங்களுக்கு விடிவு, விமோசனம் என்று காத்துக்கொண்டு, எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் ஏற்பட்டது அவருடைய ‘ஸம்பவம்’, அதாவது தோற்றம்.

சிவனுக்கு ஸமானமான ஒருத்தர்தான் தங்களை வதைக்க முடியும் என்று சூரபத்மாஸுரன், தாரகாஸுரன் ஆகியவர்கள் அந்த சிவனிடமே வரம் வாங்கி வைத்துக் கொண்டு விட்டார்கள். சிவனுக்கு ஸமானம் வேறே யார்? அவரே தான் அவருக்கு ஸமம். வரம் கொடுத்த அவரே வரம் வாங்கிக் கொண்டவர்களை வதம் பண்ணுவது நியாயமாகாது. அதனால்தான் இப்படி ஸாமர்த்தியமாக வரம் கேட்டு வாங்கிக் கொண்டு, அப்புறம் சத்ருபயம் என்பதே இல்லாமல் அந்த அஸுரர்கள் தேவர்களை ஹிம்ஸித்து வந்தார்கள்.

ஆலோசித்துப் பார்த்த பிறகு இதற்கு தேவர்கள் வழி கண்டு பிடித்தார்கள். ‘ஆத்மா வை புத்ர நாமாஸி’ என்ற ச்ருதி வாக்கியப்படி ஒருத்தனுக்கு ஸமதையாக இருப்பது அவனுடைய புத்ரன். இவன் வீர்யத்திலேயே அவன் உண்டாவதால் இரண்டு பேரும் ஒன்று என்று சாஸ்த்ரம். ஆகையால் தங்களையெல்லாம் அஸுரர்களிடமிருந்து ரக்ஷிப்பதற்காகத் தங்களுடைய நாயகனாக, ஸேனா நாயகனாகப் பரமேச்வரன் ஒரு புத்ரனை உண்டு பண்ணித் தந்துவிட்டால் வழி பிறந்துவிடும், விமோசனம் கிடைத்து விடும் என்று தேவர்கள் முடிவு பண்ணி, அதற்காகத் தபஸிருந்தார்கள். ஸ்வாமியும் தக்ஷிணாமூர்த்தியாகத் தபஸிருந்த ஸமயம் அது. அவருக்குப் பணிவிடை செய்ய வந்த அம்பாள் பார்வதியும் தபஸிருந்தாள். இப்படி ஒரே தபோமயமான புண்ய background-ல் குமார ஸம்பவம் ஏற்பட்டது. அதுதான் அதன் பெருமை.

குழந்தையாகப் பிறந்தோமே என்பதற்காக ஆறு நாள் – ஆறே நாள்தான் – குமாரஸ்வாமி பால லீலைகள் பண்ணினார். அவருக்கு எல்லாம் ஆறு. முகம் ஆறு. அவர் மந்திரத்தில் அக்ஷரம் ஆறு. அவர் பிறந்தது ஆறாம் திதியான ஷஷ்டி. அவருக்குப் பால் கொடுத்தது க்ருத்திகா தேவிகள் என்று ஆறு பேர். வேடிக்கையாகச் சொல்வதுண்டு – அவர் உத்பவித்த கங்கையும் ‘ஆறு’ என்று! ‘குமாரர்’ என்றே குழந்தை பேர் வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் குழந்தை விளையாட்டு ஆறே நாள்தான் செய்தார். ஆறு நாளிலியே அபரிமித லீலைகள் பண்ணினார். அப்புறம், உடனேயே, தேவ ஸேநாதிபத்யம் தாங்கி, சூராதி அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணி தேவர்களையும், ஸர்வ லோகத்தையுமே ரக்ஷித்து விட்டார்.

மனு, கினு போட்டு ‘அப்பாயின்ட்மென்ட்’ என்றில்லாமல் ஸகல தேவ ஸமூஹத்திற்கும் ரக்ஷகனாக, ‘கம்மான்டர்-இன்-சீஃப்’ ஆகப் பெரிய்ய்ய்ய்ய அப்பாயின்ட்மென்ட்டோடேயே அவர் பிறந்ததுதான் குமார ஸம்பவத்தின் விசேஷம்!

“ஸரி, ஸ்வாமிகளே! இதிலே விக்நேச்வரருக்கு என்ன ‘பார்ட்?” என்றால் …

சிவனுக்கு ஸமானமானவர் சிவஸுதனே என்றால், விக்நேச்வரர் சிவஸுதர்தானே? அப்படியிருக்க, குமாரஸ்வாமி உண்டாகணுமென்று தேவர்கள் தபஸ் பண்ணினார்கள் என்றால் அப்போது விக்நேச்வரர் தோன்றியிருக்கவில்லையா? ஸுப்ரஹ்மண்யருக்கு அப்புறந்தான் அவர் தோன்றினாரா என்றால், இல்லை. இதை ‘அன்டர்லைன்’ பண்ணிக் காட்டத்தான் ‘ஸ்கந்த பூர்வஜர்’ என்று அவருக்குப் பேர் சொல்லி இருக்கிறது.

‘ஸரி, அவர் அப்போதே இருந்தாரென்றால், அவரிருக்கும் போது இன்னொரு சிவஸுதருக்காக தேவர்கள் தபஸ் செய்வானேன்? ஸுதராயிருந்தும் அவர் அப்பாவுக்கு ஸமானமாயில்லாதவர் என்று அர்த்தமா?’

அப்படியில்லை. அவர் அப்பாவுக்கு ஸமதையானவர்தான். த்ரிபுர ஸம்ஹாரத்தின் போது அப்பாவும் தம்மைப் பூஜை பண்ணின பிறகுதான் கார்யஸித்தி பெறமுடியும் என்று காட்டியிருக்கிறாரே!*

பின்னே ஏன் இன்னொரு சிவஸுதர் ஸம்பவிக்க வேண்டுமென்று தேவர்கள் நினைத்தார்கள்?

சூரபத்மா கேட்டிருந்த வரத்தின் ஒரு நிபந்தனைதான் காரணம். தாங்கள் வரம் கேட்கிற காலத்தில் இருக்கிற எவருமே தங்களை வதம் பண்ண முடியாதபடிதான் அஸுரர்கள் ஸாமர்த்யமாக நிபந்தனை போடுவார்கள். அப்படித்தான் இவனும் பண்ணினான். தன்னைக் கொல்லக் கூடிய சிவஸத்ருசன் [சிவனுக்கொப்பானவன்] ஸ்த்ரீ ஸம்பந்தமில்லாமலே பிறந்தவனாயிருக்கணும் என்று அவன் கண்டிஷன் போட்டிருந்தான். ஸர்வ சக்தரான பிள்ளையார் தன்னை வதம் பண்ண முடியாதபடி debar பண்ணிவிட வேண்டுமென்றே இப்படி ஸாமர்த்யமாகக் கேட்டிருந்தான்! [சிரிக்கிறார்கள்.]

அவர் பல விதங்களில் பல ஆவிர்பாவங்கள் செய்திருக்கிறார். அதில் நான் சொன்ன ஒன்றின்படி அவர் புருஷ ஸம்பந்தந்தான் அடியோடு இல்லாமல் அம்பாளுடைய சரீர மஞ்சள் பொடியிலிருந்தே, அவளாலேயே வழித்தெடுக்கப்பட்டு ஸ்ருஷ்டியானதாகப் பார்த்தோம். புராணாந்தரங்களில் வேறே அவதாரக் கதைகளும் இருக்கின்றன. ஸ்வாமி, அம்பாள் இரண்டு பேரும் கைலாஸத்திலுள்ள சித்ரசாலையில் அலங்காரமாக எழுதியிருந்த ப்ரணவாக்ஷரத்தை ஒரே ஸமயத்தில் பார்த்தார்கள்; அப்போது அவர்களுடைய வீக்ஷணங்கள் [பார்வைகள்] அந்த அக்ஷரத்தில் ஒன்று சேர்ந்தன; உடனே அதிலிருந்து விக்நேச்வர ஸ்வரூபம் அவதாரம் பண்ணிற்று என்று ஒரு கதை. ஒரு ஸமயம் அம்பாள் பெண் யானை ரூபம் எடுத்துக் கொண்டிருந்தாள்; அப்போது ஸ்வாமியும் ஆண் யானையாக ரூபம் தரித்துக் கொண்டிருந்தார்; அந்த யானைகளுக்குப் பிறந்த குட்டியே கணபதி என்று இன்னொரு கதை. ஞானஸம்பந்தர் திருவாரூர் கிட்டேயுள்ள வலிவலம் என்ற க்ஷேத்ரத்தில் பாடிய தேவாரத்தில் இதை refer செய்திருக்கிறார்.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன்

‘பிடி’ என்றால் பெண் யானை. ‘களிறு’ என்றால் ஆண் யானை. சிவ சக்திகள் இப்படி யானைத் தம்பதியாக வந்ததை அப்பர் ஸ்வாமிகள் ப்ரத்யக்ஷ தர்சனமாகவே பார்த்துப் பாடி வைத்திருக்கிறார்.

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம், கண்டறி யாதன கண்டேன்

பண்டாஸுரன் மேல் லலிதாம்பாள் படையெடுத்துப் போனபோது, அவன் விக்ன யந்த்ரம் போட்டு அவளுடைய படை முன்னேற முடியாதபடி ஸ்தம்பிக்க வைத்தான்; அப்போது அவள் காமேச்வரன் என்ற பெயரில் அவளைப் போலவே தநுர்-பாண-பாச-அங்குசங்களோடு ரூபம் எடுத்துக் கொண்டிருந்த பரமசிவனுடைய முகத்தைப் பார்த்தாள்; உடனே கணபதி ஆவிர்பவித்தார் என்று இன்னொரு கதை.

இப்படியுள்ள அநேகக் கதைகளில் எல்லாவற்றிலுமே அம்பாள் ஸம்பந்தத்தோடு விக்நேச்வரர் தோன்றியதாகத் தான் இருக்கிறது. ஆகையால் சூரபத்மா போட்ட ‘கண்டிஷன்’படி அவரைக் கொண்டு அவனை வதைப்பது முடியாத கார்யமாகி விட்டது.

சிவனுக்கோ, சூராதி அஸுரர்களுக்கோ விக்நேச்வரர் சக்தியில் குறைந்தவரில்லையானாலும், அவருடைய அவதாரத்திலிருந்த அம்பாள் ஸம்பந்தத்தாலேயே அவரால் அஸுர ஸம்ஹாரம் நடப்பதற்கில்லாமலாயிற்று. அதனால் தான் தேவர்கள் இன்னொரு சிவஸுதனுக்காக ப்ரார்த்திக்க ஸ்வாமியும் அம்பாள் ஸம்பந்தமில்லாமல் தன்னுடைய நேத்ரங்களிலிருந்து வெளியேவிட்ட அக்னிப் பொறிகளிலிருந்தே குமாரஸ்வாமியை உண்டு பண்ணினார்.

இதையே இன்னொரு விதத்தில் சொன்னால், விக்நேச்வரர் இடம் ஒழித்துக் கொடுத்ததால்தான் குமாரஸ்வாமி என்று ஒருத்தர் ஸம்பவிக்கவே முடிந்தது! விக்நேச்வரருக்கே ஸர்வ சக்தியும் இருந்தும், தகப்பனார் அஸுரர்களுக்குக் கொடுத்த வரத்தின் நிபந்தனையைக் காப்பாற்ற வேண்டுமென்றே அவர் அஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்படாமலிருந்தார். அவர் அப்படிப் புறப்படாததால் தான் ஸுரஸேனைக்கு நாயகராக குமாரஸ்வாமி ஸம்பவிக்க முடிந்தது! தாம் ஸர்வ சக்தராயிருந்தும், ‘மூத்தது மோழை, இளையது காளை’ என்று பழமொழி ஏற்படும்படியாகத் தாம் ஒதுங்கியிருந்து கொண்டு, குழந்தைத்தம்பியே மஹா அஸுரர்களை ஜயித்து பெரிய கீர்த்தி பெறும்படி – ‘வெற்றிவேல், வீரவேல்’ என்று ‘அப்ளாஸ்’ வாங்கும்படி – பெருமை சேர்த்து கொடுத்தார்.

தம்மைத் தாமே பல ரூபங்களில் பிறப்பித்துக் கொள்ளும் சக்தி அவருக்குண்டு. அவர் நினைத்திருந்தால் தகப்பனாருக்குள்ளே ஆவேசித்து அவரிடமிருந்து மட்டும், அம்பாள் ஸம்பந்தமில்லாமல் வேறே ஒரு ரூபத்தில் அவதாரமெடுத்து இருக்கலாம்; தாமே தேவ ஸேநாதிபதியாகி அஸுரர்களை வதம் செய்து மஹா கீர்த்தி. பெற்றிருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமலிருந்ததாலேயே லோகத்துக்கு ஸுப்ரஹ்மண்யம் என்ற திவ்யமூர்த்தி கிடைத்தது.

பிள்ளையாருக்கு குமார ஸம்பவத்தில் நேராகப் பங்கு இல்லாவிட்டாலும், இவர் அஸுர ஸம்ஹாரம் செய்யவில்லை என்பதால்தான் அது ஏற்படவே செய்தது என்பதால் ‘நெகடிவ்’ ஸம்பந்தமிருக்கிறது. வலுவான ‘நெகடிவ்’ ஸம்பந்தம்!


* விநாயகர் சிவஸமானர் என்பதைத் தெளிவு செய்வதாகப் பரஞ்சோதி முனிவரின் ‘திருவிளையாடற் புராண’த்தில் ‘வலை வீசின படல’த்தில் பின்வரும் நிகழ்ச்சி கூறப்படுகிறது.

ஒரு சமயம் ஈசனார் தத்வோபதேசம் புரியும்போது அம்பிகை அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளாமலிருக்கிறாள். அவர் சினமுற்று அவளைக் கரையர் குலத்தில் பிறக்குமாறு சபிக்கிறார். அன்னையை அவர் சபித்ததில் சினமுற்ற விநாயகரும் முருகனும் அவருடைய கரத்திலுள்ள ஞான நூல்களைப் பறித்து எறிகின்றனர். அவர்களை உள்ளே புகவிட்ட நந்திகேச்வரரைச் சுறாமீனாகுமாறு ஈசன் சபிக்கிறார். முருகனையும் வணிகர் குலத்தில் ஊமைப் பிள்ளையாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். ஆயினும் விநாயகரொருவரை மட்டும் அவர் ஏதும் சபிக்கவில்லை. காரணம், விநாயகரைச் சபித்தால் சாபம் திரும்பி ஈசனையே பாதிக்கும் என்பதுதான் என அப் புராணம் கூறுகிறது.

இவ்விஷயத்தை ஸ்ரீசரணர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் மிக ஸந்தோஷத்துடன் கேட்டுக்கொண்டு விநாயகரைச் சபிப்பது குறித்த மூலவாசகத்தை அறிய ஆர்வம் தெரிவித்தார்கள். அடுத்த சந்திப்பில் அதனை நிவேதிக்க, அவர்கள் பேருவகை பூத்தார்கள். வாசகமாவது:

வெருவரு செலவின் வேழமுகத்தனை விதித்த சாபம்
பெருவலி தன்னைச் சாரும் பெற்றியால் சாபம் கூறான்.

(அஞ்சுதலில்லாத போக்கையுடைய யானைமுகருக்கு இடும் சாபம் பெருத்த வெலிவோடு தன்னையே, அதாவது சிவபெருமானையே, சாரும் எனும் முறைமையால் அவருக்குச் சாபமிடவில்லை.)

“விநாயக புராணம் மாதிரியான ஒரு புஸ்தகத்தில் இப்படிச் சொல்லாமல் பரமசிவனுடைய மஹிமையைச் சொல்வதற்கே ஏற்பட்ட திருவிளையாடல் புராணத்தில் சொல்லியிருப்பது ரொம்பவும் விசேஷம்” என்று ஸ்ரீசரணர்கள் அப்போது பகர்ந்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முருகனின் தமையர் என்பதன் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முருகன் திருமணத்தில் மூத்தவர் பங்கு
Next