அண்ணாவைக் கூறி அன்றாடம் தொடங்குவோம் ! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பிள்ளையார் என்றவுடன் சிவ-சக்திகளின் பிள்ளை என்பது நினைவு வந்துவிடும். ஸ்கந்த பூர்வஜர் என்று ஷோடச நாமாவை முடிக்கிறபோது மற்ற பிள்ளையின் நினைவும் வந்து சிவ குடும்பம் முழுவதும் நிறைவு பெற்று விடுகிறது. அதனால்தான் அது கடைசிப் பெயராக மங்களம் பாடி சுபமாக முடிக்கிற இடத்தில் இருக்கிறது.

நாம் எல்லோருமே பார்வதி-பரமேச்வரர்களின் குழந்தைதான். நம் எல்லோருக்கும் பூர்வஜர், தலைச்சன் பிள்ளை விக்நேச்வரர். அவருடைய அநுஜர்களில் ச்ரேஷ்டராயிருக்கப்பட்ட ஸ்கந்தமூர்த்தியின் பெயரைச் சொன்னதில் நாம் எல்லோரும் அடக்கம். நமக்கெல்லாம் ஒரு அண்ணா விக்நேச்வரர் என்ற பந்துத்வத்தோடு தினமும் காலமே எழுந்தவுடன், கார்யங்களை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவருடைய ஷோடச நாமாக்களைச் சொல்லி, “ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே” என்றிப்படி எல்லாப் பணிகளையும் நிர்விக்னமாக நிறைவேற்றி எல்லோரும் ச்ரேயஸை அடைவோம்.

ஸுமுகச்-சைகதந்தச்ச கபிலோ கஜகர்கண: |

லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||

தூமகேதுர் – கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந: |

வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

ஷோடசைதாநி நாமாநி ய: படேச் – ச்ருணுயாதபி |

வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ||

ஸங்க்ராமே ஸர்வகார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே ||

எல்லோரும் இந்தப் பதினாறு பேர்களைச் சொல்லி பதினாறு பேறுகளையும் அடைய வேண்டியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ்கந்த நாமச் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உபதேசிகராகிய தேசிகர்   வாழ்க்கையில் வழியும் திசையும்
Next