ஆசாரிய தர்மம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சிஷ்யனுக்குப் புரிகிறமட்டும் திரும்பத் திரும்ப உபதேசிக்க வேண்டியது ஆசார்ய தர்மம் என்று ஆசார்யாள் அபிப்ராயப் பட்டிருப்பதை கீதா பாஷ்ய முடிவிலேயும் தெரிவித்திருக்கிறார்.1 கீதை உபதேசம் முடிந்த பிற்பாடு பகவான் அர்ஜுனனிடம், “நான் சொன்னதையெல்லாம் மனஸு குவிந்து ஸரியாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று விசாரிக்கிறார். ஏன் அப்படிக் கேட்டாரென்று ஆசார்யாள் பாஷ்யம் பண்ணுமிடத்தில், “தாம் சொன்னதை சிஷ்யன் பிடித்துக் கொண்டானா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காகவே பகவான் இப்படிக் கேட்பது. ‘அப்படி இவன் பிடித்துக் கொள்ளவில்லையானால் நாம் மறுபடி வேறேதாவது உபாயம் பண்ணியாவது பிடித்துக் கொள்ளப் பண்ணணும்’ என்ற அபிப்ராயத்தில் தான் கேட்கிறார்” என்று சொல்லி, அதற்கு மேலும் “சிஷ்யன் உபதேச லக்ஷ்யத்தைப் புரிந்து கொண்ட க்ருதார்த்தனாக ஆவதற்குப் பல விதங்களில் முயற்சி பண்ண வேண்டியது ஆசார்ய தர்மம்” 2 என்று சொல்லியிருக்கிறார். ஆசார்யாள் ஹ்ருதயத்தை அநுஸரித்தே அவருடைய பாஷ்யங்களுக்கு “டீகை” என்னும் விளக்கவுரை எழுதியவர் ஆனந்தகிரி. அவர் இங்கே, புத்தி மந்தத்தினால் உபதேசத்தை ஸரியாகப் பிடித்துக் கொள்ள முடியாத சிஷ்யனையும் ஆசார்யன் அலக்ஷ்யம் பண்ணிவிடாமல் விஷயத்தை நன்றாக எடுத்துச் சொல்லணும் என்பதே தாத்பர்யம் என்று காட்டியிருக்கிறார்.

தாயார் எப்படிச் சாப்பாடு இறங்காத குழந்தைக்கு விளையாட்டு கிளையாட்டு காட்டி எப்படியாவது உள்ளே ஆஹாரத்தைப் போட்டுவிடுகிறாளோ அப்படி உபதேசம் இறங்காத சிஷ்யனுக்கும் குருவானவர் எப்பாடு பட்டாவது உள்ளே இறக்குகிறாரென்றால் அவருடைய அபார கருணை தெரிகிறது. அம்மா போடும் சாப்பாடு அந்த வேளைக்குத்தான் ப்ரயோஜனமாவது. அடுத்த வேளை மறுபடி பசி வந்துவிடுகிறது, பலம் குறைகிறது. குரு செய்யும் உபதேசமோ அம்ருதமாக, சாச்வதமான ஆத்ம புஷ்டியைக் கொடுத்து விடுகிறது.

அம்மாவின் சாப்பாட்டை விட சாச்வதமானது, அப்பாவின் ஸொத்தைவிட சாச்வதமானது குரு கொடுக்கும் உபதேசம்தான்.


1 xviii 72 பாஷ்யத்திற்குப் பீடிகையாகக் கூறுவதில்.

2 “யத்னாந்தரம் ஆஸ்தாய சிஷ்ய: க்ருதார்த்த: கர்த்தவ்ய இதி ஆசார்ய தர்ம:…”

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அன்னை தந்தைக்கும் மேல் ஆசானே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அன்னை-தந்தையர் பெருமை
Next