ஈச்வராநுக்ரஹத்தினால் மோக்ஷம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமலிருந்தால் ஈச்வராநுக்ரஹம் ஏற்பட்டு, இந்த ஜன்மாவிலில்லாவிட்டலும் இனிமேலே வரபோகிற ஒரு ஜன்மாவிலாவது இந்த மஹா பெரிய லக்ஷ்யமான, மஹா பெரிய ஆனந்தமான ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் – தான் ப்ரஹ்மமே என்று தெரிந்து கொண்டு அப்படியே இருக்கிற சாச்வதமான நிலை ஸித்திக்கும்.

இப்போது ஈச்வராநுக்ரஹம் என்று சொன்னேனே அந்த ஈச்வரன் யார் என்றால் : ஜீவ-ஜகத்துகள் மாயையின் ‘ஷோ’வாகவே இருந்தாலும், அந்த ‘ஷோ’வில் எத்தனை ஒழுங்குகள் இருக்கின்றன? தாறுமாறான பைத்தியக்காரக் கூத்தாக இல்லாமல் அது அழகான நாடகமாக அல்லவா இருக்கிறது? அதில் ஒரு அல்ப அம்சமேயான இந்த மநுஷ்ய மனஸ் வேண்டுமானால் பைத்தியமாகக் கூத்தாடுகிறதேயொழிய, மற்றபடி எத்தனையோ பெரிய ஸூர்ய-சந்த்ர-நக்ஷத்ர-க்ரஹ ஸஞ்சாரங்களிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய அணுவுக்குள் பரமாணுவின் ஸஞ்சாரம் வரை எல்லாம் எத்தனை ஒழுங்காக நடக்கின்றன? இந்த மனஸையுங்கூட நிறுத்திவிட்ட மஹா பெரியவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடமிருந்து அப்படி நிறுத்தி வைப்பதற்கு வழியாக எத்தனை ஒழுங்குமுறைகள் தர்மம், தர்மம் என்ற பெயரில் வந்திருக்கிறது? இன்னும், இன்ன காரணத்துக்கு இன்ன விளைவு என்ற ஒழுங்கு தப்பாமல் எத்தனையோ கோடி ஸமாசாரங்கள் ஒன்றுக்கொன்று கைகொடுத்துப் பின்னிக் கொண்டு போவதால்தானே இந்த ப்ரபஞ்ச வாழ்க்கை ஒரு சீரில் ஏற்பட்டு, யுகாந்தரமாகத் தடம் புரளாமல் நடந்து கொண்டு போகிறது? இதையெல்லாம் கவனித்தோமானால் பரமார்த்த தசையில், அதாவது தத்வ த்ருஷ்டியில், ஜீவ ப்ரஹ்ம பேதமில்லை என்று பார்க்கும்போது ஜீவ-ஜகத்துக்கள் மாயை என்றாலும், நடைமுறையாகத் தெரியும் வ்யவஹார தசையில் பார்த்தோமானால், இதுகளையும் திறம்படத் திட்டம் போட்டு நடத்தி வரும் ஒரு மஹா பெரிய புத்தி, மஹா பெரிய சக்தி இருப்பதாகத் தெரியும். அதைத்தான் ஈச்வரன் என்பது.

ப்ரஹ்மந்தான் மாயையோடு கூடி (கூடி என்றால் அஸலே கூடி இல்லை; அது எதனோடும் கூட்டுச் சேர முடியாத தனித் தத்வம்; ஆனாலும் மாயையோடு கூடின மாதிரி இருந்து கொண்டு) ஜீவ-ஜகத்துக்களை ஆக்கி நிர்வாஹம் பண்ணும் ஈச்வரனாக இருக்கிறது. அவனுடைய ஆதீனத்தில் தான் ஜீவலோகம் பூராவும் இருப்பது. ஆகையால் நமக்கு மாயை விலகி, நாம் அவனுடைய ஆதீனத்திலிருந்து விடுபட்டு அவனுக்கும் ஆத்மாவாகவுள்ள ப்ரஹ்மமாக நம்மைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அவனுடைய அநுமதி இல்லாமல் முடியாது. அதாவது ஈச்வராநுக்ரஹத்தால்தான் மனஸ் நின்றுபோய், ஒரு வழியாகத் தொலைந்துபோய், ஸாக்ஷாத்காரம் ஏற்படணும்.

மாயா லோகத்தில் ஸகல கர்மாவுக்கும் பலனைத் தருபவன் ஈச்வரன்தான். இதிலே இன்ன காரியத்திற்கு இன்ன விளைவு என்று எத்தனையோ கோடி விதிகள் அவன் போட்டபடிதானே நடக்கின்றன? அப்படி நாம் பண்ணும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவாகக் கிடைக்கும் கர்ம பலனும் அவன் கொடுத்துத்தான் கிடைக்கிறது. கர்மா பண்ணுவதும், அதற்குப் பலன் அநுபவிப்பதும்தான் திரும்பத் திரும்ப ஜன்மங்களைக் கொடுத்து நம்மை ஸம்ஸார சக்கரத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கச் செய்வது. கர்மா நின்று போனால்தான் கார்யமேயில்லாத ப்ரஹ்மமாக இருக்க முடியும். கர்மாவில் ஜீவனைத் தூண்டிவிடுவது மனஸ்தான். மனஸின் விருப்பங்களின்படி, ஏவலின்படிதான் நாம் எந்தக் கார்யமும் செய்வது. ஆகையால் மனஸ் நின்றாலே கர்மா நிற்கும். மனஸோ தன்னால் நிற்கவே மாட்டேனென்கிறது. ஒரு வஸ்து எப்படி தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும்? துப்பாக்கி எப்படி தன்னைத்தானே எப்படி ஷூட் பண்ணிக் கொள்ளும்? ஆகவே மனஸ் செய்யக்கூடியது, தான் அழிய மாட்டோமா, மாட்டோமா என்ற தீவிரமான தாபத்தோடுகூட, தான் அழிந்த பிறகு உண்டாகிற ஜீவ-ப்ரஹ்ம அபேத நிலையைப் பற்றி ஸதாவும் நினைத்துக் கொண்டிருப்பதுதான். இதற்குப்பேர் ‘நிதித்யாஸனம்’ என்பது. விடா முயற்சியோடு இதைப் பண்ண வேண்டும். ‘அத்வைத ஸாதனை’ என்பதன் ‘ஜிஸ்ட்’ — ஸாராம்சம் — இப்படி விடா முயற்சியோடு நினைப்பதுதான். இதுவும் ஒரு கார்யந்தான். நடப்பது காலின் கார்யம், தின்பது வாயின் கார்யம் என்கிற மாதிரி, நினைப்பது மனஸின் கார்யம்.

எல்லாக் கார்யங்களையும் கவனித்துப் பலன் தருபவன் ஈச்வரன்தான் என்று சொன்னேனல்லவா? அவன் இந்த நிதித்யாஸனமாகிய நினைப்புக் கார்யத்தையும் கவனித்துக் கொண்டேயிருப்பான். விடாமல் அதை நாம் தொடர்ந்து கொண்டே போனால், ‘தன்னுடைய பழைய கர்மா பாக்கி முழுவதையும் தீர்த்துக் கட்டி விடுகிற அளவுக்கு இவன் இந்த நிதித்யாஸன கர்மாவைப் பண்ணி விட்டான்’ என்று அவன் தீர்ப்புப் பண்ணி, நம்முடைய தனி மனஸை — நாம் ப்ரஹ்மத்திற்கு வேறான ஜீவன் என்று நம்மை தனிப்படுத்திக் காட்டும் மனஸை — இல்லாமல் போய்விடும்படியாக அநுக்ரஹம் பண்ணுவான்.

இதைத்தான் ஈச்வராநுக்ரஹம் ஏற்பட்டு ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கும் என்று சொன்னது. நம்முடைய ஜன்மாந்த்ர கர்மா எல்லாம் தீர்கிற அளவுக்கு கணக்குத் தப்பாமல் நாம் ஸாதனை பண்ணினால்தான் அநுக்ரஹிப்பான். என்றில்லை. அப்படி துல்லியமாகக் கணக்குப் பார்த்துத்தான் அநுக்ரஹிப்பது என்றால் அதற்கு அநுக்ரஹம் என்றே பேர் சொல்லப்படாது! மெகானிகலாக கணக்கு ஸரி பார்த்து ஒரு வியாபாரி அல்லது அக்கவுன்டன்ட் பண்ணுகிற மாதிரிச் செய்வதற்கு அநுக்ரஹம் என்ற பேர் ஸரியில்லை. ப்ரேமை, கருணை, மன்னிக்கிறது, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் போனால் போகிறதென்று தூக்கிப் போடுகிற தாக்ஷிண்யம் இதெல்லாம் சேர்ந்திருப்பதுதான் அநுக்ரஹம்.

அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘அநு’ என்பது ‘அநுஸரித்து’, அதாவது ‘தொடர்ந்து’ போவது என்று அர்த்தம் கொடுக்கும். ‘க்ரஹம்’ என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈச்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈச்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் ‘அநுக்ரஹம்’! அவனைப் பிடிப்பதில் ஒரு குறியாக இல்லாமல் இந்த மனஸ் மறுபடி எங்கேயாவது ஓடும். ஆனாலும் அவன் அதைத் தொடர்ந்து, அதாவது துரத்திக் கொண்டே வந்து பிடித்து, அது தன்னைப் பிடிக்கும்படிப் பண்ணுவதுதான் ‘அநுக்ரஹம்’. தன்னை என்றால் மாயையோடு கூடிய நிலையிலுள்ள ஈச்வரனையுந்தான்; மாயா ஸம்பந்தமில்லாத ப்ரஹ்மத்தையுந்தான். ஏனென்றால், நம் மாதிரி ஈச்வரனும் மாயா ஸம்பந்தமுள்ளவன்தான் என்றாலும் நாம் மாயைக்கு அடிமைப்பட்டு மதியிழந்து ஆத்மஸ்வரூபத்தை மறந்திருப்பது போல இல்லாமல் அவன் மாயையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, இத்தனை மாயா கார்யம் பண்ணுகிற போதிலும் பூர்ணமான ப்ரஹ்மாநுபவத்துடன் இருப்பவன். ஆகையால் அவனை மாயா ஸஹித ஈச்வரனாகவே நாம் பிடித்தாலும் அவன் மாயா ரஹித ப்ரஹ்மமாக நம்மைத் தன்னோடு ஐக்யம் பண்ணிக் கொள்வான்.

மாறி மாறி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் ‘ரன்னிங் ரேஸ்’ எப்படி நடக்கிறதென்றால்: இவன் [ஜீவன்] அவனைப் பிடிக்க முயற்சி பண்ணுகிறபோது அவன், ‘ஏகப்பட்ட கர்மா பாக்கி உள்ள இவனுக்கு நாம் அத்தனை ஸுலபத்தில் எல்லா ஸம்பத்துக்களுக்கும் மேற்பட்ட ஸாக்ஷாத்காரதைக் கொடுத்தால் தர்ம நியாயமே இல்லை’ என்று பிடிபடாமல் ஓடுவது; அதனால் ஜீவ மனஸு, “அவன்தான் பிடிபடலையே!” என்று அலுத்துப் போய் தனக்குப் பிடிபடுகிற கண்ட கண்ட விஷயங்களில் ஓடுவது; அப்போது ஈச்வரன் கருணையோடு அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்து பிடித்துத் தன்னை அவன் பிடித்துக் கொள்ளும்படி பண்ணுவது; ஆனாலும் இதை ஒரே வீச்சில் ரொம்ப ‘லீனியன்டா’கச் செய்வது கர்ம தர்மத்திற்கு ஏற்றதில்லை என்பதால், தான் தொடருவதையும் பிடித்துக் கொள்வதையும் ஜீவன் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அத்தனை ஸூக்ஷ்மமாகச் செய்து மனஸை அப்பப்போ ஆத்ம விஷயத்தில் ஈடுபடும்படி (அது தான் அவனைப் பிடித்துக் கொள்வது — ஆனாலும் ரொம்ப லேசாகத் தொடுவது; அப்படிச்) செய்வது; லேசான பிடிப்பை ஜீவன் இறுக்கப் பண்ணிக் கொண்டு அதற்கான காலம் வருவதற்கு முன்னாடியே விடுபட்டுவிடாமல் ஸமயத்திலே அவனிடமிருந்து நழுவி விடுவது; ஜீவன் மனஸைத் தறிகெட விடுவது; அப்புறம், ‘அதற்குள்ளே இவன் அம்ருதத்திலே முழுகக் கூடாது என்று நாம் விலகிக் கொண்டால், இவனானால் ஜலத்திலேகூட முழுகாமல் சாக்கடையில் போய் விழுகிறானே!’ என்று ஈச்வரன் பரிதாபப்பட்டு மறுபடி கொஞ்சம் பிடிபடுவது — என்றிப்படி இழுத்தடிக்க வேண்டிய மட்டும் இழுத்தடித்து விட்டு, கால க்ரமேண ஜீவன் நன்றாகவே மனஸ் முழுதையும் லக்ஷ்யத்தில் முழுக்கும்படிப் பண்ணி அப்போது ஈச்வரன் ஒரே துரத்தாகத் துரத்தி ஒரே பிடியாகப் பிடித்து, அதாவது ‘அநுக்ரஹம்’ என்பதைப் பூர்ணமாகச் செய்து ஸாக்ஷாத்காரத்தில் சேர்ப்பது என்று நடக்கிறது.

கர்ம பல தாதா என்பவன் ஒரு நியாயாதிபதியின் கார்யத்தைச் செய்வதால் ரொம்பக் கண்டிப்புடனேயே கணக்குப்படி பலன் தரவும் உரிமை பெற்றவன். அவன் அப்படிச் செய்தால் நியாயமில்லை என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனாலும் பரம கருணையோடு அவன் கர்ம பலனை எவ்வளவோ குறைத்து ‘கன்டோன்’ பண்ணியே அநுக்ரஹம் செய்கிறான். ஒரே ஸ்டிரிக்டாக இல்லை என்பதற்காக ஒரே லீனியன்டாகவுமில்லை. உச்சத்திலெல்லாம் உச்சமான ஒரு நிலையை சாச்வதமாகக் கொடுக்கும்போது ரொம்பவும் தகுதியே பார்க்காமல் பண்ணினால் ஸரியில்லைதானே? பத்து வருஷம் ஜெயில் தண்டனை பெற வேண்டியவனுக்கு ஒரு வருஷம், இரண்டு வருஷம், மிஞ்சினால் ஐந்து வருஷம் வரை குறைத்து சிக்ஷைக் காலத்தை பாதியளவு வரை பண்ணுவதை வேண்டுமானால் “Justice tempered by mercy” [கருணையால் கனிவிக்கப்பட்ட நீதி] என்று சொல்லலாம். அதற்கும் ஜாஸ்தி குறைத்தால் ‘நீதி நியாயமே கிடையாதா?’ என்று தானே கேட்கத் தோன்றுகிறது? இங்கேயோ தண்டித்து — கர்மா என்ற குற்றத்தைத் தண்டித்து — தீர்ப்பதோடு விஷயம் முடியவில்லை. கர்ம நாசம், மனோ நாசம் (கர்மத்திற்கு காரணமான மனஸின் நாசம்) இவைகளோடு கதை முடியாமல், ரொம்பப் பெரிய வெகுமதியாக ஸாக்ஷாத்காரம் என்பது வேறு கிடைக்கிறது என்னும் போது, ஒரு அளவுக்குத்தான் ஈச்வரன் மன்னிக்க முடியும் என்று தெளிவாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is எளிதாகத் தோன்றினாலும் கடினமானது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  காலம் செல்வதாயினும் முயற்சி தொடங்க வேண்டியதே
Next