ஸமாதானம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ச்ரத்தை’க்கு அப்புறம் ‘ஸமாதானம்’ என்பதைச் சொல்லியிருக்கிறார். ‘சமாதி ஷட்க ஸம்பத்தி’ என்று ஆறு சொன்னதில் இது ஆறாவது. ‘ஸமாதானம்’, ‘ஸமாதி’ என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தமுள்ளவை. ‘சமாதி’ [சமம் முதலான] ஆறு ஆத்மிக ஸம்பத்துக்கள் ‘ஸமாதி’யில் முடிகின்றன! ஆனாலும் –

ஸமாதி என்பதே கடைசியான லக்ஷ்ய ஸ்தானம். லக்ஷ்யமான ப்ரம்மத்தில் அப்படியே ஒன்றிப் போயிருக்கிற நிலையே ஸமாதி. ஆகையால் அது ‘ஸாதனை’ என்று ஒருவன் பண்ணுவதற்குள் வரும் விஷயமில்லை. ஸாதனையின் முடிவில் பெறும் ஸித்தி நிலையே அது. ஆனபடியால் அதை ஆசார்யாள் ஞான மார்க்கத்தின் இரண்டாவது ஸ்டேஜான ஸாதன சதுஷ்டயத்திலும் சொல்லவில்லை; அதற்கப்புறம் மூன்றாம் ஸ்டேஜில் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு செய்ய வேண்டியவற்றிலும் ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம் என்று சொல்லும் அப்யாஸங்களோடு இதையும் இன்னொன்றாகச் சொல்லவில்லை. இத்தனை ஸாதனையும் பண்ணிய பலன் அது. அங்கே, அந்த ஸமாதி நிலையில் அதை ஒருத்தன் அப்படியே அநுபவித்துக் கொண்டிருப்பானே தவிர ஸ்வய முயற்சியாக ஸாதனை என்று எதையும் பண்ண மாட்டான்; பண்ண முடியாது; பண்ண வேண்டிய அவச்யமுமில்லை! அதனால் ‘ஸமாதி’ என்பதை ஆசார்யாள் ஸாதனா க்ரமத்தில் அங்கமாகச் சொல்லவில்லை. ஆனாலும் –

ச்ரத்தையில் இரண்டு ‘க்ரேட்’ (grade), பக்தியில் இரண்டு ‘க்ரேட்’ என்கிறாற்போலவே, இப்போது நான் சொன்ன ஸமாதி ஹையர் க்ரேடாகவும், அதே போன்ற இன்னொன்று லோயர் க்ரேடாகவும் இருக்கின்றன. இந்த லோயர் க்ரேடைத்தான் சமாதி ஷட்க ஸம்பத்தியில் கடைசியானதான ‘ஸமாதானம்’ என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். ‘ஸமாதி’ என்றால் லக்ஷ்யத்திலேயே சொக்கிச் சொருகி ஒன்றாகப் போய்விடுவதைத்தான் பொதுவாக நினைப்பார்களாதலால் வித்யாஸம் தெரியும் படியாக இங்கே ‘ஸமாதானம்’ என்று பேர் கொடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ப்ருஹதாரண்யகத்தில் யாஜ்ஞவல்க்ய மஹர்ஷி சொன்ன ஐந்து சமாசாரங்களோடு ச்ரத்தை என்பதையும் சேர்த்து ஆசார்யாள் ஆறு ஸம்பத்துக்களாக வைத்தாரென்று சொன்னேனல்லவா? யாஜ்ஞவல்க்யர் அந்த ஸமாசாரங்களை லக்ஷணமாகக் கொண்ட ஆஸாமியை ‘சாந்தன், தாந்தன், உபரதன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறார். ஆசார்யாள் அந்த ஆஸாமிக்கு லக்ஷணமாக இருக்கும் ஸமாசாரங்களை ‘சமம், தமம், உபரதி’ என்றெல்லாம் ஸாதனாங்கமாகச் சொல்லியிருக்கிறார். யாஜ்ஞ்யவல்க்யர் கடைசியாக அந்த ஆஸாமியை ‘ஸமாஹிதன்’ என்கிறார். அவன் எந்த லக்ஷணத்தால் ஸமாஹிதனாகிறோனே அந்த ஸமாசாரத்தைத்தான் ஆசார்யாள் ‘ஸமாதானம்’ என்கிறார். ஸம+ஆஹித = ஸமாஹித. ஸம+ஆதான= ஸமாதான. ‘ஆஹித’, ‘ஆதான’ என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தந்தான் – ‘ஒரு இடத்தில் சேர்த்து வைப்பது; நிலையாக, உறுதியாக வைப்பது’ என்பதே இரண்டிற்கும் அர்த்தம்.

‘ஆஹிதாக்னி’ என்று கேள்விப்பட்டிருக்கலாம். ‘ஆஹிதாக்னி வம்சம்’ என்று தங்களைப் பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்களுண்டு. அக்னியைக் காலம் தப்பாமல் குண்டத்தில் சேர்த்து வைத்து தன்னுடைய க்ருஹத்தில் அதனுடைய ஸாந்நித்யத்தை நிலையாக உறுதிப் படுத்திக் கொண்டவர்தான் ‘ஆஹிதாக்னி’. ப்ரஹ்மசாரி தினமும் செய்யும் அக்னி கார்யத்திற்கு ‘ஸமிதாதானம்’ என்று பேர் சொல்கிறோம். ஸமித்+ஆதானம் தான் ‘ஸமிதாதானம்’. அவன் ஸமித்தை [சுள்ளியை] அக்னியில் சேர்த்து வைக்கிறான். சேர்த்து வைப்பது, ஒன்றில் கொண்டு போய் வைப்பது ‘ஆதானம்’.

‘ஸமாதானம்’ என்பதை அப்யாஸம் பண்ணுவதால் ‘ஸமாஹிதன்’ எனப்படுபவன் எதை எங்கே சேர்த்து வைத்து நிலைப்படுத்துகிறான்? ‘ஸம ஆதானம்’ தான் ஸமாதானம். அது என்ன ‘ஸம ஆதானம்?’ .

‘ஸமம்’ என்றால் ‘ஈக்வல்’, ஏற்ற இறக்கங்கள் இல்லாமலிருப்பது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். வேறே பல அர்த்தங்களும் உண்டு. முழுசானதாக, பரிபூர்ணமாக இருப்பதற்கும் ‘ஸமம்’ என்றே பேர்.

‘ஸமாதானம்’ என்னும்போது ஒருத்தனுடைய சித்தத்தைப் பரிபூர்ணமாக ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது என்று அர்த்தம். கொஞ்சங்கூட அது அந்தண்டை, இந்தண்டை ஓடாமல் சேர்த்து வைக்கணும். ஒரே ஸமயத்தில் சித்தம் பல தினுஸாகக் கவடு விட்டுக் கொண்டு பலவற்றை நினைக்கிறதல்லவா? அப்படி விடாமல் ஒருமுகப்படுத்தி நிலையாக உறுதி கொள்ளும்படி செய்யவேண்டும். அதுதான் ‘ஸம ஆதானம்’, ‘ஸமாதானம்’. அப்படிச் சித்தத்தை நன்றாகச் சேர்த்துத் திரட்டி ஒன்றிலேயே திரட்டி நிலைப்படுத்தியிருப்பவன்தான் ‘ஸம ஆஹித’னான ‘ஸமாஹிதன்’.

இப்படிச் செய்து கொள்வதாலேயே அவனுக்கு ஏற்ற இறக்கக் கொந்தளிப்பு-ஜாட்யங்கள் இல்லாமல் ஒரே சீரான ‘ஸம’ நிலையம் நன்றாய் வந்துவிடும்; ஸமத்வ நிலையில் தன்னை ஆதானம் செய்துகொண்டவனாகவும் ஆகிவிடுவான். சித்தம் முழுதையும் ஒன்றிலேயே திரட்டி நிலைப்படுத்தும் ஸமாதானத்தினால், சாந்தி என்ற அர்த்தத்தில் சொல்லும் கொந்தளிப்பில்லாத ஸமாதானமும் ஏற்பட்டுவிடும்.

ஒன்றிலேயே நிலைப்படுத்துவது என்றால் அந்த ஒன்று என்ன? சித்தம் நானா திசையிலும் ஓடாமல் சேர்த்துப் பிடித்து ஏதோ ஒன்றிலேயே வைக்கப்பட வேண்டுமென்றால் அந்த ஒன்று என்ன?

“சுத்தே ப்ரஹ்மணி”

“பரிசுத்தமான கலப்பில்லாத பிரம்மத்தில்”

ப்ரம்மத்திலேயே ஸதா ஸர்வதா சித்தத்தைப் பூர்ணமாக நிலை நாட்டுவதுதான் ஸமாதானம். ‘ “ஸம்யக் ஆஸ்தாபனம் புத்தே: சுத்தே ப்ரஹ்மணி ஸர்வதா| தத் ஸமாதானம் இத்யுக்தம்” என்று இப்படித்தான் ஆசார்யாள் டிஃபைன் பண்ணியிருக்கிறார்.1

‘ஸம்யக்’ என்றால் ‘கரெக்டாக’ என்றும் ‘பூர்ணமாக’ என்றும் இரண்டு அர்த்தம். இங்கே இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘ஆஸ்தாபனம்’ என்றால் ஸ்தாபிப்பது தான்; அதாவது நிலைநாட்டுவது. ‘புத்தியை அப்படி எக்காலமும் (“ஸர்வதா”) சுத்தமான ப்ரம்மத்தில் பூர்ணமாகவும், வெகு ஸரியாகவும் (“ஸம்யக்”) நிலை நாட்டுவதாக எது ஒன்று உண்டோ அதுதான் (“தத்”) ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது’. ‘இத்யுக்தம்’- இதி உக்தம்’ என்று சொல்லப்படுகிறது”.

மாயை கலக்காதது ப்ரஹ்மம் ஒன்றுதான். ஸர்வ லோகத்திற்கும் ஆதாரமாக வைத்து சொல்லும்போது எந்த தத்வத்தை ப்ரம்மம் என்கிறோமோ அதையே ஒரு ஜீவனுக்கு ஆதாரமாகச் சொல்லும்போது ஆத்மா என்பது. ஆத்மாவாகிய அந்த ப்ரம்மம் ஒன்றுதான் மாயையின் கலப்பற்றது. அதனால்தான் அதை ‘சுத்தமான ப்ரம்மம்’ -“சுத்தே ப்ரஹ்மணி” – என்று சொன்னது. மாயை கொஞ்சம் கலந்து விட்டால்கூட கலப்படமாகிவிடும். ஈச்வரன்கூட அப்படி மாயைக் கலப்புள்ளவன்தான்! நன்றாகவே மாயை கலந்துவிட்ட லோகத்தை நிர்வாஹம் பண்ணுகிறவன் மாயா ஸஹிதனான அந்த ஈச்வரன். ப்ரஹ்மம் நிர்வாஹம், கிர்வாஹம் எதுவும் பண்ணுவதில்லை. லோக ஸமாசாரமே அதற்குத் தெரியாது. அதுதான் லோகாதாரம் (லோகத்திற்கு ஆதாரம்) என்றாலும், மாயை அதிலிருந்து லோகக் காட்சியை உண்டு பண்ணிற்றே தவிர, அதற்கு லோகத்தோடு ஸம்பந்தமில்லை.

அரையிருட்டு ஒரு கயிற்றைப் பாம்பு மாதிரி காட்டுகிறதென்றால், அதாவது அரையிருட்டு ஒரு கயிற்றின் ஆதாரத்திலிருந்தே பாம்புக் காட்சியை உண்டு பண்ணுகிறதென்றால், அதனால் கயிற்றுக்கு வாஸ்தவமாகப் பாம்பு ஸம்பந்தமுண்டா என்ன? அது கலப்படமில்லாத கயிறாகவேதானே இருக்கிறது?

அப்படிக் கலப்பில்லாத ஸ்வச்சமான தத்வமாயிருப்பதால் ‘சுத்த ப்ரம்மம்’ என்றது.

ஸகுண மூர்த்தியாகவுள்ள ஈச்வரனைப் பற்றியில்லாமல், நிர்குணமான ப்ரம்மத்தைப் பற்றியே சித்தத்தை ஒருமுகப் படுத்துவதைத்தான் ‘ஸமாதானம்’ என்பது.

பண்ணுவது ஆத்ம ஸாதனை. நிர்குணமான ஆத்ம தத்வமாக, ப்ரம்ம தத்வமாக இருப்பதை அநுபவத்தில் ஸாகக்ஷாத்கரிப்பதற்கே ஸாதனை. அதனால் மாயா ஸஹிதனான ஈச்வரனை இல்லாமல், மாயாதீதமான ப்ரம்மத்தில்தானே சித்தத்தைச் சிதறாமல் வைக்க வேண்டும்?

ஈச்வரன் என்றால் எல்லா தெய்வ மூர்த்திகளுந்தான். ஆரம்பத்தில் அப்படி ஒரு மூர்த்தியை உபாஸித்துத்தான் சித்தம் ஒரே வஸ்துவில் நிற்கப் பழகி கொண்டது. அது முதல் ஸ்டேஜில். இப்போது இரண்டாம் ஸ்டேஜில் அமூர்த்தமான ப்ரம்மத்தைக் குறித்தே சித்தத்தை ஆதானம் பண்ண வேண்டும்.

அவ்வப்போது [ஸகுணமான] ஈச்வரன் நினைவு வராமல் போகாது. [அப்படி] வந்தாலும் அவனை மாயா லோக நிர்வாஹகன் என்று நினைக்காமல் ‘மாயையிலிருந்து ஞானத்துக்குப் போக வேண்டும் என்ற அறிவை நமக்குக் கொடுத்த ‘அநுக்ரஹ ஸ்வரூபம்’ (grace) என்று மாத்திரமே நினைத்து, ‘அவனே நிர்குணத்தில் சேர்க்கும் ஞான வழியைக் காட்டும்போது நாம் ஸகுணமான அவனை இதற்கு மேல் பிடித்துக் கொண்டு தொங்கப்படாது’ என்ற தீர்மானத்துடன் ஆத்ம தத்வத்திலேயே சித்தத்தைத் திருப்பணும். ‘நம்முடைய ஆத்மாவாக இருப்பதும் அவன்தானே? ஆகையால் ஆத்மாவைப் பிடித்துக் கொள்வதாலேயே அவனைப் பிடித்துக் கொள்வதாக – அதாவது பக்தி பண்ணுவதாக – இருக்கட்டும்’ என்று நிர்குண ஸாதனையிலேயே சித்தத்தைத் திருப்ப வேண்டும். ஸகுண ப்ரம்ம நினைவு வந்தாலும் அவனை நிர்குண ப்ரம்மத்திலே கரைத்து – அவனுக்கும் அடி ரூபம் அதுதானே என்று கரைத்து – சுத்த ப்ரம்மத்திலேயே சித்தத்தைச் சேர்க்கணும்.

‘சித்தம்’, ‘சித்தம்’ என்று நான் சொல்லி வந்திருக்கிறேன். ஆசார்யாளோ ‘புத்தி’ என்று போட்டிருக்கிறார்: “ஸம்யக் ஆஸ்தாபநம் புத்தே:”. புத்தியை நன்றாகச் சேர்த்துப் பிடித்து எப்போதும் ப்ரம்மத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்கிறார்.

‘புத்தி’ என்பது ‘சித்தம்’ என்பதன் ஒரு குறிப்பிட்ட அம்சம், ‘ஆஸ்பெக்ட்’.

‘சித்’ என்பது அறிவு. அறிவு ஸம்பந்தப்பட்டதாக ஒரு ஜீவனிடம் இருக்கும் உறுப்பு ‘சித்தம்’. இது உள்ளுறுப்பு – “அந்தஃகரணம்” என்பது. இங்கே ‘அறிவு’ என்பது intellect என்பதாக புத்தியைக் கொண்டு செய்வது மட்டுமில்லை. அதுவும் இந்த அறிவில் அடக்கமேயானாலும், ‘சித்தம்’ என்பது அது மாத்திரமல்ல. மனஸில் உண்டாகும் உணர்ச்சிகளும் அதில் அடக்கந்தான். மனஸின் கார்யம், புத்தியின் கார்யம்- மனஸ் நினைப்பது, உணர்வது – புத்தி அறிவது எல்லாம் சேர்ந்தே ‘சித்தம்’ என்பது. இப்படி இரண்டுஞ் சேர்ந்ததாக அது இருப்பதால்தான் அத்வைத சாஸ்த்ரத்தில் மனஸ், புத்தி இரண்டையும் சுத்தப்படுத்தி, இரண்டையும் ஒருமுகமாக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்குச் ‘சித்த சுத்தி, சித்த ஐகாக்ரியம்’ என்பதாகவே சொல்வது.

சித்தம், மனஸ், புத்தி, அஹங்காரம் என்ற நாலு. நாலும் சேர்ந்தே அந்தஃகரணம் என்ற உள்ளுறுப்பு. நாலுக்கும் பொதுவாகவுள்ள ‘எண்ணம்’ என்பதற்குப் பிறப்பிடமாக இருப்பது சித்தம். எண்ணுவதான இந்த சித்தம் மற்ற மூன்றுடனும் சேருவதாகும். மனஸ் என்பது உணரும் கருவி. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. பலவித உணர்ச்சிகளிலும் அது போய் விழும். புத்திதான் இதில் நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப் பார்க்கிற கருவி. ‘ஜட்ஜ்மென்ட் பவர்’ அதற்குத்தான் உண்டு. அஹங்காரம் என்பது எல்லா எண்ணங்களுக்கும் முதலாவதான ‘நான்’ என்கிற பாவம். தன்னைப் பரமாத்மாவிலிருந்து பிரிந்த ஒரு தனி ஜீவனாக ‘நான்’ போட்டுக்கொண்டு நினைக்கும் எண்ணமே அஹங்காரம். அது எப்போது நசிக்கிறதோ அப்போதுதான் தனி ஜீவனாக உள்ள நிலை – ஜீவாத்மா எண்ணும் நிலை – போய் ஆத்மாவை அறிந்து பரமாத்மாவாக இருக்க முடியும். இந்த அஹங்கார நாசந்தான் ஸாதனையில் உச்சிக் கொம்பு.

இங்கே [ஸமாதானத்திற்கு லக்ஷணம் தரும்போது] ஆச்சார்யாள், சித்தம் என்பது தீர்ப்புப் பண்ணும் திறமையைப் பெற்றிருக்கும்படியான புத்தி என்பதாக இருக்கும்போது, அந்த புத்தியை ப்ரம்மத்திலேயே ஆதானம் பண்ணனும் என்று சொல்லியிருக்கிறார்.

ஸாதாரணமாக, சித்தம் என்றாலே மனஸ் என்று தான் நினைப்பது வழக்கம். அதே மாதிரி, நன்றாகப் பூர்ணமாக இழுத்துப் பிடித்து ‘ஸமாதானம்’ பண்ண வேண்டியது மனஸையே என்றுதான் பொதுவில் சொல்வது. ஸரியாக அர்த்தம் தெரியாவிட்டால்கூட நாம், “மனஸு ஸமாதானமே ஆகமாட்டேங்கிறது”, “மனஸை ஸமாதானப்படுத்திக்கோ” என்றெல்லாந்தான் சொல்கிறோம். கர்மா பண்ணும் கர்த்தா “மனஸ் ஸமாதீயதாம்”- “மனஸை ஸமமாக, அதாவது அலையாமல், அமைதியாக அடங்கிய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கர்மாவை நடத்திக் கொடுக்கும் ப்ராம்மணர்களிடம் ப்ரார்த்தனை பண்ணுவான். அதற்கு அவர்கள் ப்ரதிவசனமாக [பதிலாக] “அப்படியே இருக்கிறோம்” என்பதற்கு, “ஸமாஹித மனஸ: ஸ்ம” என்பார்கள். கர்த்தா “ஸமாதி” என்ற வார்த்தையைச் சொல்ல, பிராம்மணர்களோ அதே அர்த்தத்தில் “ஸமாஹித” என்று சொல்வதையும் கவனிக்கணும்! இங்கேயும் மனஸின் ஸமாதி அல்லது ஸமாஹித நிலை என்றே இருப்பதையும் கவனிக்கணும்.

ஏனென்றால் பொதுவாக மனஸேதான் அந்தஃகரணம் என்கிற அளவுக்கு அதற்கு முக்யம் கொடுத்துச் சொல்கிறோம். ‘மனஸை அடக்கணும்; மனமாயை அகலணும்; மன மாசு விலகணும்’ என்றிப்படி மனஸை வைத்துத்தான ஆத்யாத்மிக ஸாதனையை சொல்வது வழக்கமாயிருக்கிறது. காரணமென்ன என்றால் நானா உணர்ச்சிகளாலே ஒரு ஜீவனை நாலா பக்கமும் இழுத்து அவனுடைய அத்தனை போராட்டத்திற்கும் காரணமாயிருப்பது முக்யமாக மனஸ்தான். ‘சமம்’ என்று இந்த ஷட்கத்தில் சொல்லும்போது அதை “மனஸ் ஆத்ம லக்ஷ்யத்திலேயே அடக்கி வைக்கப்பட்டுள்ள நிலை” “ஸ்வலக்ஷ்யே நியாவஸ்தா மனஸ: சம உச்யதே” – என்றே டிஃபைன் பண்ணியிருக்கிறார்.

‘தமம்’ என்கிறதும் மனஸின் ஏஜென்டுகளேயான இந்த்ரியங்களை அடக்குவதுதான். ‘உபரதி’யும் மனஸடக்கலில் இன்னொரு அங்கந்தான். வ்ருத்திகளுக்கு வெளிப்பிடிப்பு இல்லாமல் பண்ணுவதுதான் ‘உபரதி’ என்றால் ‘வ்ருத்தி’ என்பதும் மனஸின் போக்குதான்; மனஸின் ஓட்டம்தான்.

‘திதிக்ஷை’யில் வரும் பொறுமையும் மனஸின் கார்யந்தான். ஆகையால் மனஸை ஸரிப்படுத்தும் ஸாதனைகள் தான் நாம் முன்னாலே பார்த்த எல்லாமும்.

இங்கே [ஸமாதனத்தைச் சொல்கையில்] புத்தியை நிலை நாட்டுவதைச் சொல்கிறார்.

“மனஸ் நிற்கணும், மனஸ் நிலைப்படணும், மனஸை இழுத்துப்பிடித்து ஒன்றிலேயே நிலைப்படுத்தணும்” என்றே நிறைய கேட்டிருப்பீர்கள். அதனால் புத்தியை அந்த மாதிரிப் பண்ணணுமென்று சொன்னால் வித்யாஸமாகத் தோன்றப்போகிறதே என்றுதான் எடுத்த எடுப்பில் அப்படிச் சொல்லாமல், [சிரித்து] கொஞ்சம் ஸாமர்த்யம் பண்ணி, மனஸென்றும் சொல்லாமல், புத்தியென்றும் சொல்லாமல், இரண்டிற்கும் பொதுவாகச் ‘சித்தம், சித்தம்’ என்று சொல்லிக் கொண்டு வந்தேன். அதற்கும் ஆசார்யாளே வழிகாட்டியிருப்பதாலேயே அப்படிச் சொன்னேன். ‘அபரோக்ஷுநுபூதி’யில் அவரே, “ஸத்தாகிற லக்ஷ்யத்தில் சித்தத்தை ஐகாக்ரியப்படுத்துவதுதான் ‘ஸமாதானம்’ என்று நினைக்கப்படுகிறது” என்றுதான் லக்ஷணை கொடுத்திருக்கிறார்.

சித்தைகாக்ர்யம் து ஸல்லக்ஷ்யே ஸமாதானமிதி ஸ்ம்ருதம் | 2

இத்தனை பீடிகை போட்டுவிட்டதால் ஏன் இங்கே புத்தியை ஆசார்யாள் சொல்லியிருக்கிறாரென்பதை இப்போது பார்க்கலாம்.

‘ச்ரத்தை’யை இதற்கு முந்தி சொன்னார். அங்கேயும் பொது அபிப்ராயம் ‘ச்ரத்தை என்பதில் புத்திக்குக் கார்யமில்லை; Blind faith (குருட்டு நம்பிக்கை) என்பதாலேயே அங்கே புத்தியை ஒதுக்கியாயிற்று. நம்பிக்கை மனஸின் கார்யந்தான்’ என்பதாகவே இருந்தாலும், ஆசார்யாளோ ‘புத்தி அவதாரணம்’ [புத்தியின் நிச்சயமான உறுதி]தான் ச்ரத்தை என்று சொன்னதைப் பார்த்தோம். ‘இங்கே நமக்கு வேலையில்லை’ என்று புத்தி உறுதிப் படுத்திக்கொண்டு சாஸ்திரத்தையும் குருவாக்யத்தையும் ஏற்றுக்கொள்வதையே ஆசார்யாள் சொல்கிறாரென்று அதை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிக் கொண்டோம்.

அதன் தொடர்ச்சியாகவே இப்போதும் புத்தியை ஒன்று திரட்டி ப்ரம்மத்தில் நிலைப்படுத்துவதுதான் ஸமாதானம் என்கிறார். உணர்ச்சியால் இழுபடாமல், ஸரியாக விசாரித்து உண்மை பொய்களை உள்ளபடிப் பார்க்கிற அந்தஃகரணத்தின் அங்கமான புத்தியை லோகத்திலுள்ள அநேக ஸமாசாரங்களை ஜட்ஜ் பண்ணும் கார்யங்களிலிருந்து விடுவித்து, ஒன்றுதிரட்டி அடக்கி, ப்ரம்மத்தின் விஷயமாகவே வைக்க வேண்டும். அதுதான் ஸமாதானம் என்கிறார். உணர்ச்சிதான் நானா திசையும் ஓடுகிறதென்றில்லை. அறிவுந்தான் ஒடுகிறது. ஆனால் உணர்ச்சியோட்டத்தை மட்டுமே பொதுவாக தோஷமாக நினைக்கிறோம். அறிவின் ஓட்டத்தை அப்படி நினைப்பதில்லை. ‘Pursuit of Knowledge’ என்றே அறிவு எந்த விஷயத்தைத் தேடிப் போய் சேகரம் செய்வதையும் கொண்டாடுகிறோம். “எல்லாம் தெரிஞ்சுக்கணும்; ‘களவும் கற்று மற’; ஆசார்யாளே ஸர்வஜ்ஞப் பட்டம் வாங்கினவர்” என்றெல்லாம் சொல்கிறோம். நானே இப்படி நிறையச் சொல்லித் தூண்டிக் கொடுத்துக்கூட இருக்கிறேன்! ஆனாலும் அதெல்லாம் ஆத்யாத்மிகமான ஸாதனையில் இரண்டாவது ஸ்டேஜில் அட்வான்ஸாகிறவனுக்குச் சொன்னதில்லை. அதற்கு ரொம்ப முற்பட்ட நிலையில் சொன்னதுதான். அப்போது புத்தியை நன்றாகப் பலதுறையிலும் பழக்கித் தீக்ஷண்யப் படுத்திக் கொண்டால்தான் அப்புறம் அத்யாத்ம வித்யையில் ப்ரவேசித்து அதில் முதலில் சொன்ன நித்யாநித்ய வஸ்து விவேகத்தை முறைப்படி ஸாதிக்க முடியும். இந்த வஸ்து விவேசனம் புத்தி கார்யந்தானே? ஆனால், அப்புறம் ‘ஆத்ம ஸாதகன்’ என்றே தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டவனுக்கு மற்ற எந்த ‘நாலெட்ஜு’ம் வேண்டாம். ‘ஸெல்ப் நாலெட்ஜ்’ [ஆத்மாவைப் பற்றிய அறிவு] ஒன்றுதான் வேண்டும். பாக்கி எந்த விஷயத்திலும் அவனுடைய புத்தி வாய் வைக்காமல் சுத்தமான ப்ரம்மம் ஒன்றின் விஷயத்தில் மட்டுமே அது போகும்படியாக அவன் கட்டுப்படுத்தி நிலைப் படுத்தணும்.

“யதேந்த்ரிய மநோ புத்தி” என்ற கீதையில் ரொம்பவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்3 – இந்திரியங்களையும், மனஸையும் மாத்திரமில்லாமல் புத்தியையும் கட்டுப் படுத்தணும் என்று. பல விஷயங்களில் [புத்தி] ஓடாமல் கட்டுப் படுத்தி பிரம்மத்திலேயே நிலை நாட்டணும்.

புத்தியை ப்ரம்மத்தில் நிலை நாட்டுவதை ஆசார்யாள் “ப்ரஹ்மணி புத்தே:ஸ்தாபநம்” என்கிறார். ஆனால் உபநிஷத்திலோ புத்தி சக்தியான மேதையினால் ஆத்மாவை அடைய முடியாது என்று இருக்கிறது. ஒட்டிக்கு இரட்டியாக இரண்டு உபநிஷத்துக்களில் இப்படியே “ந மேதயா” என்று அச்சடித்தாற்போலச் சொல்லியிருக்கிறது4. மனஸ், வாக்கு, புத்தி எதாலேயும் ஆத்மாவைப் பிடிக்க முடியாது என்பது ப்ரஸித்தம். பின்னே ஆசார்யாள் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்றால், இங்கே அவர் முடிவு நிலையான “ஸமாதி”யைச் சொல்லவில்லை. அதற்குக் கீழ் நிலையிலுள்ள ஒன்றைச் சொல்வதால்தான் “ஸமாதானம்” என்று பிரித்துக் காட்டியிருக்கிறாரென்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேதையாலோ, ஏராளமான வேதப் படிப்பாலோ பிடிக்க முடியாது என்று சொன்ன அந்த இரண்டு உபநிஷத்திலேயும் அப்படியானால் வேறே எப்படி அதைப் பிடிப்பது என்பதற்கும் உடனேயே பதில் இருக்கிறது. அந்த ஆத்மாவையே வரணம் பண்ணுவதுதான் அதைப் பிடிப்பதற்கு வழி என்பதே அந்த பதில். அதென்ன ‘வரணம்’ என்றால்-

‘வரன்’, ‘வரன்’ என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். பெண்ணுக்கு வரன் பார்க்கணும் என்கிறோம். ‘வரன்’ என்றால் தலை சிறந்தவன், Best என்று ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம், பல பேருக்குள்ளே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் என்பது. பல பேரில் ‘சூஸ்’ பண்ணப் பட்டவன் வரன். ‘ஸ்வயம்வரம்’ என்கிறபோது இந்த அர்த்தம் நன்றாக வெளிப்படுகிறது. பல ராஜகுமாரர்கள் கூடியிருக்கும் ஸபையில் ஒரு ராஜகுமாரி தனக்குப் பிடித்த ஒருவனை தானே சூஸ் பண்ணுவது ஸ்வயம்வரம். அப்படி வரிப்பதுதான் ‘வரணம்’. ஸரியான குருவைத் தேடிக் கண்டு பிடித்துத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச் சேருவது ‘குரு வரணம்.’ நல்ல சிஷ்யனைத் தேடி எடுப்பது ‘சிஷ்யவரணம்’.

இந்த மாதிரி பாக்கி ஸகல ஸமாசாரத்தையும் தள்ளி விட்டு ஆத்மா ஒன்றையே தேர்ந்தெடுத்து, அதையே “உன்னை நீ தெரிவிச்சுக்கோ. நீயேதான் நானாயிருந்தாலும் எனக்கு அது தெரியலை. நான்-னு நினைக்கிற இந்த புத்தி (மேதை), மனஸ், வாக்கு எதாலேயும் உன்னைத் தெரிஞ்சுக்க முடியலை. அதனாலேயே நீயே உன்னைத் தெரிவிச்சுக்கணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தால் ஒருநாள் பளீரென்று அது வெளியாகிவிடும். இவனுடைய புத்தி, மனஸ், வாக்கு எல்லாவற்றையும் இல்லாமல் பண்ணி, இவன் ஆத்ம ஸ்வரூபமாகவே ஸ்வாநுபூதி பெறும்படிப் பண்ணிவிடும்.

இவன் ‘வரணம்’ பண்ணியதற்குப் பதிலாக ஆத்மா பண்ணுவதை, ‘வரண’த்துக்கு முந்தி ஒரே ஒரு எழுத்தைக் கூட்டி ‘விவரணம்’ என்று உபநிஷத்தில் ரொம்ப அழகாகக் சொல்லியிருக்கிறது. “விவரணம்” என்றால் உள்ளேயிருப்பதை வெளிப்படுத்திக் காட்டுவது, மூடி வைத்திருந்ததைத் திறந்து விட்டுவிடுவது. Revelation என்கிறார்களே, அது.

ஆக, ஸாதகன் பண்ண வேண்டியது, மேதாவித்தனமெல்லாம் ப்ரம்மத்திடம் எடுபடாது என்று புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தள்ளி அதையே வரித்துப் பிரார்த்தனை பண்ணுவதுதான். வரணம் பண்ணுவதிலேயே “ப்ரார்த்திப்பது” என்பதையும் அடக்கித்தான் ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.5

அதே ஆசார்யாள் இங்கே, “சுத்த ப்ரம்மத்தில் புத்தியை ஸ்தாபி” என்று சொல்கிறாரென்றால் என்ன அர்த்தம்?

அஸலாக ப்ரம்மத்திலேயே இல்லாமல் ப்ரம்மத்தைப் பற்றி, ப்ரம்மத்தைக் குறித்து வேதாந்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, குரு என்ன உபதேசிக்கிறாரோ அதிலேயே புத்தியை ஏகாக்ரமாகப் பதிக்கணும் என்பதே அர்த்தம். நான் அப்படித்தான் அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்.

புத்தியை அப்படியே ப்ரம்மத்திலேயே முழுக விடுவது பிற்பாடு மூன்றாவது ஸ்டேஜின் கடைசியில். அது ஸமாதி.

இது ஸமாதானம். இங்கே ‘ப்ரஹ்மணி’, ‘ப்ரம்மத்தில்’, என்பதற்கு ‘ப்ரம்மத்தைப் பற்றிய விஷயத்தில்- அதாவது அதைப்பற்றி சாஸ்திரம் என்னென்ன சொல்கிறதோ அதில்; குரு என்ன சொல்கிறாரோ அதில் – என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் ஸரியாய் வரும். ப்ரஹ்ம வித்யா தத்வார்த்தங்களிலேயே ஸர்வதாவும் புத்தியைப் பூர்ணமாகச் செலுத்த வேண்டும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்

‘ச்ரத்தை’யின் அப்யாஸத்தில் சாஸ்த்ரமும் குருவும் சொல்வதை ச்ரத்தையோடு புத்தியில் அவதாரணம் செய்ததன் தொடர்ச்சியாக, அதன் ‘லாஜிகல் கன்க்ளூஷ’னாக அத்யாத்ம சாஸ்திரத்தை புத்தியுடைய குறுக்குக் கேள்விகளை எழுப்பாமல் ச்ரத்தையோடு அந்த புத்தியாலேயே நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். சாஸ்த்ரத்தில் எழுதி வைக்காததாகவும் குரு சிலது சொல்லலாம். அதையும் நன்றக அறிந்து கொள்ள வேண்டும்.

ப்ரம்மாநுபவம் வருவது பின்னாடி. நிஜமான ப்ரம்ம ஞானம் அதுதான். இப்போது புத்தி ஞானமாக அதில் அறியக்கூடியதெல்லாம் அறிய வேண்டும். இந்த நாலெட்ஜ் ஒன்றுக்கே முழு புத்தியையும் ஒருமுகப் படுத்தி ஆழமாக ஈடுபடுத்த வேண்டும். “ஸம்யக் ஆஸ்தாபனம்” பண்ண வேண்டும். எக்காலமும் இதைப் பண்ண வேண்டும். அதுதான் புத்தியின் ‘ஸமாதானம்’.

இப்போது இவன் அப்படியே ஆத்மாவில் புத்தி கரைந்து போகும்படியான த்யானத்தில் உட்காருவதற்கு பக்குவப் படவில்லை. இந்தக் கட்டத்தில் புத்தி கார்யம் பண்ணிக்கொண்டு தானிருக்கும். அப்போது அதைக் கொண்டு ஆத்மாபிவிருத்திக்கு எது நல்லதோ அதை மட்டுந்தானே பண்ண வேண்டும்? அது ஆத்ம சாஸ்திர விஷயங்களை நன்றாக அறிகிற கார்யத்தைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? மஹாவாக்ய உபதேசம் மட்டும் அப்புறம் ஸந்நியாஸத்தோடு ஃபார்மலாக வாங்கிக் கொள்ள வேண்டும். பாக்கி எல்லாம் இப்போது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருமுகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் வித்யா குரு. அப்புறம் ஸந்நியாஸம் தந்து மஹாவாக்யோபதேசம் செய்பவர் ஆச்ரம குரு. அவர் ஸந்நியாஸியாகத் தானிருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை! முன்னாடி அவரையே வித்யா குருவாகவும் கொண்டு ப்ரஹ்ம வித்யா சாஸ்திரங்களைப் படிக்கலாம். அல்லது நல்ல சீலமும், அநுஷ்டானமும், உசந்த படிப்புமுள்ள வேறொரு ஸத்வித்வானிடமும் வித்யாப்யாஸம் செய்யலாம்.


1 ” விவேக சூடாமணி” ச்லோ. 26 (அ) 27

2 ச்லோ 8

3 கீதை V.28

4 கடோபநிஷத் II 23; முண்டகோபநிஷத் III.2.3

5 கடோபநிஷத்தில் மேற்படி மந்திர பாஷ்யத்தில்

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ச்ரத்தை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உபநிஷத் போதனை பெற அதிகாரி யார் ?
Next