உபநிஷத் போதனை பெற அதிகாரி யார் ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உபநிஷத் வித்யையிலேயே ஸந்நியாஸிக்குத்தான் அதிகாரமுண்டு என்றுகூட அபிப்ராயமுண்டு. அதாவது, உபநிஷத்துக்களை ஸந்நியாஸி[யாயுள்ள] சிஷ்யர்களுக்குத் தான் ஸந்நியாஸி குரு உபதேசிக்க வேண்டும் என்று அபிப்ராயம். வேதாந்த பரமான மற்ற புஸ்தகங்களை மட்டும் ப்ரம்மச்சாரி, க்ருஹஸ்தர் ஆகியோர் கற்றுக் கொள்ளலாமென்று சொல்வது.

ஒரு சாகையை பிரம்மச்சாரி பூர்ணமாக அத்யயனம் பண்ணும்போதே உபநிஷத்தும் கற்றுக் கொண்டுதான் விடுகிறான். அதிலுள்ள வித்யைகளில், உபாஸனைகளில் அநேகம் க்ருஹஸ்தர்களுக்கானதாகவே இருக்கிறது. இப்படியிருந்தாலும், அர்த்தம் தெரிந்து கொள்ளாமல் உபநிஷத் அத்யயனம் மட்டும் மற்ற ஆசாமிகள் பண்ணலாம்; அல்லது ஒரு அவுட்-லைனாக மாத்திரம் வேண்டுமானால் அர்த்தமும் தெரிந்துகொள்ளலாம்; தீர்க்கமாக அலசி அர்த்தம் செய்து கொள்வதில் ஸந்நியாஸிக்கே அதிகாரம் என்று அந்த அபிப்ராயமுடையவர்கள் சொல்வார்கள்.

ஆனால் வெகுகாலமாக நல்ல சிஷ்டர்களின் ஸம்பிரதாயத்திலேயே ப்ரம்மச்சாரி, க்ருஹஸ்தர் ஆகியோர் உபநிஷத்துகளை ஆழமாகவும் கற்றுக்கொண்டு வந்திருப்பதால், மஹாவாக்யோபதேசம் மாத்திரமே ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் என்று வைத்துக் கொள்வதே ஸரியாகத் தோன்றுகிறது.

உபநிஷத் அத்யயனம் பண்ணும்போதே அதில் மஹாவாக்யமும் வந்துவிடத்தான் செய்யும். ஆனாலும் அதையே ஜபமாக அநுஸந்தானம் பண்ணுவதற்கு ஸந்நியாஸிதான் அதிகாரி. இதற்காக அந்த [மஹாவாக்ய] மந்த்ரத்தில் மாத்திரம் அவன் ஸந்நியாஸ குருவிடந்தான் தீக்ஷை பெற வேண்டும்.

மற்றபடி உபநிஷத்துக்களை வேத வித்யையில் அதிகாரமுள்ள எல்லாரும் எந்த ஆச்ரமத்திலிருந்தாலும் குருமுகமாகக் கற்கலாமென்ற நல்ல சாஸ்த்ரஜ்ஞர்களின் வழக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.

ஆதியில் அந்த உபநிஷத்துக்களைச் சொன்னவர்கள், கேட்டவர்களிலேயே ரொம்பப் பேர் ஸந்நியாஸியாயில்லாதவர்கள்தான் என்பது இதற்கு ஸப்போர்ட்டாக இருந்தாலுங்கூட, அந்த பாயின்டை நான் எடுத்துக் கொள்ளப் பிரியப்படவில்லை. [ஏனென்றால்] யுகதர்மங்கள் என்று யுகத்திற்கு யுகம் சில தர்மங்கள் மாறுபடுவதுண்டு. அதில், பூர்வ யுகத்துக்காரர்களின் ஆத்ம பலம் பின் யுகத்துக்காரர்களுக்கு இல்லாததால், அப்போது நடந்து வந்த சிலவற்றை இப்போது கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த ஸ்ம்ருதிப் பிரமாணத்தை மீறக் கூடாது. ஆகையால் உபநிஷத் காலத்தில் ஏதோ ஒன்று நடந்தது என்பதை மாத்திரம் காரணம் காட்டி இப்போது நாமும் அப்படியே பண்ணலாம் என்பது ஒரு பாயின்ட் ஆகாது. உபநிஷத் வித்யையில் ஸந்நியாஸிக்குத்தான் அதிகாரம் என்று ஸ்ம்ருதி ப்ரமாணம் இல்லைதான். இருந்தாலுங்கூட இந்த நாளில் கட்சி கட்டிக்கொண்டு ரைட், ரைட் என்று உரிமைப் போராட்டம் நடத்தி எதில் வேண்டுமானால் பிரவேசிக்கலாம் என்று புறப்படுகிறவர்கள், ‘வேத காலத்தில் அப்படி இருந்ததே, புராண காலத்தில் அப்படி இருந்ததே, இப்போது மட்டும் ஏன் கூடாது?’ என்று கேட்பதால் இங்கே நம் ஸமாசாரத்திலும் ஆதிகால வழக்கை இக்கால வழக்குக்கு ஓர் ஆதரவாகக் காட்ட நான் இஷ்டப்படவில்லை. சிஷ்டாசாரத்தில் நாலு ஆச்ரமிகளுக்கும் உபநிஷத் வித்யாப்யாஸத்தில் அதிகாரம் கொடுத்திருப்பதே நமக்குப் போதுமான ப்ரமாணம்.

உபநிஷத் பாராயணம் செய்யும்போது ஆரம்பத்திலும் முடிவிலும் ‘சாந்தி பாடம்’ என்று சில மந்திரங்களும் ச்லோகங்களும் சொல்வது ஸம்பிரதாயம். அதில் [ஆரம்பத்தில் சொல்லும்] பூர்வ சாந்தியில் ஒரு மந்திரம், “பூர்வத்தில் எவன் பிரம்மாவையும் ஸ்ருஷ்டித்தானோ, ஸ்ருஷ்டித்த அந்த பிரம்மாவுக்கு வேதங்களையும் கொடுத்தானோ அந்த தேவன்தான் நம் புத்திக்கு ஞானப் பிரகாசம் கொடுப்பவன்; அவனை முமுக்ஷுவான நான் சரணடைகிறேன்” என்று இருக்கிறது. மோக்ஷமொன்றே லக்ஷ்யமாகக் கொண்ட ‘அட்வான்ஸ்ட்’ ஸாதனைதான் முமுக்ஷு என்பது. ‘ச்வேதாச்வதரோபநிஷத்’ என்று ஒரு உபநிஷத்து. பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களில் அது இல்லாவிட்டாலும், தசோபநிஷத் பாஷ்யம் பண்ணிய நம் ஆசார்யாளே அதன் வாக்யங்களை ப்ரமாணமுள்ள மேற்கோள்களாகக் காட்டியிருக்கிறார். அதன் கடைசி அத்யாயத்தில், ச்வேதாச்வதர ரிஷி அதை அத்யாச்ரமிகளுக்கு உபதேசித்தார் என்று இருக்கிறது. அத்யாச்ரமம் என்பது ஸந்நியாஸம்; அல்லது அதற்கும் மேலே போன அதிவர்ணாச்ரமம். இப்படிப்பட்ட விஷயங்களைக் காட்டித்தான் ‘உபநிஷத்தில் ஸாமான்யப்பட்டவர்களுக்கு, க்ருஹஸ்தர்களுக்கு அதிகாரமில்லை’ என்று சொல்வது. ஆனாலும் ஆசார்யாள் உபநிஷத்திலேயே பல விஷயங்களை மந்த அதிகாரிகளுக்கு என்று சொல்லி, இது நம் காலத்திற்குந்தான் என்கிற மாதிரியே விட்டிருக்கிறார். மந்த அதிகாரி என்பது நிச்சயமாக முமுக்ஷு இல்லை. ஸாதாரண க்ருஹஸ்தன் அல்லது ப்ரம்மசாரிதான். மொத்தத்தில், ஓரளவு ஞானம் வந்தபின்தான் உபநிஷத் கற்றுக் கொள்ளலாம் என்பதைவிட உபநிஷத் கற்றுக் கொள்வதனாலேயேதான் எவருக்கும் ஓரளவாவது ஞானமோ, ஞானத்தில் ஆசையோ வரும் என்று ரிலாக்ஸ் பண்ணியே சிஷ்ட ஸம்பிரதாயத்தில் வந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸமாதானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  'ஸமாதான' த்தில் கண்டிப்பு
Next