‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் – கதாபேதங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிப் பல புஸ்தகங்கள் இருப்பதில் சில கதாபேதங்கள் இருக்கின்றன. (கதைகளிடையே சில வித்யாஸங்கள் காண்கின்றன.) ராமாயணத்தில் பல தினுஸாக, வால்மீகியில் ஒரு விதம், கம்பரில் ஒரு விதம், துளஸீதாஸில் ஒரு விதம் என்று அங்கங்கே கொஞ்சம் வித்யாஸமிருப்பதுபோல இவற்றில் இருக்கிறது.

எல்லாவற்றிலும் ஒரே விதமாகச் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கேள்வியில்லாமல் எடுத்துக்கொண்டு விடலாம். ஒன்றில் இருப்பதற்கு விரோதமாக இல்லாமல் அதிகப்படியாக இன்னொன்றில் ஒரு detail (விவரம்) இருந்தால், அப்படி இருப்பவை ஆசார்யாளின் கௌரவத்துக்கு ஏற்றபடியும், circumstantial evidence (ஸந்தர்ப்ப சூழ்நிலையின் சான்று) உள்ளதாகவும் இருக்கிறபோது எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகச் சொன்னால் ஒன்றுக்கொன்று விரோதமில்லாத வரையில் ஒவ்வொன்றிலுமுள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு புஸ்தகத்தில் (அவர் சென்ற ஊர்களில்) சொல்லாத ஒரு ஊரை இன்னொரு புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறது; (அவர் செய்த கார்யங்களில்) சொல்லாத ஒரு கார்யத்தை இன்னொன்றில் சொல்லியிருக்கிறது-என்றால், அப்படி இருக்கவே முடியாது என்று ஸர்வ நிச்சயமாகத் தெரிந்தாலொழியக் கூடுதலாகச் சொல்லியுள்ள எல்லா ஊர், கார்யம் முதலானவற்றையும் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் நாளில் இருந்திருக்கவே முடியாத ஊர், [சிரித்து] நெய்வேலி டவுன்ஷிப்புக்கு வந்தாரென்றால் எடுத்துக் கொள்ளமுடியுமா? அப்படியே, பெர்னார்ட் ஷாவோடு வாதம் பண்ணினாரென்றால்…..? ஆனாலும் அப்படியில்லாத இடங்களிலெல்லாம் ஏற்றுக்கொள்வதுதான் யுக்தம். ஏனென்றால், அவர் வாஸ்தவத்தில் அந்த மாதிரிப் பண்ணவில்லை என்றால்கூட பண்ணியதாக நாம் வைத்துக்கொள்வதனால் பெரிய தப்பு எதுவுமில்லை. ஆனால் அவர் பண்ணியிருந்தும், பண்ணவில்லை என்று நாம் தள்ளிவிட்டால் தப்புத்தானே? அவதாரமாக வந்து அவர் பண்ணிய ஒவ்வொன்றுக்கும் ‘வால்யூ’ உண்டு. அப்படிப்பட்ட ஒன்றை நாம் ‘இல்லை’ என்று தள்ளப்படாததுதானே?

போலகம் சாஸ்த்ரிகள்1 இந்த விஷயமாக, ‘ஆசார்யாள் எப்படிப் பண்ணிக் காட்டியிருக்கிறாரோ, அதையே நாமும் பின்பற்றலாம்’ என்று எழுதியிருக்கிறார். ஆசார்யாள் என்ன பண்ணியிருக்கிறாரென்றால்: சரீரத்திலிருந்து வெளியேறிவிட்ட யோகியின் ஜீவன் ப்ரஹ்மலோகம் போகும் வழிக்கு அர்ச்சிராதி மார்க்கம் என்று பெயர். அதில் பதின்மூன்று பர்வா, அல்லது ஸ்தானங்கள் இருக்கின்றன. இந்தப் பதின்மூன்றைப் பற்றியும் உபநிஷத்துக்களிலிருந்து தெரிகிறது. ஆனால் எந்த ஒரு உபநிஷத்திலும் பதின்மூன்றையும் வரிசையாகச் சொல்லியிருக்கவில்லை. ஒவ்வொன்றிலும் சிலதை விட்டிருக்கிறது; வரிசைப்படி இல்லாமல் முன் பின்னாகவும் சொல்லியிருக்கிறது. இப்படி இருப்பதை ஆசார்யாள் எடுத்துப் போட்டுக்கொண்டு எதுவும் விட்டுப்போகாமல் சேர்த்து, வரிசை க்ரமமும் தப்பாதபடி ஒழுங்குபடுத்தித் தம்முடைய ஸூத்ர பாஷ்யத்தில் கொடுத்திருக்கிறார்2. இப்படியே அவருடைய சரித்ரத்திலும் ஒரு புஸ்தகத்தில் சொல்லி இன்னொன்றில் சொல்லாதது, ஸம்பவங்களை காலவாரியாயில்லாமல் முன் பின்னாகச் சொல்லியிருப்பது ஆகியவற்றை நாம் எதுவும் விட்டுப் போகாமலும், கால ரீதியில் ஆர்டர் தப்பாமலும் ஒழுங்குபண்ணிக்கொள்ள வேண்டுமென்று அவர் சொல்லியிருக்கிறார்.

2500 வருஷம் முன்னால் இருந்துவிட்டு ஆசார்யாள் போய்விட்டார். அவரோ ஸ்வசரிதை-ஒரு குறிப்பாகக்கூட-எழுதியும் வைக்கவில்லை! பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறம் வரையில் அவருடைய சரித்ர நூல்கள் எழுதப்படும்போது அங்கங்கே வித்யாஸங்கள் வரக்கூடியதுதானே? அவரோ அந்தக் காலத்திலேயே தேசம் முழுவதும் ஸஞ்சாரமும் பண்ணியிருக்கிறார். ஒரு தடவைக்கு மூன்று தடவையாகப் பண்ணியிருக்கிறார். அதனால் தேசத்தின் எந்த மூல முடுக்கிலானாலும், ‘இங்கே ஆசார்யாள் இன்ன இன்ன பண்ணினார்’ என்று சொல்கிறார்கள். இது அத்தனையையும் எந்த க்ரந்த கர்த்தா சேகரித்து எழுதமுடியும்? இந்த நாளில் ரயில், ப்ளேன் எல்லா வசதியும் இருந்தும்கூட இப்படி யாராவது ஸாதிக்க முடியுமா என்று தோன்றுகிறது. அந்த நாளில் கேட்பானேன்?

ஆசார்யாளுக்குப் பிறகு மடங்களில் அவர் பெயரிலேயே மஹா பெரியவர்களாக சில ஸ்வாமிகள் வந்திருக்கிறார்களென்றும், இவர்களை ஆதி ஆசார்யாளாகவே நினைத்துக் கொஞ்சம் குழறிப் போயிருப்பதாகவும் முன்னேயே பார்த்தோம். இதனாலும் சில சரித்ர பேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடமேறியது காஞ்சி என்றும், காஷ்மீர் என்றும் இரண்டு விதமாகப் புஸ்தகங்களில் இருக்கிறது. இதற்கு மூன்று விதமாக பதில் சொல்லும்போது, ஒன்று, காஞ்சி மண்டலத்துக்கே காஷ்மீரம் என்றும் பெயர் இருந்திருக்கிறது என்பது. “கோவிந்தநாதீ”யத்தில் இவ்விஷயம் ஸ்பஷ்டமாகவே சொல்லியிருக்கிறது. இன்னொரு பதில், “காஷ்மீரில் ஸர்வஜ்ஞ பீடம் மாதிரியே இருந்ததற்கு ‘சாரதா பீடம்’ என்று பேர்; காஞ்சியில் தான் ஸர்வஜ்ஞ பீடம் என்றே பேர்; ஆசார்யாள் இரண்டிலும் ஏறினார்” என்பது. மூன்றாவதாகச் சொல்வது, “ஆதி ஆசார்யாள் காஞ்சியில் ஸர்வஜ்ஞ பீடமேறினார்; அபிநவ சங்கரர் காஷ்மீரத்தில் ஸர்வஜ்ஞ பீடமேறினார். இதிலே மாறுபாடு ஏற்பட்டுவிட்டது” என்பது.

ஆசார்யாள் பெயரில் பலர் இருந்திருப்பது மட்டுமில்லை. அவர் கதையில் வருகிற சில பாத்ரங்களின் பெயரிலும் இரண்டு பேர் இருந்திருப்பதால் கொஞ்சம் குழறுபடி ஏற்படுகிறது. ஸாதரணமாக 40 பேர் படிக்கிற ஒரு க்ளாஸிலேயே இரண்டு பசங்களுக்கு ஒரே பேர் இருந்து, இனிஷியலுங்கூட ஒன்றாகவே இருந்து விடுவதால், ஒருத்தனுக்கு ஊர் பெயரையும் சேர்த்து இரண்டு இனிஷியலாக்குவதைப் பார்க்கிறோமல்லவா? இம்மாதிரி ஆனந்தகிரி, மண்டன மிச்ரர் என்றெல்லாமும் இரண்டிரண்டு பேர்கள் இருந்திருப்பதாக ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறார்கள். ஆசார்யாளின் நேர் சிஷ்யரான ஆனந்தகிரி வேறே, கொஞ்சம் பிற்பாடு சிஷ்ய பரம்பரையில் வந்து சங்கர விஜயம் எழுதிய (அனந்த) ஆனந்தகிரி வேறே என்கிறார்கள். ‘ப்ரஹ்ம ஸித்தி’ என்ற அத்வைத க்ரந்தமும், மூன்று மீமாம்ஸா சாஸ்த்ர புஸ்தகங்களும் எழுதிய மண்டன மிச்ரர் வேறே, மீமாம்ஸகராயிருந்து அப்புறம் ஆசார்யாளின் சிஷ்யராகி ஸுரேச்வராசார்யாள் என்று பெயர் பெற்று, ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’, வார்த்திகங்கள் ஆகிய அத்வைத நூல்கள் மட்டும் எழுதியவர் வேறே என்கிறார்கள். ஸுரேச்வர-மண்டனமிச்ரர் அப்படியே ஆசார்ய ஹ்ருதயத்தை ப்ரதிபலித்து எழுதியவர். இன்னொரு மண்டனமிச்ரரோ அத்வைதமே சொன்னாலும் அதில் ஆசார்யாளுக்கு வித்யாஸமான சில கோட்பாடுகளைச் சொல்பவர். அவரும் ஆசார்யாளின் காலத்திற்குச் சிறிது முற்பட்டவர்தானென்று தெரிகிறது.

ஒரே பெயரில் இரண்டு மநுஷ்யர்கள் இருந்திருப்பது போல, ஒருவருக்கே இரண்டு பெயர் இருந்திருப்பதாலும் கொஞ்சம் குழறுபடிக்கு இடம் கொடுத்திருக்கிறது. இந்த நாளில் கூட ‘alias’ போட்டுக்கொண்டு ரொம்பப் பேர் இருக்கிற மாதிரி! இப்படி ஸுரேச்வர-மண்டனமிச்ரருக்கே விக்வரூபரென்றும் பெயர் இருந்ததாகத் தெரிகிறது……

இப்படிப் பலவிதமாக இருக்கும்போது, சரித்ரம் எழுதியவர்களில் அவரவரும் தாங்கள் கேள்விப்பட்டது, தங்களால் சேகரிக்க முடியாது, வித்யாஸமாக இருப்பதில் தங்களுக்கு ஸத்யமாகத் தோன்றியது ஆகியவற்றைக் கொண்டு எழுதியிருப்பார்கள். தங்களுக்கும் முன்பு இருந்த ஆசார்ய சரித்திரத்தைப் பார்த்து அதை base பண்ணி மேலே எழுதியிருப்பார்கள். இதில் அவரவர்கள் அபிமானப் படியும் கதையைக்கொண்டு போயிருக்கூடியது ஸஹஜமே. தேசம் பூரா ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணிப் பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திவிட்டுப் போயிருப்பதில் ஒவ்வொன்றை ஆச்ரயத்தவர்களுக்கும் அதை விசேஷித்துச் சொல்லணுமென்று தோன்றக் கூடியதுதான். அதனாலும் கதா வித்யாஸங்கள் ஏற்பட்டிருக்கும்.

அநேக புஸ்தகங்களுக்குள் இப்படி வித்யாஸம் ஏற்படுவது மட்டுமில்லை. ஒரே புஸ்தகத்துக்கே உள்ள பல ப்ரதிகளுக்குள்ளேயுங்கூட வித்யாஸங்கள் இருப்பதையும் பார்க்கிறோம். ஏட்டுச் சுவடிகளாகவே எழுதி வைத்துக் கிடைத்திருக்கிறவற்றில் பாட பேதங்கள் சிலவும் இருக்கின்றன.

‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்று பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். லேககர்களின்-‘காப்பி’ எழுதும் scribeகளின்-கவனக் குறைவால் பாட பேதம் ஏற்படுவது ஒன்று. சில ச்லோகங்களைக் காப்பி பண்ணாமல்கூட அவர்கள் விட்டிருக்கலாம். இப்படியெல்லாம் ஏற்படுவது ஒன்று. இன்னொன்று, அபிமானத்தைப் பொறுத்து மாற்றி எழுதுவது.

‘ஆப்ஜெக்டிவ்’- ஆகத்தான் (ஸ்வயச் சார்பில்லாமல் விஷயச் சார்புடன் மட்டுமே) எழுத வேண்டும், அப்படி எழுதி வைத்ததை ‘ஆப்ஜெக்டிவ்’-ஆகத்தான் பார்க்க வேண்டுமென்று பேச்சில், கருத்தளவில், சொன்னாலும் கார்யத்தில் வரும்போது அபிமானங்கள் விட்டுப்போவதென்பது ச்ரமமாகவே இருக்கும். ‘Likes’ என்று சொல்கிற போதே ‘dislikes’-ம் தொக்கி நிற்பது வேறே! ந்யாயமாகப் பார்த்தால் ஆசார்யாள் – அத்வைதம் என்கிறபோது இதற்கெல்லாம் இடம் இருக்கப்படாதுதான். அவரைப்போல, ‘கொள்கையபிமானம் என்று ஒன்று இல்லாமல் ஸத்யத்தை ஸத்யமாகப் பார்த்துச் சொல்லணும்’ என்று நிஷ்பக்ஷபாதமாக அலசி அலசித் தத்வத்தை உருவாக்கியவர் எவருமில்லை. அதனால்தான் அவருடைய அத்வைதத்தில் த்வைதம், கர்மம், பக்தி, ஸாங்க்யம், யோகம், பௌத்தம், மீமாம்ஸை அத்தனைக்குமே இடம் கொடுக்க முடிந்திருக்கிறது…ஆனால் ஆசார்யாள் மாதிரி ஆசார்யாள்தான் இருக்க முடியும்! அதுதானே அவர் பெருமை?……

ஏற்கெனவே (ஆசார்ய சரிதங்கள்) எழுதி வைத்து விட்டது தீர்ந்துபோன விஷயம். எழுதியவர்கள் எல்லாருமே ஆசார்யாளிடம் நிரம்ப பக்தி வைத்திருந்த பெரியவர்கள். தங்களுடைய பக்தி தங்களோடு முடிந்து போகாமல் லோகத்திலும் பரவுவதற்காகவே அவருடைய சரித்ரத்தை அழகாக எழுதிக்கொடுத்தவர்கள். அவர்கள் செய்துள்ள உபகாரம் பெரிசு. அவர்களெல்லாரையும் நாம் போற்றத்தான் வேண்டும்.

இன்றைக்கு அந்தச் சரித்ரங்களை நாம் எப்படி ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதே கவனிக்க வேண்டியதாகிறது. எந்தச் சரித்ரமானாலும் அது மனஸை ஆசார்யாளிடம் இழுத்து வைக்கிறது என்ற முறையில் பக்தி நூல்களாக எல்லாவற்றையுமே நாம் ரஸிக்க வேண்டியதுதான். இங்கே கேள்வி வேண்டாம். பக்திக்குக் கேள்வியுமில்லை, பதிலுமில்லை. பக்திதான் நமக்கு முக்யம். ஆசார்யாளை நம்முடைய கல்லு மனஸ் நினைத்துக் கொஞ்சம் உருகும்படியாக எங்கே அவகாசம் (வாய்ப்பு) கிடைத்தாலும் அப்படிப் பண்ணிவிட்டுப் போக வேண்டியதுதான். அதனால் எல்லாச் சரித்ரங்களையும் பாராயணம் பண்ணுவோம்.

கதையாக இருப்பதில் எது வாஸ்தவம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அறிவினால் அலசிப் பார்க்கும்போது நிஷ்பக்ஷபாதமாகப் பண்ணவேண்டும். அவர் எப்படி ஸ்வயாபிமானமில்லாமல் ஸத்யத்தைப் பார்த்தாரோ-ஏகமான பரம ஸத்யத்தைப் பார்த்தாரோ- அப்படி அவருடைய சரித்ரங்களில் ஸத்யத்தைப் பார்க்க அவரையே ப்ரார்த்திக்கொண்டு நடுநிலையிலிருந்து கொண்டு பண்ண வேண்டும்.

ஸத்யத்தோடு ப்ரேமையும் முக்யம். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக் கொடுக்கக்கூடாது. ஸத்யம் என்று நமக்கு ஒன்று முடிவாகத் தோன்றுகிறது என்பதற்காக, அந்த முடிவுக்கு வர முடியாதவர்களிடம் பேதம் பாராட்டக் கூடாது. அத்வைதம் என்றாலே அபேதம்தான். ஒன்றாய்ப் போய்விடுவது என்ற ‘ஐக்ய’த்தையே சொன்னவர் ஆசார்யாள். அவர் விஷயமாகவே அபிப்ராய பேதம், மனோபேதம் என்று ஏற்படச் செய்தோமானால் அதைவிட அபசாரமில்லை.

‘நமக்கு ஸத்யம் தெரியவேண்டும்; உள்ளது உள்ளபடி பார்த்துப் புரிந்து கொள்கிற தீரம் வேண்டும்; தீரம் என்பது சண்டைக்குப் போகும் சூரத்தனமாகாமல் இருக்கவேண்டும்; நம் மனஸில் கொஞ்சங்கூட ப்ரேமை மாறாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டும்; அவர்களுக்கும் ஸத்யமான த்ருஷ்டியும் ப்ரேமையுள்ள மனஸும் வாய்க்க வேண்டும்’ என்று ஆசார்யாளையே ப்ரார்த்தித்துக் கொண்டு இந்த விஷயத்தில் ப்ரவேசிப்பதுதான் முறையான மனோபாவம்.


1 காலஞ்சென்ற சாஸ்த்ர ரத்னாகரம் போலகம் ப்ரம்மஸ்ரீ ராம சாஸ்திரிகள்.
2 IV-3.1-3

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சங்கர விஜயங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  2. மாதவீய சங்கர விஜயம்
Next