சத்துவ குணமே சாந்திக்கு வழி

சத்துவ குணமே சாந்திக்கு வழி

உலகில் உயிரினங்கள் பல விதமாக உண்டாகின்றன, ஒன்று புழுக்கத்திலிருந்து வரக் கூடியது - கொசு போன்றவைகள், இரண்டாவது அண்டத்திலிருந்து வரக்கூடியது - பாம்பு, பல்லி, கோழி முதலியன. மூன்றாவது பூமியைப் பிளந்து கொண்டுவரக்கூடியது - மரம், செடி, கொடி போன்றவை. நான்காவது கர்ப்பத்திலிருந்து உண்டாக்கக்கூடியது, மனிதன் போன்றோர்.

இப்படி பலவகையாக உண்டாகும் உயிரிணங்கள் சாத்வீக, தாமஸ, ராஜஸ வகைக் குணங்களை உடையவையாக விளங்குகின்றன. சாத்வீகம் என்றால் பிறருக்கு அதிகம் துன்பம் தராமலும், ராஜஸம் என்றால் பிறருக்கு அதிகம் துன்பம் கொடுத்துக் கொண்டும், தாமஸம் என்றால் தானும் துன்பப்பட்டு, பிறருக்கும் துன்பம் கொடுத்துக் கொண்டும் இருக்கக் கூடியவர்கள், உலகில் ஒவ்வொரு உயிரினத்திலும் சாத்வீக தாமஸ, ராஜஸ வகைகளுண்டு.

மனிதனுடைய வாழ்க்கையில் பருவத்திற்கேற்றவாறு குழந்தை முதல் வயோதிகர் வரை பலவிதமான குணாதிசயங்கள் மனத்தில் தோன்றுகின்றன. ஒவ்வொரு உணர்ச்சி ஏற்படும் போதும் ஒவ்வொரு விதமாக உறுப்புகள் நிலை மாறுகின்றன. பகவானிடம் பக்தி ஏற்படும்போது மனது இளகி, கண்ணெல்லாம் அன்போடு சொருகியிருக்கிறது. கோபம் வரும் போது மனத்தின் வேகம் மேற்பட்டு கண்ணெல்லாம் சிவந்து போய் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போகிறது. துன்பம், அழுகை வரும்போது உடம்பு கனத்து, மனம் கனத்து எல்லாம் வெறுப்பாகத் தோன்றுகின்றன. இதுதான் சாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களின் விளக்கம். இந்த முக்குணங்களோடுதான் எல்லா உயிரினத்துடைய வாழ்க்கையும், மனிதனின் வாழ்க்கையும் அமைந்துள்ளது.

மனிதனுடைய வாழ்க்கையிலே எந்தக் குணமானது அதிகமாக வளர்ந்து இருக்கிறதோ, ஓங்கி இருக்கிறதோ அதற்கேற்றவாறு அவனுடைய செயல்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஆகவேதான் குழந்தைகள் முதல் அனைவருமே நல்ல அறிவுரைகளைப் போதிக்கக் கூடிய சிறந்த கதைகளைக் கேட்க வேண்டும். சொல்ல வேண்டும் என்று பழங்காலம் முதற்கொண்டே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய உணவு முக்குணங்களையும் அளிக்கக்கூடியதாக அமைந்து இருக்கிறது. உடையும் அப்படியே. சுற்றுப்புறச் சூழலும் அவ்வாறே. ஆகவே மனிதனுடைய வாழ்க்கை, முக்குணங்களுடன் கூடியதாகவே ஆகிறது.

சாத்வீக குணம் அதிகமாக இருந்தால் தூய்மையாகவும், மனம் பிரசன்னமாகவும், உறுப்புகள் சாந்தமாகவும், உடல் ஆரோக்யமாகவும் இருக்கும். சாத்வீகத்தின் நிறம் வெண்மை. சிவப்பு நிறம் கொண்ட ரஜோ குணம் அதிகமாக இருந்தால் அசாந்தியும், கோபதாபமும், ரத்தம் வெளிப்படுவது போன்ற நிகழ்ச்சிகளும் வாழ்க்கையில் நடைபெறும். தாமஸ குணம் அதிகமாகும்போது சோம்பேறித் தனம், தூங்கிக் கொண்டே இருத்தல், அழுகை, துன்பம், எந்த ஒரு காரியத்திலும் தவறாகச் செய்வது போன்றவை வாழ்க்கையில் ஏற்படும். இதன் நிறம் கறுப்பு.

இப்படியெல்லாம் மனித வாழ்க்கைக்கே ஏற்படுகிறதென்றால் தமோகுணம், ரஜோகுணம் இவற்றையே அடிப்படையாகக் கொண்ட அசுரர்களுடைய வாழ்க்கையிலே சத்வகுணத்தைப் பார்ப்பதே அரிதாகும்.

தனி மனிதனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது அவனோடு, அவனது சுகதுக்கங்களோடு முடிந்து விடுகிறது. நாட்டை ஆள்கிறவர்களிடையே சாத்வீகம் இன்றி, தமோ, குணம், ரஜோ குணங்கள் இருந்துவிட்டால் நாட்டு மக்களுக்கும் அவர்களுடைய செயலால் அதே குணங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. மனித வாழ்க்கையில் தமோ, ரஜோ குணங்கள் ஓங்கி வரும்போது தேசமே சீர்கெடும். எனவே சத்வகுணத்தை அதிகரித்துக் கொள்ள அடிக்கடி முயற்சி செய்யவேண்டும். அதற்கேற்ற சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும்.

நாட்டை ஆள்பவர்களிடம் தமோ, ரஜோ குணங்கள் அதிகரிக்கும் போது அந்தக் குணங்களுடைய செயல்பாடுகள் குறைவதற்காக, சத்வகுணமே உருவாய்க் கொண்ட இறைவனே அந்த ராக்ஷஸ அசுரர்களின் முன் தோன்றி, நல்ல வார்த்தை சொல்லி திருத்தப்பார்க்கிறார். அப்படியும் கேளாமல் போனால் இறைவனும் கொஞ்சம் ரஜோ குணத்தை எடுத்துக் கொண்டு, யுத்தம் செய்து அவர்களைக் கொன்று மக்களை ரட்சிக்கிறார். அதே சமயம் அந்த ராக்ஷஸ அசுரர்கள், முன் செய்த தவத்தின் பயனாக நல்ல கதியும் பெறுகிறார்கள். இவ்விதம் உலகிற்கு அருள் பாலிப்பதுதான், பகவானுடைய அவதாரலீலை.

நரகாசுரனுடைய ரஜோ, தமோ குணங்களை அடக்கி, சத்வ குணத்தை உண்டாக்கினார் பகவான். அதன் விளைவாக எல்லா ஜனங்களும் ஆண்டில் ஒரு நாளாவது உடலால் கங்கையில் செய்த பலனை அடைகின்றனர். உள்ளத்தால் இறைவனை நினைத்து சாந்தியும் மகிழ்ச்சியும் பெறகிறார்கள். மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி, மதுரமான பட்சணங்களை எல்லாம் உண்டு களித்து, இருக்கிறார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றம் அறியேன் பராபரமே" என்ற அனுபூதி வாக்கின்படி "ஸர்வே ஜனாஸுகினோ பவந்து" என்ற பிரார்த்தனையே தீபாவளி நாளாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி புண்யத் திருநாளில் அனைவருக்கும் ஆசிகள்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஜோதிடச் சுடர்ஒளி பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  புண்ணியத் திருநாள்
Next