வேற்றுமை தரும் ஒற்றுமை

வேற்றுமை தரும் ஒற்றுமை

(ஆதிசங்கரர் ஜெயந்தியின் போது பேசியவை)

அமாவாசை நல்ல நாள் என்பதால் ஆதி சங்கரருடைய ஜெயந்தி நேற்று அமாவாசை தினத்திலிருந்து தொடங்கியது. ஹிந்து சமயத்தில் மத ரட்சகனாக விளங்கியவர் ஆதிசங்கரர். இந்த விழாவை கர்போற்சவம், ஜனனோத்ஸவம் என்று இரண்டாகப் பிரித்தார்கள். அவர்களின் அவதாரத்துக்கு முன் நான்கு நாட்களுக்குச் செய்வது கர்போற்சவம். பிறந்த பிற்பாடு செய்வது ஜனனோத்சவம் என்று இரண்டாகப் பிரித்தார்கள்.

ஆதிசங்கரருடைய அவதார தினத்தின் மத்திய நாள் இன்று, இரண்டாவது நாள். உலகம் தொடங்கிய சமயம் முதல் இருப்பது இந்து சமயம். இது அநாதியாய் விளங்குவது, இதற்கு ஆரம்பம் முடிவு, என்பதெல்லாம் கிடையாது. உலகிலுள்ள நிறைய சமயங்கள் ஒரு நாள் தோன்றி ஒரு நாள் முடிவு பெறுகிற நிலையில் உள்ளன. ஏனென்றால், தோன்றியதெல்லாம் ஒரு நாள் முடிவடையும். இந்த நிலையாமை எல்லா இடத்திலும் இருக்கிறது, உண்டானதெல்லாம் அழிந்திருக்கிறது. முன்னோர்களெல்லாம் உண்டானார்கள். எல்லோரும் போய்விட்டார்கள். நாமும் பிறந்திருக்கிறோம். நாமும் ஒரு நாள் போய்விட வேண்டியதுதான். இதிலிருந்து நமக்குத் தெரிவது வடிவமுள்ள அனைத்துமே ஒரு நாள் தோன்றும், ஒரு நாள் மறையும். ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள். அவருக்கு வடிவம் கிடையாது. உருவம் கிடையாது. 'அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் இருக்கும் பரம்பொருள்தான் நாமமாகி, பலவாய் இருக்கிறதே தவிர, ஆண்டவனுடைய வடிவம் அருவமான வடிவம். அந்த வடிவத்திலிருந்து இறங்கி நமக்காக, அருள் பாலிப்பதற்காக, பல வடிவத்திலே வருகிறார்.

ஆகவே, அவருக்கும் பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது. நம்முடைய இந்து சமயத்துக்கும் பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது, பிறந்தால்தானே இறப்பதற்கு? பிறப்பே கிடையாது, இறப்பு எங்கே வரப்போகிறது? அப்படிப்பட்ட பிறப்பே இல்லாத சமயம் நம்முடைய இந்து சமயம். பிறப்பே இல்லாத ஒரு நிலைமை உள்ளதென்றால் மிகவும் விசேஷமானது என்று அர்த்தம். சூரியன் சந்திரன் எல்லாம் கூட ஆராய்ச்சிக் கணக்கின்படி பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. அதனால் அதற்கும் ஒருநாள் முடிவுகாலம் உண்டு. ஏனென்றால் தோற்றம் என்று எவற்றிற்கெல்லாம் உண்டோ, அவற்றிற்க்கெல்லாம் முடிவும் உண்டு. எந்த சாஸ்திரமாகட்டும், இதையேதான் வலியுறுத்திச் சொல்லுகிறது.

அப்படி உண்டாகாத சில பொருட்கள் இருக்கிறதென்றால், இறைவனைச் சொல்லலாம். பாரத மண், அதற்கு அதிபதியாக உள்ள இறைவன், அதை சார்ந்த மக்கள் அவர்கள்தான் அநாதியாக உள்ளவர்கள். ஆரம்பமில்லாதவர்கள் என்பதால் அநாதியானவர்கள். குழந்தை பிறக்கிறது, இறக்கிறது. இரண்டுக்குள்ளே உள்ள உயிர் அநாதியாய் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே உயிருக்குப் பிறப்பு இறப்பு என்பதே கிடையாது, உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும்!

அந்த உயிருடைய உண்மையான நிலை, பரம்பரையினுடைய உண்மையான நிலை, பரம்பொருளுடைய உண்மையான நிலை. அதனுடைய பிம்பம்போல்

தோன்றுகிறது உயிர். அந்த உயிருக்கும் பிறப்பு இறப்புக் கிடையாது, நம்முடைய முகத்தைக் கண்ணாடியிலே பார்த்தால் முகத்தின் பிரதி பிம்பம் தெரிகிறது, கண்ணாடி உடைந்தால் பிம்பம் தெரியாதே தவிர, பிம்பமே தெரியாத கண்ணாடி என்ற ஒன்று இருக்க முடியாது. கண்ணாடியை வைத்துக் கொண்டு 'இதில் என் உடம்பு தெரியவில்லை, முகம் தெரியவில்லை, பிம்பம் தெரியவில்லை' என்று சொல்ல முடியாது.

கண்ணாடியே உடைந்து போய் விட்டால் விஷயம் வேறே!ஆக, பிம்பம் தெரியக்கூடிய ஆதாரம் இல்லையென்று சொல்லலாமே தவிர, பிம்பம் இல்லையென்று சொல்ல முடியாது. அதுபோல, இந்த உலகம் அவற்றில் உள்ள உயிர், ஆகியவையெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் அநாதிகாலமாய் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பழங்காலந் தொட்டு வரக்கூடிய ஒரு கலாசாரம், தெய்வீகம், பண்பாடு, ஆன்மீகம், இறை உணர்வு, இந்த உலகத்திலே உண்டென்றால் நம்முடைய பாரத நாடு, பாரத கலாசாரம், பாரத நாட்டிலுள்ள இந்த உயிர்கள் இவைதான்.

பட்சிகள் முதல் மனிதன் வரை உடம்பெல்லாம் வந்துபோகும். அதிலுள்ள உயிர் ஆனந்தமாக சாஸ்வதமாக இருக்கும். பிம்பத்துக்கும் பிரதி பிம்பத்துக்கும் எத்தனை வித்யாசம் இருக்கிறதோ அவ்வளவுதான் உயிருக்கும் பரம்பொருளுக்கும் உள்ளது. அப்படி, பழங்காலந்தொட்டு வரக்கூடிய ஒரு நிலை, இந்த நிலையெல்லாம் நம்முடைய வேதங்களிலே விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சாதுக்களாலே சொல்லப்பட்டிருக்கின்றன.

அதையேதான் ஆதிசங்கரரும் நம்முடைய தேசத்திலே அவதரித்து பாரத நாட்டிலே அவதரித்து, முப்பத்திரண்டு வயதுக்குள் பல தத்துவங்களையெல்லாம் நினைவு படுத்தினார்.

புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. ஆனால் நமக்கு நினைவு படுத்தினார். எத்தனையோ நீதிகளும் தத்துவங்களும் உலகம் பிறந்த காலம் தொட்டு அநாதியாய் நிலவி வருகின்றன. அவற்றையெல்லாம் நினைவு படுத்தினார்.

புதிய தத்தவம் என்றால் திரும்பவும் அதுவும் அழிந்து போயிருக்கும். உண்டானால் அது அழியும்!ஆக, புதிதாய் அவர் எதையும் உண்டு பண்ணவில்லை. பண்ணியிருந்தால் அவருடைய காலத்துக்குப் பிறகு அது மறைந்திருக்கும். ஆக, உலகம் தோன்றிய காலம் முதல் வேத புராணங்களிலிருந்து இறைவனிடமிருந்து வரக்கூடிய தத்துவம் என்ன உண்டோ, அந்தத் தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.

ஆகவே, இறைவன் எத்தனை காலம் இருப்பானோ அத்தனை காலம் இந்தத் தத்துவங்களும் இருக்கும். இறைவனுக்கும் அழிவு கிடையாது. அதுபோலத் தத்துவத்துக்கும் அழிவு கிடையாது. அப்படிப்பட்ட பழமையான தத்துவத்தோடு அதற்கான விளக்கங்களெல்லாம் கொடுத்தவர் ஆதிசங்கரர்தான், அவ்வளவு பெருமை வாயந்த ஒரு நாடு நம்முடைய பாரத நாடு. வெளி நாடுகளிலெல்லாம் 'ஃபிலாஸபி' என்றால் அவர்களுக்க சங்கராச்சாரியார் ஃபிலாசபிதான் தெரியும் மற்றப்படி எந்தத் தத்துவங்களும் சாஸ்திரங்களும் அவர்களுக்குத் தெரியாது.

சங்கராச்சாரியார் ஒருவரைத்தான் அவர்களுக்குத் தெரியும். பாக்கி

எத்தனையோ பேர்கள் நம் நாட்டிலே பிறந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஒருவர்தான் முப்பதிரண்டு வயதுக்குள்ளே உலகம் முழுவதும் தெரியக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். எத்தனையோ நாடுகளிலிருந்து, பல பேர்கள் தங்களடைய சொத்து சுதந்திரம் எல்லாவற்றையும் கொடுத்தவிட்டு இந்தியாவுக்கு வருகிறார்கள் என்றால், அது நம் கலாசாரத்தையும் ஃபிலாசபியையையும் கற்றுக் கொள்வதற்காகத்தான். எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டுத்தான் இதைப் பெற முடியும் என்ற எண்ணத்திலே வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கேயிருந்து இஞ்சினீயரிங், மேனேஜ்மென்ட் ஆகியவற்றை அங்கேப் போய்க கற்பதற்காக பொருளைச் சேர்க்கும் பொருட்டுக் கல்வி கற்கிறோம்!ஆனால் அவர்கள் எல்லாம் பொருளைத் தியாகம் செய்து விட்டு தத்துவத்தைக் கற்பதற்காக வருகிறார்கள். இது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. இதுதான் அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொண்ட ஓர் உண்மை.

நம்மிடையே அந்தக் காலத்தில் எல்லோரும் இப்படித்தான் இருந்தார்கள். நல்ல தெளிவான அறிவோடு, தெளிவான ஞானத்தோடு, தெளிவான நல்ல எண்ணத்தோடெல்லாம் இருந்தார்கள். மத்திய காலத்திலே ஆசாரங்களினாலே நம்முடைய கலாசாரம், பண்பாடு, எல்லாம் மாறிக்கொண்டே வருவதிலே, ஏதோ புதிய மோகத்திலே எல்லோரையும் போல, நாமெல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார். அவர்களெல்லாம் புதிய மோகங்களெல்லாம் தணிந்து, உண்மையான நிலை என்பது என்னவென்று அறிவதற்காக அவர்களெல்லாம் நம்மைத் தேடி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட புத்திசாலிகள், நல் அறிஞர்கள், வசதியுள்ளவர்கள் எல்லாம் நம் புனிதத் தத்வத்தை அறிந்து கொள்வதற்காக நம்முடைய நாட்டைத்தேடி, சாதுக்களைத் தேடி, மகான்களைத் தேடி, ஞானிகளைத் தேடி, நல்லவர்களைத் தேடிப் பல விதங்களில் வருகிறார்கள். அப்படி வரும்போது முதன்முதலாக சங்கராச்சாரியார் சொன்ன ஃபிலாசபி, வேதாந்தம் ஆகியவற்றைத்தான் கற்க விருப்பம் என்று அவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த வேதாந்த தத்துவம் ஒன்றுதான் உலகிலேயே நம் எல்லோருக்கும், வழிகாட்டலாக இருக்கக் கூடியது. இது ஒன்றுதான் எத்தனை தினுசான மக்கள் இருந்தாலும், அத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அந்த வேற்றுமையில் ஒற்றுமைக்குக் காரணம் கண்டு, எல்லோரையும் ஒருமைப்படுத்தக்கூடிய ஒரு நிலையிலே உள்ளது.

மனிதரில் வேற்றுமையை யாராலும் தவிர்க்க முடியாது. கணவன் முதல் மனைவிவரை, அப்பா மகன் வரை, பிள்ளை, அண்ணன், யாரிடம் போனாலும் வேற்றுமையின்றி உலகமே பார்க்க முடியாது. உடம்புக்குள்ளேயே கைகால் எல்லாம் வெவ்றோகத்தான் இருக்கின்றன. எதுவும் ஒன்றாய்ச் சேராது.

ஐந்து விரலும் ஒன்றாய்ச் சேராது. அதாவது ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்காது. இப்படி எதில் பார்த்தாலும் வேற்றுமைகள் இருக்கின்றன.

ஒன்றோடு ஒன்று சேராமல் இருந்தாலும்கூட, ஒற்றுமையாய்ச் சேர வைப்பது ஒன்றே ஒன்றுதான். வேற்றுமையிலே ஒற்றுமை என்ற தத்துவத்தை அந்தக் காலத்திலே கோஷ்டிகளிலே பெரியவர்கள் சொன்னதை ஆதிசங்கரர் நினைவு படுத்தினார்.

சில உறுப்புக்கள் வெவ்வேறாக ஒன்று சேர்ந்து ஒன்றாகி, உடம்பு என்று ஆகிவிடுகிறது. ஐந்து விரல்களும் வெவ்வேறு மாதிரி இருந்தாலும் ஐந்தும் சேர்ந்துதான் ஒரு கையாக ஆகிவிடுகிறது ஒரு பொருளை எடுக்கத் தூண்டி உதவுகிறது.

இப்படி வேற்றுமையிலே ஒற்றுமை காணக்கூடிய இந்து சமயம் ஒன்றுதான் என்பதை, அத்வைதம் என்றால் ஒன்றுதான் என்பதை ஆதிசங்கரர் நமக்கு நினைவு படுத்தினார்.

அவர் வேற்றுமைகள் வாழ்க்கைக்காக, அனுபவத்திற்காக ஒற்றுமை என்பதை நினைவு படுத்தினார், குடும்பத்திலே பல பிள்ளைகள், குழந்தைகள் இருக்கிறார்கள். பல விதமான வேலைகள் செய்கிறார்கள். பணிகள் செய்கிறார்கள். ஜோலிகள் செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். அவரவர்களுக்கும் குழந்தை குட்டி எல்லாம் இருக்கிறது. ஆனாலும், பொறுப்புணர்வு என்பது நம்மிடையே இருக்கிறது. அந்தக் குடும்ப ஒற்றுமை என்பது நம்மிடையே எப்படி அநாதி காலம் தொட்டு நிலவி வருகிறதோ, அது போல், 'வசுதேவ குடும்பகம்' என்று உலகமனைத்தும் குடும்பம் என்ற ஒரே ஒரு தத்துவம் சொன்னவர் ஆதி சங்கரர்.

பாக்கி எல்லோரும் உனக்கு எனக்கு என்ற போட்டி போட்டுக்கொண்டு அகங்காரத்தோடு இருந்தார்களே தவிர, அகங்காரத்தை ஒழித்து நாம் எல்லோரும் ஒருவராக இருக்கிறோம் என்ற உண்மையை, தத்தவத்தை எடுத்துச்சொன்ன ஒரே ஒரு மகான் ஆதிசங்கரர். வேற்றுமை வேண்டும் - சண்டைகளுக்காக அல்ல, அன்பு செலுத்துவதற்காக, பக்தி செலுத்துவதற்காக, சேவை செய்வதற்காக, தியாகம் செய்வதற்காக, நல்ல பணிகள் செய்வதற்காக, உயர்நத் பணிகள செய்ய வேண்டும் என்பதற்காக!ஒன்று இருந்தால்தான் ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற முடியும் அதற்காக!

ஆக, ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்றால் அதை அனுபவம் மூலமாக அறிவிப்பதற்காகச் சொன்னார்கள். கல்கண்டு இருக்கிறது அந்த கல்கண்டிலே ஒரு இனிப்பு இருக்கிறது. இனிப்பு நம் கண்ணுக்குத் தெரியவில்லை. கல்கண்டு தெரிகிறது கண்ணுக்கு நேராய். அதிலேயே இருக்கும் இனிப்பு கண்ணுக்குத் தெரிவதில்லை. இனிப்புக்காகத்தான் கல்கண்டை வாயில் போட்டுக் கொள்கிறோமே தவிரக் கல்கண்டுக்காக நாம் அதை வாயில் போட்டுக் கொள்வதில்லை.

அதுபோல இறைவனை நாம் அடைவதற்காக, இறைவன் கண்ணுக்குத் தெரியாதவனாய் (இனிப்புப்போல) விளங்கினாலும் அவனுடைய அருளை நாம் அடைவதற்காக, ஒரு உருவத்தை வழிபாடு செய்கிறோம். அந்த உருவம் அருள் பாலித்து ஆனந்தத்தை அளிக்கிறது. இன்பத்தை அளிக்கிறது. அந்த இறைவனுடைய அருளும் ஆனந்தமும் சாந்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை. அனுபவத்திலே தெரிகிறது.

கல்கண்டைச் சாப்பிட்டவனுக்கே அந்த இனிப்பு அனுபவம் வருகிறது. "ஆஹா.. இன்பமாக இருக்கிறது" என்கிறான். "எப்படி இருந்தது அந்த இன்பம்? சொல்லு பார்க்கலாம்?" என்று கேளுங்கள். "நீயும் கல்கண்டை வாங்கிப் போட்டுக்கோ" என்பான்.

ஆக, இன்பத்தைச் சொல்லுவதற்குக்கூட முடியவில்லை,

அனுபவித்தால்தான் முடியும், கல்கண்டு வேண்டும், அப்போதுதான் இனிமையை அனுபவிக்க முடியும். ஒரு வடிவம் வேண்டும், உருவம் வேண்டும். கண்ணுக்குத் தெரிவதாக இருக்க வேண்டும். அந்த வேற்றுமை இருக்க வேண்டும். அதை எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளவேண்டும். அதற்குப் பிறகு வாயிலே போட்டுக் கொண்ட பிற்பாடு, அதன் இனிப்பு வாயிலே கரைந்து அப்படியே ஆனந்தமாக, இனிப்புச் சுவையாக இறங்க வேண்டும். அது சந்தோஷத்தைக் கொடுக்கிறது நம் எல்லோருக்கும்.

நமக்கு ஆனந்தம் தெரிகிறது, சந்தோஷம் தெரிகிறது, இன்பம் தெரிகிறது, அனுபவம் தெரிகிறது "சந்தோஷம் எப்படி இருக்கு சொல்லுப்பா.. சிவப்பாய் இருந்ததா.. கறுப்பாய் இருந்ததா?" என்று கேட்டால் சொல்லத் தெரியாது.

கல்கண்டுக்கு வடிவம் உருவம் சொல்லத் தெரியும். இனிப்புக்குச் சொல்லத் தெரியாது. "வெளுப்பாய் இருந்தது, இந்த வடிவமாய் இருந்தது" என்று சொல்லுவோம். அதனுடைய இன்பம், அதனுடைய இனிப்பு எப்படி இருக்கிறது என்றால் அனுபவித்தால்தான் தெரியும்.

அதுபோல இறைவனுடைய அருளை, அனுபவித்தறியத்தான் முடியும். இந்தத் தத்துவத்தைச் சொன்னவர் ஆதிசங்கரர். இது இந்துமதத்தின் தத்துவம் அதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்வார்கள். எத்தனையோ வேற்றுமைகள் இருந்தாலும் அதிலேயும் ஒற்றுமை இருக்கிறது. ஆனந்தம் இருக்கிறது. கல்கண்டில் ஒரு வேற்றுமையும் இருக்க வேண்டும், அதிலும் ஒற்றுமை இனிப்பு, ஆனந்தம் ஆகியவை. அந்தக் கல்கண்டு கரைந்தவுடனே இனிப்பும் கரைந்து போய்விடும் ஆனந்தம் மாத்திரம் eF இருக்கும்

அப்படிப்பட்ட ஒரு நிலையை மனித வாழ்விலே அடைவதற்காக ஆதிசங்கரர் நம்மிடையே தோன்றி, ஞான வழிகளையெல்லாம் நினைவு படுத்தினார். இருப்பதை நினைவு படுத்தியதுதான் ஆதிசங்கரருடைய வேலை அதுவேதான் எங்களுடைய வேலையும்கூட, நாங்களும் புதிதாக ஒன்றும் தத்வம் சொல்லிவிடவில்லை. உவமைக்கு வேண்டுமானால் ஏதாவது புதிதாய்ச் சொல்லலாமே தவிர, தத்துவம் அதேதான். அதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

விளக்கு ஒளி கொடுக்கிறது. ஃபேன் காற்றைக் கொடுக்கிறது. ஆனால் மின்சக்தி ஒரே சக்திதான். தேவைக்கேற்றபடி வடிவம் மாறுபடுகிறது. ஆனால் ஒரு வடிவம் இல்லையென்றால் நமக்கு அந்த மின்சாரம் உபயோகம் இல்லாமலேயே போய்விடும். அந்த மின் சக்தி உபேயாகப்பட வேண்டுமானால் வடிவம் வேண்டும். அதனுடைய வடிவம்., அதனுடைய விலை, அதனுடைய பணி எல்லாம் வேறு வேறாக இருக்கும். ஆனால் அத்தனையும் நிஜமல்ல குளிர் என்ற சக்தி உண்டாகிறது அதுதான் நிஜமான சக்தி. வெளிச்சம் என்ற ஒன்று, சூடு என்ற ஒன்று இருக்கிறதே அதுதான் நிஜமான சக்தி. மைக்கின் உள்ளே மின் ச்கதி இயங்குவதால் அது நன்றாகப் பேசுகிறது. ஆகவே, எத்தனை மின்சார சாதனங்கள இருந்தாலும் உள்ளுக்குள்ளே மின்சக்தி இயங்குவது போல, வேற்றுமைகளுக்குள்ளேயும் அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் இயக்கும் சக்தியாக இருக்கக்கூடிய ஒரு தத்துவம், ஆண்டவனுடைய தத்துவம்.

அந்த பரம்பொருளை அடைவதுதான் மனிதனுடைய கடமை என்று நினைவூட்டுகிறார் ஆதிசங்கரர். சாப்பிட வேண்டியதுதான் - தூங்க வேண்டியதுதான், வியாபாரம் பண்ண வேண்டியதுதான், மற்ற என்ன உண்டோ எல்லா வேலையையும் பண்ணலாம். அது உலகத்துக்காக.

ஆனால், பரகதிக்கு? மனசாந்தி கொடுப்பதற்காக, ஆண்டவனைத்தான் அடைய வேண்டும். உலக வாழ்க்கை ஒன்று. அது த்வைதம். அது வேற்றுமை உள்ளது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இறைவனைப் படித்துக் கொள்ளவேண்டும். இது அத்வைதம். ஆனால் இறையருளால் நம்முடைய மன வேற்றுமை முதல் ஆன்மீக வேற்றுமை வரை எல்லாம் நீங்கி, மன ஒற்றுமை, மத ஒற்றுமை, ஆன்மீக ஒற்றுமை ஏற்பட்டு, ஆத்மானுபவம் ஏற்பட்டு, மனத்துக்கு அமைதியும் சாந்தியும் கிடைக்கும். வேற்றுமையிலே ஒற்றமை என்ற இந்தத் தத்வத்தைச் சொன்னவர் ஆதிசங்கரர்.

நவரத்தின மாலை இருந்தால் நவரத்தினக் கற்கள் இருக்கும். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு தினுசாய் இருக்கும். இத்தனையும் கோர்த்து ஒரு மாலையாகப் போடுவது ஒரு கயிறு. அல்லது வெள்ளிக்கம்பியோ, தங்கக்கம்பியோ. ஏதோ ஒன்று. அதுபோல, நவரத்தினங்கள் வேறு படுவதுபோல் எத்தனை தினுசாக நம்மிடையே வேற்றுமைகள் இருந்தாலும், அத்தனையையும் கோர்த்துக் கொடுக்கக்கூடியது இறைவன்தான்.

எப்படி மாலை கோர்க்கப்பட்டதற்கு ஒரு நூல் ஆதாரமாக இருக்கிறதோ, அதுபோல், எத்தனையோ வேற்றுமைகளைக் ஒரு மூல காரணமாவது ஒரு அடிப்படைத் தத்துவம், ஆன்மீகத் தத்துவம். ஒரு ஆண்டவன் என்பது பரம்பொருள் தத்துவம் என்று சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒருமைப்ப்பாட்டோடு இருக்கக்கூடியது நம்முடைய பாரதநாடு. பாரத காலாசாரம், பாரதப் பண்பாடு என்றெல்லாம் சொல்லுகிறோமே அதுதான். அப்படிப்பட்ட ஒரு மகான் நம்முடைய நாட்டிலே தோன்றியதால், பெரிய தத்வங்களையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொடுத்து அந்தப் பாரம்பர்யங்கள் எல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்கு, நினைவுகூர்ந்ததற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த இடத்திலே நாம் பெரிய இந்து மாநாடெல்லாம் நடத்தியிருக்கிறோம். இப்போது ஆதிசங்ரரின் ஜெயந்தியைக் கொண்டாடும்போது அவரை நினைவு கூர்ந்து நமது இந்துமதத்தின் பெருமைகளையும் ஆதிசங்கரரின் பெருமைகளையும் நினைவு கூர்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எல்லாப் பொது மக்களும் அவருடைய சமய்பற்றுக்காக அவர் மீது ஈடுபாடு கொள்ளவேணும் சமயப்பற்று ஒன்றுதான் நமக்கு வாழ்க்கையிலே எல்லா நிறைவுகளும் கொடுக்கக்கூடியது.

வாடகை வீட்டில் இருக்கும்போதே என் விடு என்று சொல்லிக்கொள்கிறோம். பாங்கில் உத்யோகம் பார்ப்பவர்கள்கூட 'என்னுடைய பாங்கு' என்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள் என்னுடைய பள்ளிக்கூடம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். என்னுடைய கம்பெனி என்று சொல்லிக்கொள்கிறோம். அதிலேயெல்லாம் அபிமானம் வைத்திருக்கிறோம். நம்முடைய சமயம், நம்முடைய மதம், நம்முடைய கடவுள், நம்முடைய கலாசாரம், நம்முடைய பண்பாடு, நம்முடைய குரு. நம்முடைய தெய்வம் என்று இதிலேயும் 'நான்' என்ற அபிமானம்

வைக்க வேண்டும்.

சயநல அபிமானம் தப்புதான். ஆனால் நல்லதிலே அபிமானம் வைப்பதில் தப்பே இல்லை. நல்லதிலே அபிமானம் வைக்க வைக்க அது நீண்டுபோய் சுயநலம் போய்விடும். ஒன்று சொல்வார்கள் "உன் அகங்காரத்தை விட்டுவிடு. நான் என்ற உணர்வை விட்டுவிடு" என்பார்கள். "கொடுத்தே பழக்கமேயில்லை. எல்லாமே வாங்கியேதான் பழக்கம்" என்று சொன்னார்கள் என்றால், "உலகம் முழுவதும் நான்தான் இருக்கிறேன் என்பதையும் ஏற்றுக்கொள்" என்றார்கள். அகங்கார மமகாரங்களையெல்லாம் விட்டு, ஈகோவையெல்லாம் விட்டு- நான் என்பதை விட்டு விட்டு "கடவுளே.. உன்னுடைய அடிமை நான். அடிமை என்று அந்தப் பணிவோடு பேசக் கற்றுக்கொள்" என்றெல்லாம் சொன்னார்கள்.

எல்லோரையும் இறைவனுடைய பிரதிபிம்பங்களாகப் பார்த்து எல்லோரிடமும் அன்பு செலுத்தி ஒருவருடனும் த்வேஷம் கொள்ளாது, ஒருவருடனும் கோபம் கொள்ளாது, ஒருவருடைய பொருளையும் அபகரிக்காது, திருடாமல், எல்லோரிடமும் அன்பு செலுத்து, மரியாதையுடனும் அன்புடனும் வாழு என்று சொன்னார்கள்.

விசாலமான மனப்பான்மை நம்முடைய மனத்திலே வளர்வதற்கெல்லாம்தான் நம்முடைய தத்துவங்களெல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சமயப்பற்று உருவாக வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும்.

ஏதோ பல ஜாதிகளிலே, பல பிரிவுகளிலே, பல வகுப்புகளிலே பிறந்திருப்போம். அந்தக் கலாசாரத்தை விடாது அவற்றைக் காப்பதோடு கூட ஒற்றமையையும் நாம் காக்கவேண்டும். இது வீட்டிலே, அது நாட்டிலே என்று சொல்வார்கள். அதுபோல் வீட்டிலே நம்முடைய வாழ்க்கை முறைகளெல்லாம் வைத்துக்கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்தவேண்டும். பொதுக்காரியம், பொதுப்பணி, பொது வேலை என்று வரும் போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இறையருளைப் பெறவேண்டும். சமயத்தைக் காப்பாற்ற வேண்டும், மனத்திலுள்ள கருத்துக்களையெல்லாம் அறிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

தாயுமானவர் போன்ற பெரியவர்கள் எல்லாம் பாடியிருக்கிறார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்றார்கள்.

ஆக, இவர்கள்தான் நன்றாய் இருக்கவேண்டும், அவர்கள்தான் நன்றாய் இருக்கவேண்டும், மற்றவர்கள் துன்பப்படவேண்டும் என்றெல்லாம் ஒருவரும் பாடவேயில்லை. நல்ல அனுபவம் உள்ளவர்கள் எல்லாம் 'சர்வே ஜனா சுகினோ பவந்து' என்றார்கள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். சௌக்கியமாய் இருக்க வேண்டும். எல்லோரும இன்புற்றிருக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்கள் பாடினார்கள்.

ஆக, அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, நம்மிடையே, வெளிப்புறத்திலே ஒற்றுமையும், நம்முடைய, வீட்டினுடைய பணிகளையும் செய்யக்கூடிய அவசியம் இன்றைக்கு உள்ளது. அதற்காகத்தான் நாம் இங்கே

வந்திருக்கிறோம்.  ¢

ஆக, வீட்டிலே நம்முடைய சமயப்பணிகளையும் கலாசாரத்தையும் காக்கவேண்டும். வெளியிலே நாம் எல்லோரும் ஒன்றாக ஒருங்கிணைந்த ஒரு சமுதாயமாக ஒற்றுமையுடன் செயல்பட்டு, வேற்றுமையில்கூட ஒற்றுமை காணும் எண்ணம் கொண்டு, ஆதிசங்கரருடைய தத்துவத்தை அறிந்துகொண்டு, அவர் உபதேசம் செய்த வழியிலே நின்று நாமும் நன்மையடைந்து, எல்லோருக்கும் நல்லதை எடுத்துச் சொல்லுவோம் என்றும், எல்லோரையும் இறையருளையும் குருவருளையும் பெற வேண்டும் என்றும் வாழ்த்தி ஆசிகூறி பிரார்த்திக்கிறோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஆதிசங்கரரின் ஜெயந்தி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  தாய் - தந்தை - குரு - தெய்வம்
Next