பக்தி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஒரே பேரறிவுதான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால், அந்த பேரறிவுதான் எஞ்சி நிற்கும். அந்த நிலையில் காரியம் எதுவுமே இல்லை. பிரபஞ்சம், ஜீவ ராசிகள் என்கிற தோற்றங்கள் இருக்கிற வரையில்தான் பல விதமான காரியங்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து, இவற்றுக்கு மூலமான பேரறிவை அடைந்துவிட்டால், முடிவில் அறிகிறவன், அறிவு, அறியப்படுகிற வஸ்து என்கிற பேதங்கள்கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அதைத்தான் பிரம்ம ஸாக்ஷாத்காரம் என்பது, இதுதான் ஜீவாத்மாவின் மாறுபடாத, சத்தியமான நிலை.

ஆனால் இந்த சத்தியமான நிலையை நாம் தெரிந்து கொள்ளாமல், வெறும் தோற்றமான பிரபஞ்சத்தையும், ஜீவராசிகளையுமே மெய்யென நம்பி வாழ்கிறோம். இதற்குக் காரணம் மாயை. மாயாசக்தியால்தான் ஒரே பிரம்மம் இத்தனை வெவ்வேறு வஸ்துக்களைப்போல் தெரிகிறது. மாயப் பிரபஞ்சம் ஒர் அற்புதமான நியதியில் நடக்கிறது. பலவிதமான இயற்கை விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டு, அதன் பிரகாரமே பிரபஞ்சம் நடக்கிறது. காரியமே இல்லாத பிரம்மம் மாயையால் பிரபஞ்சமாகத் தோன்றுகிறபோது சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் முதலிய காரியங்கள் எல்லாம் நடக்கின்றன. காரியம் இல்லாத நிலையில் எதைப் பிரம்மம் என்கிறோமோ, அதையே இந்தக் காரியங்களைச் செய்கிறபோது ஈஸ்வரன் என்கிறோம். காரியம் இல்லாத பரம் பொருளை நிர்குணப் பிரம்மம் என்றும், அதுவே காரியத்தில் இருக்கிறபோது ஸகுணப் பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்றும் அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும். ஈஸ்வரன், பகவான், கடவுள், தெய்வம், ஸ்வாமி என்று சொல்வதெல்லாம் இந்த ஸகுணப் பிரம்மத்தையே.

எப்போது பார்த்தாலும் காரியம் செய்து கொண்டிருப்பதே நமக்கு இயல்பாகிவிட்டது. உடம்பால் காரியம் செய்யாத போதும், வாக்கால் பேசி காரியம் செய்யாத போதும் கூட, நம் மனசு சதா எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் காரியம்தான். இந்தக் காரியம் நின்றால்தான், அதாவது மனஸில் எண்ணமே தோன்றாமல் இருந்தால்தான், எந்தக் காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும். ஆனால் இந்த மனஸில் ஒரு க்ஷணம்கூட அதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லையே! இதை எப்படி நிறுத்தப் பழகுவது?

இந்தப் பழக்கத்துக்கு வழிதான் பக்தி. காரியமில்லாத பிரம்மத்தை நாமும் காரியமில்லாமலிருக்கிற நிலையில்தான் அநுபவிக்க முடியும். அது முடியவில்லையா? அதே பிரம்மம் சகல பிரபஞ்சங்களையும் நடத்தி வைக்கிற – அதாவது காரியத்தைச் செய்கிற – ஈஸ்வரனாக இருக்கிறதல்லவா? இந்த ஈஸ்வரனையே ஸதா சிந்தனை பண்ணு. காரியத்தை எல்லாம் அதற்கே திருப்பு. உடம்பால் நமஸ்காரம் பூஜை, வாக்கால் ஸ்தோத்திரம், மனஸால் தியானம் என்று சகல காரியங்களையும் ஈஸ்வரனிடம் செலுத்து. அவற்றை ஈஸ்வரன் அங்கீகரித்து, உன்னை பிரம்ம ஞானத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். இப்படிப்பட்ட இடையறாத ஈஸ்வர சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு ரொம்பவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி.

உலகத்திலுள்ள நல்லது – கெட்டது, அழகு – அவலக்ஷணம், இன்பம் – துன்பம் எல்லாமே பிரம்மத்திலிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை, அடையும்போது நல்லது கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.

ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈஸ்வரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தேன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச்சிதறலில் (Refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிர்குணப் பிரம்மம் மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈஸ்வரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார சாகரத்தில்தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும்கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப்படைத்து வைத்துக்கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.

மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைத்தாலும் அதுவாகவே மாறுகிறது. இதை மனோதத்துவக்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தோஷங்கள் அற்ற கிருபா சமுத்திரனான பகவானைத் தியானம் செய்து கொண்டே இருப்பதால் நம்முடைய தோஷங்கள் விலகி, நாம் அன்பு மயமாகிறோம். உண்மையான பக்தி வைத்துவிட்டால் அப்புறம் மனசு அன்புமயமாகிவிட, அதன்பின் அது பாபத்தில் பிரவேசிக்கவே செய்யாது. உலகத்தில் பாப எண்ணங்கள் விலகுவதற்கு பக்தியைவிட வேறு வழி இல்லை. ஆனால் பக்தி செய்வதற்கு இது மட்டும் காரணம் இல்லை. நாம் சத்தியமான நிலையை அடைவதற்கு பக்தி வழி பண்ணுகிறது என்பதுதான் முக்கியமான காரணம். மனசு என்பதே நின்றுபோய், ஆத்ம ஜ்யோதிஸ் அப்படியே பளீரென்று அடிப்பதற்கு முன்னதாக அந்த மனதிலிருந்து பாப அழுக்கு போக வேண்டும். இப்படிப் பாபத்தைப் போக்குவதே பக்தி.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is நமஸ்காரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பக்தி செய்வது எதற்காக ?
Next