அம்பாளின் ஸ்வரூபம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“நீதான் பரமேசுவரன் சரீரம்” என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன. இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால், அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது. பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள்தான். உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன. உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது. அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால், அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.

அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக, இவள் பாதி – அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ – என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். நான் ‘பசு’ என்று சொன்னால் அது ‘ப’ என்கிற ஒரு சப்தமும் ‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது. வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் ‘சொல்’ என்றால் ‘பொருளாக’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.

அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள், காரியங்கள் எல்லாமும் அவள்தான். அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை. ‘சரீரம் த்வம் சம்போ:– நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’ என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார். அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். நீ இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார்; த்வயி பரிணதாயாம் நஹி பரம்.

‘சம்பு’ என்ற உயிருக்கு நீ சரீரம் என்று சொன்னாலும், உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் – த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.

இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது, ‘உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்; உள்ளேயிருக்கிற உயிர், அந்தர்யாமி அவரே’ என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது. ஆனால் அப்போதுகூட உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் – துவைதம் – இருக்கிறது. கொஞ்சம் த்வைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார். ‘எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும், பரமானந்தமும் நீதான். இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள், இரண்டு மாதிரி ஆகி சிவயுவதி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய்’ என்கிறார். இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான். அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒன்றுதான். அத்வைதம்தான்.

ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால், அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்? காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.

அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர முடியவில்லை. அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா? இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.

அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?

சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தர்யம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது. அ – சிருஷ்டி; உ – பரிபாலனம்; ம – சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை ‘உமாஹைமவதி’ என்றே சொல்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is காமாக்ஷியின் கண்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அம்பாளின் இருப்பிடம்
Next