கண்ணன் துப்பறிந்தார் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதன்படி க்ருஷ்ணர் ஸ்த்ராஜித்தின் பக்ஷமாயிருந்தவர்களில் சிலரையும் தம்மோடு அழைத்துக் கொண்டு ப்ரஸேனன் போன காட்டுக்குப் போனார். அவனுடைய குதிரையின் குளம்படியையே பின்பற்றி எல்லாரும் போனார்கள். ரொம்ப தூரம் போனதும் ஒரு இடத்துக்கு மேலே அடிச்சுவடு போகவில்லை. அந்த இடத்தில் ஒரே ரத்தக் கறையாக இருந்தது. கொஞ்சம் எலும்புத் துண்டுகளும் கிடந்தன. மநுஷ்ய அவயவங்கள், குதிரையின் அவயவங்கள் ஆகிய இரண்டிற்குமான அஸ்திகளாக அவை இருந்தன. ப்ரஸேனன் உடுத்திக் கொண்டிருந்த வஸ்திரத்தின் கிழிசல், அவனுடைய ஆபரணத் துண்டுகள், குதிரையின் லகான், சேணம் முதலானதுகளின் அறுதல்கள் எல்லாம் சிதறுண்டு கிடந்தன. இந்தத் தடயங்களிலிருந்து ஒரு துஷ்ட மிருகம்தான் ப்ரஸேனன், அவனுடைய குதிரை ஆகிய இரண்டு பேரையுமே அடித்துப் போட்டிருக்கிறது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மநுஷ்யர்களை வைத்து பகவான் அடித்துப் போட்டிருந்தால் இப்படி ஏதோ கொஞ்சம் அஸ்தி இருந்த மாதிரி இல்லாமல், அழுகிப்போன முழு உடம்புகளுமல்லவா இருந்திருக்கும்?

ஆனால் இதை எப்படி conclusive proof (தீர்மானமான நிரூபணம்) என்று சொல்வது? முதலில் மநுஷ்யர்கள் அடித்துப் போட்டுவிட்டு, அப்புறம் அந்த ம்ருக சரீரங்களை புலி, சிங்கம் எதுவாவது தின்றிருக்கவும் கூடுமல்லவா?

இப்படி, கூடப் போனவர்களின் ஸந்தேஹ மனஸ் நினைத்தது. அதோடுகூட, மற்ற ஆபரணங்கள் உடைந்து கிடைந்து காணப்பட்டாலும், முக்யமான ஸ்யமந்தகத்தைக் காணோமே? இது ஸந்தேஹத்துக்கு பலம் கொடுத்தது.

இந்த ஸமயத்தில் நல்ல வேளையாக பகவான் அங்கே சிங்கம் வந்துவிட்டுப் போன அடையாளங்கள் பதிந்திருப்பதைக் கவனித்தார். “அந்த வழியில் போகலாம்; எங்கு கொண்டு போய்விடுகிறது பார்ப்போம்; அதிலிருந்து மேலும் ‘க்ளூ’ கிடைக்கலாம்” என்று மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு ஸிம்ஹம் போன வழியிலே போனார்.

கொஞ்சதூரம் போனதும் சிங்கத்தின் ப்ரேதம் கிடந்தது. நம் தேசத்துக் கரடி மாம்ஸபக்ஷிணி இல்லையோல்லியோ? அதுவுமில்லாமல் மாம்ஸபக்ஷிணிகள்கூட, ஆடு, மாடு, மான், முயல் முதலான சாகபக்ஷிணிகளைத்தான் தின்னுமே தவிர இன்னொரு மாம்ஸபக்ஷிணியைத் தின்னாது.

சிங்கத்தின் உடம்பு கிடந்த இடத்திலேயே, ஒரு கரடியின் காலடி பூமியில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. சிங்கம் முதலான மற்ற எந்த மிருகங்களையும்விட கரடிக்குப் பாதம் பெரிசு. அதோடு, மற்ற எந்த மிருகம் மாதிரியுமில்லாமல் கரடியும் மநுஷ்யக் குரங்கும் மாத்திரம் இரண்டு கால்களாலே மநுஷன் மாதிரி நிற்கக்கூடியவை அல்லவா? அதனாலே உடம்பு ‘வெயிட்’ முழுக்கத் தாங்குகிற இரட்டைப் பாதத்தின் சுவடு பூமியில் நன்றாகப் பதிந்துவிடும். அதிலேயும் மஹா பலசாலியான ஜாம்பவானுடைய உடம்பு என்றால் கேட்பானேன்?

அதனாலே, அதற்கப்புறம் ஸுலபமாகக் கரடியின் சுவட்டைப் பின்பற்றிக்கொண்டே பகவானும் மற்ற ஜனங்களும் போனார்கள். அது ஒரு குஹை வாசலில் கொண்டு விட்டது. குஹைபாட்டுக்கு ஒரே இருட்டாக, எங்கே முடிகிறதென்றே தெரியாமல் நீளக்கப் போய்க்கொண்டேயிருந்தது. அதிலே போவதற்கே மற்ற ஜனங்களுக்குப் பயமாயிருந்தது. அவர்கள் ஏற்கெனவே அவரை ஸந்தேஹித்தவர்கள் வேறு ஆயிற்றே! அதனால், என்ன நாடகமோ நடித்துக் கடைசியில் நம்மைக் குஹையிலே தள்ளி ஆபத்துக்கு ஆளாக்கிவிடப் போகிறானே!’என்று நினைத்தார்கள்.

க்ருஷ்ணரின் ஸ்வபாவமோ என்றால் பிறத்தியாரை ஆபத்துக்குக் காட்டிக் கொடுக்காமல் தாமே அதை ஏற்றுக் கொள்வதுதான். ஆபத்பாந்தவனாகவே இருப்பவர் அவர். அதனாலே, கூட வந்தவர்களை குஹைக்கு வெளியிலேயே இருக்கும்படிச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அதற்குள்ளே போனார். நீல ஜ்யோதிஸ்ஸாக அவருடைய சரீரமே ப்ரகாசிக்க அந்த வெளிச்சத்திலேயே இருட்டு குஹைக்குள் போனார்.

ரொம்ப தூரம் போன பிற்பாடு திடீரென்று குஹை மத்தியில் நல்ல வெளிச்சமாக ஒரு இடம், விஸ்தாரமான ஹால் மாதிரி இருப்பதைப் பார்த்தார்.

வெளிச்சத்துக்குக் காரணம் – உங்களுக்கே புரிகிறதோல்லியோ? – ஸ்யமந்தக மணிதான்!

அந்த விஸ்தாரமான அங்கணம் நல்ல வாஸ யோக்யமான ஒரு க்ருஹம் மாதிரி எல்லா வசதியும் கொண்டதாக இருந்தது. நடுப்புற (நடுவில்) ஒரு தொட்டில் போட்டிருந்தது. தொட்டிலில் ஒரு குழந்தை படுத்துக் கொண்டிருந்தது. தொட்டிலுக்கு மேலேதான், அந்தக் கரடிக் குழந்தைக்கு விளையாட்டு ஸாமானாக திவ்ய ரத்னமான ஸ்யமந்தகத்தைக் கட்டித் தொங்கவிட்டிருந்தது!

இதெல்லாம் கண்ணுக்குத் தெரிவதற்கு முந்தியே ஏதோவொரு வெளிச்சம் மட்டும் பகவானுக்குத் தெரிந்தது. மதுரமான பாட்டு சப்தமும் மெதுவாக அவர் காதில் கேட்டது. இப்போது கிட்டே போனதில், நன்றாகவே பாட்டு கேட்டது.

ஸெளந்தர்யவதியான ஒரு கன்னிகை தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடிக் கொண்டிருந்தாள்.

ராமாயண – பாகவதாதிகளில் சொல்லியிருக்கும் ருக்ஷ (கரடி) – வானரங்கள் மநுஷ்யாள் மாதிரியே பேசிப் பாடிய உயிரினங்களாகத் தெரிகின்றன. அதுகளில் சிலபேரை, முக்யமாக ஸ்த்ரீகளை, ரொம்பவும் அழகாக இருந்ததாக வர்ணித்திருப்பதிலிருந்து பார்வைக்குக்கூட மநுஷ்ய இனம் மாதிரியும் அவற்றில் சில இருந்திருப்பதாகத் தெரிகிறது. பூர்ண மநுஷ்ய ஜாதியும், அதற்கு ‘இவால்வ்’ ஆகிக் கொண்டிருந்த (பரிணமித்துக் கொண்டிருந்த) இனங்களும் சேர்ந்து இருந்த காலமாயிருக்கலாம் என்று டார்வின் – கொள்கைக்காரர்கள் சொல்லக்கூடும்.

அவள் பாடினது ஏற்கெனவே இருந்த தாலாட்டு இல்லை. அவளே இட்டுக் கட்டிப் பாடிக் கொண்டிருந்தாள். ‘க்ளூ’ தேடிக்கொண்டு வந்த பகவானுக்கு, ஏதோ கொஞ்சம் கோடி காட்டுவதாக மட்டுமில்லாமல் நடந்ததை முழுக்கத் துப்புத் துலக்கித் தருவதாகவே அந்தப் பாட்டு இருந்தது.

எனக்குப் பாடத் தெரியாது;* ஸ்லோகமாக ஒப்பிக்கிறேன்.

ஸிம்ஹ : ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: |

ஸுகுமாரக மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக : ||

இது பாகவதத்தில் இல்லை. விஷ்ணு புராணத்திலும் ஸ்காந்தத்திலும் தான் இருக்கிறது.

என்ன அர்த்தமென்றால், “சிங்கம் ப்ரஸேனனைக் கொன்றது. அப்புறம் அந்த சிங்கமும் ஜாம்பவானால் கொல்லப்பட்டது. ஸுகுமாரன் என்று பெயருள்ள குழந்தையே! இனிமேலே நீ அழ வேண்டாம். ஸ்யமந்தகமணி உனக்கே உனக்குத்தான்!”

“உனக்கே உனக்கு” என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்! பகவான் என்ன நினைத்துக் கொண்டிருந்தானென்று அவளுக்கு எப்படித் தெரியும்?

அந்த பகவான் மநுஷ்யன் மாதிரி- அதிலேயும் ஊர் நிந்தையையெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்ட ‘இளிச்சவாய்’ மநுஷ்யன் மாதிரி – உள்ளே ப்ரவேசித்தார். நிந்தையைப் போக்கிக் கொள்ளும்படியான உண்மை இப்போது அவருக்குத் தெரிந்துவிட்டது.

அவரைப் பார்த்தவுடன் அந்த ஸெளந்தர்யவதிக்கு ஒரே ஸமயத்தில் ப்ரேமையும் பயமும் பொங்கிக்கொண்டு வந்தன. பயம் என்றால் அவரிடம் இல்லை; அவருக்காக பயம்!


*இது ஸ்ரீசரணர்கள் அடக்கமாகவும் ஹாஸ்யமாகவும் கூறியது. அவர்கள் இசைக்கலையிலும் வல்லுநர்கள் தாம்.