மனத்தின் இன்பமும் நிலைத்ததல்ல : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மநுஷ்யனுக்குத் தன்னிலேயே மற்ற அங்கங்களை விட அதிப்ரியமானதாயிருக்கிற இந்த மனஸினால் பெறும் ஆனந்தங்கூட ஒரு அளவுக்குப் பிறகு அலுத்துத்தான் போகிறது. படித்த நாவல் மனஸுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால் படுத்த பின்னேயும் தூக்கம் வராமல் நினைவு அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. இப்படியே வித்வான் பாடின தோடி, இல்லாவிட்டால் யாரோ ஸவாமிகள் பண்ணின பூஜை, என்று இவன் ஆழ்ந்து அநுபவித்து மகிழ்ந்த எதுவோ ஒன்று ராவெல்லாமும் மனஸில் சுற்றிச் சுற்றி வருகிறது. மனஸ் ஆனந்தித்ததுதான். இதற்காக ஒரு செலவுமில்லை. கையை காலை ஆட்டி வேலை செய்யும் ச்ரமம் இல்லை, வேறே எந்த விதமான கஷ்டமுமில்லை. ஆனால் அதே நினைவு ராத்ரி பன்னிரண்டு (மணி) , ஒன்று என்று நீடித்துக்கொண்டிருந்தால்? அது பிடிக்கவா பிடிக்கிறது? “தூக்கம் வராமல் உபத்ரவப் படுத்துகிறதே” என்று எரிச்சலாக வருகிறது.

மனஸைத்தான் ‘நிஜ நாம்’ என்று நினைத்துக்கொண்டு அதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட மனஸின் ஆனந்தமும் ஒரு ஸ்டேஜில் பிடிக்காமல், வெறுமனே செத்துப் போனமாதிரி, ஒன்றும் தெரியாமல் தூங்குவதில் ஆசை உண்டாகிறது! தூக்கத்திலே உடம்புக்கோ, மனஸுக்கோ, புத்திக்கோ ஏதாவது கொஞ்சமாவது ஆனந்தம் இருக்கிறதோ? இல்லை. இப்படியிருந்தும் அதிலே ஆசை. நாலு நாள் தூக்கம் இல்லாவிட்டால், உடம்பு, மனஸ், புத்தி எல்லாமே பலஹீனப்பட்டுப் போகிறது. ராஜபோகமாக ஜீவிக்கிறவன், சந்த்ரிகை தாவள்யமாய்க் கொட்டும் ஸலவைக் கல் நிலா மாடத்தில், பட்டு மெத்தையில், சயனித்துக்கொண்டிருக்கிறான். தென்றல் ஜிலு ஜிலு வென்று வீசுகிறது. ப்ரிய பத்தினி பக்கத்திலேயே ஸுநாதமாக வீணாகானம் செய்து கொண்டிருக்கிறாள். அத்தர் வாஸனை மணக்கிறது. ஆனாலும் ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் இத்தனை ஸுகமும் தெரிய வேண்டாம் என்று மறந்து தூங்குவதற்கு ஆசைப்படுகிறான்.

மற்ற ஆசைகளும், ஆனந்தங்களும் அநுபவிக்கும் போதே ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் அலுத்துப் போகிறாற்போல் தூக்கம் மட்டும் தூங்குகிறவனுக்கு அலுத்துப்போவது என்றில்லை. அவன்தான் உணர்ச்சியே இல்லாமல் தூங்குகிறானே, எப்படி அலுப்பு தெரியும்? ஆனால் முழித்துக்கொண்ட பின் மறுபடி கொட்டாவி வந்தால், ‘இது என்ன சனியன்! மறுபடி தூக்கம் வருகிறது? தலையிலே தண்ணியைக் கொட்டிக் கொண்டாவது அதை அடித்து விரட்டுவோம்’ என்று நினைக்கிறான. அதாவது தூக்க ஆசை – ஆனந்தமும் அலுத்துத்தான் போகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனம் ஆத்மாவுக்கும் புலனுக்கும் இடைப்பட்டது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அத்வைதம் தவிர அனைத்திலும் துக்கம்
Next