ஆத்ம ச்ரேயஸுக்கான ப்ரார்த்தனை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

லௌகிகத்தில் நமக்கு எந்த ப்ரார்ததனை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ‘நமக்கு ஒரு குறையுமில்லை; ஒன்றுக்காகவும் நாம் ப்ரார்த்திக்க வேண்டியதில்லை’ என்ற நிறைந்த நிலையை நாம் நிஜமாக அடைகிறவரை ஆத்ம ச்ரேயஸுக்கானவற்றை பகவானிடம் ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தால் அப்படி ப்ரார்த்திப்பதே நமக்கு ஓரளவு தாப சாந்தியாக இருக்கும். நம் ஆத்மாபிவ்ருத்திக்கு எதெது தேவை என்று பகவானுக்கே தெரியும், நாம் கேட்காமலே அவன் கொடுப்பான் என்பதெல்லாம் வாஸ்தவமானாலும்கூட, நம் குறைகளை அவனிடம் நாமே வாய்விட்டுச் சொல்லிக்கொள்வதில் நமக்கு ஒரு ஆறுதல் கிடைக்கத்தான் செய்கிறது. இந்த ரீதியில் நாம் ஆத்ம ச்ரேயஸுக்காக என்னென்னவற்றை ப்ரார்த்திக்க வேண்டும் என்பதை ஆசார்யாள் ‘ஷட்பதீ’ முதல் ச்லோக்தில் சொல்கிறார்.

‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தில் நம் ஆசார்யாள் செந்தில் நாதனுடைய பத்ரவிபூதி மஹிமையில் ஸகல வ்யாதிகளும் தீருவதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். அங்கே ஆசார்யாள் ‘ஆர்த்தி’க்காகக்கூட அவரே பக்தி பண்ணிக் காட்டுகிறார். ‘கனகதாரா ஸ்தவ’த்தை எடுத்துக்கொண்டால் அங்கே ஆசார்யாள் ‘அர்த்தார்த்தி’யின் வேண்டுதலைக்கூட ஒப்புக்கொள்கிற மாதிரி மஹாலக்ஷ்மியிடம் தத்யாத்… த்ரவிணாம்புதாராம் ‘மேகம் மழையை வர்ஷிக்கிற மாதிரி செல்வ தாரையைக் கொட்டு’ என்று ப்ரார்த்திக்கிறார்.

ஆனால், இந்த ‘ஷட்பதீ ஸ்தோத்ர’த்தில் ஆர்த்தனாகவும், அர்த்தார்த்தியாகவும் இல்லாமல், ஞானத்தை விரும்புகிற ஸாதகனான ஜிஜ்ஞாஸு எப்படி ப்ரார்த்தனை பண்ணுவானோ அப்படியே பண்ணச் சொல்லிக் கொடுக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ரார்த்தனை ஈடேறாமையும் நாஸ்திகமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஞானத்துக்கும் விஷ்ணு
Next