மாமா மஹிமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஹிமோத்கிரியே மாதாமஹர் என்ற பெருமை, பிதா மஹர் என்றே ஒருத்தரில்லாத பெருமை இரண்டையும் பெற்ற விக்நேச்வரருக்கு மாமாவை வைத்தும் பெருமை சொல்லியிருக்கிறது. இன்னொரு ச்லோகத்தில்

ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்களா |

ஜநக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராநநம் ||

வழக்கத்துக்கு வித்யாஸமாக முதலில் சொன்ன ச்லோகத்தில் தாயார்வழித் தாத்தாவில் ஆரம்பித்திருக்கிறது என்றேன். அதற்கும் ஸமாதனம் இருக்கிறது. பெற்றோரைப் பிரித்துச் சொல்லும் போது மாதா-பிதா, தாய்-தந்தை என்று அம்மாவை முன் வைத்தே சொல்வது தானே வழக்கமாயிருக்கிறது? வேதத்திலேயே ‘மாதாவை தெய்வமாகக் கொள்ளு’ என்ற அப்புறந்தான், ‘பிதாவை தெய்வமாகக் கொள்ளு’ என்று வருகிறது. அவ்வை வசனமும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதாக இந்த இரண்டு தெய்வங்களில் முதலிடத்தை அன்னைக்கே தந்திருக்கிறது. ஆனதால் இரண்டு வழித்தாத்தாக்களைச் சொல்லும் போதும் முதலில் மாதா மஹரைத்தான் சொல்லவேண்டுமென்று நியாயம் சொல்லலாம்.

அதையும்விட விநோதமாக, இந்த இன்னோரு ச்லோகத்தில் பெற்றோருக்கும் முந்தி மாமாக்காரரைச் சொல்லியிருக்கிறது!

ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய – ” எவருக்கு மாமா மஹா விஷ்ணுவோ.” மாதுலர் என்றால் மாமா. பிள்ளையாருக்கு பிரியமானது மாதுளம் பழம். அவரோ மாதுலருக்கு ப்ரியமானவர்! ஸ்ரீகாந்தன் என்றால் லக்ஷ்மீபதியாக இருக்கப்பட்ட மஹாவிஷ்ணு. இந்தப் பேரைச் சொன்னதால் ச்லோகத்தை மங்களமாக ஸ்ரீ என்று ஆரம்பிப்பதோடு, மாமாவை மட்டுமில்லாமல் மாமியான மஹாலக்ஷ்மியையும் சொன்னதாக ஆகிறது. லோகங்களையெல்லாம் பரிபாலிக்கிற மஹாவிஷ்ணு, லோகம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிற செல்வத்துக்கு அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஆகியவர்களின் மருமானாக இருக்கும் ‘பெரிய இடத்துப் பிள்ளை’ இது என்று காட்டியதாக ஆகிறது.

ஸுப்ரஹ்மண்யருக்கு மாமா உறவு ஜாஸ்தி என்று தெரிந்திருக்கலாம். ‘முருகன்’ என்றவுடனேயே ‘மால்மருகன்’ என்றும் சேர்த்துச் சொல்கிறோம். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் ‘முருகோனே – மருகோனே’ சேர்ந்து சேர்ந்து வரும் மருகன் என்பது மருமகன். பிராம்மணர்கள் மாப்பிள்ளை என்று சொல்வதை மற்றவர்கள் மருமகப் பிள்ளையென்றுதான் சொல்வார்கள். மாமாவுக்கும், அத்தைக்கும் ஒருவன் ஆக வேண்டிய உறவுதான் மருமகன் என்பது ; ‘மருமான்’ என்று (பிராம்மணர்கள்) சொல்வது. அநேகமாக தக்ஷிணத்தில் மாமன் பெண்ணையோ, அத்தை பெண்ணையோதான் ‘முறைப்பெண்’ என்று கல்யாணம் செய்துகொள்வதாயிருப்பதால் மருமானே மாப்பிள்ளையுமாகிவிடுகிறான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாட்டனார் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருமாளும் அம்பிகையும்
Next