நாட்டைக் காத்த கவி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிக்கவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கி விட்டு, விஷயமறிந்த ஸத்துக்களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான்.

தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக் கொண்ட கார்யம் பலிதமானதில் குட்டிக்கவி ஸந்தோஷம் அடைந்தார்.

அதோடு அவர் தாம் கவனம் செய்துகொண்டிருந்த பரிஹாஸ காவ்யத்துக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ச்லோகங்கள் ஆகியிருந்ததால் ‘மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

‘ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், ‘ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி ஆள்கிறவனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யட்ச நிரூபணமாக இந்தக் காவ்யம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் பாடமாக, எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததை இங்கே சொல்லவேண்டும்.

இப்படியாக, ஒரு கவியின் தைர்யம் ஒரு ராஜ்யத்துக்கே நன்மை செய்திருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எருமைத்துதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வங்க வித்வானை வென்ற வாலிபர்
Next