வைகல் மாடக் கோயில்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

வைகல் மாடக் கோயில்

ஊர் - வைகல். கோயில் - மாடக்கோயில். கும்பகோணத்திலிருந்து கரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி, "நாட்டார் வாய்க்காலைக் கடந்து, பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 A.e. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். 'நாட்டார் வாய்க்கால்' மீது உள்ள பாலம் குறுகலானது. ஆதலின் பேருந்து செல்லாது - நடந்தே செல்ல வேண்டும். இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன.-

1) விசுவநாதர் ஆலயம் - ஊரின் தென்பால் உள்ளது. 'வளநகர்' என்று இப்பகுதி வழங்குகிறது. (திருமால் வழிபட்டது) .

2) பிரமபுரீசுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில். (பிரமன் வழிபட்டது)

3) வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். பாடல் பெற்றது.

இறைவன் - சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்.

இறைவி - சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.

தலமரம் - சண்பகம். (தற்போதில்லை) .

சம்பந்தர் பாடல் பெற்றது.

இத்திருக்கோயில் இலக்குமி வழிபட்டது. சண்பகாரண்யம். நித்யவாசபுரம் முதலியன இத்தலத்தின் வேறு பெயர்கள். முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீஸ்வரன், சூரியன் சந்நிதிகள் உள்ளன. படிகளேறிச் சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்புமூர்த்தி - அழகானபாணம். பக்கத்தில் கீழே தனியே அம்பாள் கோயில் உள்ளது.

கோயில் பாடல் பெற்ற பெருமையுடையதாயினும் இன்று சீரழிந்து காண்போர் நெஞ்சும் கலங்குமளவில் உள்ளது. பிராகாரச் சந்நிதிகள் கிலமாகவுள்ளன. பாதுகாப்பும் வசதியும் அற்று கோயில் பொலிவுகுறைந்து காணப்படுகிறது. தரிசிக்கும்போது உள்ளத்தில் மிஞ்சுவது கோயிலின் நிலையை எண்ணிவருந்தும் ஏக்கமே!குடமுழுக்கு நடைபெற்றப் பல்லாண்டுகள் ஆயினவாம். நாடொறும் ஒருகால வழிபாடு சிவாசாரியாரின் உள்ளத்து ஆர்வத்தால் நடைபெறுகிறது.

தற்போதுதான திருப்பணிகள் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு அனப்பப்பட்டுள்ளது. குழு அமைக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.

"துளமதியுடைமறி தோன்று கையினர்

இளமதி யணிசடை யெந்தை யாரிடம்

உளமதியுடையவர் வைகலோங்கி

வளமதி தடவிய மாடக் கோயிலே." (சம்பந்தர்)

-"ஞாலத்து

நீடக்கோர் நாளுநினைந்தேத்திடும் வைகல்

மாடக் கோயிற்குண மதுரமே." (அருட்பா)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. வைகல்நாதர் திருக்கோயில்

வைகல் - மேலையூர் அஞ்சல்

(வழி) ஆடுதுறை - 612 101

தஞ்சை மாவட்டம்.















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநீலக்குடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநல்லம்
Next