திருத்துருத்தி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருத்துருத்தி (
குத்தாலம்)

மக்கள் வழக்கில் 'குத்தாலம்' என்று வழங்குகின்றது. மயிலாடுதுறை - கும்பககோணம் இருப்புப்பாதையில் உள்ள இருப்புப் பாதை நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை முதலிய நகரங்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. ஆற்றிடைக் குறையாகவுள்ள தலங்களுக்குத் 'துருத்தி' என்று பெயர் வழங்கப்படுகின்றது. இத்தலமும் ஆற்றிடைக்குறையில் அமைந்துள்ளதால் இப்பெயர் (துருத்தி) பெற்றது. முன் இருபுறம் சென்ற காவிரி தற்போது கோயிலின் வடபுரம் ஓடுகின்றது. ஒருவகை ஆத்திமரம் - 'உத்தால மரம்' தல விருட்சமாதலின் இத்தலம் 'உத்தாலவனம்' என்று பெயர் பெற்றது. இதுவே மருவி 'குத்தாலம்' என்றாயிற்று.

இறைவன் - உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்.

இறைவி - அமிர்த முகிழாம்பிகை, மிருது முகிழாம்பிகை பரிமள சுகந்த நாயகி அரும்பன்ன வன முலையாள் (ம்ருதமுகுள குஜாம்பிகை)

தீர்த்தம் - காவிரி, சுந்தர தீர்த்தம், வடகுளம் (பத்ம தீர்த்தம்) முதலியன.

தலமரம் - உத்தால மரம் (ஆத்தியில் ஒருவகை)

தலவிநாயகர் - துணைவந்த பிள்ளையார்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

சுந்தரருக்கு உண்டான உடற்பிணி இத்தலத்தீர்த்தத்தில் (சுந்தர தீர்த்தத்தில்) நீராட நீங்கியது. தீர்த்தக்கரையில் சுந்தரர் கோயில் உள்ளது. ஐயடிகள் காடவர்கோன் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

மேற்கு நோக்கிய சந்நிதி. திருக்கோயில். ஊரின் நடுவில் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. இரு பிராகாரங்கள். இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். தனித் தனிக்கோயில்கள். இராஜகோபுரம் மேற்கு வாயிலாக உள்ளது.

இறைவனைப் பூசித்த அம்மைக்குக் காட்சிதந்த இறைவன் அம்பிகையின் கரம் பற்ற, அம்பிகை, தன் பெற்றோர் மகிழ விதிமுறைப்படி மணங்கொள்ளுமாறு வேண்டினார். இறைவனும் அதற்கிசைந்து 'நாமே விதித்த விதியின்படி நடந்து உம்மை மணங்கொள்வோம்' என்று அருள்புரிந்தார். இதனால் இறைவனக்கும் 'சொன்னவாறு அறிவார்' என்று பெயர் வந்தது.

உமையை மணந்துகொள்ள வந்தவடிவம் 'மணவாள நாதர்'. பாதுகையாக வந்த வேதமே - குடையே - உத்தாலமரமாயிற்று. தலவிருட்சத்தின் அடியில் 'பாதுகை' வடிவில் உள்ளது. இதன் எதிர்ப்புறத்தில் - உமையம்மை, திருமணத்திற்கெனக் கோலங்கொண்ட திருமேனியாகிய 'நறுஞ்சாந்திளமூலை அம்மை' உருவம் உள்ளது. அம்பிகையை மணந்து கொள்ளவந்த இறைவனக்குத் துணையாக வந்த விநாயகர் - 'துணைவந்த விநாயகர்' -இவரே தலவிநாயகர். இச் சந்நிதி, 'சொன்னவாறு அறிவார்' சந்நிதியுள்ளது. உமைவழிபட்டதும், வருணன் வழிபட்டுச் 'சலோதரம்' என்னும் HE நீங்கியதும், காளி வழிபட்டுப் பேறு பெற்றதும் தலச்சிறப்பாகும். மற்றும் காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்திற் பேறு பெற்றுள்ளனர்.

கார்த்திகை ஞாயிறு நாள்கள் இத்தலத்தில் விசேஷம். சூரியன் - கதிரவன் வழிபட்டுத் தவஞ்செய்த இடம் கதிராமங்கலம் என்றழைக்கப்படுகின்றது. "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் புலம்பித் திகழுமா காவிரி" ஆலயத்தின் வடபால் ஓடுகின்றது. மற்றதாகிய சுந்தர தீர்த்தம் - பதும தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். இது ஆலயத்தின் வடமேற்கிலுள்ளது. இவை தவிர, இத்தலத்தைச் சுற்றிலும் அக்கினி தீர்த்தம், காளி தீர்த்தம், புண்டரீக தீர்த்தம், காம தீர்த்தம், கதிரவ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருவாவடுதுறை, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, சூரியனார் கோயில், கதிராமங்கலம், திருமணஞ்சேரி, திருப்பந்தணை நல்லூர், திருவேள்விக்குடி முதலிய தலங்கள் உள்ளன. ஆலயத்துள் அலங்காரமண்டபமும், காவிரிக் கரையில் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன.

இத்திருக்கோயில் தருமையாதீனத்திற்குச் சொந்தமானது. நாடொறும் காரண, £கமிக ஆகமங்களின் முறைப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் திருத்துருத்தியுடைய மகாதேவர்', உடையார் சொன்னவாறறிவார்'. 'திருக்கற்றளி மகாதேவர்' என்று குறிக்கப்படுகிறது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் - திருத்துருத்திப் புராணம் - பாடப்பட்டுள்ளது. நாடொறும் ஐந்து கால பூஜை.

"துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்கு மாறிலாதஎன்னை மையல்செய்து இம்மமண்ணின்மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட் (டு)

இறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே" (சம்பந்தர்)

"அள்ளலைக்கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்

பொள்ளலிக் காயந்தன்னுள் புண்டரீகத்திருந்த

வள்ளலை வானவர்க்குங் காண்பரிதாக நின்ற

துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே". (அப்பர்)

"மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்தருவி

வெடிபடக் கரையடுந் திரை கொணர்ந்தெற்றும்

அன்னமாங் காவிரி யகன்கரை யுறைவார்

அடியிணை தொழுதெழு மன்பராமடியார்

சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்

குடியுளாரடிகளைச் செடியனேன்நாயேன்

என்னைநான் மறக்குமாறெம் பெருமானை

யென்னுடம்படும்பிணி இடர்கெடுத்தானே" (சுந்தரர்)

"உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்

கருத்திருத்தி ஊன்புக்குக்கருணையினால் ஆண்டுகொண்ட

திருத்துருத்திமேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை

அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே"

(திருவாசகம்)

"வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின் மேல்கொண்டிருந்து - கஞ்சி

அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான் பாதஞ் சேர்" (ஐயடிகள் காடவர்கோன்)

"-பேராங்

கருத்திருத்தி யேத்துங் கரத்தர்க்கருள் செய்

திருத்துருத்தி யின்பச் செழிப்பே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்

குத்தாலம் - அஞ்சல் - 609 801

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.



















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவாவடுதுறை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவழுந்தூர்
Next