திருப்பறியலூர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருப்பறியலூர் (
(கீழ்ப்) பரசலூர்)

மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது.

வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்டால்தான் மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில், 'செம்பொன்னார் கோயிலை, அடைந்து அவ்வூர் மெயின் ரோட்டில் நல்லானை' என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று 'பரசலூர்' என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் (வலப்புறமாக) திரும்பி 2 A.e. செல்லவேண்டும். இப்பாதை ஒரு வழிப்பாதை - குறுகலானது. இதன் வழியே சென்றால் கோயிலை அடையாலம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. வீரபத்திரை ஏவித் தக்கனைச் சம்ஹரித்த தலம். தருமையாதீனத் திருக்கோயில்.

தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும், தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனைமூலம் பறித்ததால் 'பறியலூர்' என்றும் பெயர்களுண்டு.

இறைவன் - வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர்.

இறைவி - இளங் கொம்பனையான்.

தலமரம் - வில்வம். (பலா என்றும் குறிப்பிடப்படுகின்றது) .

தீர்த்தம் - உத்தரவேதி தீர்த்தம். கோயிலின் பக்கத்தில் உள்ளது.

சம்பந்தர் பாடியது.

சிறிய கிராமம். பழைமையான கோயில். மேற்கு நோக்கியது. ராஜகோபுரம் இல்லை, முன்னால் இரும்புப்பந்தல் போடப்பட்டுள்ளது. கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகின்றது. வலம் வந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கருவறைச்சுவரில், தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. விநாயகரையும், நால்வரையும் வணங்கி, உள் நுழைந்து மண்டபத்தில் இடப்பால் உள்ள தக்ஷி சம்ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். எதிரில் சாளரவாயில் உள்ளது. சூலம், தண்டு, வாள், மணி, கபாலம் வாள் முதலியன ஏந்திய ஆறு திருக்கரங்களடன் இம்மூர்த்தி (உற்சவத்திரமேனி) காட்சி தருகின்றார். கீழே செப்புத் தகட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது.

இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப் போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியாரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராச சபையுள்ளது. மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு - சதுர ஆவுடையார். கோமுகம் மாறியுள்ளது. மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூண்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர். பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.

வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். இக் கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் இல்¬ . சூரியன் மட்டுமே உள்ளார். இங்கு அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடத்தப்படுகின்றது.

கார்த்திகை ஞாயிறு நாள்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிச் செய்துள்ள தலபுராணம் உள்ளது. சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர்" என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் 'திருவீரட்டான முடையார்', 'தஷேஸ்வரமுடையார்' என்று குறிக்கப்பெற்றுள்ளார்.


"விளங்கொள் மலர்மேல் அயன் ஓதவண்ணன்

துளங்கும் மனத்தார் தொழத் தழலாய் நின்றான்

இளங் கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும்

விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே". (சம்பந்தர்)

-"இளமைச்

செறியலூர் கடந்தற் றிருவனையாராடும்

பறியலூர் வாழ் மெய்ப்பரமே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.

கீழ்ப்பரசலூர் - பரசலூர் அஞ்சல் - 609 309

(வழி) செம்பனார் கோயில்.

தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.





















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவிளநகர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருச்செம்பொன்பள்ளி
Next