அம்பர்மாகாளம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

அம்பர்மாகாளம்

கோயில் திருமாளம்/திருமாகாளம்

மக்கள் 'கோயில் திருமாளம்' என்று வழங்குகின்றனர் மயிலாடுதுறை - திருவாரூர்ச் சாலையில் பேரளம் தாண்டிப் பூந்தோட்டம் சென்று அங்குக் கடைவீதியில் "காரைக்கால்" என்று வழிகாட்டியுள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (இடப்புறமாகச்) சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி நேரே (அச்சாலையில்) சுமார் 4 A.I. சென்றால் "கோயில் திருமாளம் - மங்களநாதர் கோயில்" என்று பெயர்ப் பலகையுள்ளது - அவ்விடத்தில் திரும்பினால் கோயிலையடையலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயில்வரை வாகனங்கள் செல்லும். அரிசிலாற்றின் கரையில் தலம் அமைந்துள்ளது. அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவந்தீரக்காளி, இறைவனைப்பூசித்து வழிபட்ட தலம். எனவே "மாகாளம்" என்று பெயர் பெற்றது. வெளிப் பிராகாரத்தில் காளி கோயில் உள்ளது. பழைமையான கோயில். சோமாசிமாறநாயனார் சோமாயாகஞ் செய்த இடம் இதுதான்.

இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு -

சோமாசிமாறநாயனார், நாடொறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்த போது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டு தரும் தொண்டைச் செய்துவந்தார். பரவையாரும் அதைச் சமைத்து .இடசுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் அக்கீரை கொண்டு வந்து நாடொறும் தருபவர் யார் என்று கேட்டு சோமாசிமாறரைப் ப்ற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் யாதென வினவினார். அதற்கு அவர், தான் செய்ய விருக்கும் சோமாயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார்.

மறுக்க முடியாத சுந்தரர், சோமாசி மாறரை அழைத்துக் கொண்டு திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். செவிமடுத்த இறைவன் இசைந்து, தான்வரும் வேடம் தெரிந்து நாயனார் அவிர்ப்பாகம் தரவேண்டும் என்று பணித்தார். நாயனாரும் அதற்கிசைந்தார்.

நாயனார் யாக குண்டம் அமைத்து யாகத்தைத் தொடங்கினார். அவ்விடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் சாலையோரத்தில் உள்ளது. அவ்விடத்தில் ஒரு மண்டபம் இருக்கிறது. அவ்விடத்தை இன்று "பண்டார வாடை திருமாளம்" என்று சொல்கின்றனர். இன்றும் சோமயாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.

யாகம் நடைபெறும் இடத்திற்கு, தியாகராஜப் பெருமான் வெட்டியான் வேடத்தில் (நீசவடிவினராய்) வருகை தந்தார். (நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் முண்டாசு கட்டி, விநாயகரையும், சுப்பிரமணியரையும் சிறுவர்களாக்கி, உமாதேவியை வெட்டிச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு) இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்து ஒடினர், ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியரும் அவ்விடத்திலேயே அஞ்சி நிற்க -தந்தைவருவதை நாயனாருக்கு விநாயகர் குறிப்பாகவுணர்த்தி அச்சத்தைப் போக்கினார் - நாயனாரும் அவர் மனைவியும் இறைவனை அந்நீச வடிவில் நின்று வீழ்ந்து வரவேற்க, இறைவன் மகிழ்ந்து நாயனாருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது வரலாறு. அதனால்தான் அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.

அருள்புரிந்த இறைமூர்த்தமே "காட்சி கொடுத்த நாயகர்" எனப்போற்றப்படுகிறார். இம்மூர்த்தி வலக்காலை ஊன்றி இடக்காலைச் சற்று மடக்கி வலக்கரத்தில் பெருவிரலும் நடுவிரலும் இணைய, இடக்கரத்தை ரிஷபத்தின் சிரசில் ஊன்றிக் காட்சி தருகிறார்.

இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்து கட்குடம் பொங்கிய இடம் "பொங்குசாராய நல்லூர்" (இன்று வழக்கில் கொங்கராய நல்லூர்) என்றும், இறைவன் சுமந்துவந்த பறை தானாக அடிப்பட்ட இடம் "அடியுக்கமங்களம்" (இன்று அடியக்க மங்கலம் ) என்றும், இறந்த கன்றை ஏந்திய இடம் "கடா மங்கலம்" என்றும் இன்றும் வழங்குகின்றன.

இறைவன் - மாகாளேஸ்வரர், காளகண்டேஸ்வரர்.

இறைவி - பக்ஷயாம்பிகை.

தலமரம் - கருங்காலி.

தீர்த்தம் - மாகாகள தீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் - ஐந்து நிலைகள். உள்ளே விசாலமான இடைவெளி. வலப்புறம் அலங்காரமண்டபம். இடப்புறம் மருதப்பர் சந்நிதி. பிராகாரத்தில் மோக்ஷலிங்கம், காளிகோயில் சிவலோக நாதர் சந்நிதி. யாகசாலை முதலியன உள்ளன. இரண்டாவது கோபுரம் அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் பிராகாரத்தில் வன்மீகநாதர், சோமாசியார், அவர் மனைவி சுசீலை, அறுபத்துமூவர், விநாயகர், சுப்பிரமணியர், மேலே உயரத்தில் சட்டநாதர் சந்நிதி, மகாலட்சுமி, ஊசான, ஜ்வரஹர தண்டபாணி முதலிய சந்நிதிகளைத் தொழலாம்.

நேரே மூலவர் தரிசனம். காளி தன் கையால் பிடித்து வைத்து வழிபட்டதாலின் மிகச்சிறிய பாணமாகவுள்ளது. பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியுள்ளது. அம்பாள் சந்நிதி தனியே கிழக்குநோக்கி அமைந்துள்ளது. நாடொறும் ஐந்துகால வழிபாடுகள்.

யாக உற்சவம் மிகவும் ஐதீகமாக வைகாசி ஆயில்யத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று தியகாராஜா வெட்டியான் கோலத்திலும், காட்சி தந்த நாயகர் கோலத்திலுமாக எழுந்தருள்கிறார். அன்று 17 மூர்த்தங்கள் புறப்பாடு - மிகச் சிறப்பாக இருக்குமாம். ஆயில்யத்தில் சோமாசிமாறருக்கு அருள்புரிந்த இறைவன் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் மறுநாள் மகநாளில் காட்சி தருவதாகவும் விழா அமைகிறது.

உற்சவ மூர்த்தங்களுள் தியாகராஜா, காட்சிகொடுத் நாயகர், சேமாசிமாறர், அவர் மனைவியார், வில்லேந்திய முருகன், சோமாஸ்கந்தர், காளி கையில் சிவலிங்கம் பிடிக்குமூ அமைப்புடன் - முதலியவை தரிசிக்கத்தக்கன.

'அம்பர்புராணம் - தலபுராணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்கள்.

(கோயில் சிவாசாரியார் 'அம்பர்' ஊரில் குடியிருக்கிறார். அவரே மாகாளத்திற்கும் வந்து பூஜை செய்கிறார்.)


"அடையார்புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து

மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய

விடையார் கொடி எந்தை வெள்ளைப் பிறைசூடும்

சடையான் கழல் ஏத்தச் சாரா வினை தானே." (சம்பந்தர்)

-ஒருவந்தர்

மாகாளங்கொள்ள மதனைத் துரத்துகின்ற

மாகாளத் தன்பர் மனோலயமே. (அருட்பா)


"காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும்

பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்

ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை

மாகாளங் கைதொழுது வாழ்த்து" (ஐயடிகள் காடவர்கோன்)


அஞ்சல் முகவரி-

அருள்மிகு. மாகாளேஸ்வரர் திருக்கோயில்

கோயில் திருமாளம் - பூந்தோட்டம் அஞ்சல் - 609 503.

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.
































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is அம்பர்பெருந்திருக்கோயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமீயச்சூர் இளங்கோயில்
Next