ஆரூர்ப்பரவையுண்மண்டளி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

ஆரூர்ப்பரவையுண்மண்டளி

மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதயில ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப்பாதை நிலையம். இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம் போக்கியாறும் ஓடுகின்றன.

"பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது. மூலாதாரத்தலம். 'திருவாரூர்த்தேர் அழகு.' பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவித்தலம், எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயர¬க்ஷ எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம், சுந்தரர், திருத்தொணட்த் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. பரவையார் அவதரித்த பதி. 'கமலை' என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம். திருமகள் இராமர் மன்மதன் முதலியோர் வழிபட்ட பதி, முசுகுந்ததோழன் ஆட்சி செய்த சீர்மையுடையது. இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள் - (1) க்ஷேத்ரவரபுரம் (2) ஆடகேசுரபுரம் (3) தேவயாகபுரம் (4) முசுகுந்தபுரம் (5) கலிசெலா நகரம் (6) அந்தரகேசுபுரம் (7) வன்மீகநாதபுரம் (8) தேவாசிரியபுரம் (9) சமற்காரபுரம் (10) மூலதாராபுரம்911) கமலாலயபுரம் என்பன.

தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். செல்வத்தியாகேசர், மனச்சோழனக்கு அருள்செய்த பெரும் பதி. இவ்வரலாற்றைப் பெரிய புரணாத்தின் வாயிலாக அறியலாம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் வரலாற்றை திருமாகாளத் தலபுராணத்தால் அறிகிறோம். திருவாரூரில் பாடல் பெற்ற

தலங்களுள் மூன்று, அவை - 1) திருவாரூர் 2) ஆரூர் அரநெறி 3) ஆரூர்ப்பரவையுள் மண்டளி என்பன.

திருவாருர்க் கோயில் - தியாகராஜா கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவது. ஆரூர் அரநெறி, என்னும் கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது. கீழவிதியில் தேரடியில் உள்ளது. ஆரூர்ப்பரவையுள் மண்டளியாகும். 1) தண்டியடிகள் 2) கழற்சிங்கர் 3) செருத்துணையார் 4) விறன் மிண்டர் 5) நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களுடைய திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தில் பெருஞ்சிறப்பு தியாகேசருக்குத்தான்.

இவருக்கு வீதிவிடங்கள், தேவரகண்டப்பெருமான் தியாகப் பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி முதலாக அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள் (தியாகராஜாவுக்குச்) சொல்லப்பட்டுள்ளன.


இப்பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாவன-

1) ஆடுதண்டு - மணித்தண்டு

2) கொடி - தியாகக் கொடி

3) ஆசனம் - இரத்தின சிம்மாசனம்

4) மாலை - செங்கழுநீர்மாலை

5) வாள் - வீரகண்டயம்

6) நடனம் - அஜபா நடனம்

7) யானை - ஐராவணம்

8) மலை - அரதன சிருங்கம்

9) முரசு -பஞ்சமுக வாத்தியம்

10) நாதஸ்வரம் - பாரி

11) மத்தளம் - சுத்தமத்தளம்

12) குதிரை - வேதம்

13) நாடு - சோழநாடு

14) ஊர் - திருவாரூர்

15) ஆறு - காவிரி

16) பண் - பதினெண்வகைப்பண் என்பன.


சாயரட்சை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதிகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூஜை செய்கின்றனர். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. மற்றையவை (1) நாகைக்காரோணம் (2) திருநள்ளாறு (3) திருமறைக்காடு (4) திருக்காறாயில் (5) திருவாய்மூர் (6) திருக்கோளிலி என்பன.


"சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு

காரார் மறைக்காடு காறாயில் - பேரான

ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி

சத்த விடங்கத் தலம்" - என்பது பழம் பாடல்.


திருவாரூர்க் கோயிலுக்குள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நிதிகள் இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம். இதையே மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் "குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்" என்று தம் வாக்கால் புக்ழந்து பாடுகின்றார்.


இறைவன் - வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.


இறைவி - கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத் பலாம்பாள்.


தலமரம் - பாதிரி.


தீர்த்தம் -1) கமலாலயம் (5வேலிப்பரப்புடையது, தேவதீர்த்தம் எனப்படுகிறது)

(கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்குமூ பழமொழி) கமலாலயம் 64 கட்டங்களையுடையது. மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது) .

2) சங்குதீர்த்தம் - ஆயிரக்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது. அமுததீர்த்தம் என்றும் பெயர்.

3) கயாதீர்த்தம் - ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது.

4) வாணிதீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிராகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

இதுதவிர 'செங்கழுநீர் ஓடை' எனப்படும் ஓரோடை கோயிலுக்கு அப்பால் 1 A.e. தொலைவில் உள்ளது.

மூவர் பாடல் பெற்றது.

கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது. மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் செல்வோம். விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும். உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். மழைவேண்டின் இப்பெருமானக்கு நீர் கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால் நன்கு கறக்க இவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையும் பழக்கமுமாகும், அடுத்த பெரிய பிராகாரத்தல் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம் (பங்குனி உத்திர விழா முடிந்து நடனக்கோலத்தில் தியாகராஜர் எழுந்தருளுமிடம்) , ஊஞ்சல் மண்டபம் (சந்திரசேகரரின் ஊஞ்சல் உற்சவம் நடக்குமிடம்) காணலாம். அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதீர்த்தம் முதலியவை உள்ளன.

அடுத்துள்ளது சித்திரசபாமண்டபம் - பெரியது. இதன் பக்கத்தில் கோயில் ஓரமாகவிருப்பது சிறியது -புராணமண்டபம். அடுத்துக் கமலாம்பாள் சந்நிதி. பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பிகை தவக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆடிப்பூர விழா இச்சந்நிதியில் விசேஷம். பக்கத்தில் உச்சிட்ட பிள்ளையார் உள்ளார்.

மகாமண்டபம் தாண்டி உட்சென்றால் கமலாம்பிகை தரிசனம். நான்கு கரங்களடன் (தாமரை, பாசம், அக்கமாலை, அமைந்தநிலை) யோகாசனத்தில் காட்சி தருகிறாள் அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும். அடுத்தாற்போல் சண்முகர், பாலசுப்பிரமணியர், கலைமகள், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள் - சந்நிதிகள் உள்ளன.

வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு 'முத்திக்கிணறு' எனப்படும். இதை மக்கள் உருமாற்றி 'மூக்குத்திக் கிணறு' என்றழைக்கிறார்கள். ஒட்டுத்தியாகர் கோயில் உள்ளது. சுந்தரரைக் கோயிலுள்ள போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர். "ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட" என்னும் சுந்தரர் வாக்கு இங்கு எண்ணத்தக்கது. அடுத்துள்ளது, தேவாசிரியம் எனப்படும் ஆயிரக்கால் மண்டபம். செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இம்மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் கொண்டு - செங்கோல் செலுத்துவர். அதனால் இஃது ராஜதானி மண்டபம் என்று வழங்கப்படும்.

"தேவாசிரியன் எனும் திருக்காவணம்" என்னும் சேக்கிழார் வாக்குக்கேற்ப இம்மண்டபத்தின் முன்னால் பந்தலிட பலகால்கள் நடப்பெற்றுள்ளமையைக் காணலாம். அடுத்துள்ள தீர்த்தம் - சங்க தீர்த்தம். இதில் இறங்கிக் கைகால் சுத்திசெய்துகொண்டு, ஆரியன் கோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும்.

கோபுர வாயிலில் இடப்பால் விறன்மிண்டர் காட்சிதருகிறார். இவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் - இந்திரன் கொடிமரமும், ராஜநாராயண மண்டபமும் வரும். பங்குனி உத்திர விழா இறுதியில் பெருமான் இம்மண்டபத்தில் எண்ணெய்க் காப்பு மண்டபம் என்று பெயர் ராஜநாராயண சோழன் கட்டியது.

இம் மண்டபத்தின் வலப்பால் விநாயகர், இடப்பால் துர்க்கை. அடுத்து ஜ்வரஹரேஸ்வரர், ஏகாதசருத்ரர் வழிபட்ட சிவலிங்கங்களை வழிபட்டுச் சென்று, அபிஷேகக் கட்டளை அறை இவைகளைக் கடந்து முசுகுந்தரைத் தொழுது, இந்திரலிங்கம் வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும் ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப்பின்பு ஆரூர் அரநெறியை அடையவேண்டும்.

ஆரூர் அரநெறி - இஃது ஒரு தனிக்கோயில். அப்பர் பாடல் பெற்றது.


இறைவன் - அகிலேஸ்வரர்.


இறைவி - வண்டார் குழலி, புவனேஸ்வரி.


நமிநந்தியடிகள் வழிபட்டது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையிலன்றி மற்றத் திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது.

இதை வழிபட்டு, தக்ஷேசவரர், மனச்சக்ரேஸ்வரர், பகீரதேசுவரர், கைலாசத்தியாகர், பாண்டியநாதர், சப்தமாதர், சப்தரிஷீசுவரர், சேரநாதர் ஆகிய சந்நிதிகளை வழிபட்டு, ஆடகேசுவரத்தை அடையலாம்.

ஆடகேசுவரம் - அப்புத்தலம். இங்கொரு நாகபிலமுள்ளது. வழிபட்டு வலமாக வரும்போது தலமரம் - பாதிரி உள்ளது. வணங்கி ,விசுவாமித்திரேசுவரர், மகாபலீசுவரர், ரௌத்திர துர்க்கை, அருணாசலேசுவரர், வருணேசுரவிநாயகர், வருணேசுரர் முதலிய மூர்த்தங்களைத் தொழுதவாறே ஆனந்தேஸ்வரத்தை அடையலாம். மங்கண முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம். அடுத்துள்ள கோயில் விசுவகர்மேசம - கருங்கற் கோயில். அழகான கொடுங்கைகள், சிற்பக்கலை வாய்ந்த தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பிரம்மா முதலிய உருவங்கள் உள.

வணங்கி, வழியிலுள்ள மூர்த்தங்களைத் தொழுதவாறே சித்தீஸ்வரத்தை அடையலாம். மேற்கு நோக்கிய சந்நிதி. அடுத்துள்ளதுதான் தட்சிணாமூர்த்தி சந்நிதிதானம். இங்குத்தான் தருமபுர ஆதின ஆதிகுரு ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள் கமலை ஞானப்பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்கமூர்த்தி பூஜையினை ஏற்றுக்கொண்டார்கள். வழியிலுள்ள ஏராளமான சந்நிதிகளை வணங்கி, தட்டச்சுற்றி மண்டபம் அடைந்து வல்லபை விநாயகரைத் தொழுது துவஜஸ்தம்பத்தை யடையலாம். கொட மரத்து விநாயகர் இங்கு "பொற்கம்ப விநாயகர்" என்றழைக்கப்படுகிறார். தொழுது மேற்கே திரும்பினால் வன்மீகநாதர் சந்நிதி தோன்றுகின்றது, இச்சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால் அதிகார நந்தி காட்சி.

உள்ளே வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர். திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர் (ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவிவழிச் செய்தி) சந்நிதிகளைத் தரிசித்துச் சென்றால் மூலவர் தரிசனம் - வன்மீநாதர் .சுவாமியின் வலப்பால் அர்த்த மண்டபத்தில் சோம மூலாதாரக் கணபதி, நால்வர், பஞ்சமுகவாத்யம், அறுபத்துமூவர் உற்சவமேனிகள், மூலத்திருமேனிகள் ஆகியவை தொழுதவாறே தென்னன் திருவாசல் வழியாகச் சென்று, தியாகேசப்பெருமானைத் தொழலாம். இரத்தின சிம்மாசனத்தில் செல்வத்தியாகர் முன்னே இருவாட்படை விளங்க நடுவில் பூச்செண்டு பொருந்த எழுந்தருளிக் காட்சி தருகிறார்.

தியாகராஜாவின் பக்கத்திலுள்ள அம்மை 'கொண்டி' எனப்படுவள். தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒருபீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத்தான் நாடொறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராஜாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜாவின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கவேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும் - அவை மிகவும் ரகசியமானவை.

வரும்போது வாதாபி கணபதியைத் தொழுலாம். அடுத்து சஹஸ்ரலிங்கம் ,பிட்சாடனர், மகாலட்சுமி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, உற்சவ மூர்த்தங்கள் ஆகியவைகளைத் தரிசித்தவாறே வந்து, மந்திர பீடத்தையும் தொழுதல் வேண்டும். நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன.

வடக்குப்பிராகாரத்தில் உள்ள ரணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும், கடன்கள் நீங்கும். காணிக்கையாக உப்பு கொட்டப்படுகிறது.


இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.

1) எமசண்டர் - எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான்.

2) ஆதிசண்டர் - (சண்டேஸ்வரர்)

சந்திரசகேரர் கோயில். பைரவர் சந்நிதி தரிசிக்கத் தக்கது. அம்மையின் கோயில். தேவி நீலோத்பலாம்பாள் (அல்லியங்கோதை) நான்கு திருக்கரங்கள் - இவற்றுள் இடக்கரம், தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பு மிகவும் அற்புதமானது.

கமலாலயத்தின் குளத்தின் மத்தியில் உள்ளது யோகாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயிலாகும். பிரதோஷ காலத்தில் இங்கு வந்து வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும். திருமுறைப் பாடல்கள், திருவாரூர் மும்மணிக்கோவை, திருவாரூர் நான்மணிமாலை குறவஞ்சி, பள்ளு, திருவாரூர் உலா, முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் கீர்த்தனைகள் கமலாம்பிகை மீது சியாமா சாஸ்திரிகள் பாடியுள்ள நவாவரணக் கிருதிகள் முதலியவைகள் இத்தலத்தைப் பற்றியும் சுவாமி அம்பாளையும் புகழ்ந்து பாடுபவை.

பரவையுண்மண்டளி மற்றொரு தலமாகும். இது தேர் நிலைக்கு அருகில் கீழவீதியில் உள்ளது. தனிக்கோயில் - கிழக்கு பார்த்த சந்நிதி. வருணன் அனுப்பிய கடலை சுவறச் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள தலம். துர்வாச முனிவர் பூஜித்தது.

இறைவன் - தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் தூவாநாயனார் கோயில் என்றழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும்,தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.

வன்மீகநாதரின் சந்நிதியிலுள்ள நந்நிதயின் மேற்பரப்பிலுள்ள கல்லில் 27 நட்சத்திரங்களம் இராசிச் சக்கரமும் அமைந்துள்ளன. இத்தலத்து தேர் அழகுடையது - ஆழித் தேர் என்று பெயர். தியாகேசர் சந்நிதியில் தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது, பஞ்சமுக வாத்யம் சிறப்பானது - ஒன்று தாமரைப் பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமுமில்லாமலும், நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும். மான் தோலால் கட்டப்பட்டது.

இஃது, ஒவ்வொரு முகத்திலும் தனித் தனியாக அடிக்கப்படும் போது ஏழு முறையும், ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் - மிகப் பெரியது. நாடொறும் ஆறு கால பூஜைகள். பங்குனிப் பெருவிழாவும் சித்திரை வசந்தோற்சவமும் ஆடிப்பூரமும் சிறப்புயைன. எல்லா விழாக்களும் மாதாந்திர உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன.

இக்கோயிலில் மட்டுமே செய்யப்படும் முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ 3500- கட்டளையாகும். இவ்வர்ச்சனை ஆண்டு தோறும் தைமாதத்தில் தியாகராஜாவுக்குக் கோயிலில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மிகப்பெரிய கட்டளைகளுள் மிகப் பெரியது அபிஷேகக் கட்டளை. அடுத்தது ராஜன் கட்டளை. ராஜன் கட்டளை தருமையாதீனத்தின் பொறுப்பில் உள்ளது. இவற்றைத் தவிர அன்னதானக் கட்டளை, உள்துறைக் கட்டளை முதலிய பலவும் உள்ளன.

தியாகராஜ லீலை - மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியது.

அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை. தியாகராஜபுர மான்மியம் முதலாக 16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கீழ்க்கோபுரத்திற்கு இடப்புறத்தில் ஆரூரான் கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கமலாலயக் கரையில் வடபால் பச்சையப்ப முதலியார் சத்திரமுள்ளது. வடகரையில் திருவாவடுதுறை ஆதீன மடமும் தெற்கு வீதியில் தருமையாதீன ராஜன்கட்டளை மடமும் உள்ளன. இக்கோயிலில் 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவைபெரும்பாலும் சோழர் காலத்தியவை. செம்பியன்மாதேவி ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது, ஆண்டொன்று ஐம்பத்தாறு திருவிழாக்கள் நடைபெற்றனவாம்.


"நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்

வாதியாவாதலானாளு நாளின்பமே மருவினாயே

சாதியார் கின்னரர் தருமனும் வருணனமேத்து முக்கண்

ஆதியாரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே."

(சம்பந்தர்)


"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும்

கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்

ஓடிளவெண்பிறையாளும் ஒளிதிகழ் சூலத்தினானும்

ஆடிளம்பாம் பசைத்தானம் ஆரூரர் அமர்ந்த அம்மானே." (அப்பர்)


சொல்லிடில் எல்லையில்லை சுவையிலாப் பேதைவாழ்வு

நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தேனல்லேன்

மல்லிகைமாட நீடு மருங்கொடு நெருங்கியெங்கும்

அல்லிவண்டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே." (சுந்தரர்)


"விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் (று)

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்

கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்

அழித்தனர் ஆரூர் அரநெறியாரே." (அப்பர்)


"அம்மானே ஆகமசீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன்பிட வூரன்

தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே." (சுந்தரர்)

வன்மீகநாதர்

பூமேவு திருமடந்தை பொன்முகத்தா மலைமலரப் புவிவிளங்க,

நாமேவு சுருதியிசை முனிஞிமிறு ஞானமண நனியுண் டார்ப்பக்,

காமேவு தமனயிநாட் டமரர்மனக் கவலையிருட் கங்குல் நீங்கத்,

தேமேவு பொழிலாரூர்ப் புற்றிங்கொண் டெழுசுடரைச் சிந்தை செய்வாம்.


தியாகராஜர்

கார்பொருவும் கருங்கூந்தல் செவ்வாய் வெண்ணகைப் பச்சைக் கன்னியோடும்,

தார்கமழ்பூங் காந்தளந்தோட் குமரனொடு மணிச்சிங்கா தனத்து மேவிச்,

சீர்பரவு வான் புலவர் நினைந்தனயா வையும் நல்கிச் சிறப்பின் வைகும்,

வார்புனல்சூழ் வயற்கமலைத தேவர்கள்சிந் தாமணியை மனத்துள் வைப்பாம்.


கமலாம்பிகை

அறந்தழையக் கலைத்தெரிவை வனப்பெயத்ச்

சசியெனும்பேர் அரிவை வாழ

நிறங்கெழுபூ மடந்தையோடு நிலமங்கை

மங்கலத்தின் நிறைந்து மல்கப்

பிறங்குமுயிர்த் தொகையனைத்தும் களிகூரத்

தவம்புரியும் பீடு சான்ற

சிறந்தகம லாலயநா யகிசெம்பொற்

சேவடிகள் சென்னி சேர்ப்பாம்.


அல்லியங்கோதை

தொல்லைமா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச்

செல்வமாண் கருணையாகுஞ் சிறகால் அணைத்துப் போற்றும்

மல்லலஞ் செழுநீர் வாவி வண்கம லாலயத்துள்

அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாம்.


திருப்புகழ்

நீதானெத் தனையாலும் - நீடுழி க்ருபையாகி

மாதானத் தனமான - மாஞானக் கழல்தாராய்

வேதாமைத் துனவேளே - வீராசற் குணசீலா

ஆதாரத் தொளியானே - ஆரூரிற் பெருமாளே.


அசபாநடனப் பதிகம்

நீடுசந்த் ரோதயம் போல்வதன மசையவருள்

நிறைகமல நயனமசைய

நின்றநதி மதியசைய வொன்றுசடை முடியசைய

நிகழ்மந்த காசமசையத்

தோடலர் செவந்தியந் தோடசைய மார்பில்

தொடுத்தசெங் குவளையசையத்

துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி

சூரியர்கள் போலசையமால்

தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு

செம்பொன்மலை வல்லியசையச்

செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன

சிம்மா சனத்திருந்தே

ஆடுமுன் னசபைநட மடியனென் றுங்காண

அருளுவாய் தியாகேசனே

அசைவில்கம லேசனே அசபா நடேசனே

ஆனந்த உல்லாசனே. (ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்)


ஆரூரன் சந்நிதிபோல் ஆரூரன் ஆலயம்போல்

ஆரூரன் பாதத்த ழகுபோல் - ஆரூர்

மருவெடுத்த கஞ்சமலர் வாவிபேல் நெஞ்சே

ஒரு இடத்தில் உண்டோ உரை. (தனிப்பாடல்)


-தக்கநெடும்

தேரூர் அணிவீதிச் சீரூர் மணிமாட

ஆருரில் எங்கள் அரு மருந்தே - நீரூர்ந்த

காரூர் பொழிலுங் கனியீந்திளைப்பகற்றும்

ஆரூர் அரனெறி வேளாண்மையே - ஏரார்ந்த

மண்மண்டலிகர் மருவும் ஆரூர்ப்பரவை

யுண்மண்டலியெம் உடைமையே." (அருட்பா)


க்ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்

உன் கருணை மெய்யாட வுதயரவி யளியாட

உபயசரணங்களாட

உயர்நாதமான சபை யலியாட விந்துவாம்

ஓங்குமிகு தண்டையாட

மின்குலவு நவரத்ன மகரகுண்டலமாட

மிகு கருணை வதனமாட

வெற்றிவேல் தாங்கு செங்கையாட அருளாட

விமல மலர் நயனமாட

என்கண்ணி னிற்குமருள் நகையாட நுதலாட

இட்ட வெண்ணீறாடவே

ஏரார் விராட் புருட னாறுதானத்தே

இலங்கு மூலாதாரமாந்

தென்கமல நகர்மேவு தேவாதி தேவனே

செங்கீரை யாடியருளே

தியாகேசனுமை தவசி நடனஞ் செய்கந்தனே

செங்கீரை யாடியருவே.


"காளைவடி வொழிந்து கையுறவோடை யுறவாய்

நாறும் அணுகி நலியாமுன் - பாளை

அவிழ் கமுகம் பூஞ்சோலை ஆரூரற்காளாய்க்

கவிழ்கமுகம் கூம்புக என் கை." (ஐயடிகள் காடவர் கோன்)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. தியாகராஜசுவாமி திருக்கோயில்

திருவாரூர் - அஞ்சல் - 610 001

திருவாரூர் மாவட்டம்.




Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பள்ளியின் முக்கூடல்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவிளமர்
Next