திருப்பாசூர்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருப்பாசூர்

மக்கள் வழக்கில் 'திருப்பாச்சூர்' என்று வழங்குகிறது.

1. சென்னை - திருத்தணி பேருந்துச் சாலையில், கடம்பத்தூர் சாலை பிரியுமிடத்தில் முதலில் திருப்பாசூர் உள்ளது. சாலையிலிருந்து பார்த்தாலே கோயில் தெரிகின்றது.

2. சென்னையிலிருந்து திருவாலங்காடு வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துச் சாலையில் திருப்பாசூர் உள்ளது.

3. காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளுர் செல்லும் பேருந்துப் பாதையில், கடம்பத்தூரை அடுத்துத் திருப்பாசூர் உள்ளது.

4. திருவற்ளுர் - பேரம்பாக்கம் டவுன்பஸ் திருப்பாசூர் வழியாகச் செல்கிறது.

பரசு - மூங்கில், மூங்கிற்காட்டிலிருந்து வேடுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட இறைவன் வீற்றிருந்தருளுகின்ற தலம். பசுவொன்று மூங்கிற்புற்றில் பால் சொரிய, அதைக் கண்ட வேடர்கள் வெட்டிப் பார்க்க, சிவலிங்கம் வெளிப்படலாயிற்று. வேடர்கள் வெட்டிப் பார்த்தமையால் சிவலிங்கம் மேற்புறத்திலும் பக்கவாட்டுகளிலும் வெட்டுப்பட்டுள்ளது.

வேடர்களால் செய்தியறிந்த கரிகாலன், இக்கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு வரலாறு இக் கோயிலைக் கட்ட எண்ணிய கரிகாலன் காளி உபாசனை பெற்ற, இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னன் ஒருவனடன் ஒருமுறை போர் செய்ய நேரிட்டது. அவ்வாறு போரிடுங்கால் அம்மன்னனுக்குத் துணையாகக் காளி வந்து போரிட்டதால் கரிகாலனால் வெற்றி பெற முடியவில்லை, மனம் சோர்ந்த கரிகாலன் இப்பெருமானிடம் விண்ணப்பித்தான். பெருமான் நந்தியைத் துணையாக அனுப்ப, மீண்டும் கரிகாலன் சென்று போரிட்டான். போரின்போது காளி தோன்ற, நந்தியெம்பெருமான் அவளை உற்றுநோக்க அவளும் வலியடங்கி நின்றாள். நந்தி அக்காளிக்கு விலங்கு பூட்டி இங்கு அடைத்தார், வெற்றி பெற்ற மன்னன் உள்ளம் மகிழ்ந்து இத் திருக்கோயிலைக் கட்டினான் என்பர். இது தொடர்பாகத் தற்போது கோயிலில் வெளிப்பிரகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றக்கால் மண்டபத்தின் முன் 'விலங்கு இட்ட காளி'யின் சிற்பம் உள்ளது.

அம்பாள் வழிபட்டதலம். சந்திரன், திருமால் ஆகியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். திருமால், இங்குள்ள சோமதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வினை நீங்கப்பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கோயிலுள் இதை உணர்த்தும் வகையில் 'வினைதீர்த்த ஈஸ்வரர்' திருமேனி உள்ளது. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த திருக்கோயில் இஃது.

இறைவன் - வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர்.

இறைவி - பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை

நாச்சியார், தம்காதலி (தங்காதலி)

தலமரம் - மூங்கில்.

தீர்த்தம் - 1. சோமதீர்த்தம (கோயிலின் பக்கத்தில் குட்டையாக உள்ளது.)
2. மங்களதீர்த்தம் (ஊருக்கு வெளியில் பெரிய குளமாக உள்ளது. நீரின்றிப் பயன்படுத்தப்படாது உள்ளது.)

சம்பந்தர், அப்பர பாடல் பெற்றது.

மூன்று நிலைகளுடன் கூடிய இராசகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. சுவாமி, அம்பாள் கோயில்கள் தனித்னி விமானங்களுடன் தனித்னிக் கோயிலாகச் சுற்று மதில்களுடன் விளங்குகின்றன. வெளிமதில் இவற்றை உள்ளடக்கியுள்ளது. சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை. வெளிப்பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்நிதிகளுக்கு கிழக்கு நோக்கிய வாயில்கள் இருப்பினும், தெற்கு வாயிலே பயன்படுத்தப்படுகின்றது.

உள்ளே செல்லும்போது அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். வாயிலில் துவாரபாலகியர் உள்ளனர். சுற்றிவரப் பிராகார வசதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் (அபய, வரத, பாசாங்குசம்) அழகான திருமேனியுடன் காட்சியளிக்கின்றாள், இறைவனே அம்பாளின் அழகில் மயங்கி, 'தம்காதலி' என்றழைத்ததாகவும் அப்பெயரே அம்பாளுக்கு இன்று 'தங்காதலி' என்று வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

அடுத்துள்ள வாயிலைத் தாண்டினால் 'செல்வமுருகன்' தரிசனம். எதிரில் நவக்கிரக சந்நிதி, பக்கத்தில் உற்சவ முருகனின் சந்நிதி, அடுத்து சோமாஸ்கந்தர் சந்நிதி. இதையடுத்து 'விநாயகர் சபை' உள்ளது. இச்சபையில் பல்வேறு அமைப்பிலும் அளவிலும் சிறியதும் பெரியதுமாகப் பதினோறு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். வலம்புரி விநாயகர் பிரதானமாக உள்ளார். ஒரு பக்கத்தில் 'வினை தீர்த்த ஈஸ்வரர்' உருவமும் இவரை வழிபட்ட திருமாலின் உருவமும் (ஆதிசேஷனடன் கூடி) உள்ளன, அடுத்த வாயிலைக் கடந்தால் அழகான நடராச சபையை எதிரில் தரிசிக்கலாம். சபையில் பெருமானுடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உள்ளனர்.

சந்திரசேகர், சுக்கிரவார அம்மன், விநாயகர், சண்முகர், வள்ளி தெய்வயானை, நால்வர், பாசூர் அம்மன் (கிராமதேவதை) சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மூலவர் சந்நிதி, வலமாக வரும்போது சப்த கன்னியர் உருவங்கள் உள்ளன. நால்வர் பிரதிஷ்டையில் அப்பர, சுந்தரருக்கு அடுத்து ஞானசம்பந்தர் உள்ளார். பக்கத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தி விளங்கவில்லை. பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. கருவறை முழுவதும் கல்லால் ஆனது, மேற்புற விமானம் மட்டும் கஜப்பிரஷ்டமாக அமைந்துள்ளது - கீழ்ப்புறம் இவ்வமைப்பில் இல்லை. கருவறையின் வெளிப்புறத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலில் 54 கல்வெட்டுக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் உள்ளார். வீரபத்திரிர், பைரவர், சந்நிதிகள் உள.

துவாரபாலகரைக் கடந்து உள் சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். மூலமூர்த்தி - சுயம்பு - தீண்டாத் திருமேனி. சதுரபீட ஆவுடையார்.

இலிங்கம், மேற்புறத்திலும், பக்கவாட்டில் இரு புறங்களிலும் வெட்டுப்பட்டுள்ளது. மேற்புறமும் - மூங்கிற் புதரிலிருந்து வெளிப்பட்டதால் - சொரசொரப்புடன், தழும்புகளுடன் திகழ்கின்றது.

சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை. 18-6-1990ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

'சிந்தையிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்

வந்துமாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வாரூர் போலும்

பைந்தண் மாதவி சோலைசூழ்ந்த பாசூரே.'

'கண்ணின்அயலே கண்ஒன்று உடையார் கழல்உன்னி

எண்ணுந்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்

உண்ணின்று உருக உவதை தருவாரூர் போலும்

பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே'.

(சம்பந்தர்)

'முந்தி மூவெயில் எய்த முதல்வனார்

சிந்திப்பார் வினை தீர்த்திடுஞ் செல்வனார்

அந்திக்கோன் தனக்கே அருள் செய்தவர்

பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே'.

'புத்தியினாற் சிலந்தி யுந்தன் வாயினூலாற்

பொதுப் பந்தரது இழைத்துச் சருகான்மேய்ந்த

சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச்

சிவகணத்துப் புகப் பெய்தார் திறலான்மிக்க

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு

விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டிப்

பத்தர்களுக்கு இன்னமுதாம் பாசூர்மேய

பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே.

(அப்பர்)

-'ஞாலஞ்சேர்

மாசூரகற்று மதியுடையோர் சூழ்ந்த திருப்

பாசூரில் உண்மைப் பரத்துவமே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. வாசீஸ்வரர் திருக்கோயில்

திருப்பாச்சூர் கிராமம் - கடம்பத்தூர் - அஞ்சல் - 631 203

(வழி) திருவள்ளுர் - திருவள்ளூர் மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவாலங்காடு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவெண்பாக்கம் - பூண்டி (நீர்த்தேக்கம்)
Next