கன்றாப்பூர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

கன்றாப்பூர்

கோயில் கண்ணாப்பூர்

1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 A.e. சென்று, ஆதமங்கலம் தாண்டி, கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 A.e. சென்றால் தலத்தையடையலாம். (சாலை பிரியும் இடத்தில் சிறிய ஊர்ப்பலகையுள்ளது. இது மழைக்காலத்தில் விழுந்து விடலாம். எனவே வழிகேட்டுச் சென்று திரும்புதலே சிறந்தது)

2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாகப்) பிரியும் உள் சாலையில் 1 A.e. சென்றால் தலத்தையடையலாம்.

கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது. தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்கவேண்டும்.) சைவப் பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி, மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்ய, கணவன் அது கண்டு அவ்லிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட, அப்பெண் வேறுவழியின்றி கன்று கட்டியிருந்த மூனை (ஆப்பு) யையே சிவபெருமானாகப் பாவித்து வழிபட, ஒருநாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்மூளையைக் கோடரியால் வெட் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று - ஆப்பு - ஊர்) சுவாமி மீது வெட்டிய தழும்பு உள்ளைக் காணலாம். இடும்பன் வழிபட்ட தலம்.


இறைவன் - வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்.


இறைவி - ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை.


தலமரம் - கல்பனை (பனைமரத்தில் ஒருவகை) தற்போதில்லை)


தீர்த்தம் - சிவகங்கை (எதிரில் உள்ளது) .


அப்பர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய கோயில் - மூன்று நிலைகளையுடைய இராஜகோபுரம். எதிரில் வெளியில் அலுவலகமுள்ளது. கொடிமரமில்லை - பலிபீடம் நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள்வலத்தில் தீர்த்தக் கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயகர் மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன், சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்துள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும் இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர் - மற்றிருவர் இல்லை.

வலமுடித்து முன் மண்டபமடைந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி - நின்ற திருமேனி. நேரே மூலவர் தரிசனம். வாயிலைக் கடந்தால் வலப்பால் நடராஜசபை, இடப்பால் உற்சவ மூர்த்தங்கள், மூலவர் - சதுரபீடம், பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது. பிரபையுடன் தரிசிக்கும் போது மனநிறைவாக இருக்கிறது. கோயிலின் பார்வையில் பசுமடம் ஒன்றுள்ளது.

தேவக்கோட்டை திரு. முத்து. க.அ.ராம. அண்ணாமலைச்செட்டியார் அவர்களின் நிவேதனக்கட்டளையிலிருந்து, ஆலயத்திற்குத் தரிசனம் செய்யவரும் வெளியூர் அன்பர்கள் - தக்கவர்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது. நாடொறும் ஐந்து கால பூஜைகள். கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் தோற்றமளிக்கிறது.

வைகாசி விசாகத்தில் உற்சவம். சித்திரையில் மாரியம்மனுக்கு பத்துநாள்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அருள்மிகு.

நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம். அக்காலத்து ஆலயத்தின் பால் சமுதாயத்திற்கிருந்த ஆர்வம்தான் என்ன!


விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி

வெளுத்தமைந்த கீளடுகோ வணமுந் தற்றுச்

செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றும்

செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்

துடியனைய இடைமடவாள் பங்கா என்றும்

சுடலைதனில் நடமாடும்சோதீ யென்றும்

கடிமலர்தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. (அப்பர்)


அருள்மிகு. நடுதறிநாதர் துதி

நயந்திருக்கும் அன்பிற்காய் நடுதறியில் வந்தபிரான்

பயனளிக்கும் பெருங்கருணை படர்ந்திடும் திருவடிகள்

அயர்ந்திருக்கும் மருள்நீக்கி அகத்தடைப்பார் தமக்குநலம்

உயர்ந்திருக்கும் என்பதன்றோ உலகேத்தும் உண்மையதே

அருள்மிகு மாதுமையாள் துதி

பாண்டவ யாற்று மருங்கினிலே

பாரோர்க் கெல்லாம் நெறிகாட்டி

வேண்டுவ ஈந்தே மாதுமையாள்

வீற்றினி திருந்து அருள்புரிவாள்

காண்டகு மமுதாய்க் கலந்தேத்தும்

காதலர் நெஞ்சுள் தனியளியாய்

தூண்டாச் சுடராய் நின்றிடுவாள்

துலங்கும் அவளின் அடிபோற்றி.


"கன்றாப்பூர் நின்ற தறி"

நெஞ்சகத்து மாசகற்றி நேர்மை வழிநடந்து

கொஞ்சுதமிழ்ப் பாவிசைத்துப் போற்றிடுவாய் - அஞ்சாதே

என்றுமுனைக் காத்தருளி ஏற்றமுறு வாழ்வருள்வான்

கன்றாப்பூர் நின்ற தறி.


-"வீறாகும்

இன்றாப்பூர் வந்தொட்டிருந்த திவ்வூரென்னவுயர்

கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நடுதறியப்பர் திருக்கோயில்

கோயில் கண்ணாப்ரூ ¢ - அஞ்சல்

(வழி) வலிவலம், s.o. 610 207.

திருவாரூர் வட்டம் - மாவட்டம்.













Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்காறாயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வலிவலம்
Next