திருப்பருப்பதம்

திருமுறைத்தலங்கள்

திருப்பருப்பதம்

ஸ்ரீசைலம்

வடநாட்டுத் தலங்களுள் ஒன்று.

ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்குப் பக்கத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 A.e. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு அங்கிருந்து நேரே செல்லப் பேருந்து வசதியுள்ளது. சென்னையிலிருந்தும் ஸ்ரீ சைலத்திற்குப் பேருந்து செல்கிறது.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்று. சக்தி பீடத்தில் - இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது. அர்ஜுனம் - மருதமரம். இம்மருதமரத் -தைத் தலமாகக் கொண்டள்ள தலங்கள் மூன்று அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படும். இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனைய இரண்டும்.

1) திருவிடைமருதுழர் - மத்தியார்ச்சுனம் 2) நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சனம் என்பன. சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களால் இப்பெருமானை அருச்சித்து வழிபட்டதால் இத்தலத்திறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.

சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் (ஸ்ரீ) சைலம் எனப்படுகிறது. நந்திதேவர் இங்குத் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும், அவரே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தின் அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. வீரவைசர்கள் இம்மலைப்பகுதியை 'பூகயிலாயம்' என்று புகழ்வர். சிவராத்திரி வழிபாடு ஜோதிர்லிங்கத் தலங்களில் விசேஷமானது. அம்முறையில் இங்கும் சிவராத்திரி நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படகிறது.

ஜோதிர்லிங்கத் தலங்களுள் தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள

மூன்று தலங்களுள் இதுவும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம், திருக்கேதாரம் என்பன.


இறைவன் - மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்


இறைவி - பிரமராம்பிகை.


தலமரம் - மருதமரம், திரிபலாமரம்.


தீர்த்தம் - பாலாழி முதலாகவுள்ள பல தீர்த்தங்கள்.


மூவர் பாடல் பெற்ற தலம்.

மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே திரிபலா மரம் ஆகும். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ் செய்ததால் இது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படும். இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. (கரவீரம் என்னும் பழமையான மரமும் இங்குள்ளது.)

சம்பந்தரும், சுந்தரரும் காளத்தியைத் தொழுத பின்னர் அங்கிருந்தே வடக்கு நோக்கித் தொழுது பாடினர். திருநாவுக்கரசர் மட்டும், தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப்பாடினார்.

சம்பந்தர், அப்பர் பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தர் பதிகத்தில் என்று கூறுகின்றனர். இவ்வாற்றின் தென்கரையில்தான் கோயில் அமைந்துள்ளது.

இம்மலையில் எட்டு சிகரங்கள் உள்ளன. அவை (1) வைடூரிய சிகரம் 2) மாணிக்க சிகரம் 3) பரவாளி சிகரம் 4) பிரம்ம சிகரம் 5) ரௌப்ய சிகரம் 6) க்ஷேமா சிகரம் 7) மரகத சிகரம் 8) வஜ்ர சிகரம் என்பன. இங்கு ஒன்பது நந்திகள் உள்ளன. அவை (1) பிரதம நந்தி 2) நாக நந்தி 3) விநாயக நந்தி 4) கருடநந்தி 5) சிவ நந்தி 6) மகா நந்தி 7) சூரிய நந்தி 8) விஷ்ணு நந்தி 9) சோம நந்தி என்பன.

இவ்வாறே இங்கு ஒன்பது கோயில்களும் உள்ளன. அவை 1) பிரமேஸ்வரம் 2) வருணேஸ்வரம்ட 3) இந்திரேஸ்வரம்ட 4) ஜனார்த்தனேஸ்வரம் 5) சப்தகோடீஸ்வரம் 6) குக்குடேஸ்வரம் 7) ஹேமேஸ்வரம் 8) அக்னேஸ்வரம் 9) மோக்ஷேசுவரம் என்று வழங்கப்படுகின்றன.

கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே, ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகச் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், பஞ்ச நதீஸ்வரர் ஆலயம் முதலியன தரிசிக்கத்தக்கன. தெற்கு வாயில் கோபுரம் 'ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. நாடொறும் காலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை பலவித அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மஹாசிவராத்திரியில் பாதாள கங்கையில் நீராடி, மல்லிகார்ச்சுனரைச் சேவிப்பது மிகப்பெரும் புண்ணியமாகும்.

யாத்திரிகர்கள் தங்குவதற்குச் சத்திரங்களும் விடுதிகளும் உள்ளன.

இத்தலத்திற்குரிய கல்வெட்டுக்கள் விஜய நகர மன்னர்கள், சாளுவ காகதீய மன்னர்கள் காலத்தியவை. இவற்றிலிருந்து, அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, தீர்த்தக்குளம் வெட்டியது. கோயிலில் திருப்பணிகள் செய்தது, கோயில் பணியாளர்கட்கு வீடுகள் கட்டித் தந்தது, முதலான செய்திகள் தெரியவருகின்றன.


சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்

இடுமணி யெழிலானை யேறல னெருதேறி

விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்

படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. (சம்பந்தர்)


கரவிலா மனத்தராகிக் கைதொழு வார்கட்கென்றும்

இரவுநின் றெரியதாடி யின்னருள் செய்யுமெந்தை

மருவலார் புரண்கண்மூன்று மாட்டிய வகையராகிப்

பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கினாரே. (அப்பர்)


மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்

தாமேமிக மேய்ந்துடஞ் சுனைநீர்களைப் பருகிப்

பூமாமர முறிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்

தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே. (சுந்தரர்)


ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய சுலோகம்

"ஸெளராஷ்ட்ரே ஸோமநாதம்பச ஸ்ரீ சைலே மல்லிகார்ச்சுனம்

உஜ்ஜயின்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேச்வரம்

பரல்யாம் வைத்யநாதம்ச டாகின்யாம் பீமசங்கரம்

சேதுபந்தேது ராமேசம் நாகேசம் தாருகாவனே

வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே

ஹிமாலயேது கேதாரம் குஸ்மேசம் சிவாலயே

ஏதானி ஜோதிர் லிங்கானி ஸாயம் ப்ராத படேந்த

ஸப்த ஜன்ம கிருதம் பாபம் ஸ்மரணே வினச்யதி"


ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டையும் இச்சுலோகங்கள் தெரிவிக்கின்றன. அவை சோமநாதம், ஸ்ரீசைலம், உஜ்ஜையினி, ஓங்காரம், வைத்தியநாதம், பீமசங்கரம், நாகேசம், த்ரயம்பகம், குஸ்மேசம ஆகியன மகாராஷ்டிர மாநிலத்திலும், ஸ்ரீ சைவலம் ஆந்தி மாநிலத்திலும், ஓங்காரம், உஜ்ஜையினி மத்தியப் பிரதேசத்திலும், வாரணாசி (விஸ்வேசம்) , கேதாரம் உத்தரப் பிரதேசத்திலும், இராமேசுவரம் தமிழ்நாட்டிலும் உள்ளன.

திருப்புகழ்

ஒன்பது மிருபது மறுபது முடனறு

முணர்வுற இருபத முளநாடி

உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்

வெளியோடு வொளிபெற விரவாதே

தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து

திரிதொழி லவமது புரியாதே

திருமகள் மருவிய திரள்புய அறுமுக

தெரிசனை பெற அருள் புரிவாயே

பரிவுடனழகிய பழமொடு கடலைகள்

பயறொடு சிலவகை பணியாரம்

பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி

எழுதிய கணபதி யிளையோனே

பெருமலை யுருவிட அடியவ ருருகிட

பிணிகெட அருள்தரு குமரேசா

பிடியடு களிறுகள் நடையிடகலைதிரள்

பிணையமர் திருமலை பெருமாளே.


"பாகியற்சொன் மங்கையடும் பாங்கார் பருப்பதத்தில்

போகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீ சைலம் - 518100

கர்னூல் மாவட்டம் - ஆந்திர பிரதேசம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கோகர்ணம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  இந்திரநீல பருப்பதம்
Next