திருக்கோவலூர் (திருக்கோயிலூர்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருக்கோவலூர் (திருக்கோயிலூர்)

சென்னை, விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை, திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து 35 A.e. தொலைவு. திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் சென்றால் தென்பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்து, ஊருள் சென்று, கடலூர் - பண்ருட்டிப் பாதையில் திரும்பிச் சென்றால், கீழையூர்ப் பகுதியில் கோயில் உள்ளது.

வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்க வேண்டும். இவ்வூர், மேலூர் கீழுர் என இருபிரிவானது. கீழுரில் (கீழையூரில்) இக்கோயில் உள்ளது. மேலூரில் வைணவ ஆலயம் உள்ளது. இவ்வூர் மக்கள் வழக்கில், 'திருக்கோயிலூர்' என்று வழங்குகிறது.

அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அந்தகாசூரனை சம்ஹரித்த தலம்.

இத்தலம் வைணவப் பெருமையும் உடையது. இங்குள்ள திரிவிக்ரமப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் முதலிய ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்வியதேசம்.

'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என்று சொல்லப்படும் முதலாழ்வார் மூவரின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம் இதுவே.

அறுபத்துமூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி இஃது 'சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி

மாதொருபாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்

வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு

காதலார் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்"

(பெ.புரா.மெய்.புரா)

இராஜராஜசோழன் பிறந்த ஊர். இவருடைய தமக்கை 'குந்தவ்வை' சுவாமிக்குப் 'பொன் பூ' வழங்கியதோடு சந்நிதியில் திருவளக்குகள் ஏற்றிட 'சாவா மூவா பேராடுகள் 300-ம், 2000 கழஞ்சு பொன்னும் ஊர்ச்சபையாரிடம் ஒப்படைத்த செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம்.

கோயில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ளது.

கபிலர் பாரி மகளிரைத் திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து, அதன்பின்பு வடக்கிருந்து உயிர் விட்ட இடம், கோயிலின் பக்கத்தின் ஆற்றின் நடுவில் 'கபிலர் குகை' என்னும் பெயரில் உள்ளது. இது கோயிலமைப்பில் உள்ளது.

உள்ளே சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில் நின்று பார்த்தால் எதிரில் அறையணிநல்லூர் தலம் தெரிகிறது. இத்திருமணத்திற்குப் பந்தர் போட்ட இடம் 'மணம்பூண்டி' என்னும் பகுதியாக வழங்குகின்றது.

இறைவன் - வீரட்டேஸ்வரர்

இறைவி - சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகநாயகி

தலமரம் - வில்வம்

தீர்த்தம் - தென்பெண்ணை (தட்சிண பினாகினி)

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி. விசாலமான வெளியிடம் முன்புறத்தில் பதினாறுகால் மண்டபமொன்று சற்றுப் பழுதடைந்துள்ளது. முன்னால் வலப்பால் அம்பாள் கோயில் ¢உளளது. சுவாமி ராஜகோபுரம் மிகவும் பழமையானது. மூன்று நிலைகளை யுடையது. உள்நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடப்பால் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலப்பால் 'பெரியானைக் கணபதி'யின் சந்நிதி உள்ளது. ஒளவையார் வழிபட்டு, சுந்தரருக்கு முன் கயிலையை அடைந்ததற்குத் துணையான - ஓளவையைத் தூக்கிவிட்ட - கணபதி இவரே என்பர்.

"கரிமீதும் பரிமீதும் சுந்தரருஞ் சேரருமே கைலை செல்லத்

தரியாது உடன் செல்ல ஒளவையுமே பூசை புரி தரத்தை நோக்கிக்

கரவாது துதிக்கையால் எடுத்து அவர்கள் செலுமுன்னம் கைலை விட்ட

பெரியானைக் கணபதி தன்கழல் வணங்கிவிருப்பமெலாம் பெற்றுவாழ்வாம்"

சோமாஸ்கந்தர் சந்நிதியை அடுத்து மகாவிஷ்ணு தரிசனம். எதிர்த்தூணில் பழனியாண்டவர் உள்ளார். வாயிலின் இடப்பால் வள்ளி தெய்வயானை ஆறுமுகப்பெருமான் மூர்த்தம் உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதி. நடராசசபை உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் உடனுளர். திருமுறைப் பேழையுள்ளது. கபிலர் உருவச்சிலை உள்ளது.

தலமூர்த்தியாகிய அந்தகாசூர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தமாகவுள்ள துர்க்கை மிகவும் விசேஷமாகவுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம். இத் தேவியின் விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் இராசராசன் தாயின் காலத்தியது - மிகவும் பழமையானது என்பர். கருவறைச் சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்பவுள. அடுத்து பிரம்மா, தட்சிணாமூர்த்தி முதலிய கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன.

வலப்பால் பைரவர், நவக்கிரகம், முதலிய சந்நிதிகள் உள்ளன. வரிசையாக சூரியலிங்கம், ஏகாம்பரேஸ்வரர் முதலாக பஞ்சபூத லிங்கங்கள், விசுவநாதர் விசாலாட்சி உருவங்களும் அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், சூரியன், சம்பந்தர் முதலிய உருவங்களும் உள்ளன.

ஜடாமுனி, ஐயனார், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி முதலிய உருவங்கள் குடைவரைகளாக அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சந்நிதியைத் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன.

துவாரபாலகரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி, சுயம்பு, பெரிய உருவம். திருப்பணி செய்த காலத்துத் தோண்டிப் பார்க்க 25 அடிக்கு மேலும் போய்க் கொண்டிருக்க, அப்படியே விட்டுவிட்டுச் சுற்றிலும் ஆவுடையாரைச் சேர்த்து எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகாபரணம் சார்த்தப்பட்டு மூலவர் கம்பீரமாகக் காட்சி தரும் சேவை நம் கண்களை விட்டகலா. அம்பாள் கோயில் தனியே உள்ளது - கோபுரம் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.

நேரே அம்பாள் தரிசனம். நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், அம்பாளுக்கு வெள்ளிக் கவசமும் தாடங்கமும்

அணிவிக்கப்பட்டுச் சேவிப்பது கண்கொள்ளாக் காட்சியாதும். முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன.

மாசிமாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆறாம் நாள் விழாவில் மாலையில் அந்தகாசூரசம்ஹார ஐதிகம் நடைபெறுகின்றது. கார்த்திகைச் சோமவார சங்காபிஷேகம் விசேஷமானது. சஷ்டியில் லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. நவராத்திரி, சித்திரையில் வசந்தோற்சவம் முதலியனவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

நாடொறும் நான்குகால பூஜைகள்.

கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது. இதுவே ஆதி மடாலயம் எனப்படுகிறது. முதல் மூன்று சந்நிதானங்கள் இங்குத்தான் வாழ்ந்து சமாதியடைந்துள்ளனர். நான்காவது சந்நிதானத்திலிருந்துதான் திருப்பாதிரிப்புலியூர் மடாலயம் அமைந்தது என்பர். இச்சமாதிகள், பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளன.

இவ்வூரின் வடக்கு வீதியில் குகைநமசிவாயர் சமாதி உள்ளது. சுவாமி ஞானானந்தகிரியின் தபோவனம் இத்தலத்தில்தான் உள்ளது. அமைதியான சுகத்திற்கு ஏற்ற இடமாக இத்தபோவனம் திகழ்கிறது. மார்கழித் திருவாதிரையில் இங்கு ஐந்து நாள்களுக்கு ஆராதனை நடைபெறுகிறது. மத்வர்களுக்கு முக்கியமானதான ஸ்ரீ ரகோத்தம சுவாமி பிருந்தாவனமும் இத்தலத்தில் (பாலத்தின் அருகில்) உள்ளது. இங்கு மார்கழியில் விசேஷ ஆராதனை நடைபெறுகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் அறையணிறல்லூர் உள்ளது.


"கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த்

திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் c

குரவமேறி வண்டினங் குழலொடுயாழ் செல்கோவலூர்

விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே."

(சம்பந்தர்)


"வழித்தலைப் படவுமாட்டேன் வைகலுந் தூய்மை செய்து

பழித்திலேன் பாசமற்றுப் பரம நான் பரவமாட்டேன்

இழித்திலேன் பிறவிதன்னை என் நினைந்திருக்கமாட்டேன்

கொழித்து வந்தலைக்கும் தெண்ணீர்க்கோவல் வீரட்டனீரே".

(அப்பர்)


-'சொல்வண்ணம்

நாவலர் போற்று நலம் பெறவே ஓங்குதிருக்

கோவலூர் வீரட்டங் கொள் பரிசே.'


அஞ்சல் முகவரி -

அ.மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

கீழையூர் திருக்கோயிலூர் - அஞ்சல் - 605 757

திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)
Next