திருக்கடைமுடி (கீழையூர், கீழுர்)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருக்கடைமுடி ( கீழையூர், கீழுர்)

மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழுர் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது.)

(1) மயிலாடுதுறை - பூம்புகார்ச் சாலையில், மேலையூர் மேலப் பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று, 'சத்திரம் நிறுத்தம்' என்னுமிடத்தில் கீழையூர் 2 A.e.' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையுர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்) .

இறைவன் - கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர்

இறைவி - அபிராமி.

தலமரம் - கிளுவை.

தீர்த்தம் - கருணாதீர்த்தம்.

கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. பிரமன் கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்ட தலம்.

காவிரி இங்கு வடக்கு முகமாகவந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது. சிறிய கோயில் - பழைமையானது. சுவர்கள் கலிமாகவுள்ளன. குளக்கரையில் விநாயகர் உள்ளார். மேற்கு நோக்கிய சந்நிதி. முகப்பு வாயிலைக் கடந்தால் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகளும் அடுத்துத் தலமரம் கிளுவையும் உள்ளன. முன் மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. முன் மண்டபத்தில் பைரவர், நால்வருள் மணிவாசகர் நீங்கலாக மூவர் சிலாரூபங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற கோலம். சுவாமி சந்நிதி பக்கத்தில் நடராச சபை உளது. உற்சவமூர்த்தங்கள் பாதுகாப்பு கருதி 'வெள்நகர்' கோயில் வைக்கப்பட்டுள்ளன. சுவாமி சற்று உயர்ந்த பாணத்துடன் தரிசனம் தருகிறார். திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருவிழா நடைபெறவில்லை. திருவாதிரை, மாட்டுப்பொங்கலன்று சுவாமி புறப்பாடு, கார்த்திகை தீபம் முதலிய ஒரு சில சிறப்பு விழாக்களே நடத்தப்படுகின்றன. நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

'அருத்தனை அறவனை அமுதனை நீர்

விரத்தனைப் பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை யல்லது இங்கு உலகம் ஏத்தும்

கருத்தவன் வளநகர் கடைமுடியே'. (சம்பந்தர்)

-மாவின்

இடைமுடியின் தீங்கனியென் றெல்லின் முசுத்தாவுங்

கடைமுடியின் மேவுங் கருத்தா. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கடைமுடிநாதர் திருக்கோயில்

கீழையூர் - அஞ்சல் 609 304.

தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநின்றியூர்
Next