திருநீடுர்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருநீடுர்

1) மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது.

2) வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வருவோர் திருப்பனந்தாள் சாலையில் சென்று 'பட்டவர்த்தி' வந்து இடப்புறமாகத் திரும்பி மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரையடையலாம். சாலைக்குச் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது. ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் இஃது 'நீடூர்' என்று பெயர் பெற்றதென்பர். தலமரம் மகிழம் ஆதலின் மகிழவனம். வகுளாரண்யம் எனவும் பெயர்களுண்டு.

இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு ஆகியோர் வழிபட்ட தலம். முனையடுவார் நாயனார் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். இந்நாயனாரின் திருமேனி கோயிலில் உள்ளது.

இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும் அதன் காற்சுவடு இலிங்கத்தில் பதிந்தது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.

இறைவன் - அருள் சோமநாதேஸ்வரர்

இறைவி - ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, வேயுறுதோளியம்மை.

தலமரம் - மகிழமரம்.

அப்பர்,சுந்தரர் பாடல் பெற்றது.

முகப்பு வாயில் - மேலே ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் உள்ளார். வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நேரே அம்பாள் சந்நிதி. துவார விநாயகராகச் சிவலோக கணபதி உள்ளார். அவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் சந்நிதி. சோமநாதரின் சுந்தரத் தரிசனம் மனத்திற்குச் சாந்தியை தருகின்றது.

புராகாரத்தில் இடப்பால் மூவர் கணபதிகள் - சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி, சிவாநந்த கணபதி ஆகிய மூவர் காட்சி தருகின்றனர். சப்தமாதாக்களும், சின்மயானந்த கணபதியும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்து உள்ளனர். அடுத்து மூன்று இலிங்கத் திருமேனிகள் - சிவலோகநாதர், கயிலாசநாதர், சாசிவிசுவநாதர் பெயர்களைத் தாங்கியுள்ளன. மகாலட்சுமி சந்நிதி உளது. நடராச சபை தரிசிக்கத்தக்கது. காலபைரவர் சந்நிதி, மூனையடுவார் நாயனார் கைகூப்பியவண்ணம் உள்ளார்.

உள்வாயிலைக் கடந்து துவார விநாயகரைத் தொழுது கிழக்கு நோக்கிய மூலவரைத் தரிசிக்கின்றோம். வெண்ணிறத் திருமேனி, கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. பெருவிழா நடைபெறவில்லை. இத்திருக்கோயிலுக்குரிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்புக் கருதித் திருவிழந்தூர் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. செயல் அலுவலர் இவ்விரண்டிற்கும் ஒருவரே. நாடொறும் இருவேளை மட்டும் வழிபாடுகள். தலபுராணம் உள்ளது.

3- ஆவது இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கந்தமாதவன் என்பவனால் விமானம் கட்டப்பட்டதாகவும், ஊர்ச்சபை கூடிச் சட்டங்களைத் தொகுத்ததாகவும் செய்திகள் தெரிய வருகின்றன.

திருப்புன் கூரும் திருநீடூரும்

கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக்

கடுநரகஞ்சாராமே காப்பான் தன்னைப்

பலவாய வேடங்கள் தானேயாகிப்

பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானைச்

சிலையாற் புரமெரித்த தீயாடியைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோகனை

நிலையார் மணிமாட நீடூரானை

நீதனேன் என்னே நான்நினையாவாறே.' (அப்பர்)

அல்லல் உள்ளன தீர்த்திடுவானை

அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானைக்

கொல்லை வல்அரவம் அசைத்தானைக்

கோலமார் கரியின் னுரியானை

நல்லவர்க்கு அணியானவன் தன்னை

நானும் காதல் செய்கின்றபிரானை

எல்லி மல்லிகையே கமழ்நீடூர்

ஏத்தி நாம் பணியாவிடலாமே'. (சுந்தரர்)

-உருப்பொலிந்தே

ஈடுரிலாதுயர்ந்த வேதுவினா லோங்குதிரு

நீடூரிலங்கு நிழல் தருவே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அருட்சோமநாதர் திருக்கோயில்

நீடூர் - அஞ்சல் - 609 203.

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.



















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்புன்கூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஅன்னியூர் (பொன்னூர்)
Next