பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

பழமண்ணிப்படிக்கரை ( இலுப்பைப்பட்டு)

மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது. இலுப்பை - தலமரம். ஆதலின் இப்பெயர் பெற்றது. இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப்படிக்கரை', ஆயிற்றென்பர். மதூகவனம் என்றும் பெயர் (மதூகம் - இலுப்பை பட்டு - ஊர்) . இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வாளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைத்தாண்டி 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் (அது காட்டும்) சாலையில் (வலப்புறமாகச்) சென்று பாப்பாகுடியைத் தாண்டிச் சென்றால் இத்தலத்தை அடையலாம். பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும் நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

இறைவன் - நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.

இறைவி - அமிர்த்கரவல்லி, மங்களநாயகி.

தலமரம் - இலுப்பை.

தீர்த்தம் - பிரமதீர்த்தம், அமிர்த திர்த்தம்.

தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர், வீமன் வழிபட்டது மகதீஸ்வரர், அருச்சுனன வழிபட்டது படிக்கரைநாதர், நகுலன் வழிபட்டது பரமேசர், சகாதேவன் வழிபட்டது முத்தீசர், என்று சொல்லப்படுகிறது.

தலவிநாயகர் - வலம்புரி விநாயகர், நடனவிநாயகர் என இரு

விநாயகமூர்த்தங்கள். திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

திருவாவடுதுறை ஆதீனக் கோயில்.

ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்ளே இடப்பால் தலமரம் இலுப்பை உள்ளது. பிராகாரத்தில் வீமன், நகுலன், பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும், வலப்பால், அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன. இடப்பால் சுப்பிரமணிரும், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச் சகாதேவன் லிங்கமும் உள்ளது. வலம்முடித்துப் படிகளேறி மேலே சென்றால் நேரே சுவாமி சந்நிதி (நீலகண்டேஸ்வரர்) தரிசனம்.

மேல் மண்டபத்தில் வலப்பால் தனிக்கோயிலில் படிக்கரைநாதரும் மங்கலநாயகியும் இருதனிச்சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். நடராசசபையில் உற்சவத் திருமேனிகளும் வைக்கப்பட்டு உள்ளன. பெருவிழா சித்திரைப் பௌர்ணமியில் ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. சிவராத்திரி, நவராத்திரி, நடராசர் அபிஷேகங்கள், சஷ்டி முதலிய உற்சவ விசேஷங்கள் நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு கால வழிபடுகள். இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.

"முன்னவன் எங்கள் பிரான்முதல் காண்பரிதாயபிரான்

சென்னியில் எங்கள் பிரான் திருநீல மிடற்றெம்பிரான்

மன்னிய எங்கள் பிரான் மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப்

பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப் படிகரையே." (சுந்தரர்)

நீர்பூத்த தாமரைப்பூ வுரியானுங்

கரியானு நெடிய வானத்

தேர்பூத்த மற்றோரு முற்றோரும்

பெருவரங்க ளிறைஞ்சி யெய்தக்

கார்பூத்த விருப்பைவன விருப்பைவன

மெனப்புரிவோன் கலைநி லாவிற்

றார்பூத்த முடிக்கரைகொள் படிக்கரைநா

யகன்மலர்த்தா டலைமேல் வைப்பாம் (தலபுராணம்)

-தாழ்வகற்ற

நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற

மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்

இலுப்பைப்பட்டு - மணல்மேட அஞ்சல் 609 202.

மயிலாடுதுறைவட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.





 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவாழ்கொளிப்புத்தூர் (திருவாளப்புத்தூர், வாளளிப்புத்தூர்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  ஓமாம்புலியூர்
Next