திருக்கோவில் வழிபாட்டு குழு சந்திப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் அருகில் இருக்கும் உத்திரமேரூர், அச்சிரப்பாக்கம், திருக்கழுகுன்றம் தாலுகாவில் இருக்கும் 200 கிராமங்களிலிருந்து 710 பேர் ஸ்ரீமடத்தில் நடைபெற்ற திருக்கோவில் வழிபாட்டுக் குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காலையில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் தரிசனத்திற்கு பிறகு பிரசாதம் உட்கொண்டு முல்லுகுளத்தூர், பண்டூர் மற்றும் பெரும்பேடு கிராமத்து மக்கள் பஜனைகள் பாட அனைவரும் ஊர்வலமாக  ஸ்ரீமடத்திற்கு வந்தனர். 

திருக்கோவில் வழிபாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பம்மல் விஸ்வநாதன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். 

திருக்கோவில் வழிபாட்டுக் குழுவின் உறுப்பினர் ஸ்ரீ கண்ணன் குழுவின் செயல்பாட்டைப் பற்றியும் வார இறுதியில் பயணம் செய்த கோவில்கள் பற்றியும் விவரித்தார்கள். பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பல கிராமப்புற கோயில்களுக்குப் பயணம் செய்ததையும் தெரிவித்தார்கள்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தம்முடைய  அநுக்ரஹ பாஷணத்தில் கோவில்கள் அருகில் வசிக்கும் நன்மைகள் பற்றி விளக்கினார்கள்.  ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள்  கிராமத்து நிலங்களை பாதுகாப்பதை பற்றியும் கிராமத்து மக்கள் விவசாயம், கைத்தொழில் மற்றும் ஆலய வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் கூறினார்கள். திருகோவில்களில் தீபம் ஏற்ற வேண்டும் மற்றும் ஒரு முறையாவது  நைவேத்தியம் கண்டிப்பாகப்  பண்ண வேண்டும் என்றும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் கூறினார்கள். புதிய கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக கிராமத்து மக்கள் இணைந்து பழுதுபட்ட கோவில்களை  புதுப்பிக்கும் முயற்சி மற்றும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஸ்ரீமடம் திருக்கோவில் வழிபாட்டுக் குழு மூலமாக உதவி புரியும் என்றும் கூறினார்கள். பின்னர்,  ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் எல்லோருக்கும் ஆசி வழங்கினார்கள்.

கிராமத்து மக்களுக்கு ஒரு பையில் ஆலய வழிபாடு, திருவிளக்கு, பூஜை பற்றிய புத்தகங்கள், பஜனை சி.டி., புகைப்படம், புத்தகம், பேனா, மற்றும் விபூதி குங்குமம் வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்