ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் விஜய யாத்திரை – 30 செப்டம்பர், 2012

ஆஷாட பூர்ணிமா அன்று வியாச பூஜையுடன் துவங்கிய சாதுர்மாஸ்ய விரதம் பத்ரபூர்ணிமா அன்று நடைபெற்ற விஸ்வரூப யாத்திரை நிகழ்ச்சியுடன் பூர்த்தி பெற்றது. ஸ்ரீமடத்தில் யாத்ரா தானம் செய்த பிறகு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் விஸ்வரூப யாத்திரை சென்றார்கள். ஸ்ரீமடத்தின் முக்கிய வாயிலில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீ ஆதி சங்கர பாகவத்பாதாளின் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தரிசனம் செய்த பிறகு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் கூடி இருந்த பக்தர்கள் யானை மற்றும் துந்துபி வாத்யம் முழங்க ஊர்வலத்தை தொடங்கினார்கள். 

முதலில் கிழக்கை நோக்கிச் சென்ற ஊர்வலம் பிறகு வடக்கில் இருக்கும் காஞ்சி ரயில் நிலையம் அருகில் இருக்கும் எல்லை அம்மன் கோவில் நோக்கிச் சென்றது. இந்த யாத்திரை காஞ்சிபுரம் வடக்கு சுற்றளவை  ஒட்டி   அமைந்தது. ரயில்  தண்டவாளத்தை கடந்து   ஊர்வலம் இந்திரா நகரை வந்து அடைந்தது. ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கு பூர்ணகும்பம்  கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்தோத்திரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணுற மர்தனம்  I
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்  II

பின்னர், வழக்கப்படி ஸ்ரீமத் பகவத் கீதையின் 11வது   அத்தியாயத்தைப் பாராயணம் செய்தார்கள். அந்த அத்தியாயத்தில் இருக்கும் முக்கியமான ஸ்லோகங்களை திரும்பத் திரும்பப் பாராயணம் செய்தார்கள். அதன் பின்னர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தீப ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. விஸ்வரூப யாத்திரை பூர்த்திக்குப் பிறகு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ மடத்திற்குச் சென்றார்கள்.


மேலும் செய்திகள்