மங்கையர்க்கரசியாரும் திருஞானசம்பந்தரும் பாண்டிய நாட்டில் அப்போதும் சமணர்களின் செல்வாக்கு அதிகம் இருந்தது ராஜ

மங்கையர்க்கரசியாரும் திருஞானசம்பந்தரும்
பாண்டிய நாட்டில் அப்போதும் சமணர்களின் செல்வாக்கு அதிகம் இருந்தது. ராஜா மாறவர்மாவே  அந்த மதத்துக்கு மாறி விட்டான்.

”ஒருத்தரும் சிவாலயம் போகக் கூடாது; விபூதி இட்டுக் கொள்ளப்படாது” என்றெல்லாம் அவன் ஆக்ஞை பண்ணிவிட்டான். “யதா ராஜா ததா ப்ரஜா” – “அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதால் ஜனங்களும் அதற்கு அடங்கி நடக்க வேண்டியிருந்தது.

எல்லாரையும் விட ஒரு ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் நினைக்கிற பிரகாரமே பண்ண வேண்டியவர் மந்திரிதான்; இதேபோல் ஒரு ஆண் பிள்ளைக்கு எல்லோரையும் விட அடங்கியிருக்க வேண்டியது அவனுடைய பெண்டாட்டிதான். பாண்டிய ராஜா விஷயத்திலோ, வெளிப்படக் காட்டிக் கொள்ளாவிட்டாலும்,  அவனுடைய மந்திரி குலச்சிறையாரும் பத்தினி மங்கையர்க்கரசியும் தான் உள்ளூர அவன் ஆக்ஞைக்குக் கட்டுப்படாமல் இருந்தது.

அந்த இரண்டு பேரும் சிவபெருமானிட்த்தில் பரம பக்தி கொண்டவர்கள். ராஜா ஆக்ஞையை, பதியின் உத்தரவைப் பகிரங்கமாக அவர்கள் ஆக்ஷேபிக்க முடியாவிட்டாலும், ரகசியமாக ஈச்வர ஆராதனையே பண்ணிக் கொண்டிருந்தார்கள். மங்கையர்க்கரசி புடவை ரவிக்கைக்குள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் பண்ணிக் கொள்வாளாம். பதி சொல்லை எதிர்த்துச் சண்டை போடாமல், அதற்காக சாச்வதமான ஸநாதன தர்மத்தையும் விட்டு விடாமல் இப்படி சாதுர்யமாக நடந்து பார்த்தாள். ஆனாலும் அவளுக்கு மனஸை உறுத்திக் கொண்டுதானிருந்தது. “மனஸ் ஸாக்ஷிப்படி புருஷனையும் அநுசரிக்க முடியவில்லை; தைரியமாக தர்மத்தையும் அநுஷ்டிக்க முடியவில்லையே” என்று வேதனை பட்டுக்கொண்டு, இதற்கு என்ன விமோசனம் என்று அவள் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தபோதுதான், அவளுடைய மனக் கவலைக்கு மருந்தாக ஒரு சமாசாரம் தெரிய வந்தது.

“ஸம்பந்தர் என்று ஒரு அருள் குழந்தை. அது சிவபக்தி மஹிமையால் தேவாரம் பாடிக்கொண்டே என்னென்னமோ அற்புதங்களைப் பண்ணியிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தை இப்போது திருமறைக்காட்டில் – வேதாரண்யம் என்பது இதுதான் – அப்பரோடு கூட இருக்கிறதாம்; அது கால் வைக்கிற ஊரில் மற்ற மதம் போய், பூலோக கைலாஸமாகி விடுகிறதாம்” என்றெல்லாம் அவள் கேள்விப்பட்டாள்.

உடனே மந்திரியைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக ஆலோசனை பண்ணினாள். ஸம்பந்தரை எப்படியாவது மதுரைக்கு வர வைத்துவிட்டால் பாண்டியனையும் பிரஜைகளையும் மறுபடி தன் மதத்துக்குத் திருப்பி விடலாம்; அதுதான் விமோசனத்துக்கு வழி என்று தோன்றுகிறது என்று குலச்சிறையாரிடம் சொன்னாள். அவரும் ஒப்புக் கொண்டார்.

இரண்டு பேரும் சேர்ந்து ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்குத் தூது அனுப்பினார்கள். அவரும் ஆனைமலை வழியாக வந்து சேர்ந்தார். கதையை ஓட்டமாக ஓட்டிக் கொண்டு போகிறேன்.

அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே – அவர் பதிகம் பாடவில்லை – என் மாதிரி உபந்நியாஸம் பண்ணவில்லை – ஒரு அற்புதமும் பண்ணவில்லை – வெறுமே அவருடைய தர்சன மாத்திரத்திலேயே மதுரை ஜனங்களுக்கு ஒரு பக்தி வந்து விட்டது.  நடுவாந்திரத்தில் மங்கிக் கிடந்த மீனாக்ஷி சுந்தரேச்வர ஆலயத்துக்கு அவர் போக, ஜனங்களும் ராஜ ஆக்ஞை பற்றி ஞாபகமே இல்லாமல் அவரோடு கூட்டமாகப் போனார்களாம்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு ஜைனர்கள் ராஜாவிடம் போய், வசியம் பண்ணுகிற துர்மாந்திரீக சக்தியோடு ஒரு சின்னப் பிள்ளை வந்திருப்பதாகவும், அது தங்களுக்குக் “கண்டுமுட்டு” என்றும் சொன்னார்களாம். இந்தத் தகவலைக் கேட்டது தனக்குக் “கேட்டுமுட்டு” என்று பாண்டியன் சொன்னானாம். ”கண்டுமுட்டு” என்றால் கண்ணால் பார்த்த்தாலேயே தீட்டு என்று அர்த்தம். “கேட்டுமுட்டு” என்பது காதால் கேட்கிறதாலேயே ஏற்படும் தீட்டு.

அவர்கள் ஸம்பந்தரைக் கண்ட்தாகச் சொன்னதே தீட்டு என்று பாண்டிய ராஜா நினைத்திருக்கிறான்.

அந்த ஜைனர்கள் அன்றைக்கு ராத்திரி என்ன பண்ணினார்கள் என்றால் ஸம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு நெருப்பு வைத்து விட்டார்கள்! பரமேச்வர சித்தம் என்ன என்று அப்போது ஸம்பந்தருக்குப் புரிந்தது. “மதுரையில் மறுபடியும் விபூதி, ருத்ராக்ஷம் பரவ வேண்டும். ப்ரஜைகள் சிவபக்தி செய்தால் அதற்காகத் தண்டிக்கிற ராஜாவுக்கே தண்டனை கொடுத்துத் திருத்த வேண்டும்” என்பதுதான் ஈச்வர சங்கல்பம் என்று தெரிந்து கொண்டார். அதனால் ஜைனர்கள் வைத்த நெருப்பு ராஜாவையே தாக்கித் தண்டிக்கட்டும் என்று நினைத்தார். “அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே” என்று பாடினார்.

அந்தத் தீ வேகமாய்ப் போய் ராஜாவைத் தஹித்துப் பொசுக்கிவிடாமல் நிதானமாகவே, உயிர் போகிற மாதிரி கொடுமை பண்ணாமலே, அவனை வருத்த வேண்டும் என்ற கருணையால்தான் “பையவே” என்று சொன்னார் என்பார்கள்.

நெருப்பு பாண்டியன் வயிற்றிலே புகுந்து எரிச்சல் வலியாக வாட்டி தேஹம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. ’வெப்பு நோய்’ என்று அதைச் சொல்லியிருக்கிறது.

அப்பருக்கும் சூலைநோய் என்று வயிற்றில் உபாதை கொடுத்தே ஈச்வரன் ஆட்கொண்டான். அவர் அப்போது தாமே போய்த் திலகவதியாரின் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொண்டார். இப்போது பாண்டியனுக்காக மங்கையர்க்கரசி குலச்சிறையாரையும் அழைத்துக்கொண்டு ஸம்பந்தரிடம் போய், அவர் காலில் விழுந்தாள். முதலில் தன் பதியுடைய மதி திருந்த வேண்டுமென்பதற்காகச் சம்பந்தரை வரவழைத்தவள், இப்போது அவரிடம் பதி உயிர் பிழைக்க வேண்டும் என்று மாங்கல்ய பிக்ஷை வேண்டினாள். அவர் ஈச்வர ஸங்கல்பம் எப்படி இருக்கிறதென்று பிரார்த்தனை சக்தியினால் தெரிந்து கொண்டார். தாம் ராஜாவை சொஸ்தப்படுத்தி, அதன் மூலம் ”வேத வேள்வியை நிந்தனை செய்துழல்..அமணரை வாதில் வென்றழிக்கத் திருவுளமே” ஈச்வரன் கொண்டிருப்பதாக ஸுந்தரேச்வர ஸந்நிதானத்தில் உத்தரவு பெற்று நேரே அரண்மனைக்கே வந்து விட்டார்.

ராஜாவைக் குணப்படுத்துவதற்காக ஏகப்பட்ட ஜைனர்கள் தங்களுடைய மந்திரங்களை ஜபித்துக்கொண்டு மயில் பீலியும் கையுமாகக் கூடியிருந்த மண்டபத்தில் – அவர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் – இப்படி இந்தச் சின்னக் குழந்தை தன்னந்தனியாக வருகிறதே என்று அப்போது மங்கையர்க்கரசி பதறிவிட்டாள். அவரைப் பற்றி அவள் கேட்டிருந்த அற்புத சக்தியெல்லாம் அந்த சமயத்தில் அவளுக்கு மறந்து போய், ஒரு தாயாரின் ஹ்ருதயமே அவளிடம் பேசிற்று. “மஹா பெரிய மந்திரவாதிகள் இருக்கிற இடத்தில் இந்தக் குழந்தைப் பிள்ளை வருகிறதே! அதுவாகவேயா வருகிறது? நாமல்லவா வலிந்து ஆளனுப்பிக் கொலைக் களத்துக்கு வரவழைத்து விட்டோம்?” என்று ரொம்ப ‘கில்டி’யாக நினைத்துக் கொண்டாள். அப்போது அவள் கவலையெல்லாம் “சைவமே போய் விட்டுப் போகட்டும்; ஜைனந்தான் இருந்து விட்டுப் போகட்டும்; பதியின் தேஹ சிரமம்கூட எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; இந்தக் குழந்தைக்கு ஒரு கெடுதலும் வராமல் இருந்து விட்டால் அதுவே போதும்’ என்பதாகத்தான் இருந்தது!
அவள் மனஸில் படுகிற வேதனை ஸம்பந்தருக்குத் தெரிந்தது. உடனே அவளைக் கூப்பிட்டு ஒரு பதிகம் ஆறுதலாகப் பாடினார்.

ஆழ்வார், நாயன்மார்களைப் பற்றிய கதைகளில் உள்ள அநேக நிகழ்ச்சிகளுக்கு அவர்களுடைய பாட்டுக்களிலேயே direct reference (நேர் குறிப்பு) இருக்கிறது என்று சொல்ல முடியாது.  மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் ஸம்பந்தரை வரவழைத்ததை ஏற்றுக் கொண்டு அவர் மதுரைக்கு வந்ததற்கும், அப்புறம் அவள் பயப்பட்டபோது அவளுக்குத் தைரியம் கொடுத்ததற்கும் வெளிப்படையாகவே ஸம்பந்தரின் தேவாரத்தில் ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.

“மஹா பெரிய மந்திரவாதிகளாகத்தான் இருக்கட்டுமே! ஆனாலும் ஈச்வர ப்ரசாதம் இல்லாதவர்கள் எத்தனை பலிஷ்டரானாலும் அவனை நம்பியவருக்கெதிரில் துரும்பு மாதிரிதான். நான் வருகிற வழியில் ஆனைமலை முதலான இடங்களில் சமணர்கள் எனக்குப் பண்ணின தீங்கெல்லாம் என்ன ஆச்சு? இந்த ஈனர்களுக்கு இளைத்த எளியவனாக நான் ஆகிவிடுவேனா? இப்படிச் சொல்வது அஹம்பாவத்தினாலா? இல்லை. அந்தப் பரமேச்வரன் என் பக்கத்திலேயே நிற்கிறானே, அந்தப் பக்க பலத்தினால்தான் சொல்கிறேன். என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்தவன் அவந்தானே? அவன் என்னை விட்டு விடுவானா? அவன் எனக்குள்ளேயே புகுந்து கொண்டிருக்கிற போது, ‘நான்’ என்று அகம்பாவமாகச் சொல்லிக்கொண்டு செய்ய என்ன இருக்கிறது?“  என்று இந்த மாதிரி கருத்துக்களை வைத்து ஸம்பந்தர் பதிகம் பாடினார்:
மானினோர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்!
“மான் மாதிரிக் கண் படைத்த மாதரசியே! ‘வழுதி’ என்கிற பாண்டியனுக்கு மகா பெரிய தேவியாய் இருக்கப்பட்டவளே!”
“வழுதிக்கு மாபெருந் தேவிகேள்” என்கிறார். எதைக் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார்?
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்று நீபரி வெய்திடேல்
”பால் நல்வாய்” என்பது ஸந்தியில் ‘பானல்வாய்’ என்றாயிருக்கிறது. “பால் குடிக்கிற பாலனாக நான் இருக்கிறேனே, இந்த சூராதி சூரர்களுக்கு எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறேன் என்று நீ பயப்படாதே, கவலைப்படாதே – பரிவு எய்திடேல்.”

ஏதோ ‘பெரிய புராணத்’திலேதான் கதையாக இட்டுக் கட்டிக் குழந்தைப் பிள்ளையாயிருந்தபோதே ஸம்பந்தர் மகத்தான காரியங்களைச் சாதித்தார் என்று எழுதினதாகத் தோன்றினால் அது தப்பு; அவர் வாயாலேயே அவர் தம்மைப் பால்வாய்ப் பிள்ளையாகச் சொல்லிக் கொள்வதால் உண்மை ஊர்ஜிதமாகிறது.

’பால்வாய்’ என்று மட்டும் சொல்லாமல் தன் வாய்க்குத் தானே ‘நல்’ என்று பாராட்டி அடைமொழி ஏன் போட்டுக் கொண்டார்? அவரோ அஹம்பாவமே இல்லாதவர். ஏன் சொன்னாரென்றால் அந்தப் பால் ஸாக்ஷாத் தேவியுடையதாக இருந்த்தால்தான்! ஏதோ பசும்பாலாக இருந்திருந்தால் “நல்லவாய்” என்று சொல்லியிருக்க மாட்டார்.

”ஆனைமலை முதலான இடங்களில் எத்தனையோ இன்னலைத் தந்த – நான் தங்கியிருந்த மடத்துக்கே நெருப்பு வைத்த – இந்த ஈனர்களால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லையே:
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே
”என்னை இவர்களுக்கு எளிசு பண்ணிவிட மாட்டான் என் கூடவே நின்று கொண்டிருக்கிற ஆலவாய் அரன்.”

ஆலவாய் என்பது மதுரை. அரன் என்றால் ஹரன். சிவ நாமங்களுக்குள் ஸம்பந்தருக்கு ரொம்பவும் பிடித்த பெயர்.

இப்படியெல்லாம் அவர் மங்கையர்க்கரசியைத் தேற்றின பிறகு, ஜைனர்களுக்கும் ஸம்பந்தருக்கும் எந்த மதம் உசந்ததென்று ராஜாவின் உடம்பைக் குணப் படுத்துவதை வைத்தே பலப் பரீ‌க்ஷை நடந்தது. Trial of strength நடந்தது.

இதற்குக் காரணம் மங்கையர்க்கரசிதான். “சைவமும் ஜைனமும் பதியின் உடம்பும் எப்படி வேணுமானாலும் போகட்டும்; இந்தக் குழந்தை ஆபத்தில்லாமல் மீண்டால் போதும்” என்று சற்று முந்தி நினைத்தவளுக்கு இப்போது ஸம்பந்தரிடம் அபார நம்பிக்கை வந்து விட்டது. அதனால், இவராலே இப்போது சைவத்தையும் காப்பாற்றிவிட வேண்டும், பதியையும் காப்பாற்றிவிட வேண்டும். இரண்டையும் சேர்த்து ஒரே காரியத்தில் முடிக்கப்பண்ணி விட வேண்டும் என்று நினைத்தாள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற மாதிரி.

ராஜாவுக்குச் சரீரம் முழுக்க வெப்பு நோய் பரவியிருந்ததல்லவா? இப்போது அதை ஜைனர்களும், ஸம்பந்தரும் அவரவருடைய மதத்தின் மந்திர சக்தியால் குணப்படுத்திப் பார்க்கட்டும்; யார் குணப்படுத்துகிறார்களோ அவருடைய மதமே ஜெயித்ததாக அர்த்தம் என்று மற்றவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றாள்.

அவஸ்தைப்பட்டவன் ராஜாதானே? அதனால் முன்னே ‘கேட்டுமுட்டு’ என்ற அவனே இப்போது சடக்கென்று ஒப்புக்கொண்டு விட்டான்.

அவனுடைய சரீரத்தை ஜைனர்களும் ஸம்பந்தரும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு அந்தந்தப் பாதியைத் தங்கள் தங்கள் மந்திரத்தால் சொஸ்தப் படுத்துவது என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
சமணர்கள் இடது பாதியை மந்திரம் சொல்லி மயில்பீலியால் தடவ ஆரம்பித்தார்கள். தடவத் தடவ அக்னியில் நெய்யை ஆஹூதி பண்ணுகிறது போல வெப்பு – உஷ்ணம் – மேலும் மேலும் ஜாஸ்தியாயிற்று. ராஜாவால் பொறுக்க முடியாமல் ஸம்பந்தரைப் பார்த்தான்.

அவர் “மந்திரமாவது நீறு” என்கிற பதிகத்தைப் பாடிக்கொண்டு ஸுந்தரேச்வர ஸ்வாமியின் விபூதிப் பிரஸாதமான “ஆலவாயரன் திருநீற்றை’ப் பாண்டியனுடைய வலது பாதி சரீரத்தில் இட்டார்; இட இட உஷ்ணம் அப்படியே அடங்கிக் குளிர்ச்சியாக ஆயிற்று. அப்புறம் அவன் வேண்டிக் கொண்ட்தன் பேரில் இடது பக்க வெப்பு நோயையும் அவரே தீர்த்தார்.

திலகவதி தானே தம்பிக்கு விபூதி கொடுத்தாள்; மங்கையர்க்கரசி புருஷனுக்கு ஸம்பந்தரைக் கொண்டு விபூதி பூசுவித்தாள். இரண்டு இடத்திலும் விபூதியே வியாதி தீர்த்தது. வைதிகத்தைக் காத்தது!
இப்படி அனலாயிருந்த உடம்பை அவர் புனலாகப் பண்ணிய பிறகும் ஜைனர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அனல்வாத, புனல்வாதங்கள் நடத்தச் சொல்லி, அதிலும் தோற்றுப் போனார்கள். அவரவர்களுடைய ஸித்தாந்தத்தைச் சுவடியில் எழுதி அதை நெருப்பில் போட்டால் எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதுவே ஸத்தியமென்று வைத்துக் கொள்வது அனல்வாதம். இப்படியே தங்கள் தங்கள் தத்துவத்தை எழுதிய சுவடியை ஆற்றிலே போட்டு, எது ப்ரவாஹத்தை எதிர்த்துக்கொண்டு மறு திசையில் போகிறதோ அதுவே உண்மையானதென்று வைத்துக் கொள்வது புனல்வாதம்.
எல்லாவற்றிலும் ஸம்பந்தர்தான் ஜயித்தார்.

ஸம்பந்தர் ஜயித்தார் என்றால் என்ன அர்த்தம்? சைவம் ஜயித்தது என்று அர்த்தம். சைவம் ஜயித்தது  என்றால் வேத மதம் ஜயித்தது என்றே அர்த்தம்.

பாண்டியனும் பாண்டிய நன்னாடும் மறுபடி ஸநாதன தர்மத்துக்கே வந்து விட்டது.