ஸத்குரு என்கிறாற் போலவே ஸச்சிஷ்யன் என்றும் உண்டு. ப்ரஹ்மவித்யா உபதேசம் தந்து, உபதேச பலனை சிஷ்யன் அநுபவிக்குமாறும் பண்ணுபவரே ஸத்குரு. அதுபோல நல்ல குணம், குறிப்பாகப் பணிவு, தீக்ஷண்ய புத்தி, 'ஜிஞ்ஜாஸா' என்ற உண்மையான ஞான தாஹம் எல்லாம் உள்ளவனே ஸச்சிஷ்யன். சாஸ்த்ர - ஸம்பிரதாய வழிமுறைப்படியே போகவேண்டும் என்று இருப்பவன் அவன். இங்கே ஆசார்யாள் அப்படிப்பட்ட சிஷ்யனை ஸம்ஸார ஸாகரத்திலிருந்து காப்பாற்றிக் கரைசேர்க்க 'ந்யாய - ப்ராப்த ஸச்சிஷ்யன்' என்று சொல்கிறார். அப்படியென்றால், எப்படி சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறதோ அந்த முறைப்படி குருவை வந்தடைகிற உத்தம சிஷ்யன். அவனை அவர் 'அவித்யா மஹோததி' யிலிருந்து 'நிஸ்தாரணம்' பண்ண வேண்டியது அவருக்கான நியமம்' என்கிறார். 'அவித்யா மஹோததி' என்றால் 'அஞ்ஞானப் பெருங்கடல்'; பொய் மாயப் பெருங்கடல்' என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது. அதையேதான் ஸம்ஸார ஸாகரம் என்பதும். அதிலிருந்து 'நிஸ்தாரணம்' என்றால், பொது அர்த்தம், காப்பாற்றுவது'. ஸாகரத்தைச் சொல்லியிருப்பதை வைத்து 'அனலைஸ்' பண்ணி அர்த்தம் சொன்னால் 'அக்கரை சேர்ப்பிப்பது', 'கரையேற்றுவது', 'கடைத்தேற்றுவது' என்று அர்த்தம். 'நிஸ்தாரம்' - அந்த கார்யத்தைப் பரிபூர்த்தியாக (முற்றிலும் முழுமையாக) ச் செய்வது. அதாவது 'முக்தி அளிப்பது' என்றே அர்த்தம். அந்த மஹா பெரிய அநுக்ரஹத்தை - ஜீவனாகப் பிறப்பெடுத்த ஒருவன் எதற்கு மேலே ஒன்றைப் பெற முடியாதோ அதை அளிக்கிற அநுக்ரஹத்தை - ஆசார்ய நியமமாக ஆசார்யாள் தெரிவித்திருக்கிறார். சிற்றுயிராக வந்த சிஷ்யனைப் பேருயிராகவே ஆக்குகிற பரமாநுக்ரஹக் கடமை!
'கல்வியினூங்கில்லை சிற்றுயிர்க்குற்ற துணை' என்று கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவிலே ஜனங்களுக்கு லோக வாழ்க்கையை நல்ல அறிவோடும் ஒழுக்கத்தோடும் வாழ்வதற்கு வழி கற்பித்த முற்காலக் கல்வி பற்றியே இப்படிச் சொன்னது. அறிவை வளர்ப்பதே முக்யமனாலும் பக்தி, ஞானம் கடமை, மற்ற நல்லொழுக்கங்கள் எல்லாமும் நிறையச் சொல்லிக் கொடுக்கும் கல்வி முறை அது. அப்படிப்பட்ட கல்வி இந்த லோக வாழ்க்கையில் சிற்றுயிர் தன்னுடைய சிறுமை நிங்கிப் பெருமைப்படும்படி வாழ ஸஹாயம் செய்ததாலேயே அதைச் 'சிற்றுயிர்க்குற்ற துணை' என்றது. ப்ரஹ்ம வித்யையோ லோக வாழ்க்கையையே ஸமாப்தி பண்ணிச் சிற்றுயிரைப் பேருயிராக ஆக்கிவிடுவது. அதை ஸாதிக்க வழி சொல்லி, முன் நடத்திப்போகிற ஸத்குரு எத்தனை பெரிய துணையாயிருக்கவேண்டும்?