ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்

பெரியேனல் நோய் நீங்க…

ஆசனவாய்க் கட்டிகளுக்கு மோர் அரு மருந்தாகும். தயிரைக் கடைந்து வெண்ணெய் முழுவதும் எடுத்து விட்டால் எண்ணெய் பசையற்ற மோராகும். பசி கெட்டுள்ள நிலையில் காலை மாலை உணவிற்கு முன்பு 250மி.லி. முதல் 300 மி.லி. வரை மோர் பருகவும். பசி சிறிது வளர்ந்ததும் காலையில் மோரையும் மாலையில் சாதம் வடித்த கஞ்சியுடன் மோரைக் கலந்து இந்துப்பைச் சேர்த்துப் பருக வேண்டும். பசி நன்றாக வந்த பிறகு சாதத்துடன் மோரைக் கலந்து முக்கிய உணவாகச் சாப்பிட, உடலின் உட்புஅக் குழாய்களின் வழிகள் தூய்மை பெறும். மோரை மண் தரையில் ஊற்றினால் அங்கு புல்லும் முளைக்காது. எனவே மோரைப் பயன்படுத்தினால் மூலத்தில் (ஆசன வாயில்) தோன்றிய கொப்புளங்கள் கருகி மீண்டும் தோன்றா. பசித் தீ வலிமை கொண்டிருக்கும் போது கட்டிகள் சுருங்கி அவை அழிவது திண்ணம். ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, கோதுமை மாவுடன் கலந்து, சிறிது பசு நெய் விட்டு வதக்கவும். வதக்கியதை விழுதாக அரைத்து ஒரு மெல்லிய துணியின் மீது பரப்பவும். இரவில் படுக்கும்முன் இந்த விழுது பகுதியை ஆசனவாய்க் கட்டிகளின் மீது வைத்துக் கட்டிக் கொள்ளவும். தொடர்ந்து சில நாட்கள் இதுபோல் செய்து வந்தால் கட்டிகள் அழுங்கிவிடும். மாதுளம் பழத்தோலை அரைத்து விழுதாக்கி ஆசன வாய்க்கட்டியில் பற்று இடுவதன் மூலமாகவும் கட்டிகளை நீக்கலாம். ஆசனவாயில் கொப்புளங்கள் ஏற்படக் காரணம் காரசாரமான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மது அருந்துவது, பட்டை, சோம்பு, பூண்டு ஆகியவை அதிகம் சேர்ந்த உணவு, பன்பட்டர் ஜாம், சாஸ் வகைகள், சிப்ஸ், ஜஸ்க்ரீம், ப்ரூட்சாலட் வகைகளுடன் காபி, டீ குடிப்பது போன்ற உண்வுகளும், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்ற சூழ்நிலை காரணமாக சூடல் காற்றை வெளியேற்ற முடியாமல் அடக்குதல் அல்லது சூழ்நிலை சாதகமான நிலையில் குடல் காற்றை மெதுவாக விடாமல் பெரும் சப்தத்துடன் வெளியேற்றுதல், ஆசனவாயைத் துடைக்க ‘டிஷ்யூ‘ பேப்பரைப் பயன்படுத்துவதல் போன்ற செய்கையினாலும் மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்கள் ஒரே நேரத்தில் சீற்றமடைந்து உடலில் அவற்றிற்குரிய நிலையான இடத்தை விட்டு ஆசன வாயின் மூன்று மடிப்புகளிலும் சேர்ந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன. மூன்று தோஷங்களிலும் கோளாறுகளை உண்டாக்கி இந்த ஆசனவாய்க் கொப்புளங்கள் மிகுந்த துன்பம் விளைவிக்கும். ஆகையால் இந்த நோயை மிகவும் பாடுபட்டு நீக்க வேண்டும். அழுக்குச் சேருமிடம் என்பதால் கடுக்காய்த் தூளை (5-10 கிராம் வரை) சிறிது வெல்லத்துடன் சேர்த்து சூடான தண்ணீருடன் காலை, இரவு உணவிற்கு முன்பாகச் சாப்பிட ஆசன வாய்ப்பகுதியைச் சார்ந்துள்ள மலம் நீங்கிக் கட்டிகள் அழுங்கி விடும். ஆயுர்வேத மருந்துகளில் சிரிவில்வாதி கஷாயம் 15 மிலி. சூடான தண்ணீர் 60 மிலி. சிட்டிகை இந்துப்பு, வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மாலையில் துஸ்பர்ஸகாதி கஷாயம் காலை மருந்துக்குக் கூறிய அதே விதத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். குக்குலு பஞ்ச பலசூரணம் ½ டீஸ்பூன், 1 ஸ்பூன் (5 மிலி.) தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். பிடிகரணைக் கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்காமல் தரையில் போட்டு வைக்க நாக்கு அரிப்பை ஏற்படுத்தாமல் ஆசன வாய் நோய்களை நீக்கும் நல்ல கிழங்காகும். அதைக் கொண்டு மசியல் செய்து மோர் சாதத்துடன் சாப்பிட நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படும். அரை டம்பளர் புழுங்கலரிசி, திப்பிலி, சுக்கு வகைக்கு 2 கிராம் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும். வடிகட்டிய இந்தக் கஞ்சியுடன் புளிப்பு மோரையும் மிளகுத் தூளையும் (2 கிராம்) கலந்து இரவு உணவிற்கு முன்பாகப் பயன்படுத்த ஆசனவாய்க் கட்டி நீங்கும்.

Home Page ஆயுர்வேதம்