ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்

பஞ்ச பூதங்களால் பிணி !

மனித உடலில் 107 மர்மங்கள் (vital points) இருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அவற்றில் மிக முக்கிய பகுதியாக தலை, இதயம் மற்றும் சிறுநீர்ப் பையைக் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்படும் நோய்கள் மிகுந்த பிரயத்தனத்தின் மூலமே சரி செய்ய இயலும். அதனால் தான் உங்களுக்குத் தலைப் பகுதியிலுள்ள நோயின் சீற்றம் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தொடர்கிறது.
கட்டி எவ்வாறு உருவாகிறது என்ற ஆராய்ச்சியில் ஆயுர்வேதம் மற்ற வைத்திய முறைகளிலிருந்து முழுவதுமாக மாறுபடுகிறது. வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள், உடல் எங்கும் பரவியிருந்தாலும் வாயு, முக்கிய இருப்பிடமாகத் தொப்புளுக்குக் கீழ்ப்பகுதியிலிருந்து பாதம் வரையிலும், இதயம் முதல் தொப்புள் பகுதி வரை பித்தத்தின் இருப்பிடமாகவும், இதயத்தின் மேலிருந்து தலையின் உச்சி வரை கபத்தின் இருப்பிடமாகவும் அமைந்துள்ளது.
நாம் உண்ணும் உணவு வகைகள் அனைத்தும் பஞ்சமஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையாகும். நிலம் மற்றும் நீர் பகுதிகளை அதிகமாகக் கொண்ட உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்குக் கபம் அதிகமாகி அதன் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, பிசுபிசுப்பு, நிலைத்தல் ஆகியவற்றின் சீற்றம் உணவுச் சத்தை ஏந்திச் செல்லும் குழாய்களின் ஊடே செல்லும் போது உடலில் எந்தப் பகுதியில் தளர்வும் பலமின்மையும் உள்ளதோ அந்த இடத்தில் நிலைகொண்டு விடுகிறது. தன் சொந்த இருப்பிடமாக கபத்திற்கு தலையிருப்பதால் தங்களுக்கு இந்தக் குணங்களின் வரவு பெருமளவில் இருப்பதால் கட்டியாக உருவாகியுள்ளது.
நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, நெய், வெண்ணெய், கெட்டித்தயிர், புலால் உணவு, மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, வடை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வாழைப்பழம், பால், பலாச்சுளை, பகல் தூக்கம், அதிக ஓய்வு போன்றவற்றை நீங்கள் நீக்க வேண்டும்.
காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு போன்ற புஞ்சை தானியங்கள் அதிக அளவிலும், அரிசி, கோதுமை முதலிய நஞ்சைத் தானியங்கள் குறைந்த அளவிலும் சேர்ப்பது நல்லது. நெருப்பு, காற்று, ஆகாயத்தின் அம்சங்களை அதிக அளவில் கொண்ட இவ்வகை உணவுப் பொருட்களால் கட்டியைக் கரையச் செய்ய இயலும். கட்டியின் அழுத்தத்தால் கண் நரம்பு மண்டலமும் கண் பாதுகாப்புக்குரிய மூளையின் அம்சங்களின் பாதிப்பும் கண் பார்வையை மங்கலாக்கியிருக்கக் கூடும்.
கட்டியை ஏற்படுத்திய கபத்தின் குணங்களுக்கு எதிரான ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் முதல் 3 வாரங்களுக்குச் சாப்பிடுவது நல்லது. வரணாதி கஷாயம் 15மிலி,60ம் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து 1\4 ஸ்பூன் தேன் சேர்த்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். லோத்ராஸவம் 20 மிலி, புனர்நவாஸவம் 10 மிலி, 1 காஞ்சநார குக்குலு எனும் மாத்திரையுடன் காலை,இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். அதன் பின்னர் 3 வாரங்களுக்கு நிம்பா அமிருதாஸவம் 30 மிலி காலை, இரவு உணவிற்குப் பின்னர் சாப்பிடவும்.

Home Page ஆயுர்வேதம்